உணர்வோசை

மக்களாட்சிக்கான விளக்கம் எப்படி வந்தது? - ஜனநாயகத்திற்கு எதிரான மதவாத அரசியலின் சூழ்ச்சி!

ஜனநாயகத்திற்கு எதிரான மதவாத அரசியலின் சூழ்ச்சி:

இந்தத் தலைப்புக்குள் மூன்று முக்கியமான வார்த்தைகள் இருக்கின்றன. சுவாரஸ்யமான வார்த்தைகளும் கூட. ஜனநாயகம், மதவாதம், அரசியல் ஆகியவையே அந்த முக்கியமான மூன்று வார்த்தைகள். முதல் வார்த்தையான ஜனநாயகம் என்பது என்ன?

வார்த்தையிலேயே ஒருவாறாக அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். ஜனங்களின் நாயகம்! அதாவது மக்களின் நாயகம். மக்களின் ஆட்சி என்றால் இன்னும் தெளிவாகவே புரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக ஜனநாயகம் என்கிற வார்த்தைக்கு நாம் படித்த பள்ளிகள் கொடுத்த அர்த்தம் ஒன்றுதான். மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் அரசு! இந்த வாக்கியத்தை அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் எழுதியதாக சொல்வார்கள். நம் நாட்டிலிருக்கும் மக்களாட்சியை விளக்க ஏன் அமெரிக்க ஜனாதிபதி சொன்ன விளக்கத்தை கொடுக்கிறோம்?

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் அடிமையாக இருக்க வேண்டியதில்லை என ஆபிரகாம் லிங்கன் அரசு உத்தரவிட்டதும் உள்நாட்டுப் போர் வெடித்தது.

ஏனாம்?

வெள்ளையினத்தவருக்கு கறுப்பினத்தவர் சமமாக இருக்க முடியாது, அடிமைகளாகத்தான் இருக்க வேண்டுமென அமெரிக்காவின் தெற்கு மாகாண கனவான்கள் கூறினார்கள். கூறியது மட்டுமின்றி எல்லாரும் கூடிப் பேசி அமெரிக்காவிலிருந்து பிரிந்து விடுவதென முடிவுக்கு வந்தனர். பிரிந்தும் விட்டனர். புதிய பெயரை தங்களின் நாட்டுக்கு சூட்டிக் கொண்டனர். அமெரிக்க அரசு அவர்களின் பிரிவை ஏற்காமல் மீண்டும் இணையச் சொல்லி போர் தொடுத்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடப் போர். பல லட்ச அமெரிக்கர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பிரிந்து சென்ற மாகாணங்கள் மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டன.

இப்போது ஏன் இந்தக் கதை எனக் கேட்கலாம். காரணம் இருக்கிறது.

1864ஆம் ஆண்டு நடந்து கொண்டிருந்த போரின் போது இறந்த சிப்பாய்களுக்கு ஆதரவாக எழுதிய அறிக்கையில்தான் ஆபிரகாம் லிங்கன் ‘மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் அரசு’ என்கிற சொற்றொடரை பயன்படுத்தினார். அங்கிருந்துதான் அந்த வாக்கியத்தின் பயன்பாடு உலகத்துக்குப் பரவியது. இதிலும் ஒரு சின்ன சூழ்ச்சிகரமான உண்மை புதைந்திருக்கிறது.

ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய வாக்கியத்துக்கு அவர் சொந்தக்காரர் அல்ல. இரவல் பயன்பாடுதான். அவருக்கும் முன்னரே ஒருவர் அந்த வாக்கியத்தை பயன்படுத்தியிருந்தார். பயன்படுத்தியவரின் பெயர் ஜான் வைக்ளஃப். கிறித்துவ மதத்தின் வேதாகம நூலை மொழிபெயர்த்து அதற்கு எழுதிய முன்னுரையில்தான் அந்த வாக்கியத்தை பயன்படுத்தியிருந்தார் ஜான் வைக்ளஃப். கடவுளுக்கும் ஜனநாயகத்துக்கும் என்ன சம்பந்தம்? ஜான் வைக்ளஃப் அந்த வாக்கியத்தை பயன்படுத்திய விதமே முற்றிலும் வேறு.

‘இந்த வேதாகமம் மக்களால் மக்களுக்கென நடத்தப்படும் மக்களின் அரசுக்கானது’ என்பதுதான் அவர் மொழிபெயர்த்த விதம். அதன் நோக்கம், எந்த மதகுருமாரும் தங்களின் சுயநலத்துக்காக வேதாகமத்தை பயன்படுத்தி தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப மக்களை ஆட்டுவித்துவிடக் கூடாது என்பதுதான். ஆகவே கடவுளின் வேதாகமம் மக்களுக்கு மட்டுமே உரியது என்ற அர்த்தம் தொனிக்க எழுதப்பட்ட வாசகமே அது. அதுவும் 1384ஆம் ஆண்டில் எழுதப்பட்ட வாசகம். அந்த வாசகத்தை எடுத்து ஜனநாயகத்தை விளக்க பயன்படுத்திய ஆபிரகாம் லிங்கன் அப்போதும் கூட, ‘கடவுளுக்கு கீழிருக்கும் இந்த நாட்டில் இந்த போர்வீரர்களின் தியாகம் மதிக்கப்பட்டு, புதிய சுதந்திரம் உருவாக்கப்பட்டு, மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் அரசு அழியாமல் இருக்க வேண்டும்’ என்றே குறிப்பிட்டிருந்தார்.

எப்படி கதை?

அதாவது மதத்தை மக்களன்றி அதிகாரத்தில் இருக்கும் வேறெவரும் பயன்படுத்தக் கூடாது என எழுதப்பட்ட வாசகத்தை அப்படியே திருப்பிப் போட்டு மதத்தின் பெயரில் நடத்தப்படும் அரசுக்கு விளக்கமாக கொடுக்கப்படுவதெல்லாம் என்ன விதமான சூழ்ச்சி?

ஜனநாயகம் என்கிற வார்த்தைக்கான விளக்கத்திலேயே மதத்தின் சூழ்ச்சி தொடங்கிவிட்டது.

எங்கெல்லாம் ஒரு நாட்டின் அரசு மதத்தை தன்னுடைய ஆட்சிக்காக அடையாளமாக கொள்கிறதோ அங்கெல்லாம் சூழ்ச்சியும் திருட்டுத்தனமும் படுகொலைகளும் மனித உரிமை மீறல்கள் மட்டுமே நடந்திருக்கின்றன. இலங்கையின் பவுத்த அரசு தொடங்கி இந்தோனேசிய இஸ்லாமிய அரசும் இந்தியாவின் இந்துத்துவ அரசும் பெயரளவில் குடியரசை கொண்டிருந்தாலும் செய்வதென்னவோ சூழ்ச்சிகளும் படுகொலைகளும் ஒடுக்குமுறைகளும் மட்டும்தான்.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இந்துக்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை குறைவு என்றோ மின்சாரம் இலவசம் என்றோ அறிவிப்பு வெளியானதா? ம்ஹும்! இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்கும் சேர்த்தே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கிறித்துவர்களும் இந்துக்களும் சேர்ந்தே மின்சாரக் கட்டண உயர்வை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் பேசுவதெல்லாம் இந்து ராஜ்ஜியம், இந்துக்களுக்கே உயர்வு என்ற கட்டுக்கதைகள்தான். மற்றபடி கொடுமைகள் என்னவோ எல்லா மதத்தவருக்கும் சேர்த்தே இழைக்கப்படுகிறது.

அடிப்படையாக நாம் அனைவரும் விரும்புவது 1384ஆம் ஆண்டு எழுதப்பட்ட வாசகத்தைதான். ‘மக்களால் மக்களுக்கு நடத்தப்படும் மக்களின் அரசில் உள்ள மக்களுக்கு மட்டுமே மதமும் கடவுளும் இருக்கவேண்டும். அரசுக்கு இருக்கக் கூடாது.

மதகுருமார் மட்டுமல்ல எந்த அரசியல்வாதியும் கூட மதத்தை காட்டி உண்மையான மக்களின் ஆட்சியை அபகரித்திடக் கூடாது என்பதுதான் நமக்கான அரசியலாக இருக்கவேண்டும்.

Also Read: “மனித குல அழிவுக்கான அடுத்த எச்சரிக்கை” : அலற வைக்கும் அறிக்கை!