உணர்வோசை

எச்சரிக்கை... ஆறாம் பேரழிவுக்கு மத்தியில் நாம் தற்போது இருக்கிறோம் ! | #WorldEnvironmentDay

உங்கள் குழந்தைகளின் கல்வியையும் திருமணத்தையும் வசதிகளையும் பற்றிய அக்கறையில் உழைத்துக் கொண்டிருப்பவராக நீங்கள் இருந்தால், உங்கள் உழைப்பை உடனடியாக நிறுத்த வேண்டிய காலத்தை வந்தடைந்துவிட்டோம். நிகழ்ந்து கொண்டிருக்கும் பருவநிலை மாற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும் அதற்கான கேள்விகளை நீங்கள் கேட்கத் தொடங்கவும் உங்களுக்கு இருக்கும் காலம் வெறும் பதினொரு வருடங்கள்தான். அதாவது 2030-ம் வருடத்துக்குள் பருவநிலை மாற்றத்துக்கான காரணிகளை சரி செய்யத் தொடங்கவேண்டும். இல்லையெனில், உங்கள் குழந்தையின் மரணத்துக்கான காரணமாக நீங்கள் இருப்பீர்கள்.

எவர் கண்ணுக்கும் புலப்படாமல் அல்லது பெரிதும் விவாதிக்கப்படாமல் இருக்கும் பருவநிலை மாற்றச் சிக்கலுக்கு பின்னணியில் நாம் நினைத்தே பார்க்க முடியாதளவுக்கான அரசியல் இருக்கிறது. அந்த அரசியல் பலி கொள்ளப்போவது எங்கோ இருக்கும் ஏதோவொரு மக்கள் குழுவை அல்ல. ஒட்டுமொத்த மனித குலத்தையும் பருவநிலை பிரச்சினை காவுகொள்ளப் போகிறது.

உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஏன் இப்படியொரு தினம்? சுற்றுச்சூழலைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

ஏனெனில் சுற்றுச்சூழலையும் அவை கொண்டிருக்கும் உயிர்களையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். கண்ணுக்கு முன்னே நிகழ்ந்தும் நம் புத்திக்கு மறைக்கப்படும் ஆறாம் பேரழிவுக்கு மத்தியில் நாம் தற்போது இருக்கிறோம். பேரழிவின் முடிவு, நம்மின் முடிவு.

மனிதன் உருவாகும் முன் பூமியில் ஐந்து பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. பேரழிவு என்றால் பூமியின் பெரும்பாலான உயிர்கள் திரும்பத் தோன்றவே முடியாதபடிக்கு அழிந்து போவது. அந்த வகையில் ஆறாவதைத் தொடங்கி சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டிருக்கிறான் மனிதன். பூமியில் இருக்கும் விலங்குகள், மரங்கள், பிற உயிர்கள் மற்றும் உயிர் வாழ்க்கைக்கான மொத்த சூழல் எல்லாமும் தான் சொகுசாக வாழ்வதற்காகவே இருப்பதாக நினைத்துச் சுரண்டி வந்திருக்கிறான். விளைவாக தான் உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் சூழலை இழக்கத் தொடங்கிவிட்டான்.

வரலாறு காணாத வெள்ளத்தை 2015-ம் வருடம் சென்னை சந்தித்தது. சமீபமாக சந்தித்து வரும் சீற்றங்கள் எல்லாமும் வரலாறு காணாதவையாக இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். வழக்கமான புயல்களை போலல்லாமல் நிலப்பகுதியில் நின்று சுற்றிச் சூறையாடிய கஜா புயல் ஓர் உதாரணம்.

இந்த கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் கடுமையான வெயிலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். ஒப்புக்கெனப் பெய்யும் வெப்பச்சலன மழை கூட சென்னையை சபித்திருக்கிறது. ஓர் அரசாங்கம் தம் மக்களிடம் நீரை சேமிக்கும்படி சொல்லியிருக்கும் கட்டத்தை அடைந்து விட்டோம். தமிழ்நாட்டுக்கான குடிநீர் ஆதாரங்கள் வறண்டுவிட்டன.

தற்போதைய சூழலில் நீங்கள் பார்த்து வளர்ந்த பறவைகள், பூனைகள், நாய்கள் மற்றும் பிற காட்டு விலங்குகள் எல்லாம் தண்ணீருக்கு என்ன செய்யும் என யோசித்துப் பாருங்கள். நாம் செல்லும் காரின் உற்பத்திக்கு ஆற்றுநீரை உறிஞ்சுகிறோம். அன்றாடம் பயன்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பல அநாவசிய அத்தியாவசியங்களின் உற்பத்திக்கென குடிநீரை காலி செய்துவிட்டோம். மழை கொண்டு வரவென இருந்த காடுகள் காணாமல் போய்விட்டன. காடு வாழ் சின்னத்தம்பிகள் வாழ்விடம் தேடி அலைகின்றன. அடுத்த பத்து வருடங்களில் பத்து லட்சம் உயிரினங்கள் வரை அழியப் போவதாக ஐ.நா அறிவித்திருக்கிறது.

கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கும் அரசுகளை நாம் பெற்றிருப்பது யதேச்சையான விஷயம் அல்ல. மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்டு நடத்தப்படும் தொடர் அரசியல்! எக்காரணம் கொண்டும் சுற்றுச்சூழலைப் பற்றி பேசாத, பருவநிலை மாற்றச் சிக்கலை பொருட்படுத்தவே செய்யாத அரசுகள் அமைவதையே கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புகின்றன. அதை நோக்கியே நம் சிந்தனைகளும் செதுக்கப்படுகின்றன.

இன்று கூட ஏதேனுமொரு NGO உங்களை காலையில் கடற்கரைக்கு வரும்படி அழைத்திருக்கலாம். சுற்றுச்சூழலை காக்க வேண்டுமென்கிற அக்கறையில் நீங்களும் சென்று கடற்கரையிலிருக்கும் குப்பைகளை அகற்ற உதவியிருக்கலாம். அல்லது ஏதேனும் ஏரியை சுத்தப்படுத்த உதவியிருக்கலாம். இவையெல்லாம் இயற்கையை நாசப்படுத்தும் அமைப்புக்குள் இருக்கும் உங்களின் தனிநபர் குற்றவுணர்வை போக்கிக்கொள்ள உதவலாம். ஆனால் உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றப்போவதில்லை. ஓட்டை வாளியில் தண்ணீர் எடுப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தனி நபர் நடவடிக்கை அல்ல. அது ஓர் அரசியல் செயல்பாடு. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் தேவைப்படும் நிலைப்பாடு. அதை புறக்கணிக்கும் எதையும் புறக்கணிக்கத் தொடங்குவதில் இருந்தே உங்கள் குழந்தைக்கான நல்வாழ்வு தொடங்க முடியும்!

Also Read: விரிவாக்க திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: குறுக்கு வழியில் EIA2020-ஐ திணிக்கும் மோடி அரசு