உணர்வோசை

டெஸ்லாவின் வீழ்ச்சிக்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசன்?

1893ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி. அமெரிக்காவில் மிக முக்கியமான நிகழ்வு ஒன்று. சிகாகோவின் உலக கண்காட்சி தொடங்கியது.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த க்ரோவர் க்ளீவ்லேண்ட் நிகழ்வுக்கு வந்திருந்தார். சில கணங்கள் அதிபர் பேசி முடித்ததும் அவரிடம் ஒரு பொத்தான் கொடுக்கப்பட்டது. மனிதகுல எதிர்காலத்துக்கான முக்கியமான பொத்தான். ஜனாதிபதி பொத்தானை அழுத்தினார். பல்லாயிரம் லைட் பல்புகள் ஒளிர்ந்தன. முதன்முறையாக அத்தனை பெரிய ஒளியை மனிதன் கண்டான்.

விளக்குகள் எரிய எரிய அவற்றை உருவாக்கிய நிறுவனத்துக்கு பணம் கொட்டியது. பல்பை உருவாக்கிய நிறுவனத்தின் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன்.

முப்பது வயதுகளிலிருந்தே புகழ் பெற்றிருந்தார் எடிசன். பல கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றவராக இருந்தார். கண்டுபிடிப்புகளுக்கென்றே தனியாக ஓர் உற்பத்தி நிலையத்தை நியூ ஜெர்சியில் உருவாக்கினார். அங்குதான் அவர் பல்பை கண்டுபிடித்தார். ஆனால் ஒரே ஒரு பிரச்சினை இருந்தது. பல்புக்கு தேவையான மின்சாரத்தை பல்பில் செலுத்தும் வழி உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

கிட்டத்தட்ட சாலைகள் இல்லாத காலத்தில் கார்களை கண்டுபிடித்த நிலை!

உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக்கவென ஓர் அமைப்பை கண்டுபிடிக்கவில்லையென்றால் எடிசனின் பல்புக்கு பயன் கிடையாது. எடிசனின் நிறுவனம் நேரடி மின்சாரத்தை மட்டும்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தது.

நேரடி மின்சாரம் என்பது ஒரு பேட்டரியை பயன்படுத்துவது போல. மின்சாரம் ஒரே திசையில் மட்டும்தான் பயணிக்கும். அதைக் கொண்டு இயங்கும் பல்பைதான் எடிசன் கண்டுபிடித்திருந்தார். அதற்கான உரிமத்தையும் பெற்றார்.

வெறும் விஞ்ஞானியாக மட்டும் எடிசன் இல்லை என்பதற்கு அவர் கொண்டிருந்த செல்வாக்கு ஓர் உதாரணம். மொத்த அமெரிக்காவுக்கும் நேரடி மின்சாரத்தை பயன்படுத்தும் வழியை அமல்படுத்தும் அளவுக்கு அவரின் செல்வாக்கு இருந்தது.

முதல் மின்சார விநியோக மையம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது. 59 பேர் மின்சாரச் சேவையை பயன்படுத்தினர். நிறைய மையங்கள் உருவாகத் தொடங்கிய பின், பல வீடுகள் மின்சாரத்தை பயன்படுத்தத் தொடங்கின. அதற்கான ராயல்டி வருமானமும் எடிசனுக்கு கிடைக்கத் தொடங்கியது. ஆனாலும் நேரடி மின்சாரத்தில் ஒரு முக்கியமான குறைபாடு இருந்தது.

நீண்ட தூரங்களுக்கு நேரடி மின்சாரம் ஆற்றலை இழக்காமல் பயணிக்க வேண்டுமெனில் வாடிக்கையாளரின் வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவுக்குள் மின்சார விநியோக மையம் இருக்க வேண்டும். விளைவு, நிறைய வாடிக்கையாளர்களுக்கு நிறைய மையங்கள் தேவைப்பட்டன. அவற்றுக்கான கம்பிவழித் தடங்கள் தேவையாக இருந்தன. நேரடி மின்சாரம் மிகப் பெரியச் செலவை ஏற்படுத்துவதாக இருந்தது.

நேரடி மின்சாரம் உருவாக்கிய பிரச்சினைக்கு தீர்வாக மாற்று மின்சாரம் எனப்படும் AC மின்சாரம் முன் வைக்கப்பட்டது. மாற்று மின்சாரத்தை ஒரு நொடிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் திசை மாற்றிக் கொள்ளலாம். நேரடி மின்சாரத்துக்கு தேவைப்பட்ட விநியோக மைய எண்ணிக்கை, மாற்று மின்சாரத்துக்கு தேவைப்படாது. விலையும் குறைவு. இத்தனை ஆதாயங்கள் இருந்தபோதிலும் மாற்று மின்சாரம் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஏனெனில் மாற்று மின்சாரத்தை விநியோகிப்பதற்கான விஞ்ஞான முறைகள் உருவாக்கப்படவில்லை.

சரியாக சொல்வதெனில், மாற்று மின்சாரத்தை பயன்படுத்த ஏதுவான விஞ்ஞானம் அப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

அப்போதுதான் டெஸ்லா வந்தார்!

எடிசனின் உற்பத்தி நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார் டெஸ்லா. நேரடி மின்சார உற்பத்தி இயந்திரங்களை மேம்படுத்தும் வேலை செய்தார். ஆனாலும் கல்லூரியில் ஆசிரியருடன் விவாதித்த மாற்று மின்சாரம் பற்றியச் சிந்தனை டெஸ்லாவின் மனதுக்குள் கனன்று கொண்டேயிருந்தது. மாற்று மின்சாரத்தை பற்றிய தன் கருத்துகளை எடிசனிடம் கூறியபோது எடிசன் பொருட்படுத்தவில்லை. ‘அற்புதமான யோசனை ஆனால் நடைமுறையில் சாத்தியம் கிடையாது’ என்பதே எடிசனின் பதில்.

நேரடி மின்சார விநியோக அமைப்பில்தான் எடிசனின் பிரதான வருமானம் இருந்தது. ஆதலால் டெஸ்லாவை அலட்சியப்படுத்துவதே எடிசனின் தலையாயப் பணியாகவும் இருந்தது.

செய்த வேலைக்கு கூலியும் இல்லாமல் புதுச் சிந்தனைக்கான மதிப்பும் கிட்டாமல் டெஸ்லா எடிசனின் உற்பத்தி ஆலையிலிருந்து வெளியேறினார். மாற்று மின்சாரத்தை பற்றி எடிசனுடன் முரண் கொண்ட டெஸ்லாவின் சிந்தனை பற்றியச் செய்தி வெகுவேகமாக பரவியது. ஆனாலும் முதலீடு கிடைக்கவில்லை. டெஸ்லா கண்டுபிடித்த மாற்று மின்சார மோட்டோர் பிரபலமானது. பிறகுதான் ஒரு முக்கியமான ஆளுமை டெஸ்லாவுக்கு அறிமுகமானார். ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் என்கிற முதலீட்டாளர்!

ஜார்ஜ் வெஸ்டிங் ஹவுஸ்ஸை பற்றி டெஸ்லா சொல்கையில்,

“புழக்கத்தில் இருந்த நேரடி மின்சார விநியோக முறையை எதிர்க்கும் என்னுடைய மாற்றும் மின்சார விநியோக அமைப்பை நம்பிய நபர் உலகத்திலேயே அவர் ஒருவர்தான். எங்களுக்கு எதிராக நிகழ்ந்த அநியாயத்தை தட்டிக் கேட்டு நான் வெற்றி காண வைத்ததும் அவர்தான்” என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

மின்சாரத்துறையில் ஒற்றை ஆளாக கோலோச்சிக் கொண்டிருந்த எடிசனின் நிறுவனத்துக்கு போட்டியாக வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் உருவானது. அவரின் நிறுவனம் அதிகமாக கிராமப்புறங்களைச் சென்றடைந்தது. குறைவான தூரத்தில் பல விநியோக மையங்கள் அமைக்க வேண்டியிருந்த நேரடி மின்சாரத்துக்கு நகரங்களை கொடுத்துவிட்டு மொத்தக் கிராமங்களுக்கும் மாற்று மின்சாரத்தை எடுத்து சென்றார் வெஸ்டிங்ஹவுஸ். அதிக செலவு செய்ய முடியாத, வசதி குறைந்த கிராமத்து மக்களுக்கு மாற்று மின்சாரம் வரப்பிரசாதமாக இருந்தது. எடிசனின் வருமானம் குறையத் தொடங்கியது. நஷ்டங்கள் ஏற்பட்டன.

விஞ்ஞானத்தை வணிகமாக பார்க்கும்போது ஏற்படுகிற அகங்காரம் எடிசனின் அடையாளமாக மாறியது. அதே விஞ்ஞானத்தை முன்னேற்றமாக பார்க்கும்போது ஏற்படுகிற இருட்டடிப்பு டெஸ்லாவின் அடையாளமாக மாறியது.

Also Read: டி.வி நிகழ்ச்சி மூலம் மாட்டிக்கொண்ட கொடூர கொலையாளி... ஜான் லிஸ்ட் சொன்ன காரணம் என்ன தெரியுமா?