உணர்வோசை
'மௌன ராகம்' : பெண்களுக்கு மோகனை விட ஏன் கார்த்திக்கை பிடிக்கிறது ?
பெண்களில் பெரும்பாலும் மௌன ராகம் பட ரேவதியாகத்தான் இருக்கின்றனர். அவர்களுக்கு மோகன் பிடிப்பதில்லை. கார்த்திக்தான் பிடிக்கிறது.
மோகனின் மென்மை, மரியாதை, space கொடுத்தல் போன்றவற்றை அவர்கள் விரும்புவதில்லை. கார்த்திக்கின் முரட்டுத்தனம், ரோட்டில் பைக் நிறுத்தும் ஒழுங்கின்மை, பெண்ணின் வார்த்தைக்கு மரியாதை கொடுக்காமல் 'சந்திரமெளலி' என சத்தம் போடுவது போன்றவற்றைத்தான் பெண்கள் நினைத்து உருகுகிறார்கள்.
விவாகரத்துக்கு வக்கீலிடம் பேசிவிட்டு வரும் மனைவிக்காக கார் கதவை திறந்துவிடுவது, வேலை பார்ப்பவரின் அறிவுரையின் பேரில், லைட்டாய் கார்த்திக் பாணியில், 'உனக்கு என்ன வேண்டும்' என வலுக்கட்டாயமாக ரேவதியை கேட்க, அவள் விவாகரத்து வேண்டும் என முகத்தில் அறைந்தது போல் சொன்னதும் மவுனமாக காரை கிளப்புவது, 'நீயா கேட்டது ஒண்ணு.. நானா கொடுக்கறது ஒண்ணு' என விவாகரத்து பத்திரத்தையும் கொலுசையும் மேஜையில் வைப்பது என ரேவதியால் காயப்பட்டும் அமைதியாகவே அணுகும் மோகன் கதாபாத்திரம் ஆண்களின் ஆதர்சம்.
ஆனாலும் ரேவதிகளுக்கு மோகன்களை பிடிப்பதில்லை.
மோகன்களிடம் இருக்கும் மென்மை, கவித்துவம், பெண்ணை மதிக்கும் gentlemanship ஆகியவை போரான சமாச்சாரங்களாகத்தான் பெண்கள் பார்க்கின்றனர். அப்பாவுக்கு ஆக்சிடெண்ட் என பொய் சொல்லும், 'வராதே என்றும் பின்னாடியே வந்து ஸ்டாக் செய்தலையும், ஊரைக் கூட்டி சொல் என்றதும் பெண்ணின் வாழ்க்கை பற்றி யோசிக்காமல், மைக்கில் ஐ லவ் யூ சொல்ல தயாராகும் கார்த்திக்குகள்தான் ரேவதிகளுக்கு கனவுக் கண்ணன்கள்.
ரேவதிகளும், தன்னை நேசிப்பவன் கை பற்றியதும் 'கம்பளிப்பூச்சி ஊறுவது போல் இருக்கிறது' என சொன்னால் எவ்வளவு அவன் மனம் காயப்படும்; தூக்கம் தொலைப்பான் என்பதை யோசிக்க மாட்டார்கள். அவர்கள் மனம் முழுக்க அவசரமாக முடிந்துவிட்ட கார்த்திக்தான் நிறைந்திருப்பான்.
ஒருவகையில் பார்த்தால் கார்த்திக் male chauvinist என்றும் மோகன் feminist என்றும் கூட சொல்லலாம்.
'என்னை பார்த்து உனக்கு எக்கச்சக்கக்கமான லவ். எங்கே என்ன லவ் பண்ணிடுவியோன்னு பயம்' என பெண்ணின் விருப்பத்துக்கு இடம் கொடுக்காமல் தன் எண்ணங்களை ரேவதியிடம் திணிக்கும் ஆணாதிக்கவாதியாகதான் கார்த்திக் இருப்பான். தான் ரணப்பட்டாலும் பெண் காயப்பட்டுவிடக்கூடாது, அவள் விருப்பத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என விரும்பும் பெண்ணியவாதியாக மோகன் பாத்திரம் இருக்கும். ஆனால் ரேவதிக்கு ஆணாதிக்கவாதியைத்தான் பிடிக்கும். கூட இருப்பதாலேயே பெண்ணியவாதியின் அன்பும் அருமையும் புரிவதில்லை.
மெல்லிய அகங்காரத்தின் கூர்மையான முட்களை கொண்டு சமைக்கப்பட்ட மோகன்-ரேவதி ட்ராக்தான் என்னுடைய பேவரைட். கார்த்திக் ட்ராக் பச்சை சினிமாத்தனமான ட்ராக்.
ஆனாலும் பாருங்கள், பெண்களுக்கு கார்த்திக்குகளைத்தான் பிடிக்கின்றன. மோகன்களை அல்ல. ஒருவேளை கார்த்திக்குகள் சாகாமல் இருந்திருந்தால் ரேவதிகளுக்கு மோகன்கள் பிடித்திருக்குமோ என்னவோ!
அது ஒருவேளை நல்ல இசை ராகமாக கூட இருந்திருக்கலாம், யார் கண்டது!
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !