உணர்வோசை

“சிலரின் துரோகத்தால்தான் சுதந்திரம் பறிபோனது”: சுதந்திர இந்தியா குறித்து 1949ல் அம்பேத்கர் ஆற்றிய உரை !

நவம்பர் 25, 1949. சட்டவரைவுக் குழு முன்னிலையில் டாக்டர் அம்பேத்கர் பேசுகிறார்:

“1950 ஜனவரி 26ல் இந்தியா சுதந்திர நாடாக மாறவிருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்கு என்ன ஆகும்? தான் பெற்ற சுதந்திரத்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லை, மீண்டும் இழந்துவிடுமா? எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இதுதான். இந்தியா சுதந்திர நாடாக இல்லாமெலெல்லாம் இல்லை. தான் கொண்டிருந்த சுதந்திரத்தை இந்தியா முன்பொருமுறை இழந்திருக்கிறது. இனி இரண்டாவது தடவையும் சுதந்திரத்தை இழந்து விடுமா? இந்த எண்ணம்தான் எதிர்காலத்தை குறித்து என்னை பதட்டப்பட வைக்கிறது.

இந்தியா தன் சுதந்திரத்தை முன்னர் இழந்ததற்கான காரணம் உள்ளேயே இருந்தது. இந்தியாவுக்குள் இருந்த சிலரின் துரோகத்தால்தான் சுதந்திரம் பறிபோனது. அதனால்தான் நான் அதிகம் கவலை கொள்கிறேன்.

முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்த போது, தாஹர் அரசரின் தளபதிகள் அரசருக்கு ஒத்துழைக்கவில்லை. முகமது பின் காசிமின் ஆட்களால் விலைக்கு வாங்கப்பட்டிருந்தனர். பிருத்விராஜனை எதிர்த்து போராடுவதற்காக இங்கிருந்த ஜெய்ச்சந்தால் கொண்டு வரப்பட்டவர்தான் முகமது கோரி.

இந்துக்களின் விடுதலைக்காக சிவாஜி போரிட்டுக் கொண்டிருந்தபோது, பிற மராத்தியர்களும் ரஜபுத்திர அரசர்களும் மொகலாய பேரரசர்கள் பக்கம் நின்றிருந்தனர். சீக்கிய ஆட்சியாளர்களை அழிக்க பிரிட்டிஷ் முற்பட்டபோது சீக்கியர்களின் தலைமை தளபதி குலாப் சிங் அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தார். சீக்கிய சாம்ராஜ்யத்தை காப்பாற்றவில்லை.

1857ம் ஆண்டில் இந்தியாவின் பெரும்பகுதி பிரிட்டிஷுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை அறிவித்த போது, சீக்கியர்கள் அமைதியாக நின்று வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தனர். மறுபடியும் வரலாறு அதே தவறைச் செய்யுமா? என்னை பதட்டத்துக்குள்ளாக்கியது இந்த எண்ணம்தான்.

சாதி, மதம் என்ற நம் பழைய எதிரிகளை தாண்டி, இனி கட்சிகள் என பலவித கொள்கைகளோடு வேறு எதிரிகள் தோன்றப் போகிறார்கள். இந்தியர்கள், தங்களின் மதத்துக்கும் மேலாக நாட்டை நினைக்க போகிறார்களா அல்லது நாட்டுக்கு மேலாக தங்களின் மதத்தை நினைக்கப் போகிறார்களா? எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். கட்சிகள், மதத்தை நாட்டுக்கும் மேலானதாக நிறுத்துவார்களெனில், மீண்டும் நாம் சுதந்திரத்தை இழப்போம். அதன் பிறகு சுதந்திரம் கிடைக்கவே கிடைக்காது. இப்படியான நிலை வராமல் நாம் அனைவரும் தடுக்க வேண்டும். கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்வரை சுதந்திரத்தை பாதுகாக்க உறுதி கொள்ள வேண்டும்.

1950 ஜனவரி 26லிருந்து இந்தியா ஜனநாயக நாடாக மாறப் போகிறது. மக்களாட்சி தொடங்கப்போகிறது. மீண்டும் என் மனதை எண்ணங்கள் ஆக்கிரமித்தன. இந்தியாவின் ஜனநாயக அரசியல் சட்டம் என்னவாகும்? இந்தியாவால் தனக்கான சட்டத்தை காப்பாற்றிக் கொள்ள முடியுமா அல்லது மீண்டும் அதை இழந்து விடுமா? முதலில் நான் பதட்டப்பட்டதை போல இந்த எண்ணமும் என்னை கவலையுறச் செய்தது.

இந்தியா, ஜனநாயகத்தை அறியாமலெல்லாம் இல்லை. முடியாட்சிகள் இருந்த அதே காலகட்டங்களில் இங்கு குடியரசுகளும் இருந்தன. பாராளுமன்றமும் பாராளுமன்ற முறைகளும் இந்தியாவுக்கு ஏற்கனவே தெரியும்.

புத்த பிட்சு சங்கங்கள், பாராளுமன்றங்களாகத்தான் இயங்கின. இன்று நாம் அறிந்திருக்கும் எல்லா பாராளுமன்ற முறைகளையும் அவை பின்பற்றின. அமர்வதற்கான வடிவமைப்பில் இருந்து, ஓட்டு, ஓட்டு எண்ணிக்கை, ஆதரவு திரட்டல், தீர்மானங்கள், நம்பிக்கை வாக்கெடுப்பு என எல்லா விஷயங்களும் இருந்தன. இந்த முறைகளை சங்கங்களுக்கு புத்தர் வழங்கியிருந்தாலும் அவற்றை அந்த காலகட்ட சமூகங்களில் இருந்துதான் அவரும் பெற்றிருக்க முடியும்.

அந்த ஜனநாயக முறையை இந்தியா தொலைத்துவிட்டது. இரண்டாம் முறையும் தொலைத்துவிடுமா? எனக்கு தெரியவில்லை. ஆனால் சாத்தியம் என்றே தோன்றுகிறது. நீண்டகாலமாக ஜனநாயகத்தை மறந்திருந்ததால், அது கிடைத்ததும் பயன்படுத்த தெரியாமல் சர்வாதிகாரத்துக்கு வழியேற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

வெறும் வார்த்தையாக அல்லாமல், உண்மையாக ஜனநாயகத்தை கடைபிடிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

முதலில், நம் சமூக மற்றும் பொருளாதார இலக்குகளை அடைய அரசியல் சாசன முறைகளை இறுக்க பற்றிக் கொள்ள வேண்டும். சத்யாகிரஹம், ஒத்துழையாமை போன்ற வழிமுறைகளை கைவிட வேண்டும். சட்டரீதியாக, சமூக மற்றும் பொருளாதார இலக்குகளை அடைய முடியவில்லையெனில் சட்டத்துக்கு எதிரான முறைகளே நியாயமாக்கப்படும். சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு சட்டம் ஏதுவாக இருக்கும்பட்சத்தில், சட்டத்துக்கு எதிரான வழிமுறைகளுக்கான நியாயம் இருக்காது.

நாம் செய்ய வேண்டிய இரண்டாம் விஷயம் ஜான் ஸ்டூவர்ட் ஜனநாயகத்தை காப்பதற்கென சொன்ன விஷயம். எத்தனை மிகப்பெரிய மனிதனாக இருந்தாலும் தன் சுதந்திரத்தை அவன் காலடியில் வைக்கக்கூடாது. மொத்த அமைப்பையும் நாசம் செய்யக்கூடிய அளவுக்கான அதிகாரம் அவன் பெற்றிடுமளவுக்கு நம்பக்கூடாது. மொத்த வாழ்க்கையையும் சமூகத்துக்கு அர்ப்பணித்த பெரிய மனிதர்களுக்கு நன்றியுடன் இருக்கலாம். ஆனால் அதற்கும் அளவு இருக்கிறது.

அயர்லாந்தின் டேனியல் ஓ கானல் சொன்னது போல், சுயமரியாதையை இழக்குமளவுக்கு நன்றியுடன் ஒரு மனிதன் இருக்க வேண்டியதில்லை. சுதந்திரத்தை இழக்கும் அளவுக்கு ஒரு தேசம் நன்றியுடன் இருக்க வேண்டியதில்லை. இந்த எச்சரிக்கை உணர்வு பிற தேசங்களை காட்டிலும் இந்தியாவுக்கு அதிகம் தேவை. பக்தி அல்லது ரசிக மனப்பான்மை பிற எந்த நாடுகளின் அரசியலை காட்டிலும் இந்திய அரசியலில்தான் அதிக பங்கு வகிக்கிறது. மதத்தில் இருக்கும் பக்தி வேண்டுமானால் மனதுக்கு ஆறுதல் கொடுக்கலாம். ஆனால் அரசியலில் கொள்ளும் பக்தி, தரம் தாழ்த்தும். இறுதியில் சர்வாதிகாரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

மூன்றாவதாக, நாம் அரசியல் ஜனநாயகத்தோடு மட்டும் திருப்தி அடைந்துவிடக் கூடாது. அரசியல் ஜனநாயகத்தை சமூக ஜனநாயகமாகவும் மாற்ற வேண்டும். சமூக ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் நீடிக்க முடியாது.

சமூக ஜனநாயகம் என்றால் என்ன? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் கொள்கைகளாக கடைப்பிடிக்கும் வாழ்க்கைமுறை! இந்த மூன்றும் தனித்தனியானவை கிடையாது. ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்தாலும் ஜனநாயகத்தின் ஆணி வேர் ஆட்டம் காணும்.

சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவத்தையும் சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை சகோதரத்துவத்திலிருந்தும் பிரிக்க முடியாது. சமத்துவம் இல்லாமல் சுதந்திரம் மட்டும் இருந்தால் அது சிலர் மட்டும் பலரை ஆளும் அதிகாரத்தை தந்துவிடும். சமத்துவம் இல்லாத சுதந்திரம் தனி நபர் பங்களிப்பை கொன்றுவிடும். சகோதரத்துவம் இல்லாத சுதந்திரம் பலர் மீது சிலர் மட்டும் ஆதிக்கம் கொள்ள செய்துவிடும். சகோதரத்துவமும் சுதந்திரமும் இல்லாமல் சமத்துவம் மட்டும் ஒன்றும் செய்துவிட முடியாது.

இச்சமூகத்தில் இரண்டு விஷயங்கள் முற்றிலுமாக இல்லையென்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒன்று, சமத்துவம்!சமூகரீதியாக இந்தியாவில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. ஒரு சிலரிடம் மட்டும் பெரும் செல்வம் குவிந்திருக்கிறது. பெரும்பான்மை கொடிய வறுமையில் வாழ்க்கை ஓட்டுகிறது.

1950 ஜனவரி 26-ல் முரண்பாடுகளின் குவியலுக்குள் நுழையவிருக்கிறோம். அரசியல்ரீதியாக நமக்கு சமத்துவம் இருக்கும். சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சமத்துவம் இருக்காது.

அரசியல் ரீதியாக தனி மனிதனுக்கு அங்கீகாரம் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஓட்டு என அரசியலை முடிவெடுக்கும் பலம் தனி மனிதனுக்கு இருக்கப் போகிறது. ஆனால் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தனி மனிதனுக்காக அங்கீகாரத்தை நாம் தொடர்ந்து நிராகரித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறோம். எத்தனை காலத்துக்கு இந்த முரண்பாட்டுக் குவியலில் நாம் வாழப் போகிறோம்? சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இன்னும் எத்தனை காலத்துக்கு சமத்துவத்தை நிராகரிக்கப் போகிறோம்?

தொடர்ந்து நிராகரித்துக் கொண்டிருந்தால், அரசியல் ஜனநாயகம் பெரும் ஆபத்தை சந்திக்கும். விரைவில் இந்த முரண்பாட்டை நாம் அகற்ற வேண்டும். இல்லையெனில், ஒடுக்குமுறை அனுபவிப்பர்களால் இந்த அமைப்பு தூக்கி எறியப்படும்.

இச்சமூகத்தில் முற்றிலும் இல்லாத இரண்டாவது விஷயம், சகோதரத்துவம்! சகோதரத்துவம் என்றால் என்ன? இந்தியாவின் எல்லா மக்களும் ஒன்றே என்பதும் சகோதரர்களே என்பதும்தான் சகோதரத்துவம். அதுதான் சமூக வாழ்க்கைக்கு தேவையான ஒற்றுமையை கொடுக்க முடியும். ஆனால் அதை அடைவது மிகவும் கடினம்.

அரசியல் மனம் படைத்த இந்தியர்கள், ‘இந்திய மக்கள்’ என்ற வார்த்தை பிரயோகத்தை மறுத்த காலத்தை நான் அறிவேன். ’இந்திய தேசம்’ என்ற வார்த்தை பிரயோகத்தைதான் அவர்கள் விரும்பினார்கள். என்னை பொறுத்தவரை, தேசம் என்ற நம்பிக்கை ஒரு மிகப்பெரிய பொய். கற்பிதம்!

பல்லாயிர சாதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் மக்கள் எப்படி ஒரு தேசம் என தங்களை உணர்வார்கள்? சமூக மற்றும் மனோரீதியாக நாம் இன்னும் ஒரு தேசமாகவில்லை என்ற உண்மையை சீக்கிரம் புரிந்துகொள்வது நமக்கு நல்லது. அப்போதுதான் ஒரு தேசம் ஆவதற்கான தேவையை புரிந்து அதை அடைவதற்கான வழிகளை உருவாக்க முடியும். ஆனால் இந்த புரிதல் கிடைப்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கப் போகிறது.

சாதிகள் தேசவிரோதமானவை. சமூகரீதியான பிரிவினையை அவை ஏற்படுத்துகின்றன. பொறாமையையும் வெறுப்புனர்வையும் உருவாக்குகின்றன. இவற்றை எல்லாம் களைந்துதான் நம்மால் ஒரு தேசமாக உருவாக முடியும். தேசம் இருந்தால் மட்டும்தான் சகோதரத்துவம் சாத்தியம். சகோதரத்துவம் இல்லாமல் பேசப்படும் சமத்துவமும் சுதந்திரமும் வெறும் வெற்றுப் பூச்சுகளே.

நமக்கு எதிரிலுள்ள சவால்களாக இவற்றைதான் நான் கருதுகிறேன். பலருக்கு இவை கசப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில் இந்த நாட்டின் அதிகாரம் நீண்ட காலமாக ஒரு சிலரின் கையில் மட்டும்தான் இருந்திருக்கிறது. மீதமுள்ள பெரும்பான்மை மக்களை தேவையற்ற சுமையாக மட்டுமே இவர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால் இரைகளாகவே இவர்களுக்கு அவர்கள் தெரிகிறார்கள். சிலரின் ஏகபோகம் பெரும்பான்மையின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்வதற்கே தடையாக இருக்கிறது.

பெரும்பான்மையானோர பொறுமை இழந்து வருகிறார்கள். அடித்தட்டு மக்களின் இந்த புரிதல் வர்க்கப்போராட்டமாக மாற அனுமதித்துவிடக் கூடாது. அப்படி மாறினால் அது அமைப்பை வீழ்த்திவிடும். ஆகவே பெரும்பான்மையினரின் கோபமும் தன்னுணர்ச்சியும் புரிந்துகொள்ளப்படுவதுதான் ஆளும் சிலருக்கும் தேசத்தின் நலனுக்கும் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நல்லது. சமத்துவமும் சகோதரத்துவமும் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உருவாக்கப்படுவது மட்டுமே தீர்வு.

மக்களவையை இதற்கு மேல் நான் பயமுறுத்த விரும்பவில்லை. சுதந்திரம், நிச்சயமாக சந்தோஷமான விஷயம்தான். ஆனால் இந்த சுதந்திரம் நமக்கு நிறைய பொறுப்புகளை கொடுத்திருப்பதையும் மறந்துவிடக் கூடாது. இனி தவறாக எது நிகழ்ந்தாலும் அதற்கு நாம் மட்டும்தான் பொறுப்பு. பிரிட்டிஷை குற்றம்சொல்ல முடியாது. நிறைய விஷயங்கள் தவறாக இங்கு மாறுவதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.

காலம் மாறி வருகிறது. நம் சொந்த மக்களே பல புதிய சித்தாந்தங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். மக்களாட்சியால் அவர்கள் அலுத்து போகிறார்கள். மக்களுக்கான அரசாக எது இருந்தாலும் பரவாயில்லை என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்படும் அரசா என்று கூட கவலைப்படாத கட்டத்துக்கு வந்துவிட்டார்கள்.

சட்டத்தையும் ஜனநாயகத்தையும் நாம் காக்க விரும்பினால் நம் பாதையில் இருக்கும் தீயவற்றை முதலில் அடையாளம் காண வேண்டும். அவற்றை களைய வேண்டும். அது மட்டும்தான் இந்த நாட்டுக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு!"

இன்னுமே உயிர்த்திருக்கிறார் அண்ணல் அம்பேத்கர்!

Also Read: “தீண்டாமைக்கு எதிராக சமரசம் காணாத போராட்டம் நடத்திய அம்பேத்கர் புகழ் வாழ்க” : நினைவு தின சிறப்பு கட்டுரை!