உணர்வோசை

எடிசன் மனிதகுலத்துக்கான விஞ்ஞானியா? லாபநோக்குள்ள தொழிலதிபரா?

1893ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி. அமெரிக்காவில் மிக முக்கியமான நிகழ்வு ஒன்று நடக்கவிருந்தது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த க்ரோவர் க்ளீவ்லேண்ட் நிகழ்வுக்கு வந்திருந்தார். சில கணங்கள் பேசி அதிபர் பேசி முடித்ததும் அவரிடம் ஒரு பொத்தான் கொடுக்கப்பட்டது. மனிதகுல எதிர்காலத்துக்கான முக்கியமான பொத்தான். ஜனாதிபதி பொத்தானை அழுத்தினார். பல்லாயிரம் லைட் பல்புகள் ஒளிர்ந்தன. மனித குலத்துக்கு வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. முதன்முறையாக அத்தனை பெரிய ஒளியை மனிதன் கண்டான்.

சிகாகோவின் உலக கண்காட்சி தொடங்கியது. அடுத்த ஆறு மாதங்களில் மட்டும் இரண்டரை கோடி பேர் வந்து ஒளிரும் மின்விளக்குகளை பார்த்தனர். விளக்குகள் எரிய எரிய அவற்றை உருவாக்கிய நிறுவனத்துக்கு பணம் கொட்டியது. பல்பை உருவாக்கிய நிறுவனத்தின் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன்.

இன்று தாமஸ் ஆல்வா எடிசனின் பிறந்தநாள். உலகெங்கும் தன் கண்டுபிடிப்புகளுக்கு எடிசன் பெயர் பெற்றிருப்பதைப் போலவே நம்மூரிலும் அவருக்கு பெயர் உண்டு. விளக்கு பல்பை கண்டுபிடித்தவர் எடிசன் என்பது எவருக்கும் தெரிகிற தமிழ்ச்சூழல் தகவல். மூடநம்பிக்கையை தோலுரிக்கும் பொருட்டும் விஞ்ஞானத்தின் அவசியத்தைக் குறிக்கும் பொருட்டும் எடிசன் குறிப்பிடப்படுவார். கடவுள் கொடுக்காத வெளிச்சத்தை விஞ்ஞானமே நமக்கு வழங்கியது என்றும் அதைச் செய்தது எடிசன் என்றும் பேசப்படும் கருத்தாடல்கள் நம்மூரில் ஏராளம். எடிசன் ஏதோ பகுத்தறிவுவாதி என தொனிக்கக் கூடிய கருத்தாடல்கள். ஆனால் உண்மை அப்படி இருக்கவில்லை.

முப்பது வயதுகளிலிருந்தே எடிசன் புகழ் பெற்றிருந்தார். பல கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றவராக இருந்தார். நியூ ஜெர்சியில் கண்டுபிடிப்புகளுக்கென்றே தனியாக ஓர் உற்பத்தி நிலையத்தை உருவாக்கினார். அங்குதான் முதன்முதலாக அவர் பல்பை கண்டுபிடித்தார். ஆனால் ஒரே ஒரு பிரச்சினை இருந்தது. பல்புக்கு தேவையான மின்சாரத்தை பல்பில் செலுத்தும் வழி உருவாக்கப்பட்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட சாலைகள் இல்லாத காலத்தில் கார்களை கண்டுபிடித்த நிலை. உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக்கவென ஓர் அமைப்பை கண்டுபிடிக்கவில்லையென்றால் எடிசனின் பல்புக்கு பயன் கிடையாது. எடிசனின் நிறுவனம் நேரடி மின்சாரத்தை மட்டும்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தது. நேரடி மின்சாரம் என்பது ஒரு பேட்டரியை பயன்ப்டுத்துவது போல. மின்சாரம் ஒரே திசையில் மட்டும்தான் பயணிக்கும். அதைக் கொண்டு இயங்கும் பல்பைதான் எடிசன் கண்டுபிடித்திருந்தார். அதற்கான உரிமத்தையும் பெற்றார். வெறும் விஞ்ஞானியாக மட்டும் எடிசன் இல்லை என்பதற்கு அவர் கொண்டிருந்த செல்வாக்கு ஓர் உதாரணம். மொத்த அமெரிக்காவுக்கும் நேரடி மின்சாரத்தை பயன்படுத்தும் வழியை அமல்படுத்தும் அளவுக்கு அவரின் செல்வாக்கு இருந்தது.

முதல் மின்சார விநியோக மையம் நியூ யார்க்கில் அமைக்கப்பட்டது. 59 பேர் மின்சார சேவையை பயன்படுத்தினர். நிறைய மையங்கள் உருவாகத் தொடங்கிய பின், பல வீடுகள் மின்சாரத்தை பயன்படுத்த தொடங்கின. அதற்கான ராயல்டி வருமானமும் எடிசனுக்கு கிடைக்கத் தொடங்கியது. ஆனாலும் நேரடி மின்சாரத்தில் ஒரு முக்கியமான குறைபாடு இருந்தது.

நீண்ட தூரங்களுக்கு நேரடி மின்சாரம் ஆற்றலை இழக்காமல் பயணிக்க வேண்டுமெனில் வாடிக்கையாளரின் வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவுக்குள் மின்சார விநியோக மையம் இருக்க வேண்டும். விளைவு, நிறைய வாடிக்கையாளர்களுக்கு நிறைய மையங்கள் தேவைப்பட்டன. அவற்றுக்கான கம்பிவழித் தடங்கள் தேவையாக இருந்தன. நேரடி மின்சாரம் மிகப் பெரிய செலவை ஏற்படுத்துவதாக இருந்தது.

நேரடி மின்சாரம் உருவாக்கிய பிரச்சினைக்கு தீர்வாக மாற்று மின்சாரம் எனப்படும் AC மின்சாரம் முன் வைக்கப்பட்டது. மாற்று மின்சாரத்தை ஒரு நொடிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் திசை மாற்றிக் கொள்ளலாம். நேரடி மின்சாரத்துக்கு தேவைப்பட்ட விநியோக மைய எண்ணிக்கை மாற்று மின்சாரத்துக்கு இல்லை. விலையும் குறைவு.

1093 கண்டுபிடிப்புகளைச் செய்தவர் எடிசன். 1888ஆம் ஆண்டின் ஒரு நாளில் மட்டும் 112 யோசனைகளை அவர் எழுதினார். அவரது இளைஞர் பருவத்தில் சராசரியாக ஒவ்வொரு 11 நாட்களுக்கும் ஒரு கண்டுபிடிப்புக்கான உரிமம் பெற்றுக் கொண்டிருந்தார்.

பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருந்த எடிசன் அவற்றுக்கு உரிமமும் உடனுக்குடன் பெற்றுக் கொண்டிருந்தார். அதற்கான காரணம், வேறு எவரும் அவரது கண்டுபிடிப்பை திருடி விடக் கூடாது என்பது மட்டுமே அல்ல. அவை அனைத்தையும் எவரேனும் பயன்படுத்த விரும்பினால் அவருக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதுதான் பிரதானக் காரணம். எனவே எடிசன் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்குக் காரணம் மனித குல முன்னேற்றம் எல்லாம் இல்லை. வணிகம். அவ்வளவுதான்.

விஞ்ஞானியாக அறியப்படும் எடிசனுக்கு சொந்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான பணியாட்கள் இருந்தனர். அவரின் பெயர் புகழை எட்டியதற்குக் காரணம் ஒன்றுதான். ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அனைத்திலும் எடிசனின் பெயர் இருந்தது. எல்லா பொருட்களையும் தயாரிக்கும் நிறுவனங்களை அவர் நடத்திக் கொண்டிருந்தார்.

எனவே எடிசனை அப்பழுக்கற்ற விஞ்ஞானியாக பார்ப்பதில் எந்த உண்மையும் இருக்க முடியாது. விஞ்ஞானத்தை லாபவணிகமாக மாற்றிய புகழ்பெற்ற நபராக அவரைப் புரிந்து கொள்வதுதான் சரியாக இருக்க முடியும். அவரின் லாபவெறி விஞ்ஞானம்தான் டெஸ்லா என்கிற மனித குலத்துக்கான விஞ்ஞானியை காணாமலடித்தது.

விஞ்ஞானம் சரிதான். மனித குல வளர்ச்சிக்கான ஏணிதான் விஞ்ஞானம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த விஞ்ஞானத்தை பொத்தாம் பொதுவாக பார்க்கும் காலம் எடிசன் இருந்த காலத்திலேயே இல்லை. லாபத்துக்காகவும் விற்பனைக்காகவும் நிறுவனங்களுக்காகவும் கண்டுபிடிப்புகள் அவரின் காலத்திலேயே நிகழ்ந்திருக்கும்போது, நம் கைகளில் புரளும் செல்பேசி தொடங்கி மருத்துவம், தொழில்நுட்பம், மரபணு என எல்லா வகை விஞ்ஞானங்களும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் இன்றையச் சூழலில் எல்லாவற்றையும் கேள்வி கேட்பதே சரியாக இருக்க முடியும்.

ஏனெனில் அதுவே பகுத்தறிவு!

Also Read: வங்கிகள் யாருக்கானவை? - பணம் கொள்ளையடிக்கப்பட்டால் என்ன நடக்கும்?