உணர்வோசை

சுதந்திர போராட்ட காலத்தில் RSS உண்மையில் என்ன செய்து கொண்டிருந்தது?.. ஒரு நிஜ Flash Back!

கடந்த சுதந்திர தினத்தன்று மோடி எல்லாருடைய வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டுமென்றார். சங்கிகளும் ஆர்எஸ்எஸ்காரர்களும் தலைகீழாக கொடி ஏற்றுவது, தேசிய கீதம் தெரியாமல் திணறுவது போன்ற கோமாளித்தனங்கள் அரங்கேறின. உண்மையில் ஆர்எஸ்எஸ்காரர்கள் சுதந்திரப் போராட்டத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

Wire-ல் வந்த History Shows How Patriotic the RSS Really Is என்கிற கட்டுரையின் அடிப்படையில் அவர்களை பற்றிய ஒரு சிறு flashback.

நிகழ்வு: உப்பு சத்தியாகிரக போராட்டம்

ஒருவர்: “சுதந்திரத்தை எப்படியும் இந்த போராட்டத்தை கொடுத்துடும். நாம கலந்துக்கலன்னா நம்ம தேங்கிடுவோம். இந்த போராட்டத்துல கலந்துக்கிட்டு ஜெயிலுக்கு போகணும்னாலும் நம்ம போகலாம்.”

டாக்டர்: “நிச்சயமா ஜெயிலுக்கு போங்க. ஆனா உங்க குடும்பத்தை யார் பார்த்துக்கறது?”

ஒருவர்: “இரண்டு வருஷத்துக்கு என் குடும்பத்துக்கு எந்த பிரச்சினையும் வராத மாதிரி நான் தேவையான விஷயங்கள செஞ்சு வச்சிட்டேன்!”

டாக்டர்: “இரண்டு வருஷத்துக்கு நீ இல்லாம உன் குடும்பம் வாழ முடியும்னா, நீ கெளம்பி வந்து ஆர்எஸ்எஸ்ஸோட வேலை பாரு. போராட்டத்துக்கு போகாதே!”

இந்த வரலாற்று சிறப்பான உரையாடலில் பங்கு பெற்ற டாக்டர் என்பவர் ஹெட்கேவர். ஆர்எஸ்எஸ்ஸை தொடங்கியவர். பிறரை கலந்து கொள்ள வேண்டாமென சொல்லிய ஹெட்கேவர் மட்டும் பின்னொரு போராட்டத்தில் கலந்து கொண்டு கைது ஆகிறார். அக்கைதை அவரின் சரிதை குறிப்பிகையில்“சிறைக்குள் இருக்கும் தன்னலமற்ற, உயிரை தியாகம் செய்யத் தயங்காத, சுதந்திரம் விரும்பும் மக்களிடம் பேசி விவாதித்து ஆர்எஸ்எஸ்ஸுக்கு கொண்டு வந்துவிட முடியுமென்கிற நம்பிக்கையில்’ அவர் கைதானதாக குறிப்பிடுகிறது.

1940ம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி முன்னெடுத்தார். அந்த காலகட்டத்தில் இருந்த ஆங்கிலேயே அரசின் உள்துறை குறிப்பு ஒன்று இப்படி சொல்கிறது. “ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உள்துறை செயலாளர்களை சந்தித்தார்கள். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை ஆங்கிலேய அரசுக்கான காவற்படையில் பெரிய எண்ணிக்கையில் சேர்த்துவிடுவதாக உறுதி அளித்தார்கள்.”

வெள்ளையனே வெளியேறு போராட்டம் தொடங்கப்பட்ட ஒன்றரை வருடங்களில் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பம்பாய் அரசு ஒரு குறிப்பை பதிவு செய்திருக்கிறது. “நிறைவு தரும் வகையில் ஆர்எஸ்எஸ் சட்டத்துக்கு உட்பட்டு நடந்திருக்கிறது. குறிப்பாக 1942ம் ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் வெடித்த போராட்டங்களில் பங்கு பெறாமல் தள்ளியே இருந்திருக்கிறது.”

1942ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆங்கிலேயர்களால் பெரும் பஞ்சம் வங்காள மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டது. 30 லட்சம் பேர் இறந்தனர். அச்சமயத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் தலைவரான கோல்வால்கர் இப்படி பேசியிருக்கிறார்:

“சமூகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழலுக்காக ஆர்எஸ்எஸ் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. வலிமை குறைந்தவர்கள்தான் அடுத்தவர்களை குற்றம் சாட்டுவார்கள். வலு குறைந்தவர்களுக்கு வலிமை நிறைந்தவர்கள் இழைக்கும் அநீதியை குறை சொல்வது வீண் வேலை. எங்களின் பொன்னான நேரத்தை அடுத்தவரை விமர்சிப்பதிலும் குற்றம் சுமத்துவதிலும் வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. பெரிய மீன்கள் சின்ன மீன்களை உண்ணும் என்பதை தெரிந்திருக்கும் நாம் பெரிய மீனை குற்றம் சாட்டுவது சுத்த பைத்தியக்காரத்தனம்.”

அதாவது பெரிய மீன்கள் என்பது ஆங்கிலேயர்கள். சிறிய மீன்கள் என்பது வங்காள பஞ்சத்தில் மடிந்த இந்தியர்கள்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் ஆர் எஸ் எஸ் நடத்தும் பத்திரிகையான ஆர்கனைசரில் தேசியக் கொடி விமர்சிக்கப்பட்டது. “இந்துக்கள் யாரும் தேசியக்கொடியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மூன்று என்கிற வார்த்தையே தீமை நிறைந்தது. மூன்று வண்ணங்களை கொண்ட கொடி நிச்சயமாக மோசமான உளவியலையே கொண்டு வரும். நாட்டுக்கே ஆபத்து விளைவிக்கும்.”

அதாவது இந்திய சுதந்திரத்துக்கு போராடி தேசியக் கொடியை கொண்டு வந்தவர்களில் ஆர்எஸ்எஸ்ஸை பொறுத்தவரை இந்துக்கள் கிடையாது.

இந்தியாவுக்கான அரசியல் சாசன வரைவு முடிந்த நேரத்தில், 1949ம் ஆண்டின் நவம்பர் மாதம் வெளியான ஆர்கனைசர் பத்திரிகை, இந்திய சாசனத்தையும் ஏற்கமுடியாது என்பதை உறுதிப்படுத்தியிருந்தது.

“பழைய பாரத நாட்டில் இருந்த சாசனத்தை உருவாக்குவோம் என இந்த புது சாசனம் எங்குமே சொல்லவில்லை. இன்று வரை உலகை வியப்பில் ஆழ்த்தி தொடர் கீழ்ப்படிதலையும் சேவகத்தையும் போதித்திருக்கும் அற்புதமான சாசனம் மநுதர்மம். நம் அரசியல் சாசன பண்டிதர்களுக்கு மநுதர்மத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லை.”

கீழ்ப்படிதல் மற்றும் சேவகம் என்றால் உங்களுக்கு படிப்பு கொடுக்கப்படாது. உரிமையும் இருக்காது. பார்ப்பனனுக்கு அடிமைச்சேவகம் மட்டும்தான் செய்ய முடியும்.

அதிகாரப்பூர்வமாக அரசியல் சாசனம் ஏற்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியான பிறகும் ஆர்கனைசர் பத்திரிகை ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் ஒரு பத்தி,

“பம்பாயில் டாக்டர் அம்பேத்கர், ‘மநுதர்மத்தின் நாட்கள் முடிந்துவிட்டது’ என சொன்னதாக சொல்லப்படுகிறது. இன்றைய சூழலிலும் ஒவ்வொரு இந்துவின் அன்றாட வாழ்க்கையையும் மநுதர்மத்தின் பாதிப்பு இருக்கிறது என்பதே உண்மை. இந்து மதத்தை பின்பற்றாத இந்து கூட பல இடங்களில் மநுதர்மத்தை கடைப்பிடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறான்”

கட்டுரையின் தலைப்பு, “எங்களின் இதயங்களை மநுவே ஆள்கிறான்”

இன்றும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் இதயங்களை மநுவே ஆள்கிறான். அனைவருக்கும் கல்வியும் வாய்ப்பு உரிமையும் கொடுக்கும் இந்திய சாசனத்தை தூக்கி எறிவதே அவர்களின் இலக்கு. இன்று நமக்கு மருத்துவப் படிப்பு கிடையாது, பள்ளிக்கல்வி பிடுங்கப்பட்டுவிட்டது. இனி மருத்துவமும் கிடைக்காது. பார்ப்பனனுக்கு நாம் அனைவரும் கீழ்ப்படிந்து சேவகம் செய்யும் எதிர்காலத்தை நோக்கிதான் இட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் போராடியவர்களை இந்துக்கள் இல்லை என்கிறது ஆர்எஸ்எஸ். ஏனென்றால் ஆர்எஸ்எஸ் போராடவில்லை. ஆர்எஸ்எஸ்ஸை பொறுத்தவரை அவர்கள்தான் இந்துக்கள். அவர்கள் செய்வதைத்தான் இந்துக்கள் செய்ய வேண்டும். அவர்கள் செய்யாத ஒன்றை இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் செய்திருந்தாலும் அவர்களை இந்துக்கள் அல்ல என அவர்கள் புறக்கணித்துவிட முடியும். பல நூறு ஆண்டுகளாக அவர்கள் செய்து வருவது அதைத்தான்.

இந்தியர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டிக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களிடம் போய் சேர்ந்துகொண்டு நம்மை அடக்கி ஒடுக்கி ஆங்கிலேயர்களிடமே பாராட்டுப் பத்திரம் வாங்கிய தேசவிரோதிகள் கூட்டம்தான் இன்று நம்மை தேசவிரோதிகள் என வசை பாடுகிறது. தேசியக் கொடியை தீமை என்றவர்கள்தான் இன்று தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read: 'மௌன ராகம்' : பெண்களுக்கு மோகனை விட ஏன் கார்த்திக்கை பிடிக்கிறது ?