உணர்வோசை
திருந்தக்கூடியவரா மோடி? வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட என்ன காரணம்? இனி என்ன நடக்கும்?
மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் எனச் சொல்லியிருக்கிறார் மோடி. நவம்பர் 26ஆம் தேதி வந்தால் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. ஒரு வருடத்தில் எந்த காலக்கட்டத்திலும் வராத ஞானம் மோடிக்கு எப்படி திடீரென வந்தது?
ஜூலை 21ஆம் தேதி.
பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள விவசாயிகள் தெருக்களுக்கு வந்தனர். தங்களின் ட்ராக்டர்களுடன் சென்று சாலைகளை மறித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அரசு கொண்டு வந்திருந்த மூன்று விவசாய மசோதாக்கள் வாபஸ் வாங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை மனுக்கள் கொண்டிருந்தது.
ஒன்றும் நடக்கவில்லை.
போராட்டங்கள் தொடர்ந்தன.
அதே ஜூலை மாதம் 21ஆம் தேதி இன்னொரு சம்பவமும் நடந்தது. USIBC என்கிற அமைப்பு, India Ideas என்கிற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தியது. முதலீட்டாளர்கள் மாநாடு! அதாவது இந்தியாவில் முதலீடு செய்யச்சொல்லி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் மாநாடு. அதில் இந்தியப் பிரதமர் சென்று பேசினார். பிரதமரின் பேச்சில் முக்கியக் கூறுகளாக இருந்தவை என்ன தெரியுமா?
”இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இந்த நேரமே மிகச் சரியான நேரம்”.
அதாவது மக்கள் கொரோனா பாதிப்பில் அல்லலுற்றுக் கொண்டிருந்த நேரம்.
“இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறை கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் மதிப்பை எட்டும்” என்றார் பிரதமர்.
இந்தியப் பொருட்களை ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் பதப்படுத்த வேண்டும்? பிரதமருக்கே வெளிச்சம்!
காப்பீடு, பாதுகாப்புத்துறை மட்டுமின்றி சுகாதாரம், விமானப் போக்குவரத்து என எல்லா துறைகளிலும் முதலீடுகளை ஈர்த்துக் கொண்டிருந்தார் பிரதமர். கிராமங்களில் இருக்கும் ஐம்பது கோடி பேருக்கும் மேற்பட்டோருக்கு இணைய வசதி இருப்பதாக அடித்துவிட்டார். இந்தியா வாய்ப்புகளுக்கான நிலம் என்றார். திறந்த மனங்களும் திறந்த சந்தையும் கொண்டிருக்கும் இந்தியா உலகுக்கு அளிக்க ஏராளமான விஷயங்கள் இருப்பதாகச் சொன்னார். வெளிப்படைத்தன்மையும் வாய்ப்புகளும் இந்தியாவில் இருப்பதாகக் கூறினார்.
வளைந்து நெளிந்து முதுகுத்தண்டே ஒடியுமளவுக்கு கூழைக் கும்பிடு போட்டு விளக்கி முதலாளிகளை ஈர்க்க விரும்பும் பிரதமருக்கு ஒரு வார்த்தை கூட விவசாய மசோதாக்களைப் பற்றி விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து விளக்க வேண்டும் எனத் தோன்றவே இல்லை.
ஜூலை 21ஆம் தேதி முதலாளிகளிடம் மோடி பேசிக் கொண்டிருந்த அக்கூட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பின் பெயர் USIBC. பெயரின் விரிவாக்கம் US INDIA BUSINESS COUNCIL. அமெரிக்க இந்தியா வர்த்தக சபை என மொழிபெயர்க்கலாம். அறிமுகப்படுத்தப்பட்ட விவசாய மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் அமர்ந்து ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்தது அமெரிக்க முதலாளிகளிடம்.
இவற்றுக்குள் அமெரிக்கா எங்கு வந்தது? நம்மூர் விவசாயத்தை அழிப்பதில் அமெரிக்காவுக்கு ஏன் இத்தனை ஆர்வம்?
அமெரிக்க நாட்டை சார்ந்த உலக வர்த்தக நிறுவனம் தன்னிடம் நிதி மற்றும் வணிக உதவி பெறும் நாடுகளுடன் பலவித ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒப்பந்தம் Agreement on Agriculture. விவசாயத்தின் மீதான உடன்படிக்கை!
அடிப்படையில் உலக வர்த்தக நிறுவனத்தை புரிந்துகொண்டால் மட்டுமே அது முன்வைத்த விவசாய உடன்படிக்கை நம்மை பாதிக்கும் விதத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
உலக வங்கியிடமிருந்து ஒரு நாடு வாங்கும் பணத்தை அந்நாடு திருப்பி அடைக்க வேண்டும். திருப்பி அடைக்க முடியவில்லை எனில், வருமானம் ஈட்டுவதற்கான வழியை அந்த நாட்டுக்கு சொல்லித்தர உருவாக்கப்பட்டதே உலக வர்த்தக நிறுவனம். தனக்கான பணத்தை மீட்டெடுக்க அந்நிறுவனம் சொல்லிக் கொடுக்கும் உத்திகள் நிச்சயமாக குறிப்பிட்ட அந்த நாட்டுக்கு எந்த பலனையும் தராது எனப் புரிந்து கொள்ளலாம். சரியாகச் சொல்வதெனில், அந்த நாட்டை மொத்தமாக அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்ய வைப்பதாகவே உலக வர்த்தக நிறுவனத்தின் உத்திகள் அமையும். அப்படிப்பட்ட ஒரு உத்திதான் விவசாய உடன்படிக்கை.
ஒரு நாட்டின் அரசு அதன் விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் கொடுக்கும் ஆதரவு, பாதுகாப்பு மற்றும் சலுகைகள் யாவும் உலக வர்த்தக நிறுவனம் திட்டமிடும் வணிகத்துக்கு தடையாக இருக்கின்றன. அவற்றை அரசு விலக்கினால்தான் அமெரிக்காவின் வணிகத்துக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கான சலுகைகளை ஒழிக்க வலியுறுத்துவதே Agreement on Agriculture என்றழைக்கப்படும் விவசாய உடன்படிக்கை. அந்த உடன்படிக்கைக்கு இந்தியாவும் உடன்பட்டிருக்கிறது.
அதனால்தான் கடந்த வருட செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டி அவசர அவசரமாக மசோதாக்களை சட்டங்களாக்கியது மோடி தலைமையிலான அரசு. பிறகுதான் டெல்லிக்கு செல்வதென விவசாயிகள் மத்திய மாநிலங்களில் முடிவெடுத்தனர். டெல்லி எல்லையில் தடுக்கப்பட்டும் ஓயாமல் அங்கேயே அமர்ந்து போராட்டங்களை தொடர்ந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கமான அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளடக்கிய பல சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு போராட்டங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தது. காவல்துறை ஒடுக்குமுறை, ஆரோக்கிய குறைபாடு, மன உளைச்சல் முதலிய பல காரணங்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். எனினும் போராட்டம் குலையவில்லை. இறுதியில் மோடியின் அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பாசாங்கான திருத்தங்களை முன்வைத்தது அரசு. விவசாயிகள் ஏற்கவில்லை. பேச்சுவார்த்தையின் எல்லாக் கட்டங்களும் தோற்றது. போராட்டம் தொடர்ந்தது.
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நேர்வழி எப்போதுமே உடன்படாத வழி. எனவே குடியரசு தினத்தன்று போலியாக ஒரு விவசாயிகள் கூட்டத்தை திரட்டி செங்கோட்டையை ஆக்கிரமித்தது. அச்சம்பவத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என கைகளை விரித்தது போராட்டங்களை நடத்திய விவசாயக் கூட்டமைப்பு. செங்கோட்டையை ஆக்கிரமித்த விவசாயக் குழுவின் தலைவர் பா.ஜ.க தலைவர்களுடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகின. பா.ஜ.க அசிங்கப்பட்டது. ஆனாலும் அடங்கவில்லை.
வரும் வருடத்தில் நடக்கவிருக்கும் பஞ்சாப், உத்தர பிரதேசம் முதலிய தேர்தல்கள் பா.ஜ.கவுக்கு முக்கியம். ஏற்கனவே சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்கள் பலவற்றில் மண்ணைக் கவ்வியிருக்கிறது. விவசாயப் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கும் சீக்கியர்களை எதிர்த்துக்கொண்டு பஞ்சாபில் எந்தக் கட்சியும் செயல்பட முடியாது. பஞ்சாபில் தனியாக நின்றும் பா.ஜ.க ஜெயிக்க முடியாது. கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம். வேளாண் சட்டங்கள் ஒரு பெரிய இடையூறு. அப்போதும் திருந்தவில்லை பா.ஜ.க.
விவசாயிகள் போராட்டங்களை நிறுத்த இன்னொரு வழியை நாடியது. விவசாயப் போராட்டக் குழுக்கள் இருந்த பல்வேறு இடங்களில் கார் நுழையும் பாணி உருவாக்கப்பட்டது. விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொல்கிற பாணி. இந்திய மக்களுக்கே உணவளிக்கும் விவசாயிகளை கொன்று அச்சுறுத்தும் வேலை. அப்போதும் விவசாயப் போராட்டங்கள் சிதறவில்லை. தொடர்ந்தது.
காவல்துறை ஒடுக்குமுறை, திருட்டுத்தனம், கடும் குளிர், மழை, உயிருக்கான அச்சுறுத்தல் என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தன விவசாயப் போராட்டங்கள். இந்தச் சூழலில்தான் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பிரதமர்.
அப்படியெல்லாம் திருந்தக் கூடியவரா மோடி? விவசாயிகளுக்காக அமெரிக்க எஜமானனை பகைத்துக் கொள்வாரா? இல்லை, பா.ஜ.கதான் திருந்திவிடுமா? ஆர்.எஸ்.எஸ் திருந்தத்தான் விடுமா?
2017ஆம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அறுதி பெரும்பான்மையில் ஜெயித்தது. அது ஜெயித்த சீட்டுகள் 325. அந்த வெற்றியும் நேரடி வெற்றியெல்லாம் இல்லை. உத்தர பிரதேசத்தின் பிற கட்சிகள் தேர்தல் செலவுகளுக்கு பணமில்லாத நிலையை அதற்கு முந்தைய வருடத்திலேயே திட்டமிட்டு மோடி உருவாக்கினார்.
நவம்பர் 8. பணமதிப்பு நீக்கம்!
பணமதிப்பு நீக்கத்தால் அதிக பணப்புழக்கம் கிடைத்த கட்சியும் வளர்ந்த கட்சியும் ஒன்றே ஒன்றுதான். பா.ஜ.க! உத்தர பிரதேசத்தின் பிற கட்சிகள் தேர்தல் செலவுகள் செய்யக் கூட பணமின்றி முடக்கி, தான் மட்டும் பணத்தை அள்ளி இறைத்து பா.ஜ.க பெற்ற வெற்றிதான் 325 சீட்டுகள். ஆகவே அதுவும் நேர்வழியில்லை.
இப்போதும் நவம்பர் மாதம்தான். உத்தர பிரதேச தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழல்!
கடந்த வாரத்தில் வெளியான C Survey கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, வரும் உத்தர பிரதேச தேர்தலில் பாஜக வென்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும். கடந்த தேர்தலில் பெற்ற சீட்டுகளில் 100 சீட்டுகளை பறிகொடுக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. பஞ்சாபில் சுத்தம். ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெறும் என்கிறது கருத்துக் கணிப்பு. பா.ஜ.கவுக்கு பூஜ்யம். அதிகபட்சம் போனால் ஒரு சீட் கிடைக்கும் என்கிறது கணிப்பு.
எனவே சொல்லுங்கள், பா.ஜ.க திருந்துமா? மோடி திருந்துவாரா? அமெரிக்காதான் விடுமா?
ஆதலால்தான் விவசாயச் சங்கங்கள் போராட்டங்கள் கைவிடப்படுமென இன்னும் அறிவிக்கவில்லை. மோடி வடிக்கும் கண்ணீருக்கு முதலையின் கண்ணீரைக் கூட நம்பிவிடலாம் என்பதே விவசாயிகளின் எண்ணம்.
இனி என்ன நடக்கலாம்?
மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப் போவதாக மோடியே அறிவித்துவிட்ட பின் ஏன் விவசாயிகள் இன்னும் போராடுகின்றனர் என குரல்கள் உருவாக்கப்படலாம். வட நாட்டு ஊடகங்கள் ஏற்கனவே இந்த அறிவிப்பை ‘விவசாயிகளுக்கு மோடி கொடுக்கும் அன்பளிப்பு’ என்றுதான் கூவிக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டுமென அழுத்தம் உருவாக்கப்படும். பிறகு நம்மூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல், ‘சிவப்புச் சட்டைகள் ஊடுருவிவிட்டன’ என்றோ ‘சமூக விரோதக் குழுக்களிடம் போராட்டம் இருக்கிறது’ என்றோ கருத்தை ஊடகங்கள் கொண்டு உருவாக்கி விட்டு, அரச அடக்குமுறை கட்டவிழ்க்கப்படலாம். விவசாயிகளை விரட்டியடிக்கலாம். பிறகு ஒரு நன்னாளில் நடக்கும் தேர்தலுக்காக கூட்டணிகள் உருவாகும். பா.ஜ.க வெற்றி பெறும். அதற்குப் பிறகு மீண்டும் விவசாயச் சட்டங்கள் ’கன்னத்தில் மரு வைத்துக் கொண்டு’ மாறுவேடத்தில் கொண்டு வரப் படலாம்.
ஏனெனில் சூட்சுமக் கயிறு அமெரிக்காவிலிருந்து நீளுகிறது.
ஆட்சியிலிருந்த கடந்த ஏழு வருடங்களில் பணமதிப்புநீக்க போராட்டங்களை பற்றி மோடி கவலைப்படவில்லை. காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களிலும் ‘ஒரு இஞ்ச் கூட பின்வாங்க மாட்டோம்’ என்கிற நிலைப்பாடுதான் அரசிடம் இருந்தது.
எந்த வகையிலும் மக்களின் நலனுக்கு இயங்காத அரசிடமிருந்து நிச்சயமாக நேர்மையான மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.
தேர்தலுக்காகவே மோடி இந்த ‘பல்டி’ அடித்திருந்தாலும் மாநிலங்கள் கடந்த விவசாயிகளின் போராட்டம் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
மோடியோ பா.ஜ.கவோ ஆர்.எஸ்.எஸ்ஸோ அமெரிக்காவோ மக்கள் ஒன்றுபடுகையில் ஒன்றுமே இல்லை என்பதே மீண்டும் உணர்த்தப்பட்டிருக்கிறது. விவசாயிகள் அதை உணர்த்தியிருக்கின்றனர்.
உணவுக்கு மட்டுமல்ல, பாசிச பா.ஜ.க எதிர்ப்புக்கும் உழவே தலை!
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!