உணர்வோசை

பெரும் அரசியலை வெளிக்கொண்டு வந்த எலான் மஸ்க்கின் ட்வீட்... பொலிவியாவில் நடந்தது என்ன?

பொலிவியா, லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த நாடு.

2019ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி. தேர்தலில் முறைகேடு நடந்ததாக போராட்டம் நடந்து கொண்டிருந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு பேர் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் பரவியது. தேர்தலில் வெற்றி பெற்ற அதிபரின் கட்சியைச் சேர்ந்த மேயர் மீது மக்களின் கோபம் திரும்பியது. மேயரின் அலுவலகத்துக்குள் கூட்டம் புகுந்தது. மேயராக இருந்தவர் ஒரு பெண். பெயர் பட்ரிஷியா ஆர்ஸ்.

அலுவலகத்துக்குள்ளிருந்து மேயரை கூட்டம் வெளியே இழுத்து வந்தது. அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. மேயரை தரதரவென சாலையில் இழுத்துச் சென்றனர். அவரின் முகத்தில் சிவப்பு சாயத்தை ஊற்றினர். பெண் என்று கூட பாராமல் அவரின் தலைமுடியை கத்தரித்தனர். மக்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். ஒரு கட்டத்துக்கு மேல் காவலர்களிடம் மேயர் ஒப்படைக்கப்பட்டார். அந்த நாள் பட்ரிஷியாவுக்கு கெட்ட கனவாக மாறிப் போனது.

அந்த கனவு பட்ரீஷியாவுடன் முடிந்துவிடவில்லை.

2019ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பொலிவியாவில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. திடுமென 24 மணி நேரங்களுக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. எதிர்க்கட்சி ஆதரவாளர்களிடம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் சந்தேகத்தை கிளப்பிவிட்டது. எதிர்க்கட்சி தலைவராக இருந்தவரின் பெயர் கார்லோஸ் மெசா. அவரும் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதிலிருந்து கிளம்பிய அவரின் ஆதரவாளர்கள் கூட்டம்தான் மேயர் பட்ரீஷியாவை தெருவுக்கு இழுத்து வந்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட கூட்டம்.

பொலிவியா நாட்டின் ஆட்சியில் இருந்தவர் ஈவோ மொராலஸ். 2006ஆம் ஆண்டிலிருந்து அவர்தான் ஆட்சியில் இருக்கிறார். கிட்டத்தட்ட 13 வருடங்கள். மீண்டும் ஒரு ஐந்து வருடம் பதவியில் இருப்பதற்காக வாக்கு எண்ணிக்கையில் ஈவோ மொராலஸ் முறைகேடு செய்வதாக கருத்து உருவானது. 24 மணி நேர வாக்கு நிறுத்த எண்ணிக்கைக்குப் பிறகு மீண்டும் எண்ணிக்கை தொடரப்பட்டு முடிவு வெளியானது. பத்து சதவிகித வித்தியாசத்தில் முன்னணி வகிப்பதாக சொல்லப்பட்டு ஈவோ மொராலஸ் வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எதிர்கட்சியின் ஆதரவாளர்களுக்கு இருந்த சந்தேகம் உறுதியானது.

பொலிவிய தேர்தலை மேற்பார்வையிட்ட ஓஏஸ் என்கிற அமைப்பும் முறைகேடுக்கான வாய்ப்பு இருப்பதாக கூறியது. எதிர்கட்சி தலைவரான கார்லோஸ் மெஸாவும் தேர்தல் முடிவை நிராகரித்தார்.

ஒரு பெரும் போராட்டத்துக்கான அஸ்திவாரம் பலமாக போடப்பட்டது. அடுத்த மூன்று வாரங்களுக்கு பெரும் போராட்டங்கள் தெருக்களை நிரப்பின. பதினான்கு வருடங்களாக ஆட்சியில் இருந்த ஈவோ மொராலஸ்ஸை எதிர்த்து மக்கள் போராடத் துவங்கினர். வீடுகள் எரிந்தன. வாகனங்கள் தாக்கப்பட்டன. பொதுச் சொத்துகள் சூறையாடப்பட்டன.

உச்சக்கட்டமாக நவம்பர் எட்டாம் தேதி பொலிவியாவின் காவல்துறை அமைப்பு கூடிப் பேசி தங்களின் பொறுப்புகளை துறப்பதாக அறிவித்தன. அதிபர் அரண்மனைக்கு அருகே இருந்த ஒரு காவல் நிலையத்தின் மேல் அதிகாரிகள் ஏறி நின்று ‘காவல்துறை மக்களுடனே இருக்கிறது’ என கோஷம் எழுப்புமளவுக்கு பிரச்சினை தீவிரம் அடைந்தது. ஈவோ மொராலஸ்ஸின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

அதிபர் அரண்மனைக்கு ஈவோ மொராலஸ் திரும்பவில்லை. அவரின் சொந்த பாதுகாப்பு வீரர்களை கொண்ட சிறு குழுவின் பாதுகாப்பில் அவர் தலைமறைவாகியிருந்தார். நாட்டின் பாதுகாப்புக்கு இருக்கும் ராணுவமும் ஈவோ மொராலஸ்ஸை கைகழுவியது. பிறகு ஈவோ மொராலஸ் தொலைக்காட்சியில் தோன்றினார். அவரின் கட்சி உறுப்பினர்களின் குடும்பங்களை பாதுகாக்க பதவி விலகுவதாக அறிவித்தார். எதிர்க்கட்சியை சேர்ந்த கார்லோஸ் மெசாவின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும் சொன்னார். நாட்டிலிருந்து ஈவோ மொராலஸ் இறுதியில் வெளியேறினார்.

ஆம். ஒரு நாட்டின் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஒருவர் நாட்டை ஆளாமல் அந்த நாட்டை விட்டே வெளியேறினார். மெக்சிகோ நாட்டில் தஞ்சம் புகுந்தார்.

2020ஆம் வருடம் ஜூலை மாதம் 24ஆம் தேதி.

சமூக ஊடகத்தில் எலான் மஸ்க் ஒரு விஷயத்தை பதிவிட்டிருந்தார். அமெரிக்க அரசின் நிவாரணம் போதவில்லை என அவர் இட்டிருந்த ட்வீட்டுக்கு பதில் ட்வீட்டாக ஒரு கருத்தை ஒருவர் இட்டிருந்தார். ‘பொலிவியாவில் ஆட்சியை கவிழ்த்துவிட்டீர்கள். இனி அங்கிருந்து லித்தியம் உலோகத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்’ என்பதாக அக்கருத்து இருந்தது. அதற்கும் பதிலாக எலான் மஸ்க் ஒரு ட்வீட் இட்டிருந்தார். அந்த ட்வீட்தான் பெரும் அரசியலையும் வெளிக்கொண்டு வந்தது. ‘நாங்கள் விரும்பினால் யாரின் ஆட்சியையும் கவிழ்ப்போம்’ என்பதாக இருந்தது ட்வீட்.

எலான் மஸ்க் டெஸ்லா என்கிற நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். டெஸ்லா நிறுவனம் டெஸ்லா என்கிற மின்சார காரை தயாரிக்கிறது. அந்த கார் பெட்ரோலையோ டீசலையோ பயன்படுத்தவில்லை. பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த பேட்டரிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்தான் லித்தியம் தனிமம். பொலிவிய நாட்டில் பெருமளவுக்கான லித்தியம் தனிமம் இருக்கிறது.

பொலிவியாவின் இயற்கை வளங்கள் அனைத்தையும் ஈவோ மொராலஸ் நாட்டுடமை ஆக்கியிருந்தார். தனியார் நிறுவனங்களுக்கு அவற்றை பயன்படுத்த அனுமதியில்லை. லித்தியம் எடுப்பதென்றாலும் அரசு வழியாகத்தான் செல்ல வேண்டும். அது தனியார் முதலாளிகள் விரும்புவதில்லை. ஏனெனில் அரசின் கண்காணிப்பில் வளத்தை எடுக்கும்போது அரசின் வரைமுறைகளுக்கு உட்பட்டுதான் வளத்தை எடுக்க முடியும். வரம்பின்றி மொத்தமாக சுரண்டி இல்லாமலாக்க முடியாது.

விளைவு?

ஈவா மொராலஸ்ஸின் ஆட்சி மக்களின் தேர்வுக்கும் எதிராக கவிழ்க்கப்பட்டது. அமெரிக்க வெள்ளை இன ஆதிக்கத்தை ஆதரிக்கும் கிறித்துவ மத ஆட்சி ஈவோ மொராலஸ்ஸின் இடத்தை நிரப்பியது. அந்த ஆட்சி இருந்த 11 மாதங்களில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பூர்வகுடி மக்களை ஒடுக்கியது. பொலிவிய நாட்டை இதுபோல் பல கழுகுகள் கொத்தி குதற காத்திருப்பது தெரிந்ததால்தான் மக்களால் ஈவோ மொராலஸ்ஸை புறக்கணித்து விடவில்லை. மீண்டும் நடந்த தேர்தலில் மொராலஸ்ஸின் கட்சியே வென்றது.

ஈவா மொராலஸ்ஸின் வார்த்தைகளிலேயே சொல்வதெனில்,

“சகோதர சகோதரிகளாகிய நாம் அனைவரும் இங்கு வாழவும் மனிதம் போற்றவும் பூமியை பாதுகாக்கவும் வந்திருக்கிறோம். முதலாளித்துவம் நீடித்தால் பூமி அழிந்துவிடும். பூமித்தாயின் உரிமைகள் காப்போம்! முதலாளித்துவத்தை ஒழிப்போம்!”

Also Read: “வட கொரிய அதிபர் கிம் நல்லவரா கெட்டவரா?” - அமெரிக்கா பரப்பும் கதைகளின் நோக்கம் என்ன?