உணர்வோசை
“தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சியா? கலைஞர் ஆற்றிய அரும்பணிகள் இதோ”: அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-2
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு! இது காலம் காலமாக புளித்துப் போன பழைய மாவு பாக்கெட் தான்!
1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்று கழகத்தவரை விட எதிரிகளால் தான் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. அப்போதே செய்யப்பட்ட பிரச்சாரம் என்ன தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் வென்றால் ஆலயங்கள் இடிக்கப்படும், தேர்த்திருவிழா நின்றுவிடும், தெப்ப உற்சவம் தடுக்கப்படும், மதவாதிகள் மனம் புண் படுத்தப்படும், ஆண்டவன் திருவுலா இருக்காது, ஆறுகால பூஜை நடக்காது, ஆடிக்கிருத்திகை இல்லை, திருமஞ்சனம் இல்லை, பங்குனி உத்திரமில்லை, கார்த்திகை தீபம் இல்லை, கருமாரியம்மன் கோவில் கூட இருக்காது' என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள்.
ஆனால் தமிழகம் கண்ட காட்சி என்ன?
1970 ஆம் ஆண்டுக்கு முன்னதாக அறநிலையத் துறைக்குத் தனி அமைச்சரும், தனி வரவு செலவுத் திட்டமும் இருந்தது இல்லை. சட்டப்பேரவையில் அறநிலையத் துறைக்கு என தனி விவாதம் செய்த சூழ்நிலையையும் உருவாக்கியவர் முதல்வர் கலைஞர். ஏதாவது ஒரு மானியத்தோடு சேர்த்துத்தான் அதுவரை அறநிலையத்துறை மானியத்தையும் நடத்துவார்கள். கலைஞர் காலத்தில் தான் அறநிலையத்துறைக்கு தனியான மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவது தொடங்கப்பட்டது.
தமிழினத் தலைவராக, தமிழ்ப்புலவராக மட்டுமில்லை, கோவில் தர்மகர்த்தாவைப் போல ஆலயங்களையும் காத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர முதல்வர் அண்ணா ஆணையிடுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சரான கலைஞர் அங்கேயே சென்று தங்கி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். அப்போது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காசிராமன், முதல்வர் அண்ணாவையும் அமைச்சர் கலைஞரையும் பாராட்டிப் பேசியது அவைக்குறிப்பில் இருக்கிறது.
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மன்னராட்சி காலத்தில் அமைக்கப்பட்டது திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவில். எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அக்கோவில் கோபுரங்கள் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு திருப்பணி செய்தார் முதல்வர் கலைஞர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் திருப்பணியை 1975 மார்ச் மாதம் நடத்தியவர் முதல்வர் கலைஞர்.
பேரூர் பட்டிப் பெருமாள் கோவில் திருப்பணியை முடித்து 1975 இல் குடமுழுக்கு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.
சென்னை வடபழனி முருகர் கோவில் குடமுழுக்கை 1975 ஆம் ஆண்டு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.
பழனி தண்டாயுதபாணி கோவில் விமானத்துக்கு தங்கத் தகடுகள் போட்டு நாற்பது லட்சம் செலவில் குடமுழுக்கு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை கோயில் குடமுழுக்கு நடத்தியவர் முதல்வர் கலைஞர்.
கொடுமுடி மகுடேசுவரசாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலசாமி கோவில் குடமுழுக்கு, இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவில் குடகுழுக்கு, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருப்பணிகள் முதல்வர் கலைஞர் காலத்தில் தான் நடந்தன.
பழனி கோவில் மலைப் பகுதியை விரிவுபடுத்தும் திருப்பணி வேலைகளை தொடங்கி வைத்தவர் முதல்வர் கலைஞர்.
நெல்லையப்பர் கோவில் கலைக்கூடம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தவர் முதல்வர் கலைஞர்.
நெல்லை கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன் கோவில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.
சங்கரன்கோயில் ஆலயத் திருப்பணிகள் தி.மு.க ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது.
திருவைகுண்டம் கள்ளபிரான் கோயில் திருப்பணிகள் தி.மு.க ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது.
ஆழ்வார் திருநகர் வடுவூர் கோதண்டராமசாமி கோவில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோவில், தஞ்சை மாவட்டம் பருத்தியப்பர் கோவில், பத்தணை நல்லூர் கோவில், திருமுல்லைவாயில் கோவில், மதுரை கூடலழகர் கோவில், சோளிங்கர் கோவில், விருத்தாசலம் விருத்தகிரீசுவரர் கோவில், சிதம்பரம் நடராசர் கோவில், திருமுஷ்ணம் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், வட சென்னை பாலசுப்பிரமணியர் கோவில், இடும்பாவனம், தாராபுரம், மூலனூர், வஞ்சியம்மன்கோவில், அவிநாசி கோவில், காரமடை ரங்கநாதர் கோவில், அய்யம்பாளையம் வாழைத் தோட்டத்து அம்மன் கோவில் - ஆகியவைகளில் திருப்பணி முடிந்தும், குடமுழுக்கு நடைபெற்றும் இருந்த நேரத்தில் தான் 1976 இல் கழக ஆட்சி கலைக்கப்பட்டது.
திருத்தணி, பழமுதிர்ச்சோலை, சென்னிமலை ஆகிய மலைக்கோவில்களுக்கு சிரமம் இல்லாமல் செல்வதற்கு ஒழுங்கான சாலைகள் அமைக்கப்பட்டதும் கழக ஆட்சியில் தான்.
பழனிகோவில் திருப்பணி தொடக்கவிழாவுக்கு முதல்வர் கலைஞரே சென்று தொடங்கி வைத்தார். அக்கோவில் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளித் தொடக்கவிழாவுக்கும் முதல்வர் கலைஞரே சென்றார்.
அதாவது சிறியதும் பெரியதுமான ஐந்தாயிரம் கோவில்களுக்கான திருப்பணிகளை அந்த ஒன்பது ஆண்டு காலத்தில் ( 1967 - 75) செய்து காட்டியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி!
இவை அனைத்துக்கும் மேலாக கோவில்களைக் கண்டுபிடித்துக் காத்தவரும் முதல்வர் கலைஞரே!
1967 ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 9,600 அறநிலையங்கள் மட்டுமே இருந்தது. துறைக்கு கட்டுப்படாமல் பல்லாயிரக்கணக்கான கோவில்களும் அவற்றுக்குச் சொந்தமான பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலமும் தனியார் வசம் இருந்தது. அதனை மீட்க முதல்வர் கலைஞர் அவர்கள், தனி அலுவலர் ஒருவரை நியமித்தார்கள். அவர் நடத்திய ஆய்வில் தான் தமிழகத்தில் 41 ஆயிரத்து 306 அறநிலையங்களும், அவைகளுக்குச் சொந்தமாக 2 இலட்சத்து 1,343 ஏக்கர் நிலமும் தனியார் நிலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் சுமார் 25 ஆயிரம் அறநிலையங்களும், 65 ஆயிரம் ஏக்கர் நிலமும் அந்தக் காலக்கட்டத்தில் (1967 -75) மீட்கப்பட்டது.
1967 க்கு முன்னால் தமிழ்நாட்டுக் கோவில்களின் ஆண்டு வருமானம் மொத்தம் 3 கோடி அளவுக்குத் தான் இருந்தது. 1975-76 நிதியாண்டில் ஆண்டு வருமானம் 12 கோடி ஆனது.
டெல்டா மாவட்டத்தில் ஒரு தர்மகர்த்தா, அந்த ஊர் கோவில் சுவாமியின் பெயரைத் தனது மகனுக்கு வைத்தார். ஆண்டவன் பெயரால் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் தன் குடும்பத்துக்கு மாற்றிக் கொண்டார். இந்தப் பரம்பரைத் தர்மகர்த்தாவைக் கண்டுபிடித்து வழக்குப் போட்ட ஒரிஜினல் தர்மகர்த்தா கலைஞர் தான்!
கோவில்களின் மூலமாக ஏழை பக்தர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களைத் தீட்டியவர் முதல்வர் கலைஞர். மிகக் குறைந்த செலவில் திருமணங்கள் நடத்திக் கொள்ள 1967 - 75 ஆகிய காலக்கட்டத்தில் மட்டும் 80 திருமண மண்டபங்கள் கட்டிக் கொடுத்தவர் முதல்வர் கலைஞர். 120 மண்டபங்கள் கட்டித் திறக்கப்படும் நிலையில் இருந்தது.
அனாதைக் குழந்தைகளுக்காக அரசு உதவி செய்து கோவில்கள் சார்பில் கருணை இல்லங்களைத் திறந்தவர் முதல்வர் கலைஞர். மயிலை கபாலீசுவர் கோவிலில் கருணை இல்லத் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் திருமுருக கிருபானந்த வாரியார். ''முதல்வர் கலைஞர் செய்யும் இதுபோன்ற நல்ல காரியங்களைப் பார்த்து 'நல்ல காரியம் செய்தாரப்பா முதல்வர்' என்று எம்பெருமானே மகிழ்வார்" என்று சொன்னார்.
10.9.1989 - காலையில் தலைமைச் செயலகத்தை நோக்கி சமயச் சான்றோர்கள், ஆன்மிகப் பெரியவர்கள், தமிழறிஞர்கள், மடாதிபதிகள், எழுத்தாளர்கள், சாமியார்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தார்கள். ஆமாம்! அது கோட்டையா கோவிலா என்று தெரியாத வண்ணம் மாற்றியிருந்தார் முதல்வர் கலைஞர்!
பதினான்கு ஆண்டுகள் கழித்து ஆட்சியைக் கைப்பற்றியவர் அவர். எல்லாத் துறைகளும் சிதைந்து சிதிலமடைந்து கிடந்தன. அதில் அறநிலையத் துறையும் ஒன்று. கோவில்கள் ஆன்மிக தலங்கள் மட்டுமல்ல, தமிழ்ப்பண்பாட்டையும் நாகரீகத்தையும் சிற்பக் கலையையும் தொன்மையையும் பறை சாற்றுபவை. அதனால் அதனை புனரமைக்க தவத்திரு குன்றக்குடி அடிகளார், முன்னாள் நீதியரசர் கிருஷ்ணசாமி (ரெட்டியார்), திருவரங்கம் திருமலை (அய்யங்கார்), காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஆஸ்தான புலவர் செந்தில்நாதன், இராதாதியாகராஜன் ஆகிய ஐவர் கொண்ட அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவை அமைத்தார்.
தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையிலேயே இப்படி ஒரு குழு அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.
அதில் தான் மூன்று மேற்கோள்களைக் காட்டினார். இரண்டு தனது கருத்துக்களாகச் சொன்னார்.
1. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் கொள்கையே தி.மு.கழகத்தின் கடவுள் கொள்கை என்று அறிவித்தார் பேரறிஞர் அண்ணா.
2. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற தாகூரின் தத்துவத்தையே அண்ணாவும் செயல்படுத்தினார்.
3. 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வடலூர் வள்ளலாரின் கருத்தாழம் மிக்க வரிகளை மறக்காமல் கடவுள் பணி என்ன என்பதை உணர்ந்து கழக அரசு காரியமாற்றி வருகிறது.
* கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது.
* கடவுளை நாம் ஏற்றுக் கொள்வது பெரிதல்ல. கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நாம் நடக்கிறோமா என்பதுதான் முக்கியம்.
- இறுதியாகச் சொன்ன இரண்டும் முதல்வர் கலைஞரின் வரிகள். இதனைச் சொல்லி விட்டு, யாருக்கும் எந்தக் குழப்பமும் வேண்டாம் என்பதைத் தெளிவுபடுத்தினார்.
இந்த விளக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலத்தில் இருந்து சொல்லி வருகிறது.
1989 ஆம் ஆண்டு அறநிலையப் பாதுகாப்புக் குழு அமைத்தது போலவே 1996 ஆம் ஆண்டு ஆட்சியிலும் ஒரு குழு அமைத்தார் முதல்வர் கலைஞர். இதில் குன்றக்குடி ஆதினகர்த்தர், திருப்பனந்தாள் மடாதிபதி, திருவாவடுதுறை ஆதினகர்த்தர், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமிஅடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், கருமுத்து கண்ணன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்தக் குழுவினர் சொன்னபடி செய்து கொடுத்தவர் முதல்வர் கலைஞர்.
ஜெயலலிதாவின் (1991-96) ஆட்சியில் 828 கோவில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள் நடந்தன. முதல்வர் கலைஞரின் (1996-2001) ஐந்தாண்டுகளில் 2,459 கோவில்களுக்கு திருப்பணி நடைபெற்று குடமுழுக்கு விழாக்கள் நடந்தன.
மயிலை கபாலீஸ்வரர் திருக்கோவில், திருப்பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், திருநீர்மலை ரெங்கநாத சுவாமி திருக்கோவில், திருப்பாபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், கடலூர் திருவேந்திரபுரம் தேவநாதசாமி திருக்கோவில், சென்னை மல்லீஸ்வரர் திருக்கோவில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில், சோளிங்கர் லெட்சுமி நரசிம்மசாமி திருக்கோவில், சீர்காழிக்கு அருகில் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோவில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோவில், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரில் அரவிந்தலோசனர் திருக்கோவில், சென்னை சென்னகேசவப் பெருமாள் திருக்கோவில், திருப்பெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி திருக்கோவில், கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவில், கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோவில், ஆழ்வார் திருநகரி ஆதிநாதாழ்வார் திருக்கோவில், சென்னை குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், மதுரை சக்கரத்தாழ்வார் சன்னதி காளமேகப் பெருமாள் திருக்கோவில், சென்னை அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், திருவாரூர் மாவட்டம் வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் திருக்கோவில், தொட்டியம் அருகில் உள்ள திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில், திருவானைக்கால் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி திருக்கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில், காங்கேயம் சுப்ரமணியசுவாமி திருக்கோவில், தாந்தோன்றி மலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில், திருமுட்டம் பூவராகஸ்வாமி திருக்கோவில், சிவாயம் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவில் - ஆகிய கோவில்களுக்கு திருப்பணியையும் திருக்குட குழுக்கும் திறம்பட நடத்தியவர் முதல்வர் கலைஞர்!
கோவில் சொத்துக்களை அதிகம் மீட்டுக் காட்டியவர் முதல்வர் கலைஞர். பல்லாயிரம் ஏக்கர் நிலமும் மனைகளும் மீட்டுக் கொடுத்தார். கிராமப்புற பூசாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்தார். கோவில்களில் செயல்படும் கருணை இல்லங்களுக்கு 50 சதவிகிதம் அரசு மானியம் வழங்கினார். திருக்கோவில் தொடர்பான ஆகம விதிகள் வடமொழியில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்து, வெளியிட முயற்சிகள் செய்தார். அருள்மிகு விநாயகர் போற்றி, அருள்மிகு முருகன் போற்றி, அருள்மிகு சிவன் போற்றி, அருள்மிகு திருமால் போற்றி, அருள்மிகு நடராசர் போற்றி, அருள்மிகு கோதண்டராமர் போற்றி, அருள்மிகு துர்க்கையம்மன் போற்றி, அருள்மிகு அனுமன் போற்றி, அருள்மிகு நவகோள்கள் போற்றி முதலிய தமிழ் அர்ச்சனை நூல்கள் வெளியிட்டார்.திருக்கோவில்களில் பணிபுரிந்துவரும் அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் ஆகியோர்களுக்கு ஓராண்டு காலப் புத்தொளிப் பயிற்சி அளிக்க 20 சைவத்திருமுறை ஆகம பயிற்சி மையங்களும், 7 வைணவ திவ்ய பிரபந்த பயிற்சி மையங்களும் அமைத்தார்.
இவை எல்லாம் ஏன் செய்தார்? 'இந்துக்களின் வாக்குகளை வாங்கவா?' இல்லை!
அவரே சொன்னார்: ''இதயத்தில் பதிந்திருக்கும் கொள்கைக்கும் ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்புக்கும் மாசு வராமல் காப்பாற்றும் கடமை கழக அரசுக்கு உண்டு" என்று உறுதி எடுத்துக் கொண்டவர் முதல்வர் கலைஞர்!
'மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று பிரகடனம் செய்து கொண்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். இறுதிவரை அதில் உறுதியாய் இருந்தவர். தன்னுடைய சுயமரியாதை மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனின் சுயமரியாதைக்கு எங்கே, யாரால், எப்போது பங்கம் வந்தாலும் அதைத் தடுப்பதில் முதல் போராளியாக முன்னுக்கு நின்றவரும் அவர் தான்.
கோட்டையாக இருந்தாலும் கோவிலாக இருந்தாலும் தமிழனின் முன்னேற்றத்துக்கு பயன்பட வேண்டும், தமிழைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். கோவிலைக் காட்டி தமிழனையும் தமிழையும் புறக்கணிக்கும் கூட்டத்துக்கு இறுதி வரை எதிராகத்தான் இருந்தார்.
இதோ 2006 - 2011 காலக்கட்டத்தில் செய்து காட்டியவை:
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 539 கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டு குடகுழுக்கு விழா நடத்தியவர் முதல்வர் கலைஞர். மிகவும் சிதலமடைந்து இருந்த பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட 48 கோவில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். தேவாரத் திருமுறைகளிலும் திவ்யப் பிரபந்தங்களிலும் பாடப்பட்டு நீண்ட காலமாக திருப்பணி மேற்கொள்ளப்படாத 30 கோவில்களை புனரமைத்தார். நிதி வசதி மிக்க கோவில்களின் உபரி நிதியிலிருந்து நிதிவசதியற்ற கோவில்களின் திருப்பணிக்கு நிதி உதவிகள் செய்ய வைத்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில் குளம் சீரமைக்கப்பட்டது. அஷ்டபுஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரங்கசாமி குளம் சீரமைக்கப்பட்டது. 16 கோவில்களுக்கு தங்கரதப் பணி முடிவடைந்து தங்கரத உலா நடைபெற்றது. 3 கோவில்களுக்கு வெள்ளிரதப் பணி முடிவடைந்து வெள்ளிரத உலா நடைபெற்றது. பழுதடைந்த மரத்தேர்கள் அனைத்தும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
திருவாரூர் தியாகராசர் சுவாமி கோவில் அம்பாள் தேருக்குப் பதிலாக புதுத்தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடத்தப்பட்டது. பழனி தண்டாயுதபாணி கோவில் பஞ்சாமிர்தம் தானியங்கி இயந்திரம் மூலமாக தயாரிக்கப்பட்டது. திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கும் நவீன திருமண மண்டபங்கள் கட்டித் தரப்பட்டன. சமயபுரம் மாரியம்மன் கோவில் மூலவர் விமானம் தங்க விமானமாக அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. திருப்பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோவிலுக்கும் தங்க விமானம் அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
கிராமப்புற பூசாரிகள் நல வாரியம் அமைத்தார் முதல்வர் கலைஞர். அறங்காவலர் குழுவில் ஒரு மகளிர், ஒரு ஆதிதிராவிடர் இடம்பெற வைத்தார். 114 கோவில்களில் நூலகம் அமைத்தார். ஆண்டவன் முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் முக்கிய பிரமுகர்களுக்கு பரிவட்டம் கட்டுவதை நிறுத்தினார். ஒரு கால வழிபாடு மட்டுமே நடக்கும் அளவுக்கு நிதிவசதியற்ற கிராமப்புற கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு இலவசமாக மிதிவண்டி கொடுத்தார். தமிழில் வழிபாடு நடத்த உத்தரவிட்டார். தமிழில் மிகச் சிறப்பாக வழிபாடு செய்பவர்க்கு ஊக்கத் தொகை வழங்கினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம் போட்டார்.
ஒரு கொள்கைவாதி - ஒரு சீர்திருத்தவாதி - ஒரு சனநாயகவாதி - ஒரு நடுநிலையாளர் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நடந்து கொண்டார். அப்படித்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு இயங்கியது. இயங்கும்!
திருக்கழுக்குன்றம் கோவில் திருப்பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசும் போது, ''நம்முடைய மனச்சாட்சி தான் நமக்குக் கடவுள். நம்முடைய மனச்சாட்சிக்கு பயந்து நடக்கிற மனிதன் தான் ஆண்டவன்" என்று பேசினார்.
பல காலமாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை முதல்வர் கலைஞர் தான் மீண்டும் ஓட்டினார் என்பது அனைவருக்கும் தெரியும். தேரைப் புதுப்பித்தும் தேரோடும் வீதியைப் புதுப்பித்தும் காட்டினார் அவர்.
இதன் தொடக்கவிழாவுக்கு இரண்டு நாள் கழித்து வேறொரு நிகழ்ச்சியில் தந்தைப் பெரியாரும் முதல்வர் கலைஞரும் கலந்து கொள்கிறார்கள். தமிழக அமைச்சரவைக்கான பாராட்டு விழா அது. அங்குதான் முதல்வர் கலைஞர் சொன்னார்: ''பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தொடருவோம். அதேநேரத்தில் பக்திப் பிரச்சாரத்தைத் தடுக்க மாட்டோம்'' என்றார். பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு சொன்னது அது.
''தேர் நான்கு நாட்கள் தான் ஓடுகிறது. மற்ற நாட்கள் எல்லாம் மக்கள் தான் நடக்கிறார்கள்" என்று இரண்டு பயன்களையும் சொன்னார் முதல்வர் கலைஞர். 'கோயிலைச் சார்ந்த மக்கள், மக்களைச் சார்ந்த கோயில்கள்' என்று இதைத் தான் சொன்னார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இதை நடைமுறையில் செய்து காட்டியவர் முதல்வர் கலைஞர்.
இப்படிச் செய்து தருவதால் தனது கொள்கையில் இருந்து நழுவிவிட்டதாக அவர் நினைக்கவில்லை.
''ஒரு புடவைக் கடையைத் திறந்து வைக்கப் போகிறேன். யாரும் அங்கிருக்கும் ஒரு புடவை எடுத்துக் கட்டிக் கொள் என்று கட்டாயப்படுத்த மாட்டீர்கள். அதுபோல நீ கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சொல்ல மாட்டீர்கள். கடவுளை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர்களது விருப்பத்தைப் பொறுத்ததாகும்" என்றார் முதல்வர் கலைஞர். அத்தகைய விருப்பு வெறுப்பற்ற ஆட்சியைத் தான் அவர் கொடுத்தார். ஆத்திகரும், நாத்திகரும் விரும்பும் ஆட்சியாக, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொள்ளும் ஆட்சியாகத் தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்தது! அப்படித்தான் இருக்கும்!
அறநிலையங்கள் உண்மையான உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் காக்கப்பட வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையவேண்டும்!
கோவில்கள் காக்கப்பட, அறநிலையங்கள் அறநிலையங்களாக மட்டுமே செயல்பட ஆதரிப்பீர் உதயசூரியன்!
- தொடரும்...
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!