உணர்வோசை
‘எவ்ளோ பெரிய சாமியா இருந்தாலும் இதுதான் கதி’: வெண்பொங்கலும் எழுத்தாளர் ஜெயமோகனின் 'மாடன் மோட்சம்' கதையும்
'மாடன் மோட்சம்' என ஒரு கதை ஜெயமோகன் எழுதி இருப்பார். அவரின் சில நல்ல எழுத்துகளில் அதுவும் ஒன்று. கதைப்படி, பழங்குடி தெய்வமாக மாடசாமி இருப்பார். மாடசாமி இறங்கும் சாமியாடியாக ஒரு கதாபாத்திரம் இருக்கும்.
சாமியாடிக்கும் மாடசாமிக்கும் ஆத்மார்த்த பிணைப்பு உண்டு. "என்ன மாடா.. கர்ப்பமாகாத பொண்ணுக வந்து வேண்டுனா, உடனே குழந்தை கொடுத்துடுறியாமே?" என சாமியாடி கிண்டலடிக்க, மாடசாமி "அய்யய்யோ.. அதெல்லாம் என் வேலை இல்லைய்யா.. என் பொழப்புல மண்ணள்ளி போட்டுடாதே!" என சொல்லி சிரிக்குமளவுக்கான பிணைப்பு.
காட்டு தெய்வ வழிபாட்டை மக்கள் தவிர்க்க தொடங்கியிருக்கும் காலம் என்பதால் மாடனை பார்க்க வரும் கூட்டம் மிகக் குறைவு. சமயங்களில் யாருமே வரக் கூட மாட்டார்கள். சாமியும் சாமியாடியும் மரத்தடியில் அமர்ந்து சாராயம் குடித்துக் கொண்டு வாழ்வின் நிலையாமையை பற்றி பேசுவார்கள்.
சாமியே என்றாலும் கூட்டம் வந்தால்தானே பொழப்பு!
பல திட்டங்களை சாமியும் சாமியாடியும் தீட்டி, அற்புதங்கள் என்றெல்லாம் வேடிக்கை காட்டி ஒரு வழியாக கூட்டம் வர வைத்துவிடுவார்கள். எந்த அளவுக்கு என்றால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் கும்ம தொடங்கிவிடும் அளவுக்கு! பணக்காரர்களும் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியிருப்பார்கள்.
கொஞ்சம் கூட ஓய்வாக ஒரு சாமியை விடாத சமூகத்தில் பிறந்து உழலும் பாழாய்ப்போன வாழ்க்கையை நினைத்து சாமியும் சாமியாடியும் வருத்தம் கொள்வார்கள்.
திடீரென ஒருநாள் மாடன் காணாமல் போகிறார். ஊருக்கு அதிர்ச்சி. நிறைய வேண்டுல்கள் வேறு pending இருக்கிறது. சாமியாடி தேடுகிறான். நாட்கள் ஆகின்றன. விஷயம் மெல்ல கசிகிறது. நகரத்தில் இருக்கும் பெரிய கோவிலில் மாடன் வைக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு பக்கம் வருத்தம் என்றாலும் மறுபக்கம் சாமியாடிக்கு சந்தோஷம்தான். பட்டிக்காட்டுக்குள் யாருமே மதிக்காமல் இருந்த மாடன் இப்போது பெருங்கடவுள் ஆகிவிட்டார். ஊரே வந்து கும்பிடும். ஐயரெல்லாம் பூஜை செய்வார். ஊர் மெச்சும் நல்ல நிலைக்கு ஒரு சாமி வந்து காட்டுவதுதானே கடவுளருக்கு அழகு!
ஒருமுறையாவது மாடனை பார்த்துவிட வேண்டும் என்ற விருப்பம் சாமியாடிக்கு. பெரிய கோவிலில் தன்னை எல்லாம் விடுவார்களா என தெரியவில்லை. ஆனாலும் ஆசைப்பட்டு வளர்த்தெடுத்த சாமி. எப்பாடுபட்டாவது மாடனை பார்த்துவிட வேண்டுமென விரும்பி பெருங்கோவிலுக்கு போகிறான்.
சும்மா சொல்லக்கூடாது. நல்ல கூட்டம். கோயிலின் பிரதான பிரகாரத்துக்கு சென்று பார்க்கிறான். மாடனை காணவில்லை. சுற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு பிரகாரங்கள் இருக்கின்றன.
ஒவ்வொன்றுக்குள்ளும் தேடி பார்க்கிறான். ஊர் பேர் தெரியாத வெளிநாட்டு சாமிகளெல்லாம் இருந்தன. மாடனை காணோம். இன்னொரு பிரகாரம் இருந்தது. சற்று பெரிது. அங்குதான் மாடன் இருக்க வேண்டும்.
பிரகாரத்தை சுற்றும் கூட்டத்துக்குள் சென்று புகுந்து கொண்டான். நகர்ந்து நகர்ந்து பிரகார வாசலில் இருந்து எட்டி பார்த்தால், சின்ன சின்னதாக ஏகப்பட்ட கடவுள்கள். பார்வையில் துழாவி பார்த்து கண்டுபிடித்துவிட்டான். ஒரு ஓரமாக மாடன்! மாடனுக்கு அருகில் சின்னதாக இருந்த இடைவெளி இருந்தது. அங்கு சென்று நின்று கிசுகிசுத்தான்.
சாமியாடி குரல் கேட்டதும் மாடன் சிலிர்த்து போய் நிமிர்கிறார்.
"என்ன ஓய் மாடா.. பெரிய கோவிலுக்கெல்லாம் வந்துட்டே.. நல்ல கவனிப்பா...? செழுமையா இருக்கீரு போலருக்கே!" என கேட்கும்போது சலித்தபடி மாடன் சொல்கிறார்:
"என்னத்த நல்ல கவனிப்பு? காட்டுக்குள்ள இருந்தப்ப, மாடு ஆடுன்னு நல்லா ஆக்கிப் போட்டுக்கிட்டிருந்தே.. இங்க இவனுங்க என்ன தூக்கியாந்துட்டு, உப்பச்சப்பே இல்லாத சாப்பாடா போடறாய்ங்க!"
"அப்படி என்னத்த போட்டாய்ங்க?"
"ம்......? வெண்பொங்கல்!"
நல்ல கதை.
நகைச்சுவை கதையாக இருந்தாலும் தமிழ் பண்பாட்டுச் சூழலின் மக்கள் தெய்வங்களை பெருமதம் எப்படி சுவீகரித்தது என்பதையும் விளைவாக அந்த தெய்வத்தின் பண்பாட்டு தனித்துவம் எப்படி காணாமலடிக்கப் படுகிறது என்பதையும் பதிவு செய்த கதை.
பெருமதத்தின் முன் தெய்வங்களுக்கே வெண்பொங்கல்தான் எனில், மக்களின் நிலை துயரம்தான்!
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!