உணர்வோசை
தமிழர்களின் கல்வி உரிமையை காவுகொடுக்கும் கொத்தடிமை ஆட்சியை விரட்டுவோம்: அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-8
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை முற்றிலுமாக ஒதுக்கவேண்டிய கடமை நமக்கு ஏன் இருக்கிறது என்றால் அவர்கள் தமிழர்களின் கல்வி உரிமையில் கை வைக்கிறார்கள். தமிழர்களை மீண்டும் தற்குறிக்கூட்டமாக மாற்றுவதற்கு பா.ஜ.க திட்டமிடுகிறது. அதற்கு அ.தி.மு.க தலையாட்டிக் கொண்டு இருக்கிறது!
பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்தால் பெரும்பாலான பள்ளிக்கூடங்களை மூடிவிடுவார்கள். கிராமப்புறத்தில் பள்ளியே இருக்காது. நகரத்தில் இருக்கும் உயர்சாதியினர் தவிர வேறு யாரையும் படிக்க விடமாட்டார்கள். அதுதான் உண்மை. இதைத்தான் இராஜாஜி செய்தார். இவர்களும் செய்வார்கள்!
''அவனவன் ஜாதித் தொழிலை அவனவன் செய்யவேண்டும். வண்ணான் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை, குலத்தொழிலைச் செய்தால் போதும், எல்லோரும் படித்தால் வேலை எங்கிருந்து கிடைக்கும்?' - என்று சென்னை திருவான்மியூரில் 29.6.1952 அன்று பேசினார் அன்றைய முதலமைச்சர் இராஜாஜி. பள்ளி நேரத்தை மூன்று மணி நேரமாக குறைப்பது என்றும், மீதி நேரம் பள்ளிப் பிள்ளைகள் அவரவர் பரம்பரைத் தொழிலைப் பார்க்க வேண்டும் என்றும் பரம்பரைத் தொழில் செய்யாத குலத்தில் பிறந்தவர்கள் வயல் வெளிகளிலும் தொழிற்சாலைகளிலும் செங்கல் அறுப்பு கிணறு தோண்டுதல் ஆகிய வேலைகளை பார்க்க வேண்டும் என்றும் அன்றைய கல்வி அமைச்சர் டாக்டர் எம்.வி.கிருஷ்ணாராவ் சட்டசபையில் (20.3.1953) பேசினார்.
யாதவர் மாநாட்டில் பேசிய விவசாய அமைச்சர் டாக்டர் சென்ன கவுடா, 'நீங்கள் படிப்பு முடிந்ததும் வேலைக்கு போவதை விட்டுவிட்டு பால்பண்ணை வையுங்கள். அதற்குத்தான் குலத் தொழில் செய்யுங்கள் என்று முதல்வர் சொல்கிறார்' என்று விளக்கினார். இதுதான் நடக்கும்.
* ''சிலர் பரம்பரைத் தொழிலைச் செய்ய வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். அவர்கள் மட்டும் நகத்தில் மண்படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படி இருக்கிறது நியாயம்? நாமும் படித்து நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?" (நவசக்தி 10.9.1961) என்று திருப்பிக் கேட்டவர் தான் முதலமைச்சர் காமராசர். அதனால் தான் அவரை பெருந்தலைவர் என்று போற்றுகிறோம்.
அந்த பெருந்தலைவர் தான் இராஜாஜி மூடிய பள்ளிகளைத் திறந்தார். குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்தார்.
நாடு முழுவதும் பள்ளிகளைத் திறந்தார் முதல்வர் காமராசர் என்றால், நகரங்களில் கல்லூரிகளை அதிகமாக உருவாக்கினார் முதல்வர் கலைஞர்!
* அனைவரும் படித்தது இவர்களால் தான். இன்று அனைத்து சமூக மக்களும் படித்து முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அதற்கு இவர்கள் இருவரும் தான் காரணம். அதில் மண்ணைப் போடத் திட்டமிடுகிறார்கள் மதவாதிகள். நம்மை பள்ளி, கல்லூரிகளில் இருந்து துரத்தப் பார்க்கிறார்கள்!
''வறியவர்களுக்கு எல்லாம் கல்வி நீரோடைவரவிடவில்லை மதக் குருக்களின் மேடை" - என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். அத்தகைய காலத்தை மீண்டும் உருவாக்கத் துடிக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை முதல் நீட் தேர்வு வரை மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களும் 'அனைவருக்கும் கல்வி' என்ற உன்னத நோக்கத்துக்கு உலை வைப்பது தான்!
* புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் புதிய காவிக் கொள்கையை மத்திய பா.ஜ.க அரசு அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் இருமொழித் திட்டம் அமலில் இருக்கிறது. ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கையானது, மும்மொழித் திட்டத்தை முன்மொழிகிறது. இதன் மூலமாக இந்தியை புறவாசல் வழியாகத் திணிக்க முயற்சிக்கிறார்கள்!
* 10, 12 ஆம் வகுப்பு தேர்வுக்குப் பிறகு பள்ளியில் இருந்து நின்றுவிடுவது இன்றும் இருக்கிறது. தேர்வில் தோல்வி அடைந்தாலோ, இவ்வளவு படித்தால் போதும் என்று நினைத்தோ இடையில் நின்றுவிடுவார்கள். ஆனால் மோடி கொண்டு வரப்போகும் பாடத்திட்டத்தில் 3,5,8,10,12 ஆகிய ஐந்து வகுப்புகளிலும் பொதுத்தேர்வு வைத்து மாணவர்களை வடிகட்டப் போகிறார்கள். இதனால் மாணவர்கள் இடையிலேயே பள்ளியை விட்டு விரட்டப்படுவார்கள்!
* தொழில் கல்வி என்ற பெயரால் மீண்டும் குலக்கல்வியை அறிமுகம் செய்கிறார்கள்!
*மாணவர்கள் எண்ணிக்கை இல்லை என்று சொல்லி பள்ளிகளை மூடுவார்கள். மாணவர் எண்ணிக்கை, பள்ளிகள் எண்ணிக்கையை காரணம் காட்டி ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்குவார்கள்!
* நீட் தேர்வு கொண்டுவரப்பட்டு மருத்துவக் கல்வியில் பெரும்பான்மை மக்களின் கனவு சிதைக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டும் தான் எளிதில் மருத்துவக் கல்விக்குள் நுழையலாம் என்று மாற்றிவிட்டார்கள். பல லட்சங்கள் செலவு செய்து பயிற்சி மையங்களில் படிப்பவர்கள் தான் சேர முடியும் என்று மாற்றி விட்டார்கள்!
* இதேபோல் அனைத்து உயர்கல்விக்கும் பொதுநுழைவுத் தேர்வைக் கொண்டு வரப்போகிறார்கள். நீட் போலவே பொறியியல் கல்லூரிகளுக்கும் தேர்வு வரப்போகிறது!
* பி.ஏ, பி.எஸ்.சி. படிக்கவும் நீட் போல ஒரு நுழைவுத் தேர்வு வரப்போகிறது.
* ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட சமூக, கிராமப்புற மாணவர்களை ஒரே ஒரு டிகிரி கூட படிக்கவிடாமல் தடுக்கப் போகிறார்கள்.
* சில குறிப்பிட்ட வகுப்பினர்க்கு மட்டுமே கல்வி, வேலை என ஒரு காலம் இருந்தது. அந்தக் காலத்தை மீண்டும் உருவாக்க நினைக்கிறார்கள்.
இதனைத் தமிழகத்தில் இருந்த கொத்தடிமை பழனிசாமி அரசு தலையாட்டி ஏற்றுக்கொண்டது. இந்தக் கொத்தடிமைத் தனம் தொடருமானால் தமிழினம் வீழ்ந்துவிடும். இந்த கொத்தடிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால் மட்டும் தான் இந்த பேராபத்து அனைத்தையும் தடுத்து நிறுத்த முடியும். அதனால் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கச் சொல்கிறேன். நன்றி வணக்கம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!