உணர்வோசை
பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடினால் ஒரு சிலருக்கு மட்டும் ஏன் எரிகிறது ?
பெரியாரின் பிறந்த தினம் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும்பாலான தரப்புகளால் வரவேற்கப்பட்டாலும் ஒரு சில தரப்புகள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். அவர்கள் யார் தெரியுமா?
ஒரு வரலாற்றுச் சம்பவம்:
1605ம் ஆண்டு மே மாதம். போர்த்துக்கீசிய காலனியாக இருந்த கோவாவுக்கு ஒரு குழு வந்திறங்கியது. அனைவரும் மிஷனரிகள். வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களிடம் சேவையினூடாக கிறித்துவ மதத்தை பரப்பவென வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் ராபர்ட்டோ நோபிலி.
கடலோரங்களில் வாழ்ந்த பரதவர்கள் மத்தியில் மிஷனரி பணிகளை செய்தார் நோபிலி. ஏற்கனவே பரதவர்கள் மத்தியில் கிறித்துவ மதம் பிரபலமாக இருந்ததால் நோபிலியின் பணிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அச்சமயத்தில் நோபிலிக்கு ஒரு முக்கியமான உத்தரவு வந்தது. மதுரைக்கு செல்லச்சொல்லும் உத்தரவு!
மதுரையில் ஏற்கனவே கொன்சாலோ ஃபெர்னாண்டஸ் என்கிற மிஷனரி இயங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு 54 வயது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக மதுரையில் இயங்கிக் கொண்டிருந்தார். சிறு அளவிலான தேவாலயம் ஒன்றை அமைத்திருந்தார். சிறுவர்களுக்கு கல்வி போதித்தார். ஒரு சிறு மருந்தகத்தையும் அமைத்திருந்தார். ஆனால் ஒரு பிரச்சினை! அவர் இயங்கிய 11 வருடங்களில் ஒருவர் கூட கிறித்துவ மதத்தை தழுவவில்லை. கொன்சாலோவின் போதகத்துக்கு வந்தவர்கள் போர்த்துக்கீசியர்களாகவும் பரதவர்காளவும் மட்டுமே இருந்தனர். அவருக்கு உதவதான் நோபிலி அழைக்கப்பட்டிருந்தார்.
நோபிலிக்கும் முதலில் காரணம் புரியவில்லை. கொன்சாலஸ்ஸின் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருந்தவர் நோபிலிக்கு இந்தியச் சமூகத்தை பற்றிய பேருண்மையை உரைத்தார். சாதிய முறை! இந்தியச் சமூகத்தின் ஆதாரக் கல்லாக சாதிய முறை இருப்பதை நோபிலிக்கு தெளிவாக்கினார் தலைமை ஆசிரியர்.
பிறகு நடந்ததுதான் கொடுமை.
இந்திய சாதிச்சூழலை ஏற்காமல் கிறித்துவத்தை பரப்ப முடியாது என்ற முடிவுக்கு வந்தார் நோபிலி. போர்த்துக்கீசியர்களிடமிருந்து தூர இருக்கத் தொடங்கினார். தினமும் குளித்தார். சப்பணமிட்டு அமர்ந்தார். தன்னை ‘சன்னியாசி’ என அழைத்துக் கொண்டார். அசைவம் மறுத்தார். காவியாடை உடுத்திக் கொண்டார்.
நோபிலியின் மாற்றத்தில் கொன்சாலோவுக்கு உடன்பாடில்லை. கடுமையாக எதிர்த்தார். கிறித்துவ மரபையே நோபிலி சிதைப்பதாக குற்றம்சாட்டினார். தலைமைகளுக்கு புகார் அளித்தார்.
மிஷனரிகள் வாழ்ந்த இடத்திலிருந்து நோபிலி வெளியேறினார். பிராமணர்கள் வசிக்கும் பகுதியில் குடியேறினார். தலையை மொட்டையடித்து சிறு குடுமி மட்டும் வைத்துக் கொண்டார். வெற்றிகரமாக ஒரு பிராமண ஆசிரியரை நட்பாக்கிக் கொண்டார். பிராமண ஆசிரியரின் பெயர் சிவதர்மர். நோபிலி சமஸ்கிருதம் கற்க சிவதர்மர் உதவினார். சமஸ்கிருதம் பயின்ற முதல் ஐரோப்பியரானார் நோபிலி. பூணூல் தரித்தார்.
நட்புறவு தொடங்கியபோது நோபிலியை தங்களின் மதத்துக்கு மாற்ற சிவதர்மர் நினைத்திருந்தார். ஆனால் அவரை நோபிலி கிறித்துவ மதம் தழுவ வைத்தார்.
ஒரு பிரச்சினை!
ஜெபத்தின்போது பிற சாதிகளுடன் இணைந்து சிவதர்மர் ஜெபிக்க மாட்டார். என்ன செய்வது?
தேவாலயத்தை பிராமணர்களுக்கு மட்டுமான தேவாலயமாக ஆக்கினார் நோபிலி.
இந்தியச் சமூகத்தில் கிறித்துவம் பரவ வேண்டுமெனில் சாதியை ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் நிவர்த்தி செய்யப்பட்டது. சாதியே அறியாத கிறித்துவ மதத்துக்குள் சாதி புகுத்தப்பட்டது.
தென்னிந்தியாவில் கிறித்துவம் பரப்ப வந்த மிஷனரிகளுக்கு மத்தியில் நோபிலியின் நடத்தை சர்ச்சையானது. கோவாவில் ஒரு மாநாட்டை போப்பாண்டவரே கூட்டும் கட்டத்தை நிலை எட்டியது. நோபிலி கண்டிக்கப்பட்டு மிஷனரி பணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஒரு கிறித்துவரையும் சாதிமயப்படுத்தும் நிலையில்தான் இந்தியச் சமூகம் இருந்தது. அத்தகைய சூழலில் சமூகநீதிக்கான சாத்தியம் என்னவாக இருக்க முடியும்?
சமூகநீதி என்பது என்ன?
அமெரிக்காவில் பிரபலமாக இருந்த அரசியல் தத்துவவியலாளர் ஜான் ரால்ஸ். அவர் 1971ம் ஆண்டில் நீதிக்கான கோட்பாடு என்ற பொருள்பட ‘Theory of Justice' என்ற நூலை வெளியிட்டார். அந்த நூலின் அடிப்படையே சமூகநீதி என்னவென வரையறுப்பதுதான். ஜான் ரால்ஸ் சமூகநீதியை பின்வருமாறு விளக்குகிறார்:
‘ஒரு சமூகம் இருக்கிறது. தங்களின் வர்க்க நிலையோ சமூக நிலையோ எதுவும் அச்சமூகத்தின் மக்களுக்கு தெரியாது. கிடையாது. அம்மக்களுக்கு நன்மை எது தீமை எது என்று கூட தெரியாது. அத்தகைய சமூகத்தில் உருவாக்கப்படும் நீதியானது, அறியாமை என்கிற திரைக்கு பின்னாலிருந்து உருவாக்கப்படும். அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும்’.
எவரைப் பற்றியும் எதுவும் தெரியாத ஒரு சமூகத்தில் உருவாக்கப்படும் சமூகநீதி அனைவருக்குமான நீதியாக இருக்கும் என்கிறார் ஜான் ரால்ஸ். அதாவது எல்லாருடைய சமூக, அரசியல், பொருளாதார நிலைகளும் ஒன்றாகவும் சமமாகவும் இருக்கும் சமூகத்தில் உருவாக்கப்படும் சமூகநீதி, நியாயமாக இருக்கும் என்கிறார்.
அடுத்ததாக அவர் சொல்வதுதான் முக்கியமான விஷயம். இப்படி எல்லாரும் சமமாக ஒரே தன்மையில் இருக்கும் சமூகம் ஒன்று இல்லவே இல்லை என்கிறார்.
அசமத்துவம் நிலவும் சமூகத்தில் சமூகநீதி என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கு வழிகூறுகிறார் ஜான் ரால்ஸ்.
“வரலாற்றுப்பூர்வமாக குறைந்த வாய்ப்புகளையே கொண்டிருக்கும் மக்கட்பிரிவுக்கு மிக அதிகமான சலுகை கொடுக்கப்பட வேண்டும். வருமானம், அதிகாரம், பதவிகள் என எல்லா விதங்களிலும் சமவாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.”
அமெரிக்காவின் சமூகநீதி உணர்வுக்கு வயது ஐம்பது வருடங்கள்தான். தமிழரின் சமுகநீதி உணர்வுக்கு வயது ஒரு நூற்றாண்டுக்கும் மேல். அந்த உணர்வுக்கான பெயர் பெரியார்.
சாதி என்கிற திரையை கொண்டு சாதிய சமூகங்களாக வடிகட்டப்பட்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கு, பெரியாரின் கைத்தடிதான் முன்னேற்றத்துக்கான பற்றுக்கோல். அறிவுக்கான வெளிச்சம். சமத்துவத்துக்கான பாதை!
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!