உணர்வோசை
“அண்ணா... நாட்டுக்கே அண்ணன்” : தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றைத் திருத்தி எழுதிய பேரறிஞர்!
பேரறிஞர் அண்ணா. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றியவர். தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வதற்கான அரசியல் பாதையை உருவாக்கியவர்.
தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர். மக்களின் மனதில் ஆதிக்கம் செலுத்தி, ஆதிக்கவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றியவர் பேரறிஞர் அண்ணா.
சாமானிய மனிதனாகப் பிறந்து, சாதனை மனிதராக இறந்த பேரறிஞரின் வாழ்க்கையில் எத்தனை எத்தனை தியாகங்கள்… எத்தனை எத்தனை சிறைவாசங்கள்… எத்தனை எத்தனை போர்க்களங்கள்.
சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை போராளி பேரறிஞர் அண்ணா. அவரது மேடைப்பேச்சு, ஆதிக்கத்திற்கு எதிரான நாடக காட்சிகள், சினிமா வசனங்கள், அவர் வெளியிட்ட பத்திரிகைகள், அவர் எழுதிய நூல்கள் என பேரறிஞர் அண்ணாவின் தனிப்பெரும் ஆளுமைத்திறன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பட்டது. அது தமிழர்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டியது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பேரறிஞர் அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பை முடித்தார். மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து சராசரி மாணவரைப் போலவே பள்ளிப்படிப்பை முடித்தவருக்கு பச்சையப்பன் கல்லூரி திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஆங்கிலப் பேராசிரியரும், நீதிக்கட்சியின் தீவிர செயல்பாட்டாருமான வரதராஜன், பேராசிரியர் வேங்கடசாமி ஆகியோர் பேரறிஞர் அண்ணாவை அரசியல்மயப்படுத்தினர்.
மோசூர் கந்தசாமி முதலியார், மணி திருநாவுக்கரசு முதலியார் ஆகிய தமிழ்ப் பேராசிரியர்கள்தான் அண்ணாவுக்கு சங்கத் தமிழைக் கற்பித்தனர்.
பட்டப்படிப்பை படிக்க முடியாத சூழலில் வறுமையில் தவித்த பேரறிஞர் அண்ணாவை, பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்த சின்னத்தம்பிப் பிள்ளை, பி.ஏ. ஹானர்ஸ் படிக்கும்படி வலியுறுத்தினார். கல்வி உதவித்தொகையையையும், பாடநூல்களையும் வாங்கித் தந்தார். இந்தச் சூழலில், தனது 21 வயதில் ராணி அம்மையாரை மணம் முடித்தார் பேரறிஞர் அண்ணா.
மண வாழ்க்கையில் இருந்தாலும், கல்லூரியில் தனது படிப்புக்கு அது எந்தவித இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் அண்ணா. தீவிரமாக படித்தார். நூலகங்களில் தன் நேரத்தை செலவிட்டார். பேச்சுப்போட்டிகளில் வென்றார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றார்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த அவர், 1931ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாண்டுகள் கழித்து அவர் கல்லூரி பொருளாதாரத் துறை மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். படித்து முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக 6 மாதம் பணி செய்தார். பிறகு சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். பிராமணர் அல்லாதோர் இயக்கமான நீதிக்கட்சி பேரறிஞர் அண்ணாவை ஈர்த்தது. நீதிக்கட்சி தான் அவர் அரசியல் வாழ்விற்கு தொடக்கம். அந்த நேரத்தில்தான் சமூக பாகுபாடுகளையும், சாதிக்கொடுமைகளையும், ஆதிக்க சாதி அதிகாரத்தையும் எதிர்த்து தீவிரமாக செயல்பட்ட தந்தை பெரியாரை பேரறிஞர் அண்ணா தன் தலைவராக ஏற்றுக் கொண்டார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சந்திப்பு தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சந்திப்பாக அமைந்தது. படித்துவிட்டு பணிக்குச் சென்று தன் வேலை, தன் குடும்பம், தன் வாழ்வு என்று சுயநலநோக்கோடு சிந்திக்காமல், படித்துமுடித்துவிட்டு பொதுவாழ்விற்கு வருவேன் என்று பெரியாரைப் பார்த்துச் சொல்கிறார் பேரறிஞர்.
அன்றுமுதல் பேரறிஞருக்கு பெரியார்தான் தலைவர். 1937 ஆம் ஆண்டு குடியரசு மற்றும் விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியரானார் அண்ணா. அப்போது அவருக்கு வயது 28. அவர் எழுதிய கட்டுரைகளில் வார்த்தைகளினால் தமிழர்களின் நெஞ்சங்களை உலுக்கினார் அவர். தந்தை பெரியாரே வியந்தார். துறையூரில் நடந்த சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமைதாங்கும் பொறுப்பையும் அவருக்கு வழங்கினார் தந்தை பெரியார்.
இந்தச் சூழலில், சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்தி கற்பது கட்டாயம் என்று ஆக்கினார். இதை எதிர்த்து பெரியார் போராட்டம் அறிவித்தார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்டவர்கள் 1938ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பேரறிஞர் அண்ணாவுக்கு 4 மாத சிறைவாசம் விதிக்கப்பட்டது. தந்தை பெரியாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இதன்பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. ஆதிக்கத்தை எதிர்த்து தொடர்ச்சியான செயல்பாடுகளை சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் முன்னெடுத்தன. இதன்நீட்சியாக திராவிடர் கழகம் பிறந்தது.
தமிழர்களின் சுதந்திர நல்வாழ்விற்காக, ஆதிக்க சக்திகளிடம் இருந்து விடுபட, திராவிடநாடு கோரிக்கை எழுந்தது.
கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூல்கள் திராவிடர்கள் மீது 'ஆரியர்கள்', வட இந்தியர்களின் ஆதிக்கம் செலுத்த வழி செய்வதாகவும், அவை அறிவுக்குப் புறம்பாக இருப்பதாகவும் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
ஆனால், மொழி நடை, அழகிய சொற்கள் ஆகியவற்றைத் தேடுகிறவர்கள் கம்ப ராமாயணம், திருவாசகம் ஆகியவற்றைப் படிக்கலாம் என்று கூறினார் பேரறிஞர்அண்ணா.
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று குறிப்பிட்டார். இது அண்ணாவின் நல்லெண்ண அரசியலுக்கு எடுத்துக்காட்டு.
எதிரிகளின் நேர்மறைப் பண்பை ஏற்கவேண்டும் என்பது, பேரறிஞர் அண்ணா நமக்கு விட்டுச் சென்ற அற்புத சிந்தனை.
ஆரிய மாயை, நீதி தேவன் மயக்கம், கம்பரசம் போன்ற சிறு நூல்களை எளிய நடையில் எழுதி வெளியிட்டு தமிழர்களை சிந்திக்கச் செய்தார் அவர்.
1947 ஆம் ஆண்டு இந்திய தேசம், ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டது. இந்த விடுதலையை ஒரு சுதந்திர நாட்டுக்கான, ஒரு ஜனநாயக அரசியலுக்கான நல்வாய்ப்பு என்றார் பேரறிஞர் அண்ணா.
நாட்டின் விடுதலைக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறினார் பேரறிஞர் அண்ணா.
அவரும், முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர், பேராசிரியர் உள்ளிட்டவர்களும் 1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏற்படுத்தினர். அதன் பொதுச் செயலாளராக பேரறிஞர் அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை, ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழக தொடக்கவிழாவில் ஆற்றிய பேருரை, அப்போது பெய்துக்கொண்டிருந்த கனமழையையும் நிறுத்தியது.
இதோ… பேரறிஞர் அண்ணா பேசுகிறார்…
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே சமதர்மக் கொள்கை, அரசியலில் வடநாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.
என்று பேசினார் பேரறிஞர் அண்ணா.
1957ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்று 15 பேரை சட்டமன்றத்திற்குள் அனுப்பி வைத்தது. காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா வெற்றி பெற்றார். இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.
1962-ம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. ஆனால், பேரறிஞர் அண்ணா தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்களால் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் இந்திய தேசமே எதிர்பார்க்காத புதிய குரல் ஒன்று ஒலித்தது. ஆம்.. பேரறிஞர் அண்ணாவின் குரல் அந்த சபையை திடுக்கிட வைத்தது.
அவருடைய சிந்தனைகள் சிலரை எதிர்க்க வைத்தது. சிலரை யோசிக்க வைத்தது. சிலரை ஆதரிக்கச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா இப்படி பேசுகிறார்…
நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிரானவன் அல்ல.
ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிட்டது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்.
என்னை திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று அழைத்துக் கொள்ளும்போது திராவிடனிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில திடமான, வித்தியாசமான கருத்து உள்ளது என நம்புகிறேன். சுயநிர்ணய உரிமையே எங்களின் தேவை.
இவ்வாறு முழங்கினார் பேரறிஞர் அண்ணா. நாடாளுமன்றத்திற்கு தமிழன் யாரென்று புரியவைத்த தருணம் அது.
நாடாளுமன்றத்திற்கு முன்னதாகவே தமிழ்த்திரையுலகத்தை தன்னுடைய அடுக்குமொழி வசனங்களால் திடுக்கிட வைத்தவர் பேரறிஞர் அண்ணா. நல்லதம்பி, வேலைக்காரி ஆகிய திரைப்படங்களில் பேரறிஞரின் வசனங்கள் சாமானிய மனிதர்களிடம் எழுச்சியை உருவாக்கியது.
இதுமட்டுமல்லாமல், திராவிட நாடு பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் தமிழில் புதிய நடைமொழியை உருவாக்கின. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நேர்த்தியான, சுயமரியாதைச் சிந்தனைகள் தோன்றுவதற்கு அவரது எழுத்துக்கள் காரணமாக அமைந்தன.
மேடைப் பேச்சில் செந்தமிழைக் கொண்டுவந்த பேரறிஞர் அண்ணாவின் திராவிட அரசியல், ஒரு ஜனநாயக அரசியலுக்கு வித்திட்டது.
பழமையான செம்மொழியை மீட்டெடுத்து அதை புதிய அரசியலுக்குப் பயன்படுத்தும் அசகாய சூரத்தனத்தை திராவிட அரசியலுக்கு கொடையாக அளித்தார் பேரறிஞர் அண்ணா.
திராவிட நாடு போன்ற கொள்கைகளை பிரிவினையை தூண்டுகின்றன என்று கூறி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடை விதிக்க அப்போதைய ஒன்றிய அரசு, முனைந்த நேரத்தில், தி.மு.க பொதுக்குழு தேர்தல் பாதைதான் தமிழர்களின் முன்னேற்றத்திற்கான பாதை என்பதை உணர்ந்து திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகிறது.
திராவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக கைவிட்டு தேர்தலில் பங்கேற்கவேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கி மிக நீண்ட உரையை பேரறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிவைத்து பொதுக்குழுவில் வாசித்தார். இந்த தமிழ் உரையை 'எண்ணித் துணிக கருமம்' என்ற பெயரில் முத்தமிழறிஞர் கலைஞர், தனி நூலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
திராவிட நாடு கோரிக்கை மாநில சுயாட்சி என்ற பெயரில் முழக்கம் பெற்றது. மாநிலங்களுக்கு கூடுதல் உரிமை கோரினார் பேரறிஞர் அண்ணா. மத்தியிலே கூட்டாட்சி… மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை வித்திட்டார்.
1965 ஆம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கடும் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபட்டது. தமிழர் நலனே குறிக்கோளாக கொண்ட தி.மு.கழகத்தினர் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டு தமிழ்நாட்டோர் கொதித்தனர். மேலும், இந்தி திணிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை தமிழ்நாட்டு மக்களைப் பாதித்தது.
இதன்விளைவு 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக ஆனார்கள்.
பேரறிஞர் அண்ணாவும், அமைச்சர் பெருமக்களும் 'உளமாற' உறுதி கூறி பதவி ஏற்றனர்.
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது, புரோகிதர்கள் இல்லாமல் நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டது.
சிக்கன நடவடிக்கையாக அமைச்சர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் உள்ள தமது எளிமையான வீட்டிலேயே வாழ்ந்தார் பேரறிஞர் அண்ணா.
அவரது ஆட்சியில் தான், இரண்டு முறை உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டன.
1968 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்துக்கு சென்று அங்கு உரையாற்றினார் அண்ணா. அதே ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் அண்ணாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. அதே ஆண்டு செப்டம்பரில் அண்ணாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அண்ணா செப்டம்பர் 10ம் தேதி அமெரிக்காவுக்கு கிளம்பினார். அவரை நேரில் வந்து கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார் பெரியார்.
சிகிச்சை முடிந்து அண்ணா சென்னை திரும்பிய பிறகும் அவரது உடல்நிலை மிகவும் பலவீனமாகவே இருந்தது. 1969 ஜனவரி இறுதியில் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிப்ரவரி 3-ஆம் தேதி அதிகாலை 12.20க்கு பேரறிஞர் அண்ணா சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.
1909 செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு பிறந்தவர்தான் அண்ணா.
ஆனால், 1969 பிப்ரவரி 3-ம் தேதி பேரறிஞர் அண்ணா இறந்தபோது தமிழுலகம் கதறியது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை கோடி பேர் பங்கேற்று, அது கின்னஸ் சாதனையாக மாறியது என்பது வரலாறு.
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய கவிதை தமிழ்கூறும் நல்லுலகின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர்வரக் காரணமான பேரறிஞர் அண்ணா, தமிழர்களின் முகவரி ஆனார். பேரறிஞர் அண்ணா என்பது ஒரு பண்பாடு, அவர் ஒரு தன்னிகரில்லா இலக்கியம், அவர் தமிழர்களின் குறியீடு.
அவர் அடியொற்றி வந்த திராவிட ஆட்சிகள் அண்ணாவின் புகழைப்பாடின. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளுக்கு சாட்சியாக அமைந்தது. தமிழகத்தின் சாதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி அண்ணாவின் ஆட்சியை பிரதிபலிக்கும் ஆட்சியாக விளங்கி வருகிறது.
மக்களிடம் செல்… மக்களோடு வாழ்… மக்களிடம் இருந்து கற்றுக் கொள்… மக்கள் தருவதைப் பெற்றுக்கொள்… மக்களை மேம்படுத்து என்னும் பேரறிஞர் அண்ணாவின் அற்புத வாக்கியத்தை நெஞ்சில் சுமந்து, மக்களை சந்தித்து… மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு…மக்களோடு மக்களாக வாழ்ந்து… மக்கள் தந்த இமாலய வெற்றியை பெற்றுக் கொண்ட திராவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களை மேம்படுத்த முத்தான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இன்றும் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி நடந்து வருகிறது.
பேரறிஞர் அண்ணா என்ற வரலாறு தமிழர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறது. அவரது பெயரில் பல்கலைக்கழகம், விமான நிலையம், சாலை, நூலகங்கள், அரசின் திட்டங்கள் என தமிழ்நாட்டில் எங்கெங்கும் வியாபித்திருக்கிறார் அறிஞர் அண்ணா.
அவர் என்றும் தமிழர்களின் இதயங்களில் வாழ்வார்.
ஓங்குக பேரறிஞர் அண்ணாவின் புகழ்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!