உணர்வோசை
ஆணுக்கானது வேட்டை மனநிலை.. அதை பெண் அறியாவிட்டால் நடப்பது என்ன ? ஆண் - பெண் உறவுகளின் சிக்கல் !
இணையம் முழுமையாக ஆராய்ந்து பார்த்திடப்படாத வெளி. இதற்குள் ஆண் - பெண் உறவுகள் கொள்ளும் சிக்கல்கள் ஏராளம்!
ஆண்கள் பலர் பெண்ணியம் பேசுகிறோம். காதலை வார்த்தைகளில் மிக அழகாக வடிக்கிறோம். பெண்களை கொண்டாடுகிறோம். ரசிக்கிறோம். இவை உங்களை ஈர்க்கலாம். மதிப்புற செய்யலாம். நீங்களும் தொடர்பு கொள்ளலாம். பேசலாம். எல்லாம் சரி. ஆனால் அது என்ன உறவு என்பதை தெளிவாக முடிவெடுத்து கொண்டு தொடங்குங்கள். பாசாங்குகளும் இங்கு அதிகம்.
one Night Stand, Sexting, Photosharing, Counselling, Friend, Friens with benefits, Love என எந்த பாணி உறவாகவும் இருக்கலாம். உங்கள் விருப்பமே. ஆனால், ஒன்றாக நம்பி வேறொன்றாக மாறி போகும் உறவுகளின்போதுதான் சிக்கல்.
பொதுவாய் ஆணுக்கானது வேட்டை மனநிலை. இது இப்போதைய கார்ப்பரெட் யுகத்தில் பெண்களுக்கும் மாறி வருகிறது என்பது வேறு விஷயம். இருப்பினும். ஆணின் வேட்டை மனம், இரையை தீர்மானித்து, அதை அடைய சரியாக திட்டமிட்டு, பதுங்கி சென்று, சுற்றி வளைத்து, வேட்டையாடி, பின் அங்கேயே அமர்ந்து தின்று, மிகுந்ததை அப்படியே விட்டுவிட்டு, தன் வாழ்க்கைக்கு திரும்பிவிடும்.
பெண்களிடமும் இப்படித்தான். நீங்கள் காதலியாக வேண்டுமா, மனைவியாக வேண்டுமா, படுக்கைக்கு வேண்டுமா, போன் காதலியாக வேண்டுமா அல்லது துணைவியாக வேண்டுமா என்றெல்லாம் ஆண் மனம் கவனிக்கும். உங்களுக்குள்ள வாழ்க்கை பிரச்சினைகளை பட்டியலிட்டு கொள்ளும். திட்டமிடும்.
பெண்களுக்கும் இன்றைய சூழலில் ஆணுடன் புழங்கும் தருணங்கள் அதிகம். அலுவலகம், கல்லூரி, வீடு, நட்பு, போன் என. எத்தனை நவீனமானாலும் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் வேறு வடிவங்களில் அப்படி அப்படியே நீட்டிக்க பட்டிருக்கின்றன. ஆகவே காதலிக்க அனுமதி இல்லாத பெண் ஒரு ஆணை நட்பு என காதலிப்பதும் இயல்பாகி இருக்கிறது. காதல் பொங்கி காமத்தை அடையும் அந்த எல்லை வரை அனைத்தையுமே நடத்தி பார்க்கிறாள். பல ஆண்கள் அதையும் அனுமதிக்கின்றனர். விரும்புகின்றனர். ஒரு ஆண் கலவும்போது எப்படியெல்லாம் உணர்வான் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறாள். போனில் தெரிந்துகொள்கிறாள்.
இவை யாவும் இன்றைய சூழலில் பெண்ணுக்கு உண்டான சிக்கல்களும் விருப்பங்களும் வழிகளும் என்பதை ஆண் மனம் உன்னிப்பாக கவனித்தே வருகிறது. Up in the air படத்தில் வரும் உறவை போல் relationship without responsibility எப்போதும் கவர்ச்சியானதே. அதன் நிச்சயமின்மையும் அது கொண்டிருக்கும் ஆபத்துகளும் கூட பலரை ஈர்க்கலாம்.
பெண்ணை புகழ்வது பெண்ணை ஈர்க்கும் என ஆணுக்கு தெரியும். அவளுக்கென கவிதை படைப்பதை அவள் ரசிப்பாள் எனவும் தெரியும். அவளுக்காக உருகுவதையும் அவள் விரும்புவதை ஆண் அறிவான். அதிலும் தன்னை போலவே பல ஆண்கள் அவளை இப்படி கொண்டாடுவதையும் அவள் விரும்புவாள் என அவனுக்கு தெரியும். அதில் ஒருவனாக இருப்பது அவனுக்கு பிரச்சினை இல்லை. சொல்ல போனால், அப்படியே அவனை அடையாளப்படுத்தியும் கொள்வான். அவளுக்கு காதல் வழங்குபவனாக, கவிதை படைப்பவனாக, உருகுபவனாக பொதுவிலேயே காண்பித்து கொள்வான். சிரிக்க சிரிக்க பேசுவான். அவளை மெல்ல மெல்ல தன் பக்கம் நகர்த்தி கொண்டு வருவான்.
இவை யாவுமே உண்மை காரணங்களுக்காகவும் செய்யப்படலாம் என்பதுதான் நடைமுறை சிக்கல். உங்களை காதலிப்பவனும் உங்களை கொண்டாடலாம். உங்களை கவிதை பாடலாம். உங்களை ரசிக்கலாம். உங்களுக்காக உருகலாம். உங்களை மனமுவந்து மணம் முடிக்க விரும்புவனும் இதை எல்லாம் செய்யலாம். அதனால்தான் சொல்கிறேன். இவை அனைத்துக்கும் முன், அது என்ன உறவாக இருக்கும் என நீங்கள் வரையறுத்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கே ஒரு காதலன் இருக்கலாம். கணவன் இருக்கலாம். ஆனால் அடுத்தவனை ரசிக்கலாம். ரசித்தவனுடன் பேசலாம். அந்த அவன் எப்படிப்பட்டவன் என கண்டுகொள்வதில் தான் பிரச்சினை வருகிறது.
சிக்கலுக்குரிய ஆள் எனில், உங்கள் காதலனோடு உங்கள் கணவனோடு நீங்கள் கொள்ளும் சிறு பிணக்கையும் அவன் ஆயுதமாக்குவான். உங்கள் காதலனை குறை கூறிக்கொண்டே இருப்பான். அதை மெல்ல பெரிதாக்கி உங்கள் காதலனை நீங்கள் பிரிந்துவிட வழிகோலுவான். அதன் மூலம் உங்களை அநாதரவாக்கி தன் திட்டத்தை செயல்படுத்தி கொள்வான்.
இரையை தீர்மானித்து, அதை அடைய சரியாக திட்டமிட்டு, பதுங்கி சென்று, சுற்றி வளைத்து, வேட்டையாடி, பின் அங்கேயே அமர்ந்து, தின்று, மிகுந்ததை அப்படியே விட்டுவிட்டு, தன் வாழ்க்கைக்கு திரும்பிவிடுவான்.
இந்த சிக்கலை தீர்க்க, ரொம்ப எளிமையான உத்தி ஒன்றுதான். நீங்கள் ஒருவனை நேசிப்பதாக இருந்தால் அவன் வீட்டுக்கு செல்லுங்கள். பெற்றோரை சந்தியுங்கள். நண்பர்களை தெரிந்து கொள்ளுங்கள். நாளை ஒரு சின்ன சண்டை வந்தாலும் இவர்கள் எல்லாருக்கும் போன் போட்டு அவனை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை . அவன் சொல்கிற அவன் உண்மைதானா என தெரிந்து கொள்ளுங்கள். அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று உங்களை அவன் சமூகத்துக்குள் எப்படி அவன் அடையாளப்படுத்துகிறான் என பாருங்கள்.
இவையும் இவை போன்ற இன்னும் பலவையும் இயல்பான காதலுக்கே செய்ய வேண்டியவை. முகநூல் உறவுகளில் ரொம்பவே முக்கியமாக செய்ய வேண்டியவை. ஏனெனில் இங்கு உண்மையில் நீங்கள் பார்த்து பழகி கொண்டிருப்பது, இணைய அலைகளுடன் தான். அவற்றில் நிச்சயமான உண்மை உங்கள் செல்பேசி திரையும், கணிணி திரையும் மட்டும்தான். அவற்றில் வரும் மற்ற அனைத்தின் உண்மையையும் நீங்கள் தனிப்பட்ட முறையில், அணுகி, ஆராய்ந்து மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் சிக்கல்தான்!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?