உணர்வோசை

“1000 ஆண்டுச் சாதனை.. அழியாப் பெயர் பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் கட்டுரை!

“புரட்சி என்பது பெரியதாகத்தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். என்னைப் போலக் குள்ளமாகவும் இருக்கும்’’ என்று பேரறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார்!

புரட்சி என்பது பெரும் முழக்கம் கொண்டதாகவே இதுவரை இருந்திருக்கிறது. முதன்முதலாக அது ‘அமைதி’யாகவே நடந்திருக்கிறது. ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராய் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துகாட்டி இருக்கும் “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’’ என்ற புரட்சி சத்தமில்லாமல் செய்யப்பட்டுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சமயச் சான்றோர்களும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவாளர்களும் ஒருசேரப் பாராட்டும் புரட்சிகரச் செய்கை இது. காவியும் கருப்பும் ஒன்று சேர்ந்து பச்சைக்கொடி காட்டி இருக்கும் பார்போற்றும் புரட்சி இது!

‘யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று சொல்லப்பட்ட மந்திரத்தை கோபுரத்தின் மீதேறிச் சொன்னார் இராமானுசர். ஆயிரம் ஆண்டுக்கு முன்னால். இந்திய வைதிகத் தத்துவ மரபுக்கு மூவராகச் சொல்லப்பட்ட ஆதிசங்கரர் - மத்வர் - வரிசையில் மூன்றாமவர் இராமானுசர்.

‘யாருக்கும் சொல்லக்கூடாத மந்திரத்தை இப்படி கோபுரத்தின் மீதேறிச் சொன்னால் நரகத்துக்குப் போவாய்’ என்று சபித்தார் திருக்கோட்டியூர் நம்பி. ‘எல்லோரும் முக்தி அடைய நான் நரகம் போவது பாக்கியமே’ என்று சொன்னதால் இராமானுசர், ‘புரட்சித் துறவி’யாக இன்று வரை அடையாளம் காட்டப்படுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரும் ஆயிரம் ஆண்டுகள் நின்று நிலைக்கத்தான் போகிறது; பெரியகோவில் இருக்கும் வரை இராசராசன் பேர் இருக்கும் என்பதைப் போல!

எல்லா இடங்களிலும் விரட்ட முயற்சிக்கப்படும் ஜாதி (சாதி என்று எழுதி அதனை தமிழ்ப்படுத்தக் கூடாது என்கிறார் பெரியார்!) கடைசியாக கர்ப்பக்கிரகத்துக்குள் போய் ஒளிந்துகொண்டது. அங்கும் விரட்ட எடுத்த அஸ்திரம்தான், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்பதாகும். சுயமரியாதை இயக்க காலத்தின் முதல் போராட்டமே அதுதான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜே.என்.இராமநாதனும், திருவண்ணாமலைக் கோவிலில் ஜே.எஸ்.கண்ணப்பரும், திருச்சி - மயிலாடுதுறை -திருவானைக்காவல் கோவில்களில் கி.ஆ.பெ.விசுவநாதனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் என்.தண்டபாணியும், ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் குத்தூசி குருசாமி ஏற்பாட்டில் மூவரும் நுழைந்தது என்பது 1927-30ஆகிய ஆண்டுகளில் ஆகும். சுயமரியாதை இயக்கத்தவர் கூட்டம் நடந்தால் கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ எனப் பயந்து கோவில்களைப் பூட்டியகாலம் அது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் பல ஊர்களில் நடந்தது. இதுதான் பின்னர் ஆலய நுழைவு மசோதா ஆனது.

1970 ஜனவரி மாதம் தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்தார்கள். ஆலயங்களில் சாதி பேதம் இருக்கக் கூடாது, அனைவரும் கர்ப்பக்கிரகம் வரை செல்லவேண்டும், கர்ப்பக்கிரகம் வரை சென்று வழிபாடு செய்வதற்கு சாதி ஒரு காரணமாக இருக்கக்கூடாது. அந்த அடிப்படையில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்தப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டார். “அப்படி ஒரு கிளர்ச்சி நடத்தாமலேயே அவரது எண்ணத்தை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்’’ என்று அறிவித்தார். ‘அர்ச்சகர்களுக்கென சில சிறப்புத் தகுதிகள் வேண்டும், பயிற்சிகள் வேண்டும், அப்படி பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகர் ஆகலாம், என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். முதல்வர் கலைஞரின் அறிவிப்பை ஏற்ற தந்தை பெரியார் தனது போராட்டத்தைத் தள்ளி வைத்தார்.

2.12.1970 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அர்ச்சகர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. “இந்து சமய அறக்கட்டளை திருத்த மசோதா’’ என்று இதற்குப்பெயர். இந்தச் சட்டத்தை ஆதரித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சட்டமேலவையில் பேசினார். ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கில் 14.3.1972 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. “சட்டம் செல்லுபடியானதே!’’ என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்திருத்தத்துக்காக அன்றைய ஒன்றிய அரசிடம் பலமுறை முதல்வர் கலைஞர் வலியுறுத்தினார்.

1973 டிசம்பர் 8,9 ஆகிய நாட்களில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். இதற்கிடையே டிசம்பர் 24ஆம் தேதி அன்று தந்தை பெரியார் மறைந்தார்கள். “பெரியாரின் எவ்வளவோ ஆசைகளை நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாடவைக்க முடியவில்லை. பெரியார் அவர்களது நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமலேயே புதைத்திருக்கிறோம்’’ என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அப்போது பேசினார்கள். “அரசியல்சட்டத்தைத் திருத்த வேண்டும்’’ என்ற தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முதல்வர் கலைஞர்.

2006இல் மீண்டும் தி.மு.க ஆட்சி. 16.5.2006 - அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “உரிய பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்துச் சாதியினரும் இந்து சமய திருக்கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையைப் பிறப்பிப்பது என அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கிறது. இது தந்தை பெரியாரின் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணி என அமைச்சரவை கருதுகிறது.’’ என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் நீதிமன்றத்தில் தடை. இறுதித் தீர்ப்பு 16.12.2015 உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சட்டத்துக்குத் தடை இல்லை. சடங்கு முறையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டது.

சடங்கு, சம்பிரதாயம் எதையும் மாற்றவில்லை. உரிய பயிற்சி பெற்றவர்கள் சடங்கு, சம்பிரதாயம் செய்யலாம் என்பதுதான் இதன் உள்ளடக்கமே. அத்தகைய தகுதியும், திறமையும் பெற்றவர்களைத்தான் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாதியால் மூடப்பட்ட கதவை, சட்டத்தால் திறந்திருக்கிறார் முதலமைச்சர். அதுவும் சத்தமில்லாமல்!

புரட்சி சில நேரங்களில் இப்படித்தான் அமைதியாகவும் வரும். இந்த அமைதிப் புரட்சி ஆயிரம் ஆண்டுகளுக்குப் பேசப்படும். ‘அன்றொரு நாள் கோபுரத்தில் மீதேறி’ என்று சொல்வதைப் போல... ‘கோட்டையின் மீதேறி மு.க.ஸ்டாலின் சட்டம் போட்டார்' என்று சொல்லப்படும்.

அரசியலில் முதலமைச்சர்கள் வரலாம். போகலாம். சமூகத்தில் மாற்றம் செய்பவர்களே, தனித்து பிரித்தெடுத்து வரிசைப்படுத்தப்படுவார்கள். அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேர், போய்ச் சேர்ந்துவிட்டது. என்றும் அழியாப் பேர் இது! ஆயிரமாண்டுப் பேர் இது!

Also Read: "சமூக நீதியை சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்; இது உண்மையில்லை” : தெளிவுபடுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!