உணர்வோசை
Dating மேற்கத்திய கலாச்சாரமா ? இணை தேர்வில் பெண்ணுக்கான விருப்பத்தை புரிந்துகொள்வது எப்போது ?
Dating என்பதை அமெரிக்கர்கள் கண்டுபிடித்த விஷயமாக புரிந்து கொள்வதிலிருந்து நம் பிரச்சினை தொடங்குகிறது.
Dating என்பதை தனக்கு விருப்பம் வரும் ஒரு நபருடன் பழகி பார்த்தல் என சுருங்கப் புரிந்து கொள்ளலாம். இது எல்லா காலங்களிலும் எல்லா சமூகங்களிலும் நிகழ்ந்து வருவதுதான். இதில் வர்க்கம் இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது. சாதி இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது.
இந்தியச் சமூகத்தில் இருக்கும் சாதி, வர்க்கம், மதம் எல்லாமுமே காதலிலும் திருமணத்திலும் இருக்கும் போது ஏன் டேட்டிங்கில் மட்டும் இருக்கக் கூடாது என எதிர்பார்க்க வேண்டும்? ஏன் டேட்டிங்குக்கு மட்டும் 'மேற்குலக கண்டுபிடிப்பு' என்கிற கூடுதல் முலாம் பூசுகிறோம்?
திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் ஆகும் வரை செல்பேசியில் பேசிப் பழகி மனமொப்பாமல் திருமணத்தை நிறுத்தும் சம்பவங்கள் நேர்கின்றனவே அங்கு நடப்பது என்ன? பழகி பார்த்து மனமொப்பாமல் மறுத்தல்தானே? காதலித்த சில வருடங்களில் பிணக்கு ஏற்பட்டு பிரிவு நேர்கிறதே.. அங்கும் பழகி பார்த்து பிரிதல்தானே நேர்கிறது?
Dating-ஐ பரிந்துரைப்பதற்குக் காரணம் திருமணம், ஒழுக்கம் என்ற சட்டகங்களுக்குள் 'பழகி பார்த்தல்' சிறை வைக்கப்படும்போது நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டு திருமணம் என்ற விருப்பமில்லா முடிவுக்கு உறவுகள் தள்ளப்படுகின்றன என்பதுதான்.
முதலாளித்துவம் சுரண்டவே செய்யும் என்றாலும் அதற்கு ஏதுவாக பழைய சமூகமாக இற்றுப் போயிருக்கும் உறவுகளை அழிக்கும். அந்த அழிவில் சில முற்போக்கு தன்மைகள் வெளிப்படும். இதைத்தான் மார்க்ஸ் முதலாளித்துவத்தின் முற்போக்கு பாத்திரம் என்கிறார்.
இந்தியச் சமூகத்தின் இறுகிப் போன குடும்ப அமைப்பு ஜனநாயகப்பட வேண்டுமா வேண்டாமா?
இணை தேர்வில் பெண்ணுக்கான விருப்பம் பொருட்படுத்தப்பட வேண்டுமா வேண்டாமா?
பழகிப் பார்த்து உடன்படாமல் பிரிந்து போகும் பெண்ணுக்கு இன்றைய காதலுறவு சூட்டும் பெயர் 'நம்ப வச்சு கழுத்தறுத்துட்டா', 'கழட்டி விட்டுட்டா', 'ஏமாத்திட்டா', 'குடும்ப மானம் போச்சு' போன்றவைதான்.
ஒரு பெண்ணின் முடிவு அவரின் வளர்ச்சிக்கேற்ப மாறும். அந்த மாற்றத்துக்கு ஏற்ப அவரது விருப்பங்களும் மாறும். விருப்பங்களுக்கு ஏற்ப தன் இணைக்கான விருப்பத் தேர்வை அவர் மறுபரிசீலிக்கவும் செய்யலாம். இவை எல்லாமும் இயல்பே என்பதை ஆண் எப்படிதான் புரிந்து கொள்வது?
டேட்டிங் என்னும் பழகி பார்த்தலை அங்கீகரிக்காதவரை ஆணுக்கு அந்தப் புரிதல் ஏற்படவே செய்யாது.
பழைய சமூகத்தை உலக மூலதனம் உடைக்கவே செய்யும். இந்தியச் சமுகத்தில் மதத்தை உடைக்கும். சாதியை உடைக்கும். ஆணாதிக்கத்தை உடைக்கும். குடும்பத்தை உடைக்கும். குழுவை உடைக்கும். தனிமனிதனையும் உடைக்கும். எது எது உடைக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு தெளிவு வேண்டும்.
முதலாளித்துவம் அழிக்க முனையும் பழைய சமூகக் கண்ணிகளை அவதானித்து இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்த்து சமத்துவ சமூகம் உருவாக்க அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என ஆலோசிக்க வேண்டும்.
அது வரை இங்கு வர்க்கம் இருக்கப் போகிறது. சாதி இருக்கப் போகிறது. ஆணாதிக்கம் இருக்கப் போகிறது. நாமும் இருக்கப் போகிறோம்
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்