உணர்வோசை

வாழ்க்கை அலுத்துப் போனால் என்ன செய்வது? - சமூகத்தை விட்டு ஓடுவது சரியா?

இன்று நமக்கு நிலையான வருமானம் கிடையாது. வாழ்க்கை முழுக்க பதட்டமும் அவநம்பிக்கையும் நிரம்பியிருக்கிறது. கிடைக்கும் வருமானம் வாழ்க்கையை ஓட்ட போதவில்லை. செல்பேசிகள், கணிணிகள் என புதிய அத்தியாவசியங்கள் வந்துவிட்டன. அடுத்த மாதம், அடுத்த வருடம் அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்குமென இந்த தலைமுறைக்கும் தெரியவில்லை. முந்தைய தலைமுறைக்கும் தெரியவில்லை. முற்றிலும் புதுவகை வாழ்க்கைக்குள் கண்ணை கட்டி இறக்கி விடப்பட்டிருக்கிறோம். விளைவாக மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்ட பல மனநோய்கள் இன்று சராசரியாகி விட்டது.

உறவுகள் கசக்கின்றன. தனிமை தற்கொலைக்கு தூண்டுகிறது. என்ன செய்வதென தெரியவில்லை. என்னதான் செய்வது என மிகத் தீவிரமாக ஆழ்ந்து யோசிக்கையில் ஒரு விஷயம் மட்டும் தோன்றுகிறது. இந்த வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு எங்காவது சென்றுவிடலாமா? சட்டென நம் மனங்களை ஆசுவாசப்படுத்துகிற யோசனை. எந்த நச்சு பிச்சு பிரச்சினைகளுமின்றி, அழுத்தமின்றி, ஓடிக் கொண்டே இல்லாமல், சற்று நிதானமாக, பறவையைப் போல் சுதந்திரமாக, நாம் விரும்பும் வகையில் வாழ முடிகிற ஒரு வாழ்க்கையும் உலகமும் இருந்தால் எப்படி இருக்கும்?

லாரா மற்றும் ட்ரெவோர் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 2014ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார்கள். அவர்களுக்கு இருந்த சொத்து மற்றும் உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு ஒரு வேனில் குடி புகுந்தார்கள். வாழ்க்கைக்கு தேவையான குறைந்தபட்ச தேவைகளுடன் உருவாக்கப்பட்ட ஒரு வேன்! ஒரு வருடமேனும் அந்த வேனில் நாடு முழுவதும் சுற்றத் திட்டமிட்டனர். ஆனால் வேனில் செல்லத் தொடங்கிய ஒரு வாரத்தில் திட்டம் மாறியது.

அமெரிக்காவின் டென்னஸ்ஸீ மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லில் பயணிக்கும்போது ஒரு விஷயம் அவர்களுக்கு தென்பட்டது. ஒரு சிறு குடியிருப்புக்கான அடையாளங்கள்! அவற்றை பின்பற்றி வாகனத்தில் சென்றவர்களுக்கு ஆச்சரியம். காட்டை நோக்கிச் சென்ற அடையாளங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் மாறின. வரிசையாக வண்ண வண்ணமாக பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. அமெரிக்காவின் புகழ் பெற்ற ஒரு கம்யூனை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.

Farm!

விவசாயம் என்ற அர்த்தம் தொனிக்கும் ஆங்கில வார்த்தைதான் அந்த கம்யூனின் பெயர்.

சிலர் மட்டும் குழுவாக பொது சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதை கம்யூன் வாழ்க்கை என சொல்லிக் கொள்கிறார்கள். ஃபார்ம் என்கிற அந்த கம்யூனை முதன்முறையாக உருவாக்கியவரின் பெயர் ஸ்டீபன் காஸ்கின். 1971ஆம் ஆண்டில் 300 பேர் ஒரு விவசாய குழுச் சமூகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து கிளம்பினார்கள். அக்குழுவை வழி நடத்தியவர்தான் ஸ்டீபன் காஸ்கின். மத்திய டென்னஸ்ஸீயில் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் கூடாரங்களிலும் ஓட்டி வந்த பள்ளி பேருந்துகளிலும் தங்கினர். அக்குழுவுக்கென சில விதிகள் உருவாக்கிக் கொண்டனர்.

கருத்தடை கிடையாது. ஒப்பனை, அலங்காரம் கிடையாது. காபி, அசைவம், மது, வன்முறை, முடி வெட்டுதல் எதுவும் கிடையாது. அனைவரும் தங்களின் உடைமைகளை உதறி விட்டு வறிய வாழ்க்கை வாழ வேண்டுமென உறுதி எடுத்துக்கொண்டனர்.

1980களில் ஃபார்ம் கம்யூனில் வசிப்போரின் எண்ணிக்கை 1,200 ஆக அதிகரித்தது. கம்யூனுக்குள் வாழ்ந்தவர்களின் குடும்பங்கள் விரிவடைந்தன. நிறைய குழந்தைகள் பிறந்தன. உணவுக்கான தேவை அதிகரித்தது. மருத்துவச் செலவும் எகிறியது. கம்யூன் கடனுக்குள் விழுந்தது. அவர்கள் வசித்த நிலத்தை அடமானம் வைக்க வேண்டிய நிலை. ஸ்டீபன் காஸ்கினின் அதிகாரம் பறிக்கப்பட்டது. விதிகள் தளர்த்தப்பட்டன. கம்யூனில் வாழ்பவர்கள் ஏதோ ஒரு வகை வேலை பார்த்து கம்யூனின் நிதிக்கு பங்களிக்க வேண்டும் என நிலை மாறியது. பல நூறு பேர் கம்யூனிலிருந்து கிளம்பினார்கள். இன்றைய நிலவரப்படி 200 பேர் மட்டுமே ‘ஃபார்ம்’ என்கிற அந்த கம்யூனில் இருக்கின்றனர்.

உலகம் முழுக்க பல வழிகளில் நிம்மதியான வாழ்க்கையை மனித இனம் தேடுகிறது. அதில் கம்யூன்கள் ஒரு வழியாக இருக்கின்றன. எனினும் மனிதன் அஞ்சியோடும் வாழ்க்கையின் வேர்கள் கம்யூன் வாழ்க்கையையும் பிடிக்கவே செய்கின்றன. கம்யூன் வாழ்க்கைகளிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை என்பதற்கு உலகில் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.

இன்றைய சமூக வாழ்க்கை முறைகளிலிருந்து வெளியேற விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு இத்தகைய கம்யூன் வாழ்க்கை மிகப் பெரும் ஆசுவாசத்தை வழங்குகிறது. சமூகத்திலிருந்து தனியாக இருக்கும் இத்தகைய குழு வாழ்க்கைகளைத்தான் ‘உடோபியா’ என்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூன் என்கிற வார்த்தைக்குப் பின் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. கம்யூனிசம் என்கிற சித்தாந்தம்!

முதன்முறையாக ஐரோப்பாவில் மதங்களின் ஆதிக்கம் உடைக்கப்பட்டு பிரெஞ்சு புரட்சி கிளர்ந்தெழுந்து புது சிந்தனைகளை உருவாக்கின. பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தில் எழுந்த தத்துவ ஞானிகள் பலர். அவர்களில் முக்கியமானவர் காரல் மார்க்ஸ்.

உடோபியா என்கிற கற்பனை உலகில் எல்லாமுமே சமமாக அனைவரும் சந்தோஷமாக இருக்க முடியும் என இலக்கியத்தில் பேசிக் கொண்டிருந்த கருத்தை யதார்த்தத்திலும் சாத்தியப்படுத்த முடியும் என விஞ்ஞானப்பூர்வமாக நிறுவிக் காட்டியவர் மார்க்ஸ்.

குடும்ப உறவுகளை வெறும் பண உறவுகளாக முதலாளித்துவம் சுருக்கிவிட்டது என்கிறார் மார்க்ஸ்.

சமூகத்தில் மக்களிடையே நிலவும் உறவுகளை பணம் தீர்மானிக்கும் வரை நமக்கு எல்லா உறவுகளும் சுமையாகவும் சுயநலமுமாகவே தெரியும். அனைவருக்குமான விடுதலையைத் தேடாமல் உற்றாரை தூக்கியெறிந்து விட்டு காட்டுக்குள் ஓடி தங்குவதும் தனிக்குழுக்களாக வாழ்வதும் தீர்வுகளாவதில்லை.

சமூகத்தை விட்டு மனிதன் ஓடுவது தன்னை விட்டு ஓடுவதைப் போன்றது. மனிதனுக்கான விடுதலை அவனுக்குள்தான் இருக்கிறது. அவனது சிந்தனையின் விடுதலையில் இருக்கிறது.

சிந்தனையின் விடுதலையோ அவன் ஓட விரும்பும் அலுப்பு மிகுந்த வாழ்க்கைக்குள்தான் இருக்கிறது.

Also Read: பத்திரிகையாளர் ஜமால் கஷோகிக்கு என்ன நடந்தது? - உலகை உலுக்கிய சம்பவம்!