உணர்வோசை
முப்பதே நாளில் முழு முதலமைச்சர்; இனி எந்த அலையையும் மு.க.ஸ்டாலின் என்ற மலை தடுக்கும்! - ப.திருமாவேலன்
வாரிசு அரசியல் என்று வசை பாடியவர்கள்தான் இப்போதும் வாயை அதிகமாகத் திறக்கிறார்கள்!
‘சூப்பரா பண்றாருப்பா' என்று! கழகம் என்றால் கருகிய தீச்சட்டியைப் போல முகத்தை மாற்றிக் கொண்டவர்கள்தான், அதிகமாகப் பொங்குகிறார்கள்.‘இந்த மாதிரியெல்லாம் செயல்படுவார்னு நினைக்கவே இல்லை' என்கிறார்கள்! அவருள் இருக்கும் தலைமைக்கான தகுதியை அளவிடத் தெரியாமல் கண்ணை மூடிக் கொண்டு இதுவரை இருந்தவர்கள்தான், ‘இவருக்குள் இப்படி ஒருத்தர் இருக்கார்னு தெரியாம போச்சே' என்று தங்களுக்குள் ரகசியமாகச் சொல்லிக் கொள்கிறார்கள்!
‘நம்மை பேசவிட்டு, அவர் கவனிக்கிறார். நாம் பேசுவதில் அவசியமான சந்தேகங்களைக் கேட்கிறார். வெறும் உத்தரவுகளை மட்டும் போடுபவராக அவர் இல்லை' என்று அதிகாரிகள் சிலருக்குள் பரிசோதனைப் பேச்சுக்கள் போயிருக்கிறது. அரசியல்வாதிகளைப் பார்த்தாலே வெறுத்துப் பேசும் சில இளைய தலைமுறைகூட, ‘ஒரு நாள் முதல்வர் மாதிரியே தினமும் அதிரடி காட்டுகிறார்' என்று சினிமா பாணியில் வாழ்த்துப் பாடுகிறார்கள்! ஏன் அரசியல்வாதிகள் பலருக்கே அவரது உள்ளார்ந்த ஈடுபாடுகள் இப்போதுதான் தெரியத் தொடங்கி உள்ளது. அவர் பேசவில்லை! பேச வைத்துக் கொண்டு இருக்கிறார்! அவர் நினைக்கிறார்! நினைத்தது உடனே நடக்கிறது! அவரை மறக்க நினைப்பவர்களால் கூட மறக்க முடியவில்லை. தினந்தோறும் அவரைப் பற்றி நல்ல தகவலாக வந்துகொண்டு இருக்கிறது.
முப்பதே நாளில் முழு முதல்வராக ஆகிவிட்டார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! அவர் தி.மு.க. தலைவரான 2018 ஆகஸ்ட் மாதம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் சொன்னார்: "இன்று தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நான், வேறொரு நான். புதிதாகப் பிறந்திருக்கிறேன்" என்று சொன்னார். அந்த புதிய பிறப்புத்தான் இன்று தமிழ்நாட்டை வாழ்வித்துக் கொண்டு இருக்கிறது. மே 7 - இன்று சூன் 7. மிகச் சரியாகச் சொன்னால் முப்பதே நாட்கள். பொதுவாக அரசியலில் மூன்று மாதங்கள் புதிய அரசை யாரும் விமர்சிப்பது இல்லை.‘ஹனிமூன்’ காலம் என்று பெருந்தகையாளர்கள் சொல்லிக் கொள்வார்கள். இந்த ஹனிமூன் காலத்தையே ‘ஃபுல்மூன்' காலமாக உயர்ந்து நிற்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தொற்றைத் துரத்துதல்!
தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான காலக்கட்டம் என்பது எல்லா வகையிலும் மோசமான காலக்கட்டம். பத்து ஆண்டுகளாக எல்லா வகையிலும் தமிழகம் பாழ்பட்ட நிலையில்தான் நிர்வாகம் அவர் கையில் தரப்பட்டது. அதனைச் சரிப்படுத்துவதுதான் ஒரு அரசாங்கத்தின் முதல் பணியாக இருந்திருக்க முடியும். ஆனால் அதனினும் மோசமான ‘கொரோனா காலம்' அவர் கையில் தரப்பட்டது. அதனால் தொற்றைத் துரத்தும் மக்கள் நல்வாழ்வுப் பணியைக் கையில் எடுத்தார். சுவர் இருந்தால் தானே சித்திரம்? மக்கள் இல்லாமல் என்ன நல்வாழ்வு? முழுக்க முழுக்க தொற்றைத் துரத்தவே தன்னை ஒப்படைத்துக்கொண்டார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக நலப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளும்தான் முதல்வரின் இரண்டு இலக்குகளாக மாறியது. மே 7 - 12 வரையில் மிகமிக மோசமான ஆம்புலென்ஸ் ஒலியால் ஊரே ரத்தம் உறைந்து கொண்டு இருந்தது. அதன் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆம்புலென்ஸ் ஒலி குறைந்து- அமைதியானது சாலைகள். மருத்துவமனையின் வாசல்களில் காத்திருந்த ஆம்புலென்ஸ்கள், இப்போது வருவதே இல்லை.
எந்த அலையையும் இனி மு.க.ஸ்டாலின் என்ற மலை தடுக்கும்!
பல்வேறு மாவட்டங்களில் நவீன மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. அனைத்து அமைச்சர்களும் கொரோனா ஒழிப்புத் துறை அமைச்சர்களாக மாறினார்கள். நேற்றைய தினத்தில் (ஜூன் 6) மட்டும் தமிழகத்தில் 36 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருக்கிறது என்று அறிவிக்கும் அளவுக்கு தமிழகம் ஆகிவிட்டது. பரவலும் குறைய - பாதிக்கப்பட்டவர்களும் குணமடைய ஒரு சில மாவட்டங்கள் நீங்கலாக சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டிய பரபரப்பும் துடிப்புமே காரணம். அவர் தூங்கவில்லை. யாரையும் தூங்க விடவும் இல்லை. இன்னும் சில நாட்களில் மாநிலம் முழுமைக்கும் நிம்மதியான தூக்கத்துக்கு அடித்தளம் போட்டு விட்டார் முதல்வர். எந்த அலையையும் இனி மு.க.ஸ்டாலின் என்ற மலை தடுக்கும்.
நொடியில் முடிவுகள்!
தடுப்பூசி இல்லையா? ஒன்றிய அரசுக்குக் கேட்டுக் கொண்டே இருக்கச் சொல்கிறார். கடிதம் அனுப்புகிறார். தொலைபேசியில் பேசுகிறார். தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை டெல்லிக்கு போகச் சொல்கிறார். டெல்லியில் இருந்து தடுப்பூசி வரவில்லையா? உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை தானே அறிவிக்கிறார். மூன்று கோடி தடுப்பூசியை பெற ஆயத்தம் ஆகிறார். செங்கல்பட்டில் மூடிக்கிடக்கும் தடுப்பூசி மையத்தை பார்வையிடுகிறார். தமிழ்நாடு அரசே நடத்தத் தயார் என்கிறார். ஒன்றிய அரசை அசைத்துப் பார்க்கிறார். ஆக்சிஜன் தயாரிப்பு - தடுப்பூசி தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களை அழைக்கிறார். டிட்கோவுடன் இணைந்து தொழில் தொடங்கத் தூண்டுகிறார். ஆக்சிஜன் எந்தெந்த மாநிலத்தில் எல்லாம் கிடைக்கும்? மகாராஷ்டிராவா? அங்கே ஐ.ஏ.எஸ்.களை அனுப்புகிறார். ஒரிசாவா? அங்கே ஐ.ஏ.ஏஸ்.களை அனுப்புகிறார். அவர்கள் அங்கேயே தங்கி தமிழ்நாட்டுக்கான தேவையை பெற்று அனுப்ப வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பை முடுக்கி விடுகிறார். செறிவூட்டிகளை உலக நாடுகளில் இருந்து பெறுகிறார். ஆக்சிஜனைக் கொண்டு செல்ல சிலிண்டர்களை வெளிநாடுகளில் இருந்து வரவைக்கிறார். ஊரடங்கு காரணமாக கடைகள் இருக்காது. அதனால் என்ன? கடைகளை வீட்டு வாசலுக்கே அனுப்பலாம் என்று காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாகனங்களில் அனுப்பி வைத்தார் முதல்வர். முன்னோக்கிய முடிவுகளை முதலாவதாக எடுத்தவராக, எடுப்பவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்!
உறவும் உரிமையும்!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. என்பது ஒற்றையாட்சித் தன்மையைக்கொண்ட எதேச்சதிகார கட்சி. சொந்தக்கட்சித் தலைவர்களை, கூட்டணிக் கட்சித் தலைவரகளையே போட்டுப் பார்க்கும் கட்சி அது. ஆட்சி அது. அதற்கும் தி.மு.க.வுக்கும் எப்போதும் பொருத்தம் இல்லை. ‘அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, கொள்கை எதிரிகள்' என்று முதல்வரால் உருவகப்படுத்தப்பட்ட பா.ஜ.க.வின் ஆட்சி அது.
தி.மு.க. இங்கு ஆட்சிக்கு வந்ததும், நேரடி மோதலில் ஈடுபட்டு விடுவார்கள் என்று ஒரு தரப்பும் -மொத்தமாக தலையாட்டத் தொடங்கி விடுவார்கள் என்று இன்னொரு தரப்பும் ஆரூடம் போட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் அந்த ஆரூடங்களை இடது கையால் தள்ளிவிட்டு புதுப் பாணியைக் கையில் எடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுதான் ஒன்றிய அரசுக்கான மரியாதையை எப்போதும் தருவோம், மாநிலங்களை நீங்கள் மதித்துச் செல்லும் வரை என்பதைத் தெளிவுபடுத்தினார். ‘மத்திய அரசுடன்' என்று மோடி சொல்வதும் -‘ஒன்றிய அரசு' என்று மு.க.ஸ்டாலின் சொல்வதும் ஏதோ வார்த்தை வம்படி அல்ல. அந்த சொற்களுக்குள் தான் இந்தியாவின் ஒருமைப்பாடு அடங்கி இருக்கிறது. எதிர்காலமும் அடங்கி இருக்கிறது. தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தம், மற்ற மாநிலங்களில் இருந்து உதவிகளைக் கேட்டுப் பெறுதல், உலக நாடுகளிடம் இருந்து சிலிண்டர் கொள்முதல், நீட் தேர்வில் இருந்து விலக்கு, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் எழுப்பிய முழக்கங்கள், புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாடுகள், எழுவர் விடுதலையில் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் - என நித்தமும் டெல்லியை நோக்கி யுத்தம் நடத்தி வருகிறார். மாநிலங்களை மதித்தால் மரியாதையைப் பெறலாம் என்ற அடிப்படையில் முதல்வர் இயங்குவதையே இது காட்டுகிறது.
Also Read: “முத்தான முதல் 30 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகள்..!” : சிறப்பு செய்தி தொகுப்பு !
கருணையும் நிதியும்!
தமிழ்நாடு அரசின் கருவூலத்தில் பணமில்லை என்பது ஊரறிந்த ரகசியம் ஆகும். ஏன் இல்லை என்பதையும் நாட்டு மக்கள் அறிவார்கள். கடன் வாங்கிக் கடன் வாங்கி கொள்ளையடித்து முடித்த ஒரு கூட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு முப்பது நாட்கள்தான் ஆகி இருக்கிறது. அதற்காக கஜானாவில் பணமில்லை என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்க முடியாது. பழிபோடுவது ஒன்றே வழியாகி விடுவதும் இல்லை. நிதி நெருக்கடி அரசுக்கு வரும் போது பல்வேறு பாதைகள் உண்டு. மக்களுக்கு வரும்போது துணை நிற்க வேண்டியது அரசுதானே என்பதை உணர்ந்த முதல்வர், கொரோனா துயர் துடைப்பு நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாயை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரப்படும் கருணைக் கொடையாகவே அது அமைந்திருந்தது. முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் முதல் என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே தரப்பட்டுவிட்டது. கருணையும் நிதியும் முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டார் முதல்வர். பால் விலையைக் குறைத்து பால்வார்த்தார். மகளிருக்கு பேருந்துகளில் கட்டணம் இல்லை என்று சொல்லி கண்ணீர் துடைத்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் என முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை தரப்பட்டது. காவலர்களுக்கும் ஊக்கத் தொகை தரப்பட்டது. கோவில் பணியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் காலத்தால் செய்த உதவிகள். கருவூலத்துக்கு நிதியை எப்போதும் திரட்டலாம். மக்களின் மனத்துக்கு நம்பிக்கையூட்டுவதையே முதல் காரியமாக நினைத்தார் முதல்வர்.
அவருக்கு மறதியில்லை!
திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்தது. அது எதையும் மறக்கவில்லை முதல்வர் என்பதை தினமும் நினைவூட்டி வருகிறார். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற அறிவிப்பின் மூலமாக ஊர் ஊராகச் சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மனுப் பெறுவது காலம் காலமாக நடப்பதுதான். அதில் புதிய ஒன்று இல்லை. ‘இந்த மனுவை 100 நாளில் நிறைவேற்றுகிறேன்'என்று சொல்லி அந்த மனுக்களுக்கான சான்றையும் மக்களிடம் கொடுத்தார். அதாவது தன்னைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தை மக்களுக்கே கொடுத்தார். ஆட்சிக்கு வந்தார். வந்ததும் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற தனித்துறையை உருவாக்கினார். அனைத்து மனுக்களும் பதிவு செய்யப்பட்டன. இதோ கோரிக்கை மனுக்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதற்கான அலுவலகத்துக்கு முதல்வரே செல்கிறார். மனுக் கொடுத்தவர்களுக்கு அவரே தொலைபேசி மூலமாக பேசுகிறார். கனவைப்போல இருக்கிறது. ஆனால் அவை நனவுகள்தான். மனு கொடுத்தவர்களில் சிலர் கூட மறந்திருப்பார்கள். முதல்வர் மறக்கவில்லை.
எழுத்தை மதிக்கும் ஆட்சி!
"எனக்கு கலைஞரைப் போல எழுதத் தெரியாது, பேசத் தெரியாது, அவரைப்போல செயல்பட முயற்சிப்பவன்" என்று ஒரு முறை சொன்னார் மு.க.ஸ்டாலின். எல்லோருக்குமே எழுதத் தெரிந்திருக்க,பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால் அனைவரும் செயல்பட்டாக வேண்டும். தன்னடக்கம் காரணமாக அப்படி அவர் சொல்லிக் கொண்டாலும் எழுத்தை மதிப்பவராக அவர் இருப்பதால் பெரு மரியாதைக்குரியவராக இன்றைய தினம் போற்றப்படுகிறார். தமிழ் மண்ணை எழுத்தால் உருவகப்படுத்திய கி.ராஜநாராயணனுக்கு இடைசெவல் கிராமத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை மரியாதை செய்தபோது கி.ரா.மரியாதை மட்டுமல்ல, முதல்வரின் மரியாதையும் வானைத்தொட்டது. கோவில்பட்டியில் சிலை அமைக்கப்பட இருக்கிறது.
எழுத்தாளர்களின் பிரபஞ்சமாக காட்சி தருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இதோ, சூன் 3 முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளில் எழுத்தாளர்கள் மனம் நிறைய எத்தனையோ அறிவிப்புகளைச் செய்துள்ளார் முதல்வர். மூன்று எழுத்தாளர்களுக்கு ஐந்து லட்சத்துடன் கூடிய விருதுகள், பெரும் விருதுகள் வாங்கியவர்க்கு கனவு இல்லங்கள் -என்பவை ஏதோ பத்தோடு பதினொன்றான அறிவிப்புகள் அல்ல. எழுத்தை மதித்தல் -வாழ்ந்த காலத்திலேயே எழுத்தாளனை மதித்தல் என்பது மானுட மாண்பு. அதனைத் தான் முதல்வர் செயல்படுத்திக்காட்டி உள்ளார். எழுத்தாளர் பிரபஞ்சன் சென்னையில் 27 மேன்சனுக்கு மாறி இருக்கிறார். அதை முதல்வர் கலைஞரிடம் சொன்னார். கலைஞரை பிரபஞ்சன் மிகக்கடுமையாக விமர்சித்து வந்த காலம் அது. இராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி குடியிருப்பில் வீடு ஒதுக்கினார் கலைஞர். அதன் பிறகுதான் பிரபஞ்சன் நிறைய படைப்புகளைக் கொடுத்தார். இதோ எழுத்தாளர்களின் பிரபஞ்சமாக காட்சி தருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இவர் தலைமையில் எழும்!
மிக உயர்ந்த திட்டங்களுக்கு தினமும் கையெழுத்திடுகிறார். மிகச் சாமான்யர்களின் குரலுக்கும் மதிப்பளிக்கிறார். அவர் இந்த நாட்டின் முதலமைச்சர். கோடீஸ்வரர்களிடம் இருந்து நிவாரணத் தொகையை மட்டும் பெறவில்லை, கொளத்தூர் போய் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவிடுகிறார். பெரும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் முதல்வரை கோட்டைக்கு தேடி வந்து சந்திக்கிறார்கள். அவரோ, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படிப்பவர்களை அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று நிதி உதவி செய்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கிவிட்டு முதுகை வளைத்து குனிந்து அவர்களது குறையைக் கேட்கிறார். தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞனிடம், அதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.
செங்கல்பட்டு போய் தடுப்பூசி நிறுவனத்தை பார்க்கிறார். திருப்பெரும்புதூர் சென்று ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்தை பார்வையிடுகிறார். சேலம் -கோவை-மதுரை என புதிதாக உருவாக்கப்பட்ட படுக்கைகளை கணக்கிடுகிறார். கோட்டையில் உள்ளேயே இருந்து விடவில்லை, கோட்டையே நகர்ந்து செல்கிறது ஊர் ஊராக! முதல்வராக அல்ல, ‘உங்களில் ஒருவனாக' - ‘உடன்பிறப்புகளின் தலைவனாகத்'தான் இன்னமும் நினைத்துக் கொள்கிறார். அதனால்தான் இத்தகைய காட்சிகளைப் பார்க்க முடிகிறது. சேலத்தில் இயற்கை மருத்துவ கஷாயம் பற்றி விளக்குகிறார் ஒரு மருத்துவர். அதையே கொஞ்சம் முதல்வருக்கு தருகிறார். ப்ரோட்டோகால் படி முதல்வர்கள் அப்படி வாங்கி அருந்த மாட்டார்கள். அதை வாங்கி அருந்திப் பார்த்தார் முதல்வர்! இதன் உச்சம் பிபிடி கிட் உடையை அவர் உருவம் தாங்கியது ஆகும். கொரோனா என்பது நோய் மட்டுமல்ல, அது ஒருவகைப்பட்ட பயம். அந்த உடையே பீதியூட்டும் உடையாக இன்னமும் இருக்கிறது. அதனைத் தாங்கி ஒரு முதல்வர், மருத்துவமனை வளாகத்துக்குள் உள்ளே போய்ப் பார்த்து திரும்பியது என்பது சோவியத் ஸ்டாலினை இரும்பு மனிதர் என்று வர்ணித்ததற்கு இணையானது.
‘தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால் தீயைத் தாண்டி இருக்கிறேன்’ என்றார் அப்பா. இதோ மகன், முப்பது நாளில் அக்னி குண்டத்தையே தாண்டி ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்! வாழ்க!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?