உணர்வோசை
நாம் மனிதர்களா, மிருகங்களா? .. இதை படிக்கும் போது அது உங்களுக்கே தெரியவரும்!
மிருகங்களாக இருந்து ஒருவரை ஒருவர் பிறாண்டி மிருகங்களாகவே மொத்த இனமும் அழிந்துவிடுவோம்.
உயிரியல் நம்மைப் பாலூட்டி விலங்காக (மிருகமாக) வரையறுக்கிறது. ஆனால் மனிதனின் சிந்தனை, மிருகத்துக்கு ஒரு படி மேல் மனிதன் என அவதானித்துக் கொள்கிறது. கலையும் இலக்கியங்களும் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு செல்லும் பயணமாகவே நம் வாழ்க்கைகளை வரையறுக்கிறது.
மனித மிருகத்தின் உயிரியல் அடிப்படையான குரூரத்தில் இருந்துதான் அதிகாரமும் சமூகமும் கட்டமைக்கப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் ஒருவரை ஒருவர் பிறாண்டிக்கொள்ளும் பூனைகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்கு நேற்று வரை உணவளித்தவன் கூட இன்று ஏதோ ஒரு எண்ணத்துக்காக உங்களை கொலை செய்யலாம். காயப்படுத்தலாம். அவமானப்படுத்தலாம். ஒடுக்கலாம்.
உண்மை என்னவெனில் மனிதன் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை!
மிருகத்தில் இருந்துதான் மனிதன் உருவானான் என்றாலும் மிருகத்தன்மையோடயே அவன் முடிந்துவிடுவதற்காக மனித இனம் பரிணமிக்கவில்லை. நமக்குள் மனித நிலைக்கான சில விஷயங்களை நாம் ஏற்கனவே உருவாக்கி இருக்கிறோம் என்ற உண்மையே இதற்கு பெரும் சாட்சி.
மனிதனால் மட்டும்தான் நேசிக்க முடியும். குற்றவுணர்ச்சி கொள்ள முடியும். கலங்க முடியும். நேசம் என்கிற உணர்வு மிகவும் இளைய உணர்வு. சமீபமாகத்தான் மனிதன் நேசத்தை கண்டுபிடித்திருக்கிறான். மிகச்சிலரால் மட்டும்தான் நேசம் என்கிற உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது; பாராட்ட முடிகிறது. பெரும்பாலானோருக்கு முடிவதில்லை.
ஆரம்பத்தில் இருந்து மனிதன் உருவாக்கிய எல்லா சமூகநிலைகளும் அதிகார மட்டங்களும் மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தின் உணர்வு நிலைகளை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டவை. அடுத்தவனை சுரண்டவும் ஒடுக்கவும் மட்டுமே உருவாக்கப்பட்ட அதிகார நிலைகள் அவை. அவற்றுக்குள் இயங்கும் மனிதன், திரும்ப மிருக நிலை உணர்வுகளையே கையாள நிர்ப்பந்திக்கப்படுகிறான். அதனால் மிருகநிலை உணர்வுகளை ரசிக்கிறான்.
இன்றைய சமூக அமைப்பும் அதிகாரமும் மனிதனுக்குள் இருக்கும் மிருக உணர்வுநிலைகளான வஞ்சம், பொறாமை, குரூரம், பழியுணர்ச்சி போன்றவற்றின் மேல் கட்டமைக்கப்பட்டவை. அந்த சமூகத்துக்குள் புழங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன், திரும்ப திரும்ப குரூரத்துக்கே பழகுகிறான். வஞ்சத்தை ரசிக்கிறான். அகங்காரத்தை போற்றுகிறான்.
மனிதநேயம் என்பது அவனுக்கு நகைச்சுவையாக தெரிகிறது. குற்றவுணர்வு முட்டாள்தனமாக இருக்கிறது. இரக்கம் அபத்தமாக தெரிகிறது.
மிருகத்திலிருந்து மனிதத்தை நோக்கிய பயணம் வெற்றியடைய வேண்டுமென்றால், இந்த சமூகம் மனிதத்தால் கட்டமைக்கப்பட வேண்டும். நேயம், குற்றவுணர்வு, இரக்கம், கலக்கம், பணிவு போன்ற மனித உணர்வு நிலைகளை அடிப்படையாக கொண்டு எழுப்பப்பட வேண்டும். சுரண்டல், ஒடுக்குதல் போன்ற மனநிலைகளை காப்பாற்றும் அதிகார மையங்கள் அகற்றப்பட வேண்டும். அல்லவெனின், மிருகங்களாக இருந்து ஒருவரை ஒருவர் பிறாண்டி மிருகங்களாகவே மொத்த இனமும் அழிந்துவிடுவோம்.
மனிதனை பிரித்தாள அதிகாரம் எல்லா காலத்திலுமே முயன்று வந்திருக்கிறது. இந்து-இஸ்லாமியர் என பிரிட்டிஷார் பிரித்தாண்ட முயற்சி இன்றுமே பல வழிகளில் கையாளப்பட்டு வருகிறது. மக்கள் பிரிந்து கிடக்கையில் மட்டும்தான் அதிகாரம் நீடிக்க முடியும். மக்கள் பிரிந்துகிடக்க அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தை எப்போதும் விழித்திருக்க வைக்க வேண்டும். இன்றைக்கும் என்றைக்கும் அதிகாரத்துக்கான நோக்கமும் செயல்பாடும் அவை மட்டும்தான்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?