உணர்வோசை
“அம்மா ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்வதன் அர்த்தம் என்ன?” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-17
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!
பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தமிழ்நாட்டின் முதல் இரண்டு தலைவலிகள்!
ஊழல் வழக்கில் சிக்கி 2002 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பதவி முதல் முறையாக பறிக்கப்பட்டது. பதவி விலகினார். அப்போது அமைச்சரவையில் எத்தனையாவதோ இடத்தில் இருந்த பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். சசிகலா - தினகரன் தயவின் காரணமாக முதலமைச்சர் ஆனார் பன்னீர். முதலமைச்சர் ஆனதும் பதவியேற்ற மேடையிலேயே உட்கார்ந்த நிலையில் இருந்த ஜெயலலிதா - சசிகலா ஆகிய இருவரது காலில் விழுந்து படுத்து வணங்கினார் பன்னீர். கடைசி வரை எழுந்து நிற்கவே இல்லை. அவரை முதலமைச்சராக சட்டசபைக்குள் கூட செல்வதற்கு அனுமதிக்கவில்லை ஜெயலலிதா. அவரது பெயர் எந்தக் கல்வெட்டிலும் இடம்பெறாமலும் பார்த்துக் கொண்டார் ஜெயலலிதா.முதலமைச்சர் அறைக்கே போகாமல் தனது அறையில் இருந்தார்.
இரண்டாவது தடவையும் சொத்துக்குவிப்பு வழக்கால் ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டது. அப்போதும் பன்னீர்செல்வமே முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். அந்தளவுக்கு அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்திருந்தவர் பன்னீர்செல்வம்.
மூன்றாவது முறை அவர் முதல்வர் ஆக்கப்பட்ட சூழ்நிலை என்பது ஜெயலலிதா உடல்நிலை மோசமான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டார். அழுது அழுது பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
ஜெயலலிதா இருக்கும் வரை 'டம்மி' முதலமைச்சரை வைத்து அதிகாரம் செலுத்தினார் சசிகலா. ஜெயலலிதா இறந்த பிறகு 'தானே' முதல்வர் ஆக ஆசைப்பட்டார்.
சசிகலாவா? பன்னீர்செல்வமா? தங்களுக்கு சரியான பொம்மை எது என்பதில் பா.ஜ.க தலைமை யோசித்தது. பன்னீரே சரியானவர் என்று முடிவெடுத்தார்கள். அதனால் தர்மயுத்தம் தொடங்கினார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா ஆக முயற்சித்தார் சசிகலா. ஆனால் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவால், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் பழனிசாமி. அவரது பெயரை அறிவித்ததும், பழனிசாமி என்ன செய்தார்?
நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். விழுந்தே கிடந்தார். அவரை சசிகலா தான் அவரை எழுப்பினார். தோளில் தட்டிக் கொடுத்தார் சசிகலா. அதாவது பன்னீர்செல்வத்தை விட தனக்கு நம்பிக்கையானவர் என்று நினைத்தார். ஆனால் அத்தோடு முடிந்தது.
சிறைக்குப் போன சசிகலாவால் நமக்கு என்ன நன்மை? இனி அவர் தயவு நமக்கு எதற்கு? என்று பா.ஜ.கவின் பாதம் தாங்கியாக மாறினார் பழனிசாமி. சசிகலாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்ற பழனிசாமி, 'நீ யாரு? எனக்கு பதவி வாங்கி கொடுத்தியா?' என்று ஒருமையில் சசிகலாவை கேட்கும் அளவுக்கு உருமாறினார். இந்த தைரியம் முழுமையாக மத்திய பா.ஜ.க தலைமை வழங்கியது. இந்த பா.ஜ.க தலைமையின் பாதம் தாங்குவதில் பன்னீருக்கும் பழனிசாமிக்கும் போட்டி ஏற்பட்டது. இரண்டு அடிமைகளில் யார் சிறந்த அடிமை என்பதில் 'இரண்டு பேரையுமே' அவர்கள் வாழ வைத்தார்கள்.
அதனால் கடந்த நான்காண்டு காலமாக தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்துவிட்டார்கள் பழனிசாமி - பன்னீர்செல்வம் அண்ட் கோ. மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் - திட்டங்கள் - சட்டங்கள் அனைத்துக்கும் தலையாட்டும் பொம்மைகள் இவர்கள். தமிழகத்துக்காக எதையும் வாங்கித் தருவதற்கு முதுகெலும்பு இல்லாதவர்கள். ஊழல்வாதிகள். சுயபுத்தி இல்லாதவர்கள். துணிச்சலாக எதையும் செய்யத் தெரியாதவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள். தனித்தன்மை இல்லாதவர்கள். கட்சியையோ ஆட்சியையோ சுயமாக நடத்தத் தெரியாதவர்கள். இவர்கள் இருவரையும் நம்பி நாட்டு மக்களும் வாக்களிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அதிமுகவின் ஒட்டுமொத்த நம்பிக்கையைப் பெற்றவர்களும் அல்ல. அ.தி.மு.க தொண்டர்களுக்கு தலைமை தாங்கும் தகுதியும் இல்லாதவர்கள் இவர்கள் இருவரும்.
இவர்கள் சேர்ந்து அம்மாவின் ஆட்சியை அமைக்கப் போகிறார்களாம்!
அதாவது ஜெயலலிதாவை புனிதராகக் கட்டமைப்பதன் மூலமாக, தங்களை புனிதராகக் காட்டிக் கொள்வது அ.தி.மு.க இப்போது எடுத்துள்ள நிலைப்பாடு.
பண்ணை வீடுகள், ரியல் எஸ்டேட், ஒப்பந்தங்கள், கட்டடங்கள், லீசிங் பராமப்ரிப்புகள், மெட்டல் கிங், சூப்பர் டூப்பர் டிவி, ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சின்கோனாரா பிசினஸ் எண்டர் பிரைசஸ், லெக்ஸ் பிராபர்ட்டி டெவலப்மெண்ட், ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ், மிடோ அக்ரோ பார்மஸ், இண்டோ டோஹா கெமிக்கல், ஏ.பி.விளம்பரச் சேவைகள், விக்னேஸ்வரா பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், கோபால் புரமோட்டர்ஸ்ஸ்ஸ், சக்தி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், நமசிவாயா வீட்டுவசதி மேம்பாடு, அய்யப்பா சொத்து மேம்பாடு, சீ என்கிளேவ், நவசக்தி ஒப்பந்தகாரர்கள், ஏசியானிக் கன்ஸ்ட்ரக்ஷன், கிரீன் கார்டன், மார்பிள் மார்வல்ஸ், வினோத் வீடியோ விஷன், பேக்ஸ் யுனிவர்ஸ், ப்ரஷ் மஷ்ரூம்ஸ், கொடநாடு தேயிலை எஸ்டேட் - ஆகிய 31 நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தான் சொத்துக் குவிப்பு வழக்கு. இதில் தான் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும் செலுத்தப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறையும் பத்து கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.
ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கான சிறைத் தண்டனை சாத்தியமில்லை. ஆனால் 100 கோடி அபராதம் அப்படியே தான் இருக்கிறது. ஜெயலலிதாவின் சொத்தை விற்று அந்த 100 கோடியை கட்ட வேண்டும். இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஜெயலலிதா நிரபராதியாக இருந்தால் 100 கோடியை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ரத்து செய்திருக்க வேண்டும். இது கூடத் தெரிந்து கொள்ளாத மூடர்கள், ஜெயலலிதாவை நிரபராதி என்று சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
''பொது ஊழியர் அதாவது முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக ஜெயலலிதா காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய் தான். ஆனால் முதலமைச்சராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஜெயலலிதா இப்படி சொத்துக்களை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி செய்துள்ளனர். ஜெயலலிதா போலி நிறுவனங்களை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி செய்துள்ளனர். முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டு ஜெயலலிதா இப்படி செய்துள்ளது குற்றத்தின் கனத்தை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தீமையான பாதையை ஜெயலலிதா காட்டியுள்ளார்." என்று நீதிபதி குன்ஹா சொல்லி இருக்கிறார்.
''ஜெயலலிதாவை வைத்து சசிகலா சம்பாதிக்கவில்லை. தான் சம்பாதிக்கவே சசிகலாவை உடன் வைத்துக்கொண்டார் ஜெயலலிதா" என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
இவர்களுக்கு சம்பாதித்துக் கொடுத்தவர்கள் தான் அம்மாவின் ஆட்சியை அமைக்கப் போவதாகச் சொல்கிறார்கள். அம்மாவின் ஆட்சி என்றால் சொத்துக்குவிப்பு ஆட்சி என்று பொருள். டான்சி ஊழல் ஆட்சி என்று பொருள். இத்தகைய ஆட்சிக்கு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த தண்டனையை 2021 ஆம் ஆண்டும் வழங்க வேண்டும்.
- தொடரும்...
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!