உணர்வோசை

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? நந்தினி, பழுவேட்டயர், பாண்டியர்கள்: பொன்னியின் செல்வனும் வரலாற்று உண்மையும்

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம். அந்த ராஜாவின் பெயர் முதலாம் பராந்தகனாம். அவனுக்கு மொத்தம் மூன்று மகன்கள். ராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன். பராந்தகன் காலத்திலேயே பட்டத்து இளவரசன் ராஜாதித்தன் உயிரிழந்து விட்டான். எனவே இரண்டாம் மகன், கண்டராதித்தன் ஆட்சியேறினான்.

கண்டராதித்தன் சிவபக்தன். ஆட்சிக்கும் பெரும் சிக்கல் வடக்கே இருந்த ராஷ்ட்ரகூட மன்னர்களால் இருந்தது. எப்போதும் ஆட்சி கைப்பற்றப்படும் என்கிற சூழல். கண்டராதித்தன் தாக்குப் பிடிக்கவிலை. நான்கு வருடங்கள்தான் ஆண்டான். கிபி 957லேயே இறந்தான். கணக்குப்படி அவனது மகன் ஆட்சிக்கு வர வேண்டும். ஆனால் அவனது மகனான மதுராந்தகன் என்கிற உத்தமச் சோழன் குழந்தையாக இருந்ததால் ஆட்சியேற முடியவில்லை. எனவே இறந்துபோன கண்டராதித்தனின் கடைசி தம்பியான அரிஞ்சயனிடம் ஆட்சி செல்கிறது.

அரிஞ்சயனும் நெடுநாட்களுக்கு தாக்குப் பிடிக்கவில்லை. ஒரு வருடத்திலேயே இறக்கிறான். அவனது மகன் சுந்தரச்சோழன், கண்டராதித்தனின் குழந்தையை விட பல வயதுகள் மூத்தவன் என்பதால் அவனுக்கு ஆட்சி சென்றது. அவன் 17 வருடங்கள் ஆண்டான். ராஷ்ட்ரகூட அரசர்களை வீழ்த்தினான். இங்குதான் முக்கிய திருப்பம்!

கணக்குப்படி கண்டராதித்தன் மறைவுக்கு பிறகு அவனுடைய வாரிசுக்கு சேர வேண்டியப் பதவி. வாரிசு குழந்தையாக இருந்ததால் தம்பி அரிஞ்சயனுக்கு வந்து அவனது வாரிசு சுந்தரச் சோழனுக்கு வந்திருந்தது. கண்டராதித்தனின் குழந்தையான மதுராந்தகன் என்கிற உத்தமசோழன் வளர்ந்ததும் நியாயப்படி, சுந்தரச்சோழன் தன் பதவியைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவனோ தன் வாரிசான ஆதித்த கரிகாலனை பட்டத்து இளவரசனாக, வாரிசாக அறிவித்தான்.

தொடங்கியது பிரச்சினை!

ஆதித்த கரிகாலன் போர்களை முன்னெடுத்தவன். பல இடங்களுக்கு சென்று இழந்த சோழ நாட்டுப் பகுதிகளை போரிட்டு மீட்டுக் கொண்டிருந்தான். பாண்டிய மன்னனான வீரபாண்டியனைக் கூட கொன்று நாடு பிடித்தான். ஆதித்த கரிகாலனை போரில் எவரும் வீழ்த்த முடியாத நிலை நிலவியது.

சுந்தரசோழனுக்கு மொத்தம் மூன்று வாரிசுகள். ஆதித்த கரிகாலன், குந்தவை, அருண்மொழி. பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன். அவனது சகோதரி குந்தவை. இருவருக்கும் இளையவன் அருண்மொழி.

சுந்தரச்சோழனின் உடல்நலம் குன்றுகிறது. எனவே ஆதித்த கரிகாலன் பட்டம் தரிப்பதை நோக்கி நிலைமை நகர்கிறது. அச்சூழலில் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான்.

வரலாற்றாய்வாளர் நீலகண்ட சாஸ்திரி, பிற்காலச் சோழர்களின் இந்தக் காலக்கட்டத்தை குழப்பங்கள் மிகுந்தக் கட்டமாக வர்ணிக்கிறார். ஆதித்த கரிகாலனை கொன்றது யாரென்ற குழப்பம் தொடங்குகிறது. நீலகண்ட சாஸ்திரி, இக்குழப்பத்துக்கு தீர்வாக, ஆதித்த கரிகாலனின் மரணத்தில் ஆதாயம் அடைந்தவர் யாரென கண்டறிவது துணைபுரியலாம் என்கிறார்.

ஆதித்த கரிகாலனுக்கு பிறகு ஆண் வாரிசு அருண்மொழிதான். அவனுக்கு பட்டம்சூட்ட நாடும் மக்களும் தயாராக, அவன் பட்டத்தை சித்தப்பாவுக்கு விட்டுத் தருகிறான். சித்தப்பா வேறு யாருமல்ல, மதுராந்தகன் என்கிற உத்தமச்சோழன்.

ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டு, அருண்மொழி விட்டுக்கொடுத்த பதவியில் உத்தமச் சோழன் வீற்றிருந்து 16 வருடங்கள் ஆளுகிறான். அவனது மரணத்துக்குப் பிறகு அருண்மொழி பதவியேறுகிறான். பதவிக்கு வரும்போது தரப்படும் பட்டமாக ராஜராஜன் அவனுக்கு சூட்டப்படுகிறது. ராஜ ராஜச் சோழன் ஆகிறான்.

வரலாற்றாய்வாள்நீலகண்ட சாஸ்திரியின் கூற்றுப்படி பார்த்தால் ஆதித்த கரிகாலனின் மரணத்தில் உடனடி ஆதாயம் பெறுபவன் உத்தமச்சோழன். எனவே உத்தமச்சோழன் பதவிக்காக, அருண்மொழியுடன் சதி செய்து ஆதித்த கரிகாலனைக் கொன்றிருக்கலாம் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. ஆனால் பிற்காலச் சோழர் சரித்திரம் எழுதிய சதாசிவ பண்டாரத்தாரோ அருண்மொழியைக் கொச்சைப்படுத்த முடியாது என்றும் சித்தப்பா உத்தமச்சோழன் ஆளும் எண்ணம் இருக்கும் வரை, அப்பதவியை தான் விரும்பவில்லை என மக்களிடம் கூறியதாக திருவாலங்காட்டு செப்பேடுகள் தெரிவிக்கின்றன என்கிறார்.

இவற்றுக்கிடையே உடையார்குடியில் கிடைத்த ஒரு கல்வெட்டு நிலவுரிமை சார்ந்த தகவலைக் குறிக்கும்போது ஒரு முக்கியத் தகவலை தெரிவிக்கிறது.

‘வீரபாண்டியனை வென்ற கரிகாலச் சோழனைக் கொன்ற துரோகிகளான சோமன், தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜன், தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச்சோழ பிரம்மாதிராஜனும் இவர்களின் தம்பிமாரும் மக்களும் பேரப்பனும் பெண் கொடுத்த பிராமண மாமன்மாரும் பெண்களும் ஆகிய அனைவரின் உடைமையான நிலங்களும் நம் ஆணைப்படி கொட்டயூர் பிரம்மஸ்ரீராஜனுக்கும் சந்திரசேகர பட்டனுக்கும் அளிக்க தந்தோம்’ எனக் குறிப்பிடுகிறது

அதாவது ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களாக ஓர் ஐந்து பேரை இக்கல்வெட்டுக் குறிப்பிட்டு ‘சிட்டிசன்’ பட இறுதிக்காட்சி போல், அந்த ஐந்து பேரின் சித்தி, சித்தப்பா, மாமன், மாமி, பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் என எல்லா உற்றார் உறவினர்களின் நிலமும் உடைமையும் பறிமுதல் செய்து வெளியேற்றப்பட்ட தண்டனையை இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் இன்னொரு இரண்டு சூட்சுமக் குறிப்புகள் இருக்கின்றன.

முதல் சூட்சுமம், ஆதித்த கரிகாலனை கொன்ற ஐவரும் பிராமணர்கள் என்பது. இரண்டாவது சூட்சுமம், இதில் குறிப்பிடப்படும் பஞ்சவன் பிரம்மாதிராஜன் என்கிற பெயர் பாண்டிய அரசர்கள் தங்களின் பிராமண அதிகாரிகளுக்கு கொடுக்கும் பட்டம் என்பதும் இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்கிற பெயர் சோழ அரசர்களால் வழங்கப்படும் பட்டம் என்பதுமாகும். ஆகவே அடிப்படையில் பாண்டிய நாட்டு பிராமணர்களும் சோழ நாட்டு பிராமணர்களும் ஒன்றிணைந்து இக்கொலை செய்யப்பட்டதாக புரிந்து கொள்ளலாம்.

இரு அரசுகளை சேர்ந்த பிராமணர்கள் சதியில் ஈடுபட்டிருப்பது இயல்பாகவே இச்சதி பாண்டிய மன்னர் வீழ்ச்சிக்கு எதிராக செய்யப்பட்டது என்ற குறிப்பையும் நமக்கு தருகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் இக்கல்வெட்டு ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டு, உத்தமச்சோழன் பதவியேறி 16 வருடங்கள் கழிந்து பிறகு ராஜராஜசோழன் பதவிக்கு வந்த இரண்டாம் ஆண்டில்.

ஏன் உத்தமச்சோழன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயலவில்லை? தண்டனை கொடுக்க 16 ஆண்டுகள் காத்திருப்பு ஏன் நேர்ந்தது? இரு அரசுகளின் அதிகாரிகள் ஏன் கூட்டு சேர்ந்து சதி செய்தனர்?

இந்த மூன்று கேள்விகள் ஆதித்த கரிகாலனின் கொலைக்கு இன்னும் மர்மமூட்டுகின்றன.

கற்பனைச் செறிவு படைத்த ஓர் எழுத்தாளனுக்கு வரலாறு கொண்டிருக்கும் இந்த மர்ம முடிச்சு ருசிகரமான விஷயம். அந்த முடிச்சுக்குள் இறங்கி தன்னுடைய கற்பனை குதிரையை எல்லா திசைகளுக்கும் தட்டி விட முடியும். வாசிப்பவரை பரபரப்படைய வைக்கக் கூடிய ஒரு மர்மக் களம் இது. எந்த எழுத்தாளனையும் ஈர்க்கக் கூடிய களமும் கூட.

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஈர்க்கப்பட்டார். தொடர்கதை உருவானது. நாவலானது. பெரும் வெற்றியை அடைந்தது.

ஆதித்த கரிகாலனை கொன்றது நந்தினியா, உத்தமச்சோழனா, பழுவேட்டரையரா, பாண்டியரா என சோழிகளை உருட்டிவிடும் கல்கியார், உண்மையில் ஆதித்த கரிகாலனை கொன்ற ஐவரும் பிராமணர்கள் என்கிற உண்மையை நாவலில் எங்கும் சொல்லவில்லை.

Also Read: ‘பராசக்தி’ படம் வெளியாகி 70 ஆண்டுகள்.. இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் கலைஞரின் வசனம்!