உணர்வோசை
"வாரிசு அரசியல் பற்றி பேச பா.ஜ.க-வுக்கு அருகதை இருக்கிறதா?" : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-12
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!
'' தி.மு.க என்பது குடும்பத்துக்கான ஆட்சி" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவாய் மலர்ந்துள்ளார்.
அது ஓரளவு உண்மைதான். ஆனால் அதில் ஒரு திருத்தம், தனிப்பட்ட குடும்பத்துக்கான ஆட்சி அல்ல, அனைத்து குடும்பங்களுக்குமான ஆட்சி!
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த குடும்பமும் வளரும். இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பமும் அறியும்!
எந்தத் திட்டம் தீட்டினாலும் அதை அதானிக்கு பயன் தருவதைப் போல, அம்பானிக்கு பயன் தருவதைப் போல திட்டம் தீட்டுபவர்கள் தான் மோடியும் அமித்ஷாவும்!
பா.ஜ.க அரசாங்கத்தை ராகுல் காந்தி அவர்கள் ஒரே ஒரு வரியில் அடையாளம் காட்டினார். ''இந்த அரசாங்கம் என்பது நாம் இருவர், நமக்கு இருவர் அரசாங்கம்" என்று சொன்னார். நாம் இருவர் என்று ராகுல் சொல்வது, மோடியும் அமித்ஷாவும்! நமக்கு இருவர் என்று சொல்வது அதானியும், அம்பானியும்! இந்த அமித்ஷாதான், திமுகவை குடும்பக் கட்சி என்று விமர்சிக்கிறார். இவர்கள் அனைவருமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அம்பானி குழுமம் வளர்ச்சியால் முந்தியது. ஆனால் அதானி குழும வளர்ச்சி என்பது மோடியால் வந்தது. அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது வளர்ந்தது தான் அதானி குழுமம். மோடி ஆட்சியில் கட்ச் வளைகுடா பகுதியில் 7,350 ஹெட் டேர் நிலம் ஒரு சதுர கிலோமீட்டர் ஒரு ரூபாய் என குத்தகைக்கு வழங்கப்பட்டதாக அப்போதே சர்ச்சை கிளம்பியது.
நிலக்கரி சுரங்கம், துறைமுகங்கள், எரிவாயு என அனைத்து துறைகளிலும் திடீர் நம்பர் ஒன்னாக மாற மோடியின் ஒத்துழைப்பே முக்கியம் என்பதை ஆங்கில ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன. விமான நிலையங்கள் சிலவும் அவர்கள் கட்டுப்பாட்டுக்கு போய்விட்டது. எந்த துறையை மோடி ஊக்குவிக்க வேண்டும் என்று பேசுகிறாரோ அந்தத் துறைகளில் அதானி குழுமம் கோலோச்சத் தொடங்கும் என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் அவை எழுதி வருகின்றன. அம்பானியை அதானி வெகு சீக்கிரம் முந்திவிடுவார் என்றே அவை எழுதுகின்றன. இதை வைத்துத்தான், அதானிக்கும் அம்பானிக்கும் தான் மோடி செளகிதாராகச் செயல்படுகிறார் என்று ராகுல் காந்தி தொடர்ந்து சொல்லி வருகிறார். இதுவரைக்கும் இதற்கு மோடியோ அமித்ஷாவோ பதில் அளிக்க வில்லை.
தி.மு.க ஆட்சியில் தமிழகம் அடைந்த பயன்கள் தனிப்பட்ட குடும்பத்துக்கா, ஒட்டுமொத்த குடும்பங்களுக்கா என்பதையும் பாருங்கள்! மோடியும் அமித்ஷாவும் சேர்ந்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் அதானி, அம்பானிக்காக மட்டுமே இருப்பதையும் கவனியுங்கள். 100வது நாளைத் தொடப்போகும் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி இத்தனை நாட்கள் கடந்தும் பிரதமர் மதிக்காமல் இருக்க என்ன காரணம்? மூன்று வேளாண் சட்டங்களும் அதானி குழுமத்துக்கு சார்பானது. அரசாங்கம் வசம் இருக்கும் உணவுப்பொருள் கொள்முதல் முழுமையையும் அவர்கள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்கள். அதற்காகவே 'குறைந்தபட்ச ஆதார விலையை' நிர்ணயிக்க மறுக்கிறார்கள். கோடிக்கணக்கான விவசாயிகளா, ஒரு அதானியா என்றால் அதானி பக்கம் நிற்கும் மோடியும் அமித்ஷாவும் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.
ஆம்! தி.மு.க அரசு தமிழகக் குடும்பங்களுக்கான அரசு தான்! பா.ஜ.க அரசைப் போல தனிப்பட்ட இரண்டு கம்பெனிகளின் அரசு அல்ல!இந்த குடும்ப அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு மோடிக்கோ, அமித்ஷாவுக்கோ பா.ஜ.கவுக்கோ என்ன அருகதை இருக்கிறது? மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ்சிங் எம்.பி. வசுந்தரராஜே சிந்தியா மகன் துஷ்யந்த் சிந்தியா எம்.பி.ராமன் சிங் மகன் அபிஷேக் சிங் எம்.பி.பிரேம்குமார் சமானி மகன் அனுராக் தாகூர் எம்.பி.கோபிநாத் முண்டே மகள் பங்கஜ் முண்டே எம்.பி.யஸ்வந்த் சின்கா மகன் ஜெயந்த்சின்கா எம்.பி.பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன் எம்.பி.கல்யாண்சிங் மகன் ராஜ்பீர்சிங் எம்.பி.தேவேந்திர பிரதாபன் மகன் தர்மேந்திர பிரதாபன் எம்.பி. எடியூரப்பா மகன் ராகவேந்திரா எம்.பி. பி.கோயல் மகன் பியூஸ் கோயல் அமைச்சர் மேனகா மகன் வருண் காந்தி, லால் கோயல் மகன் விஜய் கோயல் ஆவைத்யநாத் மகன் ஆதித்யநாத் உ.பி. முதல்வர் - இதுதான் பா.ஜ.கவின் 'குடும்ப அரசியல்'.
ஆனால் இது எதுவும் பாவம், பிரதமராக இருப்பவருக்குத் தெரியாது. அவர் இந்தியாவில் இல்லை! இந்த நாட்டுக்கு ஆபத்தானது குடும்ப அரசியல் அல்ல. பிரித்தாளும் அரசியல். மத ரீதியாக, சாதி ரீதியாக, வட்டார ரீதியாக, கட்சி ரீதியாக பிளவுபடுத்தி அதன் மூலமாக குளிர்காய்வது தான் ஆபத்தானது. பிரிவினைக்கு மேல் பிரிவினையே ஆபத்தானது. அதை விட ஆபத்தானது ஏகபோகம். அதிகார ஏகபோகம், நிதி ஏகபோகம், தொழில் ஏகபோகம், வர்த்தக ஏகபோகம் இவை தான் அதனினும் ஆபத்தானது. பா.ஜ.கவின் ஒரு கண், பிரித்தாளும் அரசியல் என்றால், இன்னொரு கண் அனைத்திலும் ஒற்றைத் தன்மை கொண்ட ஏகபோகம் தான் ஆபத்தானது. இவை இரண்டையும் தான் பா.ஜ.க பின்பற்றுகிறது. இந்த ஏக போகத்தை அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், நேருவின் குடும்பம் என்று குறை சொல்கிறது பா.ஜ.க. இந்த ஏகபோகத்தை தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது. அவர்களை இது கலைஞரின் குடும்பம் என்று குறை சொல்கிறது பா.ஜ.க. அரசியல் தலைவருக்கு மகனாக பிறந்ததாலேயே அரசியலுக்கு வரக்கூடாது என்பதைப் போன்ற ஜனநாயக மறுப்பு வேறு இருக்க முடியாது.
அரசியலுக்கு வருகிறவர் முன்மொழியும் அரசியல் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். 'பிறப்பின் அடிப்படையிலான ஜாதிய முறையை எதிர்க்கும் கட்சிகளில் பிறவியின் அடிப்படையில் தலைமை நிர்ணயிக்கப்படும் விசித்திரத்தை உலகில் வேறெங்கும் காணமுடியாது'' என்று மநுவின் நவீன வடிவங்கள் தலையங்கம் தீட்டுகின்றன. ஜாதி முறை என்பதை எதிர்க்கக் காரணம் அது பிறப்பின் அடிப்படையிலானது என்பது மட்டுமல்ல. பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வைக் கற்பிக்கிறது என்பது தான் அதனை எதிர்க்க மிக முக்கியக் காரணம். தமிழ்ச் சமூகத்தில் தொழில் அடிப்படையில் அடையாளங்கள் இருந்தது. அதனை வர்ணாசிரம அடிப்படையிலான உயர்வுதாழ்வாக மாற்றியது மனு. அதனால் தான் அதனை எதிர்க்கிறோம். பிறப்பின் அடிப்படையிலான பேதம் என்பது வேறு. குடும்ப உறுப்பினர்கள் அரசியல் பணியாற்றுவது என்பது வேறு. குடும்பத்துக்கு ஒருவர் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எங்காவது சட்டமாக இருக்கிறதா? குடும்பத்தில் உள்ள அனைவரும் வாக்களிக்கலாம் என்பது தான் சட்டமே தவிர, வீட்டுக்கு ஒருவர் தான் வாக்களிக்கலாம் என்று சட்டம் இருக்கிறதா? தி.மு.கவில் குடும்ப அரசியல் என்று பேசும் அமித்ஷா, முதலமைச்சரோடும் துணைமுதலமைச்சரோடும் நடத்தும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையில் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை உடன் வைத்துக் கொண்டது ஏன்? அப்பா துணை முதலமைச்சராக இருக்கும்போது மகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது குடும்ப அரசியல் இல்லையா அமித்ஷாஜி?
அரசியல் பேசுங்கள். கொள்கைகள் பேசுங்கள். திட்டங்களைப் பேசுங்கள். சாதனைகளைப் பேசுங்கள். இப்படிப் பேசுவதற்கு எதுவும் இல்லாததால் கலைஞரின் குடும்பம் பற்றி பேசுகிறது பா.ஜ.க.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கோடிக்கணக்கான தமிழ் மக்களின் குடும்பத்தைப் பற்றி பேசுகிறது. ஆதரிப்பீர் உதயசூரியன். நன்றி வணக்கம்!
- தொடரும்...
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!