உணர்வோசை

அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என உறவுகள் எதற்காக உருவாக்கப்பட்டன ? அதில் ஏமாற்றங்கள் உருவாவது ஏன் ?

உறவுகள் விந்தையானவை. ஆண், பெண், காதல், அப்பா, அம்மா, மகன், அண்ணன், தம்பி, அக்கா என எந்த உறவுமே அடிப்படையில் ஒரு தேவையை உள்ளடக்கியிருக்கிறது.

நம் சமூகத்தில் உறவுகள் உருவாவதற்கு வரலாற்று ரீதியிலான காரணங்கள் உண்டு. ஒரு குழந்தை தனியாக வளர முடியாது என்பதாலும் அது வளர்ந்து ஆளாவதற்கு தேவையான பொருளாதாரம் வேண்டும் என்பதாலும் அப்பா, அம்மா என்கிற உறவுகளுடன் குழந்தை பிணைக்கப்பட்டது. உறவு கொண்டவன் குழந்தை கொடுத்து விட்டால், அக்குழந்தை வளர்க்கும் பொருளாதார சுமையையும் அவன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற தேவையிலிருந்து கணவன், மனைவி உருவாகிறது. இந்த அடிப்படை உறவுகள் அக்கா, அண்ணா, தம்பி, தங்கை, சித்தப்பா, சித்தி என பிற உறவுகளை உருவாக்கியது. அடிப்படையில் பொருளாதாரக் காரணங்களுக்காகவே உறவுகள் உருவாகின.

ஆனால் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?

பொருளாதாரத்துக்காக உருவாக்கப்பட்ட உறவுகளுக்கு என உணர்வுகளும் அகரீதியாக உருவாகிக் கொண்டன. ஒரு பொம்மையை கொடுத்த பிறகு குழந்தையிடமிருந்து அக்குழந்தையை பிடுங்க முடியாது. அந்த பொம்மை மீது அக்குழந்தை உடைமை உணர்வை (Possessiveness) வளர்த்துக் கொள்ளும். ‘என்னுடையது’, ‘எனக்கானது’ என்கிற உணர்வை கொண்டு விடும். உண்மையில் பொம்மைக்கும் குழந்தைக்கும் பொருளாதார உறவு எதுவும் இல்லை. எனினும் உறவு என்பதற்கு அடிப்படையாக ஒருவகை possessiveness-ம் நமக்குள் இருப்பதால், எந்தப் பொருள், உறவு என்றாலும் நாம் அதைக் கைகொண்டு விடுகிறோம்.

எனவே இன்றைய சூழலில் உறவுக்கு பொருளாதாரக் காரணம் கூட தேவையில்லை. பொருளாதார அம்சம் ஓர் உறவில் உருவாக்கி தந்த possessiveness-ன் நிழல், பொருளாதாரத் தேவையே எழாமல் உருவாகும் உறவிலும் படிகிறது. பொருளாதாரத் தேவை உருவாக்கிய உறவுக்கான உறவுநிலை, எல்லா வகை உறவுகளிலும் தன்னை புகுத்திக் கொள்கிறது.

நீங்கள் அக்கா, தம்பி என்ற அடையாளத்துக்குள் சென்று விட்டதால் அந்த உறவு கொண்டிருக்கும் possessiveness-ஐ இயல்பாக பெறுகிறீர்கள். எனவே எந்த வகை உறவு உருவானாலும் அங்கு இயல்பாகவே ஓர் எதிர்பார்ப்பை நாம் உருவாக்கி கொள்கிறோம்.

நண்பர் என்றால் நமக்கு இப்படி இருக்க வேண்டும், அண்ணன் என்றால் நமக்கு இப்படி இருக்க வேண்டும், அப்பா போன்றவர் என்றால் நமக்கு இப்படி இருக்க வேண்டும் எனப் பலவகை உறவுகளுக்கு பலவகை எதிர்பார்ப்புகள். ஆனால் அவை அப்படி இருக்க வேண்டிய கட்டாயமோ யதார்த்தமோ இல்லை. முதலில் அவரவருக்கு என தனி வாழ்க்கைகள் இருக்கும். உண்மையான நண்பர், அண்ணன், அப்பா ஆகியோர் இருப்பார்கள். அவற்றை மீறி நாம் அவரை பிய்த்துக் கொண்டு வர முயலுவது சரியாக இருக்காது.

அத்தகைய உண்மையான உறவுகளுக்கே கூட இருக்கும் பொருளாதார அம்சங்களை புறம்தள்ளி தனியாக விரும்பும் தனிமனிதவாதம் தலைதூக்கியிருக்கும் இந்த காலச்சூழலில் இன்னும் அதிகமாக உறவுகளின் நிலை சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.

ஆகவே உறவு என்கிற ஒரு நிலைப்பாட்டுக்குள் சென்று நின்று நம்மை நாமே அடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நெருங்கவும் வேண்டாம். விலகவும் வேண்டாம்.

எதிர்பார்ப்பு கொள்ளாதீர்கள். ஏமாற்றமே விளையும்.

ஒன்றாய் இருத்தலை, சக பயணியாக பயணித்தலை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். அற்புத கணங்கள் வாய்க்கும். அதைத் தாண்டும் எதுவும் உங்களுக்கும் உங்களை சார்ந்தவருக்குமே சுமையாக முடியும் வாய்ப்பு உண்டு.

Also Read: ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? “அவர் உடல் மெலிவுக்கு இதுதான் காரணம்..” - மனம் திறந்த மனைவி பிரியங்கா சங்கர்!