Politics

“காவலாளி ஒரு திருடன்” என்று மக்கள் கூறத்தொடங்கி விட்டனர் - ராகுல் காந்தி பேச்சு 

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி, உன்னா ஆகிய இடங்களில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கலந்து கொண்டார்.

அப்போது அவர், "காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஒரு பொது பட்ஜெட்டும், ஒரு விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்வோம். தற்போது, ரூ.20 ஆயிரம் வங்கிக்கடனை திரும்ப செலுத்த தவறினால் கூட விவசாயிகளை ஜெயிலில் தள்ளுகிறார்கள். விவசாய பட்ஜெட், இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்டும். விவசாயிகள் கவுரவமான முறையில் வாழலாம். அதுபோல், 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக வாக்குறுதிஅளித்துள்ளோம். என்ன விலை கொடுத்தாவது அதை நிறைவேற்றுவோம்" என்று கூறினார்.

மேலும், பிரதமர் மோடி ரூ.15 லட்சம் தருவேன் என்று கூறி ஏழைகளை ஏமாற்றி விட்டார் என்று கூறிய ராகுல் காந்தி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் 3 ஆண்டுகளுக்கு வியாபாரிகள் எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டி இருக்காது. நாட்டில் நிலைமை வேகமாக மாறி வருகிறது. “காவலாளி ஒரு திருடன்” என்று குஜராத் மக்கள் கூட கூறத்தொடங்கி விட்டனர்" என்று கூறினார்.