உணர்வோசை
“பாட்டெழுதும் வித்தையில் ரசவாதம் கற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்” - முத்தமிழறிஞர் கலைஞர்
இன்று (ஏப்ரல் 29) புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 131வது பிறந்த நாளாகும். இந்நாளையொட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், மும்பை பாரதி கலை மன்றத்தில் 8.12.1968 அன்று `பாரதிதாசன்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் படைத்த தலைமைக் கவிதையின் சில பகுதிகள்.
"எங்கெங்குக் காணினும் சக்தியடா - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா"" என்று பாரதி பாடென்று சொன்னவுடன் பாடிய மறவன்
பார் அதி தீரனென்று பாரதி புகழ்ந்த புலவன் கனக சுப்பு ரத்தினம் என்று காததூரம் இருந்த பெயரைக்
கவி பாரதிக்குத் தாசனென்று கச்சிதமாய்ச் சூட்டிக் கொண்டான்.
களம்சென்ற தமிழ்காக்கக் கச்சு இதமாய்க் கட்டிக்கொண்டான்.
நிமிர்ந்த நோக்கு
நெரிந்த புருவம்
நீர்வீழ்ச்சி ஓசை - நெற்
கதிர்க்கட்டு மீசை
பாட்டெழுதும் வித்தையிலே
பாரதி ரசவாதம் கற்றவனாம் - இவனைப் பார்
அதி ரசவாதம் கற்றவனாம்
அதிரச வாதம் கற்றவனாம்
அத்துணை இனிப்பு இவன் பாட்டில்!
சஞ்சீவி பர்வதத்தின் சாரலுக்கு நமை இட்டுச்சென்று
சங்கீதப் பேச்சொன்றைக் கேட்கச் சொல்வான்.
காதலி "நோகாமல் முத்தங்கள் நூறு கொடுப்பேன்" என்றாள்.
காதலன் "ஆகையால் ஓர்முத்தம் அச்சாரம் போடெ" ன்றான்!
அதிரச வாதமன்றோ - அஃது அவனுக்கே பழக்கமன்றோ!
"சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கிய நல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?"
வினாக்குறியா? வெடிக்கும் எரிமலையா?
புரட்சிக் கவிஞனெனப் புவியொப்பி மாலைபோடப்
போதாதோ இவ்வரிகள்?"
"ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்"
முழுமனிதன் பாட்டன்றோ இப்பாட்டு; இதுகேட்டு
அழும் மனிதன் அரை மனிதன்; குறை மனிதன்;
அரைகுறை மனிதன்.
ஏடெத்தனை அவர் தந்தார்!
இருண்ட வீட்டில்
குடும்ப விளக்கேற்றி வைத்தார்
இசையமுது பொழிந்து, அதற்குப்
பாண்டியன் பரிசு பெற்றார் நமக்குக்
குறிஞ்சித் திட்டுமுண்டு குயில் இதழ் நடத்தும்போது
அழகின் சிரிப்பாலே தமிழியக்கம் கவர்ந்துவிட்டார்.
அமைதிக்கு நல்ல தீர்ப்பளித்தார் அவர்
காதல் நினைவாலே கவிப்பெண்ணை வாடவிட்டுச் சாவின்
எதிர்பாரா முத்தத்தால் பிரிந்துவிட்டார்....
என் ஆசான் பாரதியைப் பார்ப்பேன் எனப் பறந்துவிட்டார்...
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!