உணர்வோசை
"நிரம்பிய கோப்பை எதையும் ஏற்காது.." : மாற்றம் என்பதே யதார்த்தமானது !
பாரதி படம் பார்த்திருக்கிறீர்களா? அதன் ஆரம்பத்தில் பாரதியாரின் தந்தை இறப்பதற்கு முன் "நான் காலத்தை மீறி கனவு கண்டு ஏமாந்து போயிட்டேன். நீயும் காலத்தை மீறி கனவு கண்டு மோசம் போயிடாத!" என பாரதியிடம் சொல்வார். அந்த வசனம் பளீரென்று மனதில் உட்கார்ந்தது.
அதற்கான முக்கியமான காரணம் அச்சமயத்தில் என் அப்பா என்னை திட்டவும் அறிவுறுத்தவும் அதிகமாக பயன்படுத்திய சொல்லாடல்தான். 'பிராக்டிகலா இரு!'
கிட்டத்தட்ட பாரதியின் தந்தை மகனுக்கு கொடுத்த அறிவுரை.
பதின்வயதுகளில் அனைவரும் கருவிலேயே திரு கொண்டு வந்தவர்களை போல்தான் யோசிப்போம். மொத்த உலகத்தையும் கரைத்து குடித்த பாவனை நம்மிடம் இருக்கும். ஆனால் அது எங்கோ உடைய வேண்டும் என்பதே நாம் மட்டுமல்ல, இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும் தேவையான விஷயம். தலையை சுற்றி வட்டம் இருப்பதாக எண்ணிக் கொண்டேன்.
எவரேனும் என்னுடைய வாழ்க்கை பற்றி விமர்சனம் செய்தால் உடனே அரசியலுக்குள் ஓடி சுயமரியாதை கேடயத்தை தூக்கிக் கொள்வேன். தனித்தன்மை என்கிற பெயரில் ideal-லாக வாழ்வதை எவரேனும் விமர்சித்தால் இலக்கியத்தின் புதுமைப்பித்தனாக திமிர் சூடிக் கொள்வேன். சினிமாவில் ஜெயிப்பதை மட்டும் பிரதான வேலையாக செய்வது அழித்து விடுமென எவரேனும் கூறினால் 'என் அளவுக்கு அறிவு பெறாதவர்கள்' என நினைத்துக் கொள்வேன். என் கருத்தை பிறர் ஏற்பது மட்டுமே என்னுடைய உரையாடல்களின் ஒற்றை நோக்கமாக இருந்தது.
பிறகு மார்க்ஸ்ஸும் ஓஷோவும் எனக்குள் நுழைந்தார்கள். சமூகத்தை பற்றி நான் கொண்டிருந்த தவறான புரிதலை மார்க்ஸ் சரி செய்யத் தொடங்கினார். என்னை பற்றி நான் கொண்டிருந்த தவறான புரிதலை ஓஷோ சரி செய்யத் தொடங்கினார்.
'Being practical' என்பது என்னுடைய சிந்தனையை நீர்த்து போக வைத்து ஒரு வகை கமர்ஷியல்தன்மை என்றுதான் அதுவரை கருதி இருந்தேன். இந்த உலகை பற்றிய 'வியாக்கியானம் ஏற்கனவே பலர் செய்து விட்டார்கள். அதை மாற்ற வேண்டியதே இப்போதைய தேவை' என உச்சிக் கோபுரத்தில் இருந்து மார்க்ஸ் தள்ளி விட்டார்.
பிறகுதான் மனிதர்களை வாசிக்க ஆரம்பித்தேன். ஒழுங்கு என்கிற புனிதத்துக்கு மாற்றாக ஒழுங்கற்றதன்மையில் இருக்கும் நேர்மை புரியத் தொடங்கியது. எல்லாருடைய கருத்துகளையும் உள்வாங்க முடிந்தது. எதிர்கருத்து இருந்தாலும் நானாக எதையும் முன்வைப்பதை நிறுத்தினேன். பெரும்பாலான மக்களுக்கு செவிகள் மட்டுமே தேவைப்படுகிறது; வாய்கள் அல்ல. செவி கொடுக்கத் தொடங்கினேன்.
'நிரம்பிய கோப்பை எதையும் ஏற்காது' என்கிற ஜென் வாசகம் பெரிய திருப்பத்தை கொடுத்தது. மூளைக்குள் நாம் நிரப்பி கொள்ளும் குப்பையின் நாற்றம் நாசியை துளைத்தது.
'நான் சொல்வதே சரி', 'என் வாழ்க்கை மட்டுமே முக்கியம்', 'உரையாடுவதே வீண்', 'அடுத்தவனின் மனமும் வாழ்வும் ஒரு பொருட்டே அல்ல', 'இருப்பவன் எல்லாம் முட்டாள், நான் மட்டுமே அறிவாளி' என்கிற என்னுடைய மொத்த சிந்தனை முறையுமே ஒரு அரசியலால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என தெரிந்து கொண்ட பிறகு, என்னுடைய க்ரீடங்கள் எத்தனை தக்கையானவை என புரிந்தது.
'The Truman Show' படத்தில் வரும் நாயகனை போல் வாயடைத்துப் போனேன்.
பொருளாதார வாழ்க்கைக்குள்தான் எனக்கான கனவு, வாழ்க்கை, காதல், உறவு யாவும் புதைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய என்னையே இன்னொரு மனிதனாக இருந்து ஈவிரக்கமின்றி விமர்சிக்கும் நிலைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஓஷோ உதவினார்.
எண்ணங்களின் சுமையை உணர்த்தினார். மூளைக்குள் ஓடும் எலிகளாக அலையும் எண்ணங்களை காண முடிந்தது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு என்னை பிய்த்து ஓடுவது புரிந்தது. அவை கொடுக்கும் அழுத்தத்தையும் நோயையும் என்னால் பார்க்க முடிந்தது. எண்ணங்களை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டேன். ஆழ்ந்து அமர்ந்திருக்கும் மலைக்குள் எந்த எண்ணக் குறுக்கீடும் இன்றி சில நொடிகளுக்கேனும் என்னை மூழ்க வைக்க முடிந்தது. எண்ண அலைவை குறைக்கும் திறனை வளர்க்கத் தொடங்கினேன்.
நாம் வாழும் பொருளாதார வாழ்க்கையை ஓட்டும் துடுப்புதான் பணம் என அறிந்தேன். துடுப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இல்லாமல் இருக்க முடியாது. துடுப்பை மட்டுமே கொண்டு ஆற்றை கடக்கவும் முடியாது.
என்னை ஆய்வுக்குட்படுத்தாமல் நான் தொடங்கும் இச்சமூகத்தின் மீதான எந்த விமர்சனமும் பயனற்றது. மாற்றம் என்பது என்னையும் உங்களையும் நம் அனைவரையும் உள்ளடக்கியதே!
முக்கியமாக, மாற்றம் என்பது யதார்த்தமானது. மிக மிக பிராக்டிகலானது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?