உணர்வோசை
“இதுதான் தமிழ்ப்பற்றாளர்கள் மோடி-அமித்ஷாவின் தமிழ்ப்பாசம்” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-3
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே வணக்கம்!
நாம் இப்போது வாழும் நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர்!
இந்தத் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டிய இயக்கத்தான் திராவிட முன்னேற்றக் கழகம்!
தமிழர்களின் வாழ்விடமான தமிழகம் தொல் பழங்காலத்தில் நாவலந் தீவு, சம்புத் தீவு, குமரித்தீவு, குமரி நாடு என்று அழைக்கப்பட்டது.
'செந்தமிழம் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' என்றது தொல்காப்பியம். பொங்கர் நாடு, கொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, பன்றிநாடு, சுற்காநாடு, சீதநாடு, பூமிநாடு, மலைநாடு, அருவா நாடு, அருவா வடதலைநாடு - ஆகிய பன்னிருநாடுகள் இருந்தன.
'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு' என்று தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் சொன்னார்.
'நெடியோன் குன்றமும் தொடியோன் பெளவமும்
தமிழ்வரம் புறந்த தண்புனல் நாடு' - என்கிறது சிலப்பதிகாரம்,
பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோரும் கொடுங்கடல் கொள்ள - என்றார் அடியார்க்குநல்லார்.
தமிழர் வாழும் பகுதி ஒட்டுமொத்தமாக தமிழகம் - தமிழ்நாடு என்று அழைக்கப்படும் சூழல் தொட்ட காலத்திலேயே இல்லாமல் இருந்தது.
ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி படிப்படியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சிறுகச் சிறுகக் கைப்பற்றியது.
கம்பெனி ஆட்சி 1801 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போதும் முழுமையான தமிழகத்தை அவர்கள் ஒரே கையில் இருந்து பெறவில்லை. பலரிடமும் இருந்து வாங்கப்பட்ட பகுதிகளை ஒட்ட வைத்துக் கொண்டார்கள்.
இதனை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, தமிழ்ப்பகுதிகளையும் ஒன்று சேர்ந்த தென்னிந்திய நிலப்பரப்புக்கு சென்னை மாகாணம் என்று பெயரிட்டு ஆளத் தொடங்கியது.
மொழிவழியாக பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை 'சென்னை இராஜதானி' என்று அழைக்கப்பட்டது. தெற்கு எல்லை திருநெல்வேலி. வடக்கே ஒரிசா மற்றும் ஐதராபாத் பகுதிகள். மேற்கே குடகு,கனரா, கள்ளிக்கோட்டை முதலிய மேற்குக் கடற்கரை பகுதிகள் - எல்லைகளாக இருந்தன.
1953 ஆம் ஆண்டு ஆந்திரா பிரிந்தது. 1956 ஆம் ஆண்டு கேரளாவும் கர்நாடகாவும் பிரிந்து தனித்தனி மாநிலம் ஆனது. அதன்பிறகும் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. 1956 முதல் 1967 வரை 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட பெரும் போராட்டம் நடந்தது. அந்தப் பெயரை நமக்கு நாமே சூட்டிக் கொள்ள நாம் ஒரு அரசியல் வெற்றியைப் பெற வேண்டி இருந்தது.
அந்த வெற்றி தான் 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற அரசியல் வெற்றி. பேரறிஞர் அண்ணா முதல்வராக வந்தால் தான் தமிழன் கனவு நிறைவேறும் என்பது காலத்தின் கட்டளையாக இருந்தது.
14.4.1967 ஆம் நாள் சென்னைக் கோட்டையின் முகப்பில் 'தமிழக அரசு - தலைமைச் செயலகம்' என்ற பலகை மிளிர்ந்தது. 'மதராஸ் கவர்மெண்ட்' என்று இருந்த சொல் நீக்கப்பட்டு, 'தமிழக அரசு' என பொறிக்கப்பட்டது.
'சத்தியமேவ ஜெயதே' என்பது அழகிய தமிழில், 'வாய்மையே வெல்லும்' என்று பொறிக்கப்பட்டது.
18.7.1967 அன்று தமிழக வரலாற்றில் பொன்னான நாள். தாய்த்தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று தனயன் அண்ணா பெயர் சூட்டிய நாள்!
''தமிழ்நாடு என்ற இந்தப் பெயர் நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் என்ற முதியவர், பலநாட்கள் உண்ணாவிரதம் இருந்து அணு அணுவாகத் தம்முடைய உயிரைச் சிதைத்துக் கொண்டு அவர்கள் இறந்து பட்டார்கள். அவர்கள் இறந்துபடுவதற்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னதாக நான் அவரிடத்திலே போய்ப் பார்த்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. 'நாங்கள் தமிழ்நாடு பெயர் மாற்றத்தைப் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உண்ணாவிரதத்தை விட்டுவிடுங்கள்' என்று சொன்ன நேரத்தில், ' உங்களுக்கு இந்த பெயர் மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க அரசியல் வலிவு இல்லை, ஆகையால் என்னைத் தடுக்காதீர்கள், நான் இறந்துவிடுவதால் ஏதாவது நன்மை ஏற்படுமானால் நான் இறந்துவிடுவதிலே நஷ்டம் ஏதும் இருக்காது' என்று சொன்னார்.
அந்தப் பெரியவருடைய உறுதியால் அவர் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டு அந்த நாட்களிலே ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தினார். அவரை இந்த நேரத்திலே நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது. அவருடைய நினைவுக்கு அஞ்சலி செலுத்தி இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதற்கு இந்த அவைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்." என்றார் முதல்வர் அண்ணா!
''தமிழ்நாடு என்று பெயரிடப்படுகின்ற இந்தநாள், இந்த அவையில் உறுப்பினராக இருக்கக் கூடிய அனைவர் வாழ்விலும் மிகுந்த மகிழ்ச்சியையும் நல்ல எழுச்சியையும் தரக்கூடிய திருநாள் ஆகும். இந்தத் திருநாளைக் காண்பதற்கு நெடுங்காலம் காத்திருக்க நேரிட்டதே என்பதுதான் மகிழ்ச்சியின் இடையே வருகிற துயரம்.
இது தமிழுக்கு வெற்றி, தமிழருக்கு வெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி, தமிழ்நாட்டுக்கு வெற்றி." என்று சொல்லி, தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை வாக்குக்கு விட்டார் முதல்வர் அண்ணா. அனைத்து உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக பெயர் மாற்றத்தை ஆதரித்து நின்றார்கள்.
உடனே முதல்வர் அண்ணா அவர்கள், ''சட்டமன்றத் தலைவர் அவர்களே! வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நாளில் 'தமிழ்நாடு' என்று நான் சொன்னதும் 'வாழ்க' என்று அவை உறுப்பினர்கள் சொல்லுவதற்கு தங்கள் அனுமதியைக் கோருகிறேன்" என்றார். அனுமதித்தார் அவைத் தலைவர்!
முதல்வர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு! - என்றார்கள்.
உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க! என்றார்கள்!
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க! - என்று மும்முறை ஒலித்தது. இதற்குக் காரணமான அரசு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு!
அன்று அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் போயிருந்தால் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம் போல் சென்னப் பிரதேசமாக அடையாளம் அற்று இருந்திருப்போம். நாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று மார்தட்டிச் சொல்லும் தகுதியை இழந்திருப்போம். தலைகவிழ்ந்து நின்று இருப்போம்.
இந்த தமிழ்நாடு என்ற பெயர் இன்று சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. அது எப்படி ஒரு மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டலாம் என்று மதவாத மங்குணிகள் சிலர் இன்று கொக்கரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு என்ற பெயரைக் காப்பாற்றியாக வேண்டி இருக்கிறது.
மத்திய பா.ஜ.க அரசு இந்தியநாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் காரியத்தை நித்தமும் செய்து வருகிறது. அதுதான் இன அடையாளங்களைச் சிதைத்தல். அனைவருக்கும் மத அடையாளங்களைப் பூசுதல்.
மத அடையாளங்களைப் பூசுவது என்பது அனைவரையும் வளர்ப்பதற்கு அல்ல. தங்களது உயர் சாதி நலன்களுக்காக அடித்தட்டு மக்களுக்கு மத அடையாளங்களைப் பூசி மடையர்கள் ஆக்குவதற்கு திட்டமிடுகிறார்கள்!
இந்த பேராபத்தை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
தமிழை, திருவள்ளுவரை, ஒளவையாரை, பாரதியாரை புகழ்ந்து பேசுவதன் மூலமாக தமிழர்களை மயக்க நினைக்கிறார்கள்.
பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ஏற்பட்டுள்ள தமிழ்ப்பாசத்தை பார்க்கும் போது புல்லரிக்கிறது. இருவரும் பதவி காலியானதும் தமிழ்நாட்டுக்கு தமிழ்ப்படிக்க வந்துவிடுவார்கள் போல அந்தளவுக்கு வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்!
''அழகான தமிழ் மொழியை கற்க முடியவில்லையே" என்று வருந்தி இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. ''பாரதநாட்டின் புராதன மொழி இனிமையான மொழியான தமிழ் மொழியில் பேசமுடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்." என்று சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இப்படி அவர்கள் இருவரும் பேசியதற்கு பாராட்டுச் சொல்லத் தான் வேண்டும். இவ்வளவு தமிழ்ப்பற்றுக் கொண்ட இவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள்? நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெடுதல் செய்யாமலாவது இருக்கலாமே?
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையே மூடத் திட்டமிட்ட அரசு தான் பாஜக அரசு. சென்னையில் தனித்து இயங்கிய அந்த நிறுவனத்தை மைசூர் பல்கலைக் கழகத்துடன் இணைக்க பா.ஜ.க அரசு திட்டமிட்டது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.
2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.இதற்கு அப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்படி ஏதும் திட்டம் இல்லை என்று அன்றும் அமைச்சர் ஜவடேக்கர் சொன்னார். அதே கொள்கையை இப்போதும் செயல்படுத்த துடிக்கிறார்கள்.
செம்மொழி தமிழ் உயராய்வு மையம் என்ற பெயரில் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வந்த இந்த அமைப்பு, பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு தரம் உயர்த்தப்பட்டு 2008-ம் ஆண்டு மே 19 முதல் செம்மொழி தமிழாய்வு நிறுவனமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது முயற்சியால் செயல்பட்டு வருகிறது.
2011கழக ஆட்சி முடிவுற்ற நிலையில் இருந்து,அதனை செயல்படாத அமைப்பாக மாற்றிவிட்டார்கள். பத்து ஆண்டுகளாக கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படவில்லை.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும். இதில் மத்திய அரசால் மூன்று வகையான விருதுகள் குடியரசு தலைவரால் வழங்கப்பட வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக அவை தரப்படவில்லை.
2011- 16 வரையிலான ஆண்டுக்கான விருது அறிவிப்பு 2017 இல் வெளியானது. 2020 ஏப்ரலிலும் விருது அறிவிப்பு வெளியானது. இதற்கான மனுக்கள் பெறப்பட்டாலும் விருதுகள் வழங்கப்படவில்லை.
இதுதான் தமிழ்ப்பற்றாளர்களான மோடி, அமித்ஷா ஆட்சியில் தமிழின் நிலைமை.
கடந்த ஆண்டு இறுதியில் 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்தியப்பல்கலைக்கழகங்களாக மத்திய அரசு தரம் உயர்த்தியது. இப்போது மத்திய பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத்திற்காக தனித்துறைகளை உருவாக்குகிறது. ஆனால், தமிழுக்கு மட்டும் இருக்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை நிம்மதியாக இயங்க விடாமல் செய்து வருகிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக 643 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது.இந்த தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 29 மடங்கு அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிபரம்..
2017-18 ஆண்டில் 198 கோடியும், 2018-19 ஆண்டில் 214 கோடியும், 2019 -20 ஆண்டில் 231 கோடியும் சமஸ்கிருத வளர்ச்சிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு 2017-18 ஆண்டில் 10.59 கோடியும், 2018-19 ஆண்டில் 4.65 கோடியும், 2019-20 ஆண்டு 7.7 கோடியும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்ப் பாசமா? நடிப்பா?
மனோன்மணியம் சுந்தரனார் சொன்னார், 'உலக வழக்கு அழிந்து ஒழிந்த மொழிக்கு' எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? 'அப்படி சிதையா இளமை மொழிக்கு' எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது? இதன் மூலம் தமிழ் பாசம் தெரிகிறதா? நடிப்பு தெரிகிறதா?
தமிழ்நாட்டைக் காக்க, தமிழ் மொழியைக் காக்க திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர்ந்தாக வேண்டும்!
உங்கள் வாக்கு தமிழ்நாட்டைக் காக்கும் வாக்காக, தமிழ் மொழியைக் காக்கும் வாக்காக அமையட்டும்!
- தொடரும்...
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?