உணர்வோசை
'அறிவு எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது’ - இப்படி சொன்னவர்களை எதிர்த்துதான் தமிழக அரசியலே இருக்கிறது !
'அறிவு எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது’ என சொன்னவர்களை எதிர்த்துதான் தமிழ்நாட்டின் மொத்த வரலாறும் அரசியலும் இருந்திருக்கிறது.
"உங்களுக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறதென நினைக்காதீர்கள்!”
சரிதான். அறிவு தனியுடமை அல்ல. பொதுவுடமை. ‘அறிவு எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது’ என சொன்னவர்களை எதிர்த்துதான் தமிழ்நாட்டின் மொத்த வரலாறும் அரசியலும் இருந்திருக்கிறது; இருக்கிறது; இனியும் இருக்கும்!
உயர்தர சைவ உணவகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பெயர் பலகைகளை பார்த்திருப்பீர்கள். உயர்தர அசைவ உணவகம் என எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
அசைவம் ஏன் உயர்தரமாக அணுகப்படவில்லை? அதிகபட்சம் போனால் உயர்தர சைவ மற்றும் அசைவ உணவகம் என பார்த்திருக்கலாம். ஆனால் அங்கும் முன் வருவது சைவம்தான். அசைவங்களுக்கு என நாம் போகும் உணவகங்களுக்கு பெயர்கள் மிலிட்டரி ஓட்டல்கள்.
இன்னும் கொஞ்சம் நம்மூர் பக்கத்துக்கு செல்வோம்.
வீட்டு விசேஷங்களுக்கும் நாட்டார் வழிபாடுகளுக்கும் கறி போட்டுக் கொண்டிருந்த கூட்டமெல்லாம் தற்போது வெண்பொங்கல், பருப்பு சாம்பார் என மாறியிருக்கிறார்கள். அதிலும் ஆட்டை சாப்பிடும் கூட்டம் மாடு சாப்பிடுபவர்களை ஒதுக்கி வைக்கச் செய்து, ஆடு மாடு உண்ணும் இரு கூட்டத்தையும் தான் தள்ளி வைக்கும் நூதனத்தை செய்து அதை அக்கூட்டங்களே ஏற்று பின்பற்ற செய்யவெல்லாம் எத்தனை அதிகாரமும் எத்தனை திட்டமிடலும் வேண்டுமென யோசித்துப் பாருங்கள்.
இது ஓர் உதாரணம்தான்.
இதே போல் இட ஒதுக்கீடு முறை திறமையற்றவர்களுக்கானது என கொஞ்ச நாட்கள் முன் வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உயர்தர ஏழைகளுக்கும்(!) தற்போது இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் ஓரளவுக்கு அமைதி கிடைத்திருக்கிறது.
'நான் கொஞ்சம் ஆச்சாரம்' என்பதில் தொடங்குகிறது இவர்களின் கலாசார விளக்கம். மனிதக் கூட்டத்தை சுத்தம், அசுத்தம் என்கிற இரு கற்பிதங்களின் அடிப்படையில் பிரித்ததில் தொடங்குகிறது அவர்களின் ஆதிக்கமும் நம் அடிமைத்தனமும். இவற்றுக்குள் மேற்கிலிருந்து ஓடி வந்து, survival of the fittest என்கிற சுயநல வாழ்க்கைமுறையை போதிக்கும் முதலாளித்துவக் கூட்டத்தையும் தன்னுடன் லாவகமாக இணைத்துக் கொண்டதை எளிதாக நாம் கடந்திட முடியாது.
வரலாறு முழுக்க உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு நம் தரத்தை, தரமற்றக் கூட்டம் ஒன்று தீர்மானித்துக் கொண்டே இருந்திருக்கிறது; இருக்கிறது.
நாம் அசுத்தமானவர்கள் என்பதில் தொடங்கி நமக்கு கற்றல் திறன் குறைவு என்பது வரை முழுக்க முழுக்க அவன் நிர்ணயித்த சட்டங்களுக்கே நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
கால்வாய்கள் வெட்டி நீர் மேலாண்மை செய்து சுட்ட செங்கற்கள் செய்து கட்டடங்கள் கட்டி நாம் வணிகம் செய்து கொண்டிருந்த நேரத்தில், தொலைதூர நாட்டில் விரட்டு பெற்று மாட்டை மேய்த்துக் கொண்டு தங்குமிடம் இன்றி நெருப்பை காத்துக் கொண்டு அலைந்த கூட்டம் நம் தரத்தையும் சுத்தத்தையும் இன்று நிர்ணயிப்பதை விட கொடுமை என்ன இருக்க முடியும்?
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !