உணர்வோசை
'Sexual Predator' - கலவி மட்டுமே விருப்பம் என தெரிவித்து இணையும் நபர்களை விட மோசமான இவர்கள் யார் ?
ஆங்கிலத்தில் Predator என்கிற வார்த்தை இருக்கிறது. கொடுமையான விலங்கு என மொழிபெயர்க்கலாம். இந்த வார்த்தையை இன்னொரு வார்த்தையுடனும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். Sexual Predator! இந்த வார்த்தை அதிகமாக ஆண்களை சுட்டவே பயன்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி படுக்கையில் வீழ்த்த முயலும் ஆணே predator-ஆக குறிப்பிடப்படுகிறார்.
இத்தகைய வீழ்த்துதலை ஆணின் பிரச்சினை என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. பெண்களிலும் சிலர் இப்படி உண்டு. இச்சமூகத்தில் இருக்கும் அதிகாரமும் தொடர்பும் ஆதிக்கமும் அதிகமாக ஆணிடமே குவிந்து கிடப்பதால் அவன் நிகழ்த்தும் வீழ்த்துதல் பன்மடங்கு பாதிப்பை உருவாக்குகிறது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு modus operandi வைத்திருப்பார்கள்.
விழுங்குவது போல் பார்ப்பார்கள். வாட்சப், முகநூல் புகைப்படங்கள் வர்ணிப்பார்கள். லஞ்ச், டின்னர் அல்லது காபிக்கு அழைப்பார்கள். உங்களின் தகவல்களை அதிகமாக பெற்றுக் கொள்வார்கள். தொடர்ந்து அழைப்புகள், குறுந்தகவல்கள் என உங்களின் வாழ்க்கையை நீங்கள் அறியாமலே நிரப்புவார்கள். ஒரு கட்டத்தில் உங்களுக்கு நேரும் சிறு துயரை கூட பகிர்ந்துகொள்ள அவர் மட்டுமே இருப்பதாக நீங்களே நம்பிவிடுவீர்கள். பல்வேறு உதவிகளை நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வழங்குவார்கள். ஆனாலும் நேரடி முயற்சிக்கும் வந்திருக்க மாட்டார்கள். உங்களிடமிருந்து ஒரு obilgation எழுவதற்கான வாய்ப்புக்கு காத்திருப்பார்கள். நீங்களாக முன்வந்து கேட்கும் ஒரு உதவி! அதுதான் அவர்களுக்கான விசா. அது கிடைத்துவிட்டால் போதும்.
பிறகு தங்களின் தனி வாழ்க்கைகளின் துயரங்கள் என சிலவற்றை உங்களிடம் சொல்வார்கள். அவற்றுக்காக வருந்துவதை போல் காட்டிக் கொள்வார்கள். உங்களின் ஆறுதலை கோரி நிற்பார்கள். நீங்களும் உண்மையாகவே ஆறுதல்படுத்த விழைகையில் அந்த ஆறுதலின் எல்லையை விரிவாக்குவார்கள். அப்போது என்ன செய்வதென தெரியாமல் தடுமாறும் நீங்கள் அத்தகைய சூழல் கொடுக்கும் உன்மத்தத்தில் உயிரியல் ரீதியாகவே இணங்கும் நிலையை எட்டிவிடுவீர்கள்.
'ஒரே கடல்' மலையாளப் படத்தை போல்!
அந்த ஆணை பொறுத்தவரை நீங்கள் வீழ்த்தப்பட்டுவிட்டீர்கள். அவரின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல் நீங்கள். உங்களின் வாழ்க்கை அவருடைய கைச்சொடுக்குக்கு பணிய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிவிட்டதாக புரிந்து கொள்வீர்கள்.
உங்களுக்கு கணவர் இருக்கலாம். காதலர் இருக்கலாம். மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு ரகசியமாக நேர்ந்த விஷயம் ரகசியமாகவே காக்கப்பட வேண்டிய சுமையை உங்கள் பொறுப்பாக்கிவிடுவார் அந்த ஆண். இன்னும் பல fantasyகளை அவர் ரசிக்க விழைவார்.
உதாரணமாக நீங்கள் வீட்டில் இருக்கும் சமயம் உங்களை அழைத்து ஒரு நெருக்கமான விஷயத்தை சொல்லி பதட்டத்துக்குள்ளாக்கி அழைப்பை துண்டித்து விடுவார். அது உங்களின் வீட்டிலும் உங்களுடமும் ஏற்படுத்தும் குழப்பத்தை ரசித்து வெறியேற்றிக் கொள்வார்.
'சிகப்பு ரோஜாக்கள்', 'ஆசை' போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றனவா? இது அவற்றை காட்டிலும் கொடூரம் நிறைந்த விஷயம்.
இத்தகைய நபர் சமூகத்தில் மதிக்கப்படும் ஆளுமையாக இருக்கும்போதும் அவரிடம் உங்களைக் காட்டிலும் அதிக அதிகாரம் இருக்கும்போதும் முக்கியமாக அவர் முற்போக்கு முகமூடி அணிந்திருக்கும்போதும் அவர் செய்வது சமூகவிரோத செயலாகிவிடுகிறது. அவரும் முற்போக்கு சமூகத்துக்கான விரோதி ஆகிவிடுகிறார். ஆனாலும் நம் சமூகம் அவரையே கொண்டாடும்.
இதைத்தான் power abuse என்கிறார்கள். அதிகாரத்தை காட்டி ஈர்த்து பின் அதை கொண்டே ஒடுக்கும் செயல் நிச்சயமாக சமூகவிரோதம்தான். இவர்களைதான் sexual predators எனவும் சுட்டுகிறோம்.
இவர்களோடு fling முதலிய உறவுகளை குழப்பிக் கொள்ள வேண்டாம். கலவி மட்டுமே விருப்பம் என தெரிவித்து இணையும் அத்தகைய உறவுகள் இந்த செயலுக்கு எவ்வளவோ மேல்.
Predator 2 படத்தின் இறுதியில் வேற்று கிரக ஜீவராசி தன் விண்கலத்தில் மனிதர்களின் உடற்கூடுகளை வெற்றி கேடயங்களாக மாற்றி வைத்திருப்பதுபோல்தான் இவர்களும்.
தன்னுடைய பாலியல் வேட்கையை சாதி சார்ந்து, மொழி சார்ந்து, நிறம் சார்ந்து, மதம் சார்ந்து, அதிகாரம் சார்ந்து நைச்சியமாக வேட்டை மிருகத்தை போல் பதுங்கி வாய்ப்புக்காக காத்திருந்து பின் வீழ்த்துவது இவர்களை predator என்னும் கொடிய மிருகங்களாக ஆக்குகிறது.
பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான இயல்பான நட்பு, பழக்கங்கள், காதலுறவு, இணை தேடல், வெளிப்படை பேச்சு முதலிய விஷயங்களை ஒரு சமூகமாக நாம் தடுத்து வைக்கும் வரை இத்தகைய மிருகங்களையே வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!