உணர்வோசை
ஜார்ஜ் ஆர்வெல்லின் புத்தகங்கள் உலகப்புகழ் பெறக் காரணமான CIA - இன்று நடப்பது என்ன?
ஜார்ஜ் ஆர்வெல் என ஒரு ஆங்கில எழுத்தாளர் இருந்தார். அவரது புத்தகங்களில் முக்கியமானவை இரண்டு. Animal Farm மற்றும் 1984. இரண்டுமே எழுதப்பட்ட காலம் முறையே 1945 மற்றும் 1949. இரண்டு புனைவுகளுக்கும் இருந்த அடிப்படை ஒற்றுமை சோவியத் யூனியன் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு. இரண்டுமே உலகப்புகழ் பெற்றதற்குக் காரணம் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ.
லெனின் தலைமையிலான சோவியத் புரட்சியும் அதற்குப் பின்னான ஆட்சியையும் விலங்குகள் இருக்கும் ஒரு பண்ணையோடு ஒப்பிட்டு Animal Farm புத்தம் எழுதப்பட்டது. விலங்குகள் புரட்சி செய்வதாகவும் புரட்சிக்கு பிறகு அவையும் கேவலமானவையாக மாறுவதாகவும் புனைவு அமைக்கப்பட்டிருந்தது. மார்க்ஸ்ஸையும் லெனினையும் ஸ்டாலினையும் பன்றிகளாக சித்தரித்து கீழ்த்தரமாக எழுதியிருப்பார் ஜார்ஜ் ஆர்வெல். நேரடியாக கம்யூனிசத்தை விமர்சிக்கும் ஆழமற்ற, தக்கையான வாசகங்களை அப்புனைவு கொண்டிருந்தது. உதாரணமாக,
“All animals are equal, but some animals are more equal than others”
என்ற வாசகம்.
அதாவது ‘எல்லா விலங்குகளும் சமமானவை என்றாலும் சில விலங்குகள் பிறவற்றை விட அதிக சமமானவை’ என அர்த்தம். சமத்துவத்திலும் பேதம் கொண்டிருப்பதாக சோவியத் யூனியன் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ நிதியுதவி செய்து அந்தப் புத்தகத்தை படங்களாக எடுத்து உலகம் முழுக்க பரப்பியது. சோவியத்துக்கு எதிரான பெரும் விஷமப் பிரச்சாரத்துக்கு அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட புத்தகம்தான் விலங்குப் பண்ணை என்ற Animal Farm.
ஆர்வெல்லின் அடுத்த முக்கியமான புத்தகம், 1984. அதாவது 1984ஆம் ஆண்டில் நடக்கக்கூடும் என 1949ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாவல்.
நாவலில் உலகத்தின் பெரும்பாலான இடங்கள் ஒரு ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்படுகிறது. அது யதேச்சதிகார ஆட்சி. மொத்த உலகையும் ஒரே கட்சி ஆளுகிறது. எப்போதும் போர் இருக்கும். மக்களை அரசு எல்லா இடங்களிலும் கண்காணிக்கும். தொடர்ந்து தொலைக்காட்சிகளில் அரசின் போர் வெற்றிப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். காவலர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் கைது செய்வது சிந்தனைக் குற்றவாளிகளை. அதாவது சிந்திப்பதே குற்றமாக கருதப்படும் சூழல். கூட்டாக இன்றி தனியாக சிந்தித்தால் கைது. சுதந்திரமாக சிந்தித்தால் கைது. காதலித்தாலும் தண்டனை.
இத்தகைய ஒரு சூழலில் கட்சி உறுப்பினர் ஒருவன் காதலிக்கிறான். காதலையும் ரகசியமாக செய்ய வேண்டிய கட்டாயம், அவனது கட்சி ஆட்சிக்கு வராத காலம் எத்தனை அற்புதமாக இருந்தது என அவனை சிந்திக்கத் தூண்டுகிறது.
இப்படியாக போகும் அந்த நாவலும் சோவியத்தையே பிரதிபலிப்பதை புரிந்திருக்கலாம். சோவியத்தின் ஆட்சி கொடுங்கோலத்தின் அவலம் என அமெரிக்கா கட்டவிழ்த்தப் பொய்ப் பிரச்சாரத்தை ஈடு செய்வது போன்ற எழுத்து. இன்றும் அந்தப் புத்தகம் உலகளவில் பிரபலம்.
கிட்டத்தட்ட ‘அதோ பூச்சாண்டி’ எனச் சொல்லி சோவியத்தைக் காட்டி உலகை பயமுறுத்திக் கொண்டு ஊரை அடித்து உலையில் போட்டுக் கொண்டிருந்தது அமெரிக்கா.
இப்போது 1984ஆம் வருடம் இல்லை. சோவியத் யூனியனும் இல்லை. எந்தவித உளவு நிறுவன ஆதரவும் இன்றி தன்னிச்சையாக பல படைப்புகள் உலகை உலுக்கும் வகையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
Snowpiercer:
உலகமே அழிந்துவிட்ட சூழலில் மிச்சம் மீதி இருந்த மக்களை மட்டும் ஏற்றிக் கொண்டு ஒரு ரயில் பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறது. அதில் கடைசி பெட்டியில் உழைக்கும் மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு உணவு மிகவும் குறைவு. மருத்துவம் இல்லை. வசதிகள் இல்லை. அதிகமாக உணவு கேட்கவும் முடியாது. அவ்வப்போது முந்தைய பெட்டிகளிலிருந்து காவலர்கள் வந்து உணவு தருவார்கள். அவ்வளவுதான். எதிர்கேள்வி கேட்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் புரட்சி செய்வதென முடிவெடுக்கப்படுகிறது. ரயிலை இயக்கும் எஞ்சினை கைப்பற்றும் திட்டத்தில் காவலர்களை அடித்துத் துவைத்து ஆதரவாளர்களுடன் பெட்டி பெட்டியாக முன்னேறுகிறான் நாயகன்.
ஒவ்வொரு பெட்டியும் ஒவ்வொரு வித சொகுசுடன் இருக்கிறது. அளவுக்கு மீறி தண்ணீர் கிடைக்கிறது. அற்புதமான உணவு இருக்கிறது. சுகபோகமான வாழ்க்கை இருக்கிறது. கடைசிப் பெட்டியில் அவர்கள் அனுபவித்த எந்த பிரச்சினையும் வேறெந்த பெட்டியிலும் இல்லை. எஞ்சினை நாயகன் பிடிக்கும் போது என்னவாகிறது என்பதுதான் மிச்சக்கதை. வர்க்க வேறுபாட்டை படம் பேசுகிறது. தலைமையில் இருப்பவன் உழைப்பவரை ஒடுக்குவதையும் பேசுகிறது.
Platform:
நாயகன் ஓரறைக்குள் விழிக்கிறான். அந்த அறைக்குள் இன்னொரு நபரும் இருக்கிறான். அறைக்கு ஒரு எண்ணும் இருக்கிறது. அறையின் மேலேயும் கீழேயும் ஓட்டைகள் இருக்கிறது. அந்த ஓட்டைகளின் வழி பார்த்தால் மேலே ஓர் அறையும் அதற்கு மேல் ஒரு ஓட்டையும் அதற்கு மேல் ஒரு அறையும் என பல அறைகள் தெரிகின்றன. அதே போல் கீழே பார்த்தால் ஓரறை, அதில் ஒரு ஓட்டை, அதற்குக் கீழ் ஓரறை என பல ஓட்டைகள் இருக்கும் அறைகள். ஓட்டையின் வழி ஒரு பெரிய மேஜை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறைக்கும் இறக்கப்படும். அந்த மேஜையில் பல உணவுகள் நிரப்பப்பட்டிருக்கும். முதல் தள அறையில் இருப்பவர்கள் நன்றாக உண்ணுவார்கள். அவர்கள் வைக்கும் மிச்சம் அடுத்த தளத்துக்கு. அவர்கள் வைக்கும் மிச்சம் அடுத்த தளத்துக்கு. 10 தளத்தைத் தாண்டிய பிறகு உணவு குறைய ஆரம்பித்து விடும். 50-ஐ எட்டும்போது பெரும்பாலும் குறைந்து விடும். மொத்தமாக 300க்கும் மேற்பட்ட தளங்கள்.
மேலே உள்ளவனுக்கு கீழே உள்ளவனை பற்றி கவலை இருக்காது. கீழே உள்ளவன் மேலே உள்ளவனை திட்டினாலும் ஒன்றும் செய்ய மாட்டான். அவனுக்குக் கீழே இருப்பவனுக்கு உணவு சென்று சேருவதைப் பற்றியும் கவலைப்பட மாட்டான்.
Squid Games:
இது ஒரு இணையத் தொடர். சமூகத்தில் பணம் ஈட்ட முடியாத ஒருவனுக்கு ஒரு வித்தியாசமான விளையாட்டை விளையாட அழைப்பு வருகிறது. அந்த விளையாட்டை விளையாடி வெற்றி பெற்றால் பல கோடிகளில் பணம் கிடைக்கும். ஆர்வத்துடன் கலந்து கொள்கிறான் நாயகன். அங்கு ஒவ்வொரு கட்டமாக விளையாட்டு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு விளையாட்டிலும் நாயகன் வெல்ல வேண்டுமெனில் சக மனிதர்களை கொல்ல வேண்டும். சக மனிதர்களை கொல்லவில்லை எனில் அவன் கொல்லப்படுவான். தன் உயிரைக் காக்க, அடுத்தவன் உயிரைப் பறிக்கும் விளையாட்டை வேறு வழியின்றி விளையாடுகிறான் நாயகன். அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே மிச்சக் கதை.
இதுவும் முதலாளித்துவ எதிர்ப்புக் கதைதான். ஜார்ஜ் ஆர்வெல் பேசியது போல் ‘தனி’யாக இயங்க வேண்டும் என போதிக்கும் கதைதான். ஆனால் அதன் விலை நிம்மதியின்மை, பதற்றம், தனிமை, குரூரம்!
மூன்று படங்களும் பெரும் எண்ணிக்கையின் சிலவைதான். ஆனால் இவை எல்லாவற்றையுமே நிதியுதவி அளித்து செய்யுமளவுக்கு நாடுகள் உலகில் இல்லை. சோவியத் யூனியனும் இல்லை. மார்க்ஸ்ஸும் இல்லை. லெனினும் இல்லை. பிடலும் இல்லை. சே குவேராவும் இல்லை. ஆனால் பிரச்சினைகள்?
தொடர்கிறது.
முன்பைவிட அதிகத் தீவிரத்துடன் பிரச்சினைகள் தொடர்கின்றன. தனி நபரே தன் கோபத்தை முதலாளித்துவத்துக்கு எதிராக படைப்பாக்கும் அளவுக்கு பிரச்சினைகள் தீவிரம் கொண்டிருக்கின்றன.
கம்யூனிச தத்துவம் தோற்றது என எப்போதுமே பிரசாரம் செய்யும் முதலாளித்துவம் ஒரு முக்கியமான விஷயத்தை மக்களிடம் மறைக்க முனைகிறது. ‘கம்யூனிசம் ஒருமுறைதான் தோற்றது. ஆனால் முதலாளித்துவம் பல முறை தோற்றிருக்கிறது’. தோற்பதால் ஒரு சித்தாந்தம் பயனற்ற சித்தாந்தம் என்றால் அது முதலில் முதலாளித்துவத்துக்கே பொருந்தும். கம்யூனிசத்தைப் பற்றி எத்தனை ‘கம்பி கட்டும் கதைகளை’ முதலாளித்துவமும் அதன் ஏவலறிஞர்களும் கூறினாலும் மக்கள் தெளிவானவர்கள். உண்மையை புரிந்திருக்கிறார்கள்.
முதலாளித்துவத்தை எதிர்த்து உலகம் முழுக்க வெளியாகும் திரைப்படங்களே மக்களின் மனநிலைக்கு சாட்சி!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?