உணர்வோசை
பெயரின் பின்வரும் மதத்தின் அடையாளம் எதை குறிக்கிறது ? உரையாடலில் மதம் வருவது சரியா தவறா?
சமூகதளங்களின் ஒற்றைத்தன்மை நிறைந்த விவாதங்களை அரசியல் களம் கணக்கிலெடுத்துக் கொள்ளும் அவசியம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தகைய சமூகதள விவாதங்கள் களத்தில் நேர்வதில்லை என்கிற யதார்த்ததையும் தொடர்ந்து புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. உதாரணமாக சாதியும் மதமும் சமூகதளத்தில் முன் வைக்கும் யதார்த்தத்தில் களத்தில் இருப்பதில்லை.
இரண்டு நண்பர்களுக்கு இடையேயான உரையாடலில் மதம் வருவது இயல்பு!
பெரும்பாலான நட்பு வட்டங்களில் மிக மிக குறைந்த தருணங்களில்தான் நண்பனின் சாதியே தெரிய வரும். அதுவும் ஏதேனும் தனிப்பட்ட, குடும்ப விவகாரங்களின் போது மட்டும்தான். ஆனால் மதம் தெரிந்தே இருக்கும். அதற்கு காரணம், முதலில் பெயர். பின் தொப்பி, சிலுவை, பொட்டு, கயிறு போன்ற அடையாளங்கள். ஆனாலும் மதம் ஒரு பேச்சு பொருளாக ஆகாது.
மதம் முகமாகவும் சாதி மூளையாகவும் இருக்கும். நட்புகள் முகங்களோடு மட்டுமே உறவாடும். முகங்களின் தோற்றம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் ஆராயாது. ஏனெனில் நட்பு என்பது மனிதனின் குழு வாழ்க்கைக்கான redefined version தான். குறைந்தபட்ச விருப்ப ஒற்றுமைகள் இருந்தாலே போதும் நட்பு உருவாகி விடும். இந்த நட்பைதான் முற்போக்கு மனிதன் இன்னும் சுத்தப்படுத்தி சாதியையும் மதத்தையும் அதிலிருந்து அகற்றி அடுத்த கட்ட சமூகத்துக்கு செல்ல முனைகிறான்.
சாதியை மூளை என சொன்னதற்கு காரணம் அதுவும் குழு வாழ்க்கையின் ஒரு விளைவே. நாமெல்லாம் கிராமங்களில் இருந்து வந்தவர்கள். கிராமம் சாதிய சமூகம். சாதி நம் தலைகளுக்குள் இருக்கிறது. அதை அகற்ற பகீரத பிரயத்தனமும் தெளிவும் வேண்டும்.
நகரங்களில் எல்லாம் சாதி இல்லையா என கேட்கலாம். இருக்கிறது. நிச்சயமாக இருக்கிறது. ஆனால் மதம் என்ற மாறுவேடத்தில்.
எந்த நட்பு வட்டத்திலும் நேரடியாக உங்களின் மதம் கேட்கப்படாது. மூன்றாவது நபர் வழியாகவோ அல்லது 'கோயிலுக்கு போனேன்' போன்ற உரையாடல்களின் போதுதான் நம் சாதிமூளை தகவல் எடுத்துக் கொள்ளும். என்றும் நேரடியாக வராது. அதற்கான வாய்ப்பை சமூகம் வழங்கி இருக்கவில்லை. அது ஒரு அருவருப்பான விஷயமாக பார்க்கப்பட்டது.
ஒருவேளை ஒருவர் நேரடியாக 'உங்களின் மதம் என்ன?' என கேட்கிறார் எனில் அவரின் அடுத்து வரும் கேள்விகளில் முக்கியமாக 'நீங்க எந்த ஊர், உங்க குலதெய்வம் என்ன' போன்ற கேள்விகள் இருக்கும். அவரின் நோக்கம் உங்கள் சாதியை கண்டறிவதே.
இப்படி மறைமுகமாக கேட்கப்பட்டும் அருவருப்பாகவும் பார்க்கப்பட்ட விஷயம் இப்போது நேரடியாகவே கேட்கப்படுகிறதெனில் அது முடிவில் சென்று சேரப்போகும் இடம் சாதிக்குழு மனநிலைக்கு.
'உங்கள் மதம் என்ன' என கேட்கக்கூடிய வாய்ப்பை இந்துத்துவம் வழங்குகிறது. மதத்தை காரணம் காட்டி நட்பை மறுதலிக்க சொல்கிறது. அதன் வழியே நகரத்தில் வெளிப்படையான கிராமத்தின் பிளவுகளை கொண்டு வர விரும்புகிறது. மதத்தை அறிய முனைவதால் இந்துத்துவம் என சொல்கிறோம். உண்மையிலேயே அது ஆரியத்துவம். ஏனெனில் மதத்தின் வழி அது அடைய விரும்புவது சாதியின் வேர்களை.
இதுதான் களயதார்த்தம். சமூகம் இயங்கவென சில patterns இருக்கிறது. அந்த patternகளை புரிந்துகொண்டு முற்போக்கு முகாம் இயங்கவில்லையெனில் தோல்வி நிச்சயம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!