உணர்வோசை
“சாதிக்கும் வேட்கை கொண்ட, எல்லோரையும் அரவணைக்க விரும்பும் ஒரு தலைவர் மு.க.ஸ்டாலின்” : சமஸ் கட்டுரை !
சென்னை மெரினா கடற்கரை ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்களால் நிறைந்திருந்தது. தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினர் ஆக்ரோஷத்தோடும் உத்வேகத்தோடும் முன்னெடுத்த உலகைத் திரும்பிப்பார்க்க வைக்கும் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தனர். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அந்தப் போராட்டத்தை ஓரமாக நின்று வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பில் அந்தச் சமயத்தில் ஏராளமான கட்டுரைகளை நான் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எழுதிவந்தேன். ‘தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே… போராட்டத்தைப் படியுங்கள்!’ என்று ஒரு கட்டுரை; தி.மு.கவையும் அதில் கடுமையாகச் சாடியிருந்தேன். அந்தக் கட்டுரையில் ஓரிடத்தில் ‘தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்கச் சென்றபோது அதை ஏற்க மறுத்துள்ளார்கள் மாணவர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தேன். தி.மு.க மீது ஏராளமான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தேன்.
கட்டுரை வெளியான நாள் அன்று காலையிலேயே எனக்கு செல்பேசி அழைப்பு வந்தது. “வணக்கம்! நான் ஸ்டாலின் பேசுறேன்…” என்றது மறுமுனைக் குரல். “கட்டுரையில நிறைய விமர்சனங்களை முன்வெச்சுருக்கீங்க. அதெல்லாம் உங்க கருத்து. மதிக்கிறேன். கட்சிகள் அதைக் கவனிக்கணும். ஆனா, அதுல ஒரு தகவல் தப்பா வந்திருக்கு. மெரினாவுக்கு நான் போனப்போ மாணவர்கள் ஆதரவை ஏற்க மறுத்துட்டாங்க அப்படினு; அது சரியில்லை. கடற்கரை முழுக்க பல லட்சம் பேர் திரண்டு நிற்கிறாங்க. ஏதோ ஒரு குடைக்குக் கீழ ஒரு அணியா நடக்குற போராட்டம் இல்லை அது. திட்டுத்திட்டா பல நூறு குழுக்கள். நாங்க போனோம்.
அடையாள நிமித்தமா எங்க ஆதரவைத் தெரிவிக்க, பலரையும் பாத்து கை குலுக்கிட்டு வந்தோம். ஏராளமான குழுக்கள். ஓடி வந்து செல்ஃபி எடுத்துக்கிறாங்க, கை குலுக்கிட்டு போறாங்க, போராட்ட முழக்கம் எழுப்புறாங்க. எல்லாம் சில நிமிஷங்கள்லதான். வந்துட்டோம். இப்படி ஒரு செய்திக்கு அங்கே முகாந்திரமே இல்லங்றதுதான் உண்மை. அங்க அமைப்புன்னோ, பிரதிநிதிகள்னோ யாருமே இல்லையே ஆதரவை மறுக்க. ஆளுங்கட்சியிலிருந்து கிளப்பிவிடப்பட்ட வதந்தி இது” என்றார்.
நான் இதைக் கேட்டதும் திடுக்கிட்டேன். தவறுதலாகவோ, பிழையாகவோ, பாரபட்சமாகவோ என் எழுத்துகளில் ஏதேனும் வந்துவிடக் கூடாது என்று ரொம்பவே மெனக்கெடுபவன் நான். முந்தைய நாள் பத்திரிகைகளில் அந்தச் செய்தியைப் படித்திருந்தேன். அதன் அடிப்படையிலேயே இதை எழுதியிருந்தேன். இந்த விஷயத்தை அவரிடம் சொன்னேன். “நீங்க சொல்வது சரிதான். நானும் அதையெல்லாம் படிச்சேன். அவங்க இப்படி எழுதுறது ஒரு நாளோட போயிரும். நீங்க எழுதுறது காலத்துல நின்னுடும். அதனாலதான் உங்ககிட்ட இதைப் பகிர்ந்துக்கணும்னு நெனைச்சேன்” என்றார்.
தந்தை வழியில் தனயன்
இந்த அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. அது அவரது தந்தையாரின் அணுகுமுறை. கலைஞர் அதிகாலையிலேயே எல்லாப் பத்திரிகைகளையும் வாசித்துவிடுவார். செய்தி சரியானது என்றால், உரிய நடவடிக்கை எடுப்பார்; தவறானது என்றால் பத்திரிகை அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு வரும் என்பது ஊரறிந்த விஷயம். ஸ்டாலின் அப்படி அறியப்பட்டவர் இல்லை.
அவருடைய வாசிப்பு அல்லது இத்தகைய அணுகுமுறை பலரும் அறிந்திராதது. குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், அந்தக் கட்டுரை தி.மு.க மீது முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பில் எந்தக் கசப்பையும் அவர் வெளிப்படுத்தவில்லை. நேர்மறையான தொனியில் அவற்றை எதிர்கொண்டார். அதேபோல, அவர் பத்திரிகையில் திருத்தமும் கோரவில்லை. என்னுடைய கட்டுரையில் உள்ள தவறைக் கவனப்படுத்த முயன்றார், அவ்வளவே!
அரவணைக்கும் தலைமைப் பண்பு
நான் அவரிடம் சொன்னேன், “இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது. உங்கள் தந்தையார் பலமுறை இப்படிக் கூப்பிட்டுப் பேசியிருக்கிறார். பாராட்டவும் குறைகளைச் சுட்டவும். நீங்களும் இத்தகைய அணுகுமுறையை எல்லாப் பத்திரிகையாளர்களிடமும் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சம்மதித்தால் இந்த உரையாடலை ஒரு கடிதமாக மாற்றி நாளைய பதிப்பில் திருத்தம் வெளியிடுகிறேன்” என்றேன். அவர் சம்மதித்தார். ஒரு கடிதமாக அவருடைய கருத்துகளை எழுத்து வடிவத்துக்கு மாற்றி, அவரிடம் வாசித்துக் காட்டிவிட்டுப் பதிப்பித்தோம். ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் மறுநாள் கடிதம் பகுதியில் அது வெளியானது.
இதற்குப் பிந்தைய ஐந்து ஆண்டுகளில் அவருடைய மூன்று முழுப் பக்கப் பேட்டிகளை நான் எடுத்திருக்கிறேன். வெளியானதைப் போலப் பல மடங்கு நீண்ட உரையாடல்கள் அவை. முதல் பேட்டி ‘தலைவர் என்றொரு அப்பா’ என்ற தலைப்பில் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகத்துக்காக அவர் அளித்தது. தன்னுடைய தந்தை, குடும்பம், இளவயது வாழ்க்கை, கடந்துவந்த காலகட்டம் என்று தனிப்பட்ட வாழ்க்கையை அந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்திருப்பார். இரண்டாவது பேட்டி, ‘கடந்த காலத் தவறுகளிலிருந்து தி.மு.கவை மீட்டெடுக்க விரும்புகிறேன்’ என்ற தலைப்பில் வெளியானது.
அவர் தி.மு.கவின் செயல் தலைவர் பொறுப்பேற்று ஓராண்டைத் தொட்ட சூழலில், அரசியலில் அவருடைய 50 ஆண்டு நிறைவுத் தருணத்தில் அந்தப் பேட்டியை அளித்தார். கட்சி தொடர்பான அவருடைய பார்வை, சிந்தாந்தரீதியிலான அவருடைய அணுகுமுறை ஆகியவற்றை அந்தப் பேட்டியில் பகிர்ந்திருப்பார். மூன்றாவது பேட்டி, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது வெளியானது. ‘இது தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்பதற்கான போர்’ என்ற தலைப்பில் வெளியானது. தமிழ்நாட்டைப் பற்றிய அவருடைய கனவுகளை அந்தப் பேட்டியில் பகிர்ந்திருப்பார்.
பல அமர்வுகளாக, பல மணி நேரங்களுக்கு நீண்ட இந்த உரையாடல்கள் வழி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் நோக்கங்கள், கட்சியைப் பற்றிய அவருடைய பார்வை, தமிழ்நாட்டைப் பற்றிய அவருடைய கனவு இந்த மூன்று விஷயங்களிலும் சில புள்ளிகளையேனும் உற்று நோக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் என்னுடைய அனுமானம் இதுதான்: முழு நேரமும் அரசியலில் தோயும் உள்ளம் கொண்ட, தன் காலத்தில் ஏதேனும் ஒன்றைச் சாதித்துச் செல்லும் வேட்கை கொண்ட, எல்லோரையும் அரவணைக்க விரும்பும் ஒரு தலைவர் அவர்.
விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தல்
இந்தப் பேட்டிகளுக்கு அப்பாற்பட்டு அவரைச் சந்திக்கவும் பேசவுமான வேறு சில வாய்ப்புகள் எனக்கு அமைந்தன. அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் ஒரு பத்திரிகையாளரிடமிருந்து சமூகத்தைப் பற்றி, மக்களின் மனநிலையைப் பற்றி, கவனம் அளிக்க வேண்டிய முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி, தன் மீதான விமர்சனங்களைப் பற்றி முழுமையாகக் கேட்டு அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களாகவே ஸ்டாலின் அமைத்துக்கொண்டிருக்கிறார்.
எந்த அரசியல் தலைவரிடத்தில் பேச நேரும்போதும் அவர்கள் காது கொடுத்தால், மக்கள் தரப்பிலிருந்து என்ன செய்திகளை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமோ அவற்றை ஒரு பத்திரிகையாளராகப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு. இப்படித் தலைவர்களுடன் பேசுபவர்கள் தன்னைப் பற்றியோ, தான் சார்ந்த நிறுவனத்தைப் பற்றியோ, சுய ஆதாயம் தேடும் முனைப்பிலோ பேசாதவர்களாக இருந்தால், தலைவர்களும் காது கொடுப்பார்கள். ஆனாலும், விமர்சனங்களுக்கு ஆக்கபூர்வமாக முகம் கொடுப்பவர்கள் குறைவு. ஸ்டாலின் அப்படியானவர்களில் ஒருவர். அமைதியாகவும், கூர்ந்து கவனம் அளித்தும் விஷயங்களைக் கேட்பார். அப்படி விமர்சனமாக முன்வைக்கப்பட்டவைக்குத் தன் செயல்பாடுகள் வழி வினையாற்றவும் செய்வார்.
மோடியும் ஸ்டாலினும்
பிரதமர் மோடியைப் பற்றிய அவதானிப்புகளில் இருவருடையதை இங்கே நான் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். முதலாமர், இந்தியாவின் முக்கியமான சமூகவியலாளர்களில் ஒருவரும், மோடியைத் தீவிரமாக விமர்சிப்பவர்களில் ஒருவருமான அஷிஸ் நந்தி. இரண்டாமர், அரசியல் வியூகருமான பிரசாந்த் கிஷோர். தனிப்பட்ட அளவில் மோடியின் வாழ்க்கையை ஆரம்பக் காலம் தொட்டு கவனித்துவரும் அஷிஸ் நந்தி, “மோடி கற்றுக்கொள்வதில் கில்லாடி; கூர்மையானவர்” என்று கூறியிருந்தார். மோடியின் பெரிய பலத்தைக் குறிப்பிடுகையில், அவருடனான தனிப்பட்ட உரையாடல்களை முன்வைத்து, “மிகச் சிறந்த கவனர்; மோடியுடன் பேசும்போது அவரின் உடலும் சிந்தையும் முழுமையாக எதிரில் இருப்பவரிடம் குவிந்திருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார் பிரசாந்த் கிஷோர்.
அரசியல் ரீதியாகவும், பண்புநலன் ரீதியாகவும் இருவரும் எதிரெதிர் துருவங்கள் என்றாலும், தன்னுடைய சறுக்கல்களிலிருந்து விடுபட தொடர்ந்து கற்றபடி முன்னகர்வதிலும், தனிப்பட்ட உரையாடல்களில் நிதர்சனங்களுக்கு முகம் கொடுப்பதிலும், மோடியிடம் உள்ள அத்தகைய ஒரு பண்பை ஸ்டாலினிடமும் நான் அவதானித்திருக்கிறேன். நல்ல கவனர் அவர்; திறந்த மனம் கொண்டவர். முந்தையவரைப் போலன்றி, ஓர் ஆட்சியாளர் தன்னுடைய சொந்த பயணம், தனிப்பட்ட இலக்குகள், அடுத்தடுத்த பாய்ச்சல்கள் இவற்றுக்கு அப்பாற்பட்டு, மக்கள் அனைவரின் கற்பனைகளுக்கும் இடம் அளிக்கும் வகையில், பொது நலன் சார்ந்த விஷயங்களிலும் அரவணைக்கும் பண்பு கொண்ட கவனராக இருப்பது மக்களுக்கு ஒரு பாக்கியம். முதல்வர் ஸ்டாலினிடம் இந்தப் பண்பு நிலைத்திருக்க வேண்டும்!
- சமஸ் (ஆசிரியர், அருஞ்சொல்.காம்)
(முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வெளியான ‘முரசொலி’ சிறப்பிதழ் - 2022 )
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!