உணர்வோசை
“திராவிட அரசியலின் சாம்பியன் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : மலையாள ஊடகம் சிறப்புக் கட்டுரை!
கேரளாவிலிருந்து வெளிவரும் மலையாள ``மீடியா ஒன்’’ இணையதளம் ``அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேமுடியாது’’ என்றும், ``திராவிட அரசியலின் சாம்பியனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாறி வருகிறார்’’ என்றும் சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தி வருமாறு :
தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான வெற்றியை தி.மு.க. பதிவு செய்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்குவந்த பிறகு, திராவிட கட்சிக்கு ஏற்பட்ட பிழைகளை சரி செய்து, பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை காண முடிகிறது. அதன் தாக்கம் எல்லா தரப்புகளிலும் பிரதிபலித்து, ஒவ்வொரு கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எந்த விதத்திலும் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.
திராவிட அரசியல் என்பது ஏறக்குறைய தி.மு.க.வை மட்டுமே சார்ந்ததாக மாறிவருகிறதைக் கவனிக்க வேண்டியுள்ளது. திராவிட கழகத்தின் பழைய நிலைக்கு ஸ்டாலின் திரும்பிக் கொண்டிருக்கிறார். தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, அ.தி.மு.க.வின் ஆட்சிக்கு முடிவுரை அமைந்ததாகக் கருத தோன்றுகிறது.
ஏனெனில் உள்ளாட்சி தேர்தலில் ஆங்காங்கே சில இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ள அ.தி.மு.க., பெரிய அளவிலான தோல்வியைச் சந்தித்துள்ளது. எனவே ஆட்சிக்கு திரும்ப வருவது என்பது கடினமான ஒன்றாகும்.
பல கட்சிகள் சிதறிப் போய்விடும்!
கிராமப்புறங்களில் ஏறக்குறைய 90% சீட்களை திமுக கைப்பற்றியுள்ளது. இதனால் திராவிட கழகத்தின் கருத்துகளை முன்வைத்து அ.தி.மு.க.வில் செயல்பட்டு வந்த பெரும்பாலான தொண்டர்கள், தி.மு.க.விற்கு திரும்புவதை காணலாம். மேலும் பல கட்சிகளும் சிதறிப் போகவும் வாய்ப்புள்ளது. இதனால் அதிமுகவின் ஆட்சி மீண்டும் அமைவது கடினம்.
திராவிட அரசியலின் சாம்பியனாக மு.க.ஸ்டாலின் மாறி வருகிறார். அதேநேரத்தில் இளைஞர்களுக்கு கட்சியில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. புதிய திட்டங்களை குறித்த கருத்துக்களை வெளியிடுகிறார். தமிழ் தேசியத்தை எப்படி வளர்க்கலாம் என்பதை குறித்து ஆழமான கருத்துகளை மக்கள்முன் வைக்கிறார்.
முழுமையான அரசியல் தலைவராக உருவெடுத்து வருகிறார்!
ஏற்கனவே தமிழ் தேசியம் மீது ஆர்வமுள்ள நிலையில், ஸ்டாலினின் இந்த செயல்பாடு அதற்கு ஊக்கமளிப்பதாக அமைகிறது. மாநில அரசின் ஆட்சியை மேலும் வலுவானதாக மாற்றுவது குறித்து பேசி வருகிறார். மேற்கண்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் மு.க.ஸ்டாலின் முழுமையான ஒரு அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார் எனலாம்.
இதனால் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசை, அரசியல் வட்டாரத்தில் தோல்வி அடையச் செய்வது அவ்வளவு எளிதாக அமையாது. ஒன்றிய அரசுக்குஎதிராக போராடும் மாநிலம் என்பதில் இருந்து திமுக.வில் மட்டும் அந்த நிலை என்பதை விட, தமிழகம்முழுவதும் இந்த மாற்றத்தைக் காண முடிகிறது.
அ.தி.மு.க.வின் ஒரு குளறுபடியில் இருந்துதான், திமுகவின் இந்த வெற்றிப்பயணம் துவங்கியது என்று கூறலாம். இதற்கு முக்கியமான காரணமாக பாரதிய ஜனதா உடனான கூட்டணியைக் காணலாம். இது தி.மு.கவிற்கு மிகவும் எளிதாக மாறியது.
தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பின்றி காணப்பட்டது என்பதை பாரதிய ஜனதா முக்கிய குற்றச்சாட்டாக முன்வைத்து வந்தது. மேலும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் கேட்பாரின்றி, பிறரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கோவில்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகின என கூறப்பட்டது.
ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் உள்ள கோவில்களை சீரமைப்பது குறித்த அறிவிப்பை முதலில் வெளியிட்டார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்களை மீட்பது உட்பட பாரதிய ஜனதா குற்றச்சாட்டாக எதைக் கூறிவந்ததோ, அதற்கு தீர்வு கண்டார். பாரதிய ஜனதாவின் செயல்பாட்டிற்கு கூட்டணி கட்சியாக இருந்த அ.தி.மு.க.வும் மௌனம் சம்மதம் என்ற நிலையில் இருந்தது.
பெரிய மைல் கல்லாக அமைந்தது!
பாரதிய ஜனதாவின் குற்றச்சாட்டுகளுக்கு மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டார் என்பதை கடந்து, பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரும் பூசாரிகளாக நியமிக்கப்பட முடிவு செய்யப்பட்டது. இது ஒரு பெரிய மைல்கல்லாக அமையும் தீர்மானமாக அமைந்தது.
உம்மன்சாண்டி ஆட்சியில் கூட காண முடியவில்லை!
மு.க.ஸ்டாலின் ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கூறி வந்த குற்றச்சாட்டுக்கு முடிவுகட்டினார். இதனால் மேற்கொண்டு அ.தி.மு.க தரப்பில் எதுவும் பேச வாய்ப்பில்லாமல் போனது. திராவிட அரசியல் கட்சி என்று தங்களை கூறிகொள்ளும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி என்பதால், பாரதிய ஜனதா கூறிய கருத்துக்களுக்கு மௌனம் சாதிக்க வேண்டிய நிலை உருவானது.
இதன் மூலம் கேரள அரசியல் தலைவர்களான உம்மன்சாண்டி மற்றும் பினராயி விஜயன் ஆகியோரின் ஒன்றிணைந்த கலவையாக ஸ்டாலினை குறிப்பிடலாம். ஏனெனில் ஒருபுறம் மக்களுக்கு சாதகமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருகிறார். இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்சிக்கு வந்த பிறகு, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளார். இதை உம்மன்சாண்டியின் ஆட்சியில் கூட காண முடியவில்லை.
மக்களுக்குச் சாதகமான பலதிட்டங்களை ஜெயலலிதாவும் செய்துள்ளார் என்றாலும், ஸ்டாலினின் திட்டங்கள் அனைத்தும் மக்களை எளிதாகச் சென்று சேரும் வகையில் அமைந்துள்ளன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, சாதாரண மக்களுக்கு உணவு பரிமாற முதல்வர் நேரடியாக களத்தில் இறங்கினார். இது மக்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.
ஒரு சிறந்த அரசியல் நகர்வு!
விவசாயிகளுக்கான 17,000 கோடியில் திட்டத்தை அறிவித்த ஸ்டாலின், அதன் மூலம் ஏறக்குறைய ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவானது. குறுகிய காலத்திலேயே சமூக நற்பணிகளுக்கு உதவும் திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.வின் 10 வருட ஆட்சியில் தமிழகம், கடும் பின்னடைவைச் சந்தித்துவந்தது என்பதை காட்டும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, மாநிலத்தின் உண்மை நிலை வெளிக்காட்டப்பட்டது. ஒன்றிய அரசின் மீதான தாக்குதலை ஸ்டாலின் நடத்தினாலும், தமிழக தேசிய உணர்வை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். இதன் மூலம் ஒன்றிய அரசுடனான போராட்டத்தில் நீங்கள் என்னுடன் நிற்க வேண்டும் என்பதை மக்களின் மனதில் ஆழமாக பதித்துவிட்டார். இது ஒரு சிறந்த அரசியல் நகர்வு எனலாம்.
ஒன்றிய அரசு அளிக்காமல் உள்ள ஜிஎஸ்டி, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி என பலவற்றையும் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகிறார் ஸ்டாலின். அதேநேரத்தில் சிறந்த ஒரு நிதியமைச்சரை நியமித்துள்ள ஸ்டாலின், உலகத் தரம் வாய்ந்த நிதி தொடர்பான ஆலோசகர்களின் குழுவை அமைத்து, அந்தக்குழுவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப தமிழகத்தின் நிதி நிலையை சீரமைத்து வருகிறார்.
தி.மு.க. ஆட்சியில் உள்ள கடந்த சில மாதங்களில், ஒரே நேரத்தில் மாநிலத்தின் வளர்ச்சியிலும், மறுபுறம் மக்களுடன் இணைந்து செயலாற்றும் தன்மையையும் ஸ்டாலினின் ஆட்சியில் காணமுடிகிறது. இதன் பலனை தான் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளில் காண்கிறோம்.
பா.ஜ.க. வுக்கு வளர்ச்சி வாய்ப்புகள் குறைவு!
இதே நிலையில் ஸ்டாலின் தொடர்ந்து ஆட்சி செய்தால், முன்பே கூறியதுபோல, அ.தி.மு.க. கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்துவிடும். பல சிறிய கட்சிகளுக்கு மக்களின் கவனம் சிதற வாய்ப்பு உருவாகும். இதில் பாரதிய ஜனதா மக்களின் கவனத்தை பெறுமா என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆனால் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்கு வாய்ப்பு குறைவு என்பது தெளிவாகிறது. ஏனெனில் தி.மு.க.வுக்கு அடுத்த இடங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை காணமுடிகிறது.
திராவிட அரசியலை முன்வைத்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்புகள் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த கடந்த காலத்தில், அரசியலில் ஜாதிக் கட்சிகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. வன்னியர் கட்சி, புதிய தமிழகம் என பல ஜாதி பிரிவுகளை கொண்ட கட்சிகளை காணலாம். இந்த ஜாதி பிரிவுகளையும் உட்படுத்த ஸ்டாலின் கடந்த சில மாதங்களில் முயற்சி செய்து வந்துள்ளார். கடந்த தேர்தலில் ஸ்டாலின் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இதை தெளிவாக காணலாம். ஜாதி பிரிவை சேர்ந்தவர்களுக்கு போட்டியிட ஸ்டாலின் வாய்ப்பு அளிக்க முயற்சிசெய்துள்ளார். பான் தமிழ்நாடு என்ற ஒரு நிலையை ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.
கலைஞர்-ஜெயலலிதா,கலைஞர் -எம்ஜிஆர் காலக் கட்டத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த விரோதம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ஆட்சிக்கு வருபவர்கள், முன்பு ஆட்சியில் இருந்தவர்களின் மீது கடுமையான குற்றச் சாட்டுகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுஇருந்தனர்.
ஆனால் ஸ்டாலின் அந்தப் பாணியை முற்றிலும் மாற்றி உள்ளார். எதிர்கட்சியில் உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் நேர்ந்த இறப்புகளுக்கு நேரடியாக வீட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் ஆட்சியில் நடந்த ஊழல்களை குறித்து விசாரணையும் நடந்து வருகின்றன. ஒன்றிய அரசுக்கு பல கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
விவசாயத்துக்கு தனி பட்ஜெட் இதுவே முதல்முறை!
இதையெல்லாம் கடந்து விவசாயத்திற்கான தனி பட்ஜெட் அமைப்பது இதுவே முதல் முறையாகும். இது அதிகம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். வேறெந்த மாநில அரசும் கொண்டு வந்ததாக தெரியவில்லை. மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைக்கலாம் என்ற கருத்து மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இப்படி பல ஆட்சி, அணுகுமுறைகளில் முழுமையான ஒரு மாற்றத்தை ஸ்டாலின் செய்துள்ளார்- இவ்வாறு மீடியா ஒன் இணையதளம் சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!