உணர்வோசை
நாளை காலை 5.27 மணிக்கு தொடங்கும் Alphelion Phenomenon நிகழ்வு.. WhatsSpp-ல் பரவும் தகவல் உண்மையா?
'நாளை முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே அல்பெலியன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இது நாளை காலை 5-27 மணிக்கு தொடங்கும்.
Alphelion Phenomenon இன் விளைவுகளை நாம் பார்ப்பது மட்டுமல்லாமல் அனுபவிப்போம்.
'இது ஆகஸ்ட் 2022 இல் முடிவடையும்.
'இந்த நேரத்தில் நாம் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை அனுபவிப்போம்.. இதனால்.. நம் உடலில் வலி உண்டாவதோடு தொண்டை அடைப்பு, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் உண்டாகும். எனவே, வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது.
‘சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 90,000,000 கி.மீ. ஆனால் இந்த Alphelion Phenomenon காலத்தில், இரண்டிற்கும் இடையே உள்ள தூரம் 152,000,000 கி.மீ ஆக அதிகரிக்கும். அதாவது 66% அதிகரிப்பு.
‘தயவுசெய்து இதை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.’
இப்படி ஒரு குறுந்தகவல் பரவலாக வாட்சப்களில் பரப்பப்படுகிறது. இது உண்மையா?
சூரியனை சுற்றி வரும் பூமி வட்டப்பாதையில் சுற்றவில்லை. சற்றே நீளமான ஒரு நீள்வட்டப் (elliptical) பாதையில்தான் சூரியனைச் சுற்றுகிறது. ஒரு சுற்றில் பூமி இரு கட்டங்களை இந்த நீள்வட்டப்பாதையில் அடையும். ஒன்று, சூரியனுக்கு நெருக்கமானக் கட்டம். இரண்டு, சூரியனுக்கு தூரமானக் கட்டம். நெருக்கமாக வரும் கட்டத்தை பெரிஹீலியன் (Perehelion) என்கிறார்கள். தூரமானக் கட்டத்தை அல்ஃபீலியன் (Alphelion) என்கிறார்கள். எனவே சூரியனின் நெருக்கத்தில் இருக்கையில் வெப்பம் அதிகமாகவும் தூரத்தில் இருக்கையில் குறைவாகவும் இருக்கும் என நினைப்பதே இயல்பு. ஆனால் அறிவியல் சொல்வது என்ன?
அமெரிக்காவின் கலிஃபோர்னியா அறிவியல் நிறுவனமும் (CAS) நாசாவும் (NASA) சொல்வதன்படி சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான சராசரி தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர். இது சராசரி தூரம். வாட்சப் தகவலில் இது 90 மில்லியன் கிலோமீட்டர் என சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்ததாக பூமி சுற்றுப்பாதையில் எட்டும் உச்சபட்சக் கட்டமான அல்ஃபீனியன் கட்டத்தின்போது சூரியனிடமிருந்து பூமி 152 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். அதாவது சராசரி தூரத்திலிருந்து 2 மில்லியன் கிலோமீட்டர்தான் வித்தியாசம். இந்தக் குறைந்தபட்ச வித்தியாசம், வாட்சப் பகிர்வில் சொல்லப்படுவது போல் குளிர், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற, இயல்பை மீறியச் சூழலை உருவாக்கவல்லதல்ல.
அறிவியல் நிறுவனங்கள் அல்ஃபீனியன் பற்றி இத்தகைய விளக்கத்தைக் கொடுப்பததற்குக் காரணம், இந்த வாட்சப் தகவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து சமூகதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. விளைவாக, அமெரிக்கா மட்டுமின்றி இந்தோனேசிய வானிலை ஆய்வு மையமும் இத்தகவலை சொல்லியிருக்கிறது. ஆப்பிரிக்க இணையதளம் ஒன்றும் அல்ஃபீனியன் பற்றி விளக்கியிருக்கிறது.
மேலும் ஒரு வருடம் என்பது சூரியனை பூமி ஒரு முழுச் சுற்று சுற்றி வருவதற்கானக் காலமாகவும். ஆகவே எல்லா வருடங்களிலும் சூரியனுக்கு அருகேயும் தூரத்துக்கும் பூமி சென்று வரும் கட்டங்கள் நேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வழக்கமாக பெரிஹீலியன் கட்டம் ஜனவரி மாதத்திலும் அல்ஃபீனியன் கட்டம் ஜூலை மாதத்திலும் நேர்கிறது. எனவே எல்லா காலங்களில் ஏற்படுகிற வழக்கமான குளிரும் வெப்பமும்தான் இந்த வருடமும் நேரும். நேர வேண்டும். அப்படி நேராமல் அதிகக் குளிரோ அதிக வெப்பமோ மழையோ நேர்ந்தால் அதற்குக் காரணம் ஒன்றுதான்.
காலநிலை மாற்றம்!
காலநிலை மாற்றத்துக்கானக் காரணம் அஃபீலியனோ பெரிஹீலியனோ இல்லை, மனிதன்! மனிதனை ஆளும் அரசுகளின் பொருளாதாரச் சிந்தனை!
காலநிலையில் ஏற்படும் மாற்றத்துக்கான காரணத்தை அண்டத்தில் தேடாமல் நம்மில் தேடத் தொடங்கினால் தீர்வையேனும் எட்டலாம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!