உணர்வோசை
“அமெரிக்காவில் ஏழைகள் இல்லையா?” : நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுடனும் இனாமாக வரும் விஷயம் எது தெரியுமா?
நாம் அனைவரும் அண்ணாந்து பார்க்கும் நாடு அமெரிக்கா. அங்கு வாழும் மக்களின் வசதிகளும் வாழ்க்கைத்தரமும் நமக்கு பரவசம் கொடுப்பவை. அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றுதான் நமக்கு அமெரிக்காவை பற்றி சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்களுக்கே அமெரிக்காவை இப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் இத்தகைய வாழ்க்கை, அமெரிக்கர்கள் மொத்த பேருக்கும் கிடைக்கவில்லை என்பதே கள யதார்த்தம்.
அமெரிக்கக் கனவு வாழ்க்கை என கருதப்படும் வாழ்க்கை உண்மையில் வாய்ப்பது அமெரிக்காவின் 1% பேருக்கு மட்டும்தான். மீத 99% அந்த வாழ்க்கையை அடைந்துவிட முடியும் என்ற கற்பனையில் ஓடும் குதிரைகளே! யார் அந்த 1% பேர்? அமெரிக்காவின் பணக்காரர்கள்!
பணம் என்றால் கொஞ்சநஞ்சம் அல்ல. அமெரிக்காவின் 95% சொத்தையும் தன் வசம் வைத்திருக்கும் அளவுக்கு வசதி வாய்த்தவர்கள். அவர்கள் எல்லாருமே வால் ஸ்ட்ரீட் என்கிற தெருவில் நிறுவனங்கள் வைத்திருக்கும் தொழிலதிபர்கள். அந்த நிறுவனங்கள் அமெரிக்காவை மட்டுமின்றி உலகம் முழுக்க பரவி இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் மக்களை குதிரைகளாக்கி ஓட வைத்து சுரண்டிப் பிழைக்கும். நிறுவனங்களுக்கு ஏதுவான ஒப்பந்தங்களை பிற நாடுகளுடன் போட உதவுவதே அமெரிக்க அரசின் வேலை. சமயங்களில் பிற நாடுகளுடன் அரசின் தலையீடு இன்றி நேரடியாகவே வியாபாரம் பேசக்கூடிய வல்லமை நிறைந்தவர்கள்.
2007ஆம் ஆண்டில் வால்ஸ்ட்ரீட்டின் நிறுவனங்கள் கொடுத்த வீட்டுக்கடன்களை வசூலிக்க முடியவில்லை. மக்களிடம் பணம் இல்லை. ஜப்தி செய்த வீடுகளை மீண்டும் வாங்கவும் மக்களிடம் பணம் இல்லை. நிறுவனங்கள் திவாலாகின. பல்லாயிரக்கணக்கானோரை நிறுவனங்கள் வேலைகளில் இருந்து அனுப்பின. பணம் இல்லாதிருந்த சூழலில் சம்பளங்களும் இல்லாத சூழலுக்கு அமெரிக்கர்கள் தள்ளப்பட்டனர். 2008ஆம் ஆண்டில் அமெரிக்கா மிகப்பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்துக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொண்டது.
அமெரிக்காவின் ஒப்புதல் வாக்குமூலம் அமெரிக்கர்களுக்கு உணவுக்கு வழி சொல்லவில்லை. மக்களுக்கு அமெரிக்கக் கனவு என விதைக்கப்படும் வாழ்க்கையை பற்றிய உண்மைகள் முதன்முறையாகப் புரிந்தன. எந்த பொருளாக இருந்தாலும் அதை வாங்கும் ஆசை தூண்டிவிடப்படுகிறது. அந்த பொருளுக்கான தேவை இல்லையென்றாலும் வாங்க வேண்டுமென்கிற வெறி ஊட்டப்படுகிறது. அதை வாங்குவது மட்டுமே அந்தஸ்து என்ற சிந்தனை விதைக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு கார். காரென்றாலும் ஏதோவொரு காரெல்லாம் அல்ல. விலை உயர்ந்த, தரம் மிகுந்த கார்கள். அல்லது ஒரு செல்ஃபோன்! செல்ஃபோன்களின் உச்சமாக கருதப்படுவது ஆப்பிள் ஃபோன். விலை, நம்மின் பல மாதச் சம்பளம்! ஆப்பிள்ஃபோன் வாங்குவது சாத்தியம் இல்லை என்பதுதான் நிலை என்றாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை சமூகம் தருவதில்லை. எப்படியேனும் ஆப்பிள் ஃபோன் வாங்கிட வேண்டுமென்றுதான் ஓடுகிறோம்.
கையில் சாதாரணமான ஒரு ஃபோன் இருந்தாலும் ஆண்ட்ராய்டாக இருந்தாலும் அந்த ஃபோன் நமக்கு திருப்தி அளிப்பதில்லை. அந்த திருப்தியின்மையை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் பொருளாதாரம். அமெரிக்கக் கனவு!
நிறுவனங்கள் எந்த பொருளை உற்பத்தி செய்தாலும் அதை வாங்கும் வெறி தங்களுக்கு ஊட்டப்படுகிறது என்பதை அமெரிக்க மக்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். பொருட்களை வாங்கி வாங்கி தங்கள் பணம் எல்லாம் நிறுவனங்களுக்கு செல்வதை காணத் தொடங்கினர். நிறுவனங்களின் பேராசையே தங்களை ஏழைகளாக வைத்திருக்கிறது என்பதை அறிந்துகொண்டனர். தாங்கள் ஏழைகளாக இருக்கும் வரைதான் நிறுவனங்கள் பணத்தில் கொழிக்கும் என்பதையும் புரிந்துகொண்டார்கள். அமெரிக்க அரசுகள் உருவாவதற்கு தேவைப்படும் பணத்தையே நிறுவனங்கள்தான் கொடுக்கின்றன என்ற உண்மையும் வெளிவந்தது.
தங்களுக்கு தேவையான அரசுகளை மாத்திரமே நிறுவனங்களும் நிறுவன முதலாளிகளும் உருவாக்குகின்றன. அமெரிக்கக் கனவு போலியானது. அமெரிக்க வாழ்க்கை போற்றத்தக்கது அல்ல. அமெரிக்கப் பொருளாதாரம் உயர்ந்த பொருளாதாரம் அல்ல. நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது. அதை தேடி வேறெங்கும் ஓட வேண்டியதல்ல. எதையாவது வாங்கியே ஆக வேண்டிய கட்டாயமும் நம் எவருக்கும் இல்லை. எந்த நாட்டையும் போலவே அமெரிக்கா நாட்டிலும் ஏழ்மை என்பது அரசின் பிரச்சினைதான். ஏழையாய் இருப்பவனின் பிரச்சினை அல்ல. வீடு இல்லாமல் இருப்பது அரசின் தோல்வி. தெருவில் வாழ்பவனின் தோல்வி அல்ல. ஏழை என்பவன் அருவருப்பானவன் அல்ல. நம் எதிரியும் அல்ல. அவன் சமூகத்தின் விளைவு. நம் பேராசையின் விளைவு. விரும்பும் எல்லாவற்றையும் வாங்கி விட வேண்டுமென்ற அவசியமும் நமக்கு இல்லவே இல்லை.
இந்தியா, ஆப்பிரிக்கா மட்டுமல்ல; ஏழைகள் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள். நம்மைப் போலவே அவர்களும் ஒடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை ஒருமுறை சுற்றி பாருங்கள். அவற்றில் எத்தனை பொருட்களை நீங்கள் அன்றாடம் பயன்படுத்துகிறீர்கள்? நீங்கள் பயன்படுத்தாத பொருட்கள் உங்களுக்கு சொல்லும் சேதி ஒன்றே ஒன்றுதான். அந்தப் பொருட்களை நீங்கள் வாங்கவில்லை. அந்த பொருட்கள்தான் உங்களை வாங்கியிருக்கின்றன. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் உங்களின் ஏழ்மையைத்தான் வாங்குகிறீர்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!