உணர்வோசை

மனித உடல் உறுப்புகளை விற்கும் சந்தை.. யார் இந்த வியாபாரிகள்? எப்படி இந்த சந்தை சாத்தியமாகிறது?

சிவப்புச் சந்தை தெரியுமா?

மனித உடல் உறுப்புகள் கூவி விற்கப்படும்!

சிறுநீரகம், இதயம், கணையம் தொடங்கி ரத்தம், கருமுட்டை, மனிதத் தோல் வரை சிவப்புச்சந்தையில் மனித உடலின் எல்லா பாகங்களும் வியாபாரம் செய்யப்படுகின்றன. வெவ்வேறு நோய்கள், விபத்துகள் மற்றும் வயது முதிர்வு காரணமாக உடல் உறுப்புகள் செயல் இழந்துபோவதும், அதற்கு மாற்றாக உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் சம்பந்தப்பட்ட நபரின் உடலில் பொருத்தப்படுவதும் இன்று உலகம் முழுக்க உள்ள நடைமுறைதான். இத்தகைய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மூலம் ஒருவருக்கு ஒரு உறுப்புத் தேவை எனில், அதற்கு முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டும். ஆனால், பணம் படைத்த கோடீஸ்வரர்கள், இப்படி காத்திருக்கத் தயாரில்லை.

கோயிலில் சாமி கும்பிட வரிசையில் நிற்க தயாரில்லாத பணக்காரர்கள், கூடுதல் பணம் செலுத்தி ஸ்பெஷல் தரிசனத்தில் முந்திச் சென்றுவிடுவதைப் போல, இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் பணத்தை பயன்படுத்தி ஆட்டவிதிகளை உடைத்து, உடல் உறுப்புகளை முதலில் பெற நினைக்கிறார்கள். இந்த இடத்தில்தான் ரத்த சந்தை உயிர்பெற்று எழுகிறது.

இன்ன ஊர், இன்ன நாடு என்ற வரையறை எதுவுமின்றி, உலகம் முழுமைக்கும் சிவப்புச்சந்தை விரிந்து விரவி இயங்கிக் கொண்டிருக்கிறது. சிவப்புச்சந்தையை கட்டுப்படும் முயற்சியாக உலக நாடுகள் பல சட்ட வழிமுறைகளை வகுத்தாலும் அந்த சட்டங்களுக்கு இடையில் இடைவெளிகளை உருவாக்கி வெகு விமரிசையாக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள் சிவப்புச்சந்தை வியாபாரிகள். யார் இந்த வியாபாரிகள்? எப்படி இந்த சந்தை சாத்தியமாகிறது?

சிவப்பு சந்தை வியாபாரம் சாத்தியமாவது மருத்துவமனைகளின் வழியாக. மருத்துவர்களே இந்த சந்தையின் வியாபாரிகள்.

உடல் உறுப்புகளை விற்பனை செய்யக்கூடாது; தானமாக மட்டுமே கொடுக்க வேண்டும். இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றில் உள்ள சட்ட நடைமுறை இதுதான். எக்காரணம் கொண்டும் உறுப்புக்கு விலை நிர்ணயிக்கக் கூடாது. தானமளிப்பவர் மனமுவந்து கொடுக்க வேண்டும். உடலுறுப்பை விற்பது பெரும்பாலான உலக நாடுகளில் தண்டனைக்குரிய குற்றம்.

அப்படியானால், இந்த சிவப்புச்சந்தை இயங்குவது எப்படி?

சட்டங்களில் உள்ள ஓட்டைகளே காரணம். உதாரணமாக ரத்த தான முகாம்களில் பொதுநலன் பொருட்டு இலவசமாக ரத்தம் கொடுக்கிறோம். நாம் கொடுக்கும் ரத்தம், அது தேவைப்படுபவருக்கு இலவசமாக போய்ச் சேரும் என்பது நம் நம்பிக்கை; கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தார்மீக நெறி. ஆனால், நடப்பது என்ன தெரியுமா?

மருத்துவமனைகளின் ரத்த வங்கியில் இருந்து ரத்தம் ஏற்றப்பட்டால், ரத்தத்துக்கு நேரடியாக நாம் விலை கொடுப்பதில்லை. நமக்கு கொடுக்கப்படும் ரத்தத்துக்கு இணையான அளவு ரத்தத்தை திரும்ப ரத்த வங்கிக்கு நாம் கொடுக்க வேண்டும். நாமும் நமக்கு தெரிந்த உறவினரையோ நண்பரையோ நாடுவோம். நமக்கு கொடுக்கப்பட்ட ரத்தத்துக்கு பதிலாக அவரின் ரத்தத்தை எடுத்து ரத்த வங்கி சேமிப்பில் வைத்துக் கொள்ளும். இதெல்லாம் கூட சரிதான். சிகிச்சை முடிந்து நமக்கு தரப்படும் கட்டண ரசீதில்தான் இருக்கிறது சூட்சமம்.

நமக்கு வழங்கப்பட்ட ரத்தத்துக்கு கட்டணம் இருக்காது. ஆனால் அந்த ரத்தத்தை ஏற்றிய செலவு ஒரு கட்டணம் இருக்கும். அந்த கட்டணத்தில்தான், பிரிஸ்டினா விமான நிலையத்தில் மயங்கி விழுந்த இளைஞனின் சிறுநீரகமும் கொள்ளையடிக்கப்படும்.

சிவப்புச்சந்தையின் ஒரு பகுதியான ரத்த வியாபாரம் ஒரு சிறு உதாரணம்தான். இதேபோல், சிறுநீரகம் நமக்கு செயலிழந்து நம் உறவினரே நமக்கு தானம் செய்தாலும், சிறுநீரகம் பொருத்தும் செலவென ஒரு தொகையை மருத்துவமனை எடுத்துக் கொள்ளும். ஒருவேளை, சிறுநீரகம் தேவைப்படுபவருக்கு சிறுநீரகம் தானமளிக்கும் அளவுக்கான உறவினரோ நண்பரோ இல்லையென்றால் என்ன நடக்கும்? இங்குதான் உடல் உறுப்பு தரகர்கள் காட்சி தருவார்கள். மருத்துவமனையை சார்ந்தவர்களே தரகர்களுக்கு தகவல் கொடுப்பார்கள். பிறகு தரகர், சிறுநீரகம் தேவைப்படுபவரை தொடர்பு கொள்வார்.

உடல் உறுப்புகளை விற்றுதான் வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற நிலையில் மக்களின் பொருளாதார சூழல் இருப்பதுதான் இந்த சிக்கலின் அடிப்படை. மக்கள் யாரும் மனம் விரும்பி தங்கள் உடல் உறுப்பை விற்கவில்லை. அவர்களுக்கு வேறு வழியில்லை.

Also Read: ஞானம் என்பது வேறொன்றும் அல்ல புரிதலே.. அப்புரிதலே அறிவு, ஞானம், மனம், நிர்வாணம், சமநிலை!