Politics
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை - சிபிஐ(எம்) கண்டனம்!
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை என தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
“வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. கதிர் ஆனந்த் அவர்களது தேர்தல் பணியை ஆரம்பத்திலிருந்தே முடக்குவதற்கு அதிமுக – பாஜக கட்சிகள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இதன் உச்சகட்டமாக தேர்தல் ஆணையம் இன்று தேர்தலை ரத்து செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் அதிமுக – பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் பணத்தை விநியோகித்து வருகின்றனர். குறிப்பாக தேனி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு ரூ. 1000, ரூ. 2000 என சகல வாக்காளர்களுக்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதே போல தமிழகத்தில் பல தொகுதிகளில் பண விநியோகம் ஆளுங்கட்சியினரால் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்த புகார்கள் எவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை சட்டமன்ற விடுதிக்குள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அவரை நேரிடையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை கைப்பற்றிய பணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆளுங்கட்சியினர் தொகுதிகளில் நடைபெறும் தாராள பண விநியோகத்தை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க மறுத்து வரும் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்துள்ளது பாரபட்சமானது, வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்வளவுக்கும் வேலூர் தொகுதியில 15 தினங்களுக்கு முன்பே பணம் கைப்பற்றப்பட்டதே தவிர வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரமும் ஏதுமில்லை.
தமிழகம் முழுதுவதும் அதிமுக – பாஜக அணி 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும் என்ற அச்சத்திலேயே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீது அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இம்மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது, தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சிகளின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு துணை போயுள்ளதானது ஜனநாயகப் படுகொலையாகும்.
எனவே, தேர்தல் ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து திட்டமிட்டவாறு வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்த முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!