உணர்வோசை
"தமிழகத்தை கால் நூற்றாண்டு காலம் பின்நோக்கி இழுத்துச்சென்ற பழனிசாமி" : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே-1
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே வணக்கம்!
தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதினாறாவது தேர்தலைச் சந்தித்து உங்களது வாக்குகளைச் செலுத்த இருக்கிறீர்கள்!
பழனிசாமியைப் போல பல்லாயிரம் கோடி அல்ல, உங்களின் மூன்று நிமிடங்களைக் கடனாகக் கேட்கிறேன்!
இந்தியாவுக்கு வணிகம் செய்யவே ஆங்கிலேயர்கள் வந்தார்கள். வணிகத்துக்காக வந்து துவங்கியதே கிழக்கிந்தியக் கம்பெனி. இந்த கம்பெனியின் அலுவல்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே ஒழுங்குமுறை சட்டங்கள். சொத்துச் சேர்த்த கிழக்கிந்திய கம்பெனி, நிலங்களை வளைக்க ஆரம்பித்தது. நிலங்களின் மூலமாக நிர்வாகத்தையும் வளைத்தது. கம்பெனியின் ஒழுங்குமுறை சட்டங்களே நிர்வாகச் சட்டங்களாக மாறியது. கம்பெனி நிர்வாகம் அனைத்தும் ஆட்சியியல் நிர்வாகம் ஆனது. கம்பெனி நிர்வாகிகள், கவர்னர் ஜெனரல்கள் ஆனார்கள். கவர்னர் ஆனார்கள். இவை அனைத்தும் பிரிட்டிஷ்காரர்களால் பிரிட்டிஷ்காரர்களுக்காக இந்திய மண்ணில் ஆளப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியாகவே இருந்தது. இதில் முதன்முதலாக இந்தியாவில் இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டியவர் ஜேம்ஸ் மில்!
''தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ சட்டமன்றங்கள் வாயிலாகத்தான் கொடுங்கோல் ஆட்சியின் ஆபத்தில் இருந்து மக்கள் விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வினைப் பெறுவார்கள்" என்று சொன்னார் ஜேம்ஸ் மில்!
ஆனால் சட்டமன்றங்களின் மூலமாக கொடுங்கோல் ஆட்சியை அமைக்க முடியும் என்பதைத்தான் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் நாட்டு மக்களுக்கு காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
சர்வாதிகார மனம் படைத்த ஜெயலலிதாவைப் போலவே, இந்த கொத்தடிமைப் பயந்தாங்கோளிகளும் கொடுங்கோல் ஆட்சியை நடத்தியது தான் தமிழகம் சந்தித்த பேரழிவாக மாறிவிட்டது!
இந்த பேரழிவுக்கு பெருந்தடை போட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சியை மலர வைக்க வேண்டிய கடமை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இருக்கிறது!
புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன் மக்கள், பொன், நெல், நல்விதி, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இனிமை, துணிபு, நோயின்மை, நீண்ட ஆயுள் - ஆகியவற்றைக் கொண்டு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவது தமிழ் மரபு!
நாட்டு மக்கள் இப்போது சந்திக்கப் போகும் பொதுத்தேர்தல் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல்!
பதிநான்காவது, பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தல்களில் வென்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது, தமிழகத்தை கால் நூற்றாண்டு காலத்துக்கு பின் நோக்கி இழுத்துச் சென்று விட்டது.
அரசாங்கப் பணத்தை எடுத்து தனது முகத்துக்கு ரோஸ் பவுடர் விளம்பரம் அடித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழகம் தரை தட்டி நிற்கிறது. ஆனால் 'வெற்றி நடை போடும் தமிழகம்' என்ற போலி விளம்பரத்தைக் கொடுத்து பொய் வேடம் போடத் தொடங்கி இருக்கிறது.
சசிகலா குடும்பத்துக்கு கறாராக கப்பம் கட்டியதால் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அதனை சசிகலா காலை நோக்கி ஊர்ந்து போய் பெற்றார் பழனிசாமி. அதன்பிறகு சசிகலாவுக்கே துரோகம் செய்தார். பா.ஜ.கவின் பாதம் தாங்கி தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் தாரை வார்த்துவிட்டார் பழனிசாமி.
மாநில உரிமைகளையே பறித்துவிட்டது மத்திய அரசு. ஜி.எஸ்.டி வசூல் மூலமாக தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. பேரிடர் காலங்களில் தமிழகம் கேட்ட நிதியை தருவது இல்லை. நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்வி உரிமையை சிதைக்கிறார்கள். சமூகநீதியை குழிதோண்டி புதைக்கிறார்கள். தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. இந்தியும் சமஸ்கிருதமும் திணிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படுகிறது. வேளாண்மை, கல்வி ஆகியவற்றில் மத்திய அரசு அளவுக்கு மீறி தலையிடுகிறது. இது எதையும் தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி தான், 'வெற்றி நடை போடும் தமிழகம்' என்று விளம்பரம் தருகிறார்!
நீட் தேர்வுக்கு எதிராக கடந்த நான்காண்டு காலமாக பெரிய எழுச்சியை தமிழகம் சந்தித்து வருகிறது. அந்த எதிர்ப்பின் காரணமாகத்தான் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித ஒதுக்கீடு கொடுத்தார்கள். அந்த சட்டத்தையும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி விட்டு சும்மா இருந்தது தமிழக அரசு. தி.மு.க நடத்திய போராட்டம், ஆளுநருக்கு கொடுத்த நெருக்கடி ஆகியவற்றின் காரணமாகத்தான் இந்த வசதி கிடைத்தது. 'மூன்று ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு வர முடியவில்லை. இந்த ஆண்டு தான் வந்துள்ளார்கள்' என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். மூன்று ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்கள் நுழைய முடியாததற்கு யார் காரணம்? இதே பழனிசாமி தானே காரணம்? இந்த ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவேற்றி இருந்தால் எத்தனையோ மாணவர்கள் நுழைந்திருப்பார்கள். இதைச் செய்யாதது யார் தவறு?
காவிரியைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. காவிரி உரிமையை மத்திய அரசின் ஜல்சக்தி துறையிடம் அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி. கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதை தடுக்க முடியவில்லை. கர்நாடக பா.ஜ.க அரசினை மீறி மத்திய பா.ஜ.க அரசால் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்துக்கு உரிமையை தருவதால் மத்திய பா.ஜ.கவுக்கு எந்த பயனும் இல்லை. அந்தக் கட்சிக்கு தனியாக நின்று ஒரு எம்.எல்.ஏ., ஒரு எம்.பி, வெற்றி பெறும் அளவுக்கு கூட செல்வாக்கு இல்லை. அதனால் தமிழகத்துக்கு எந்த நீதியையும் பா.ஜ.க அரசு வழங்காது. பழனிசாமி வேண்டுமானால் காவிரி காப்பான் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் காவிரி உரிமையை அவரால் வாங்கித்தரவும் முடியாது.
தொழில் முதலீட்டை ஈர்த்ததாக பீற்றிக் கொள்கிறார்களே தவிர, எவ்வளவு முதலீடுகள் வந்தது, யார் தொழில் தொடங்கினார்கள் என்பதற்கான வெள்ளை அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. தனியாரிடம் மின்சாரத்தை வாங்கிக் கொண்டு மின் மிகை மாநிலமாக எப்படிச் சொல்ல முடியும்? அத்திக்கடவு -அவிநாசித் திட்டத்தின் முன்னோட்டமாக சில திட்டங்களை திமுக ஆட்சியே செய்து முடித்துவிட்டது. காவேரி குண்டாறு திட்டம் இன்னமும் தொடங்கவே இல்லை. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சும்மா அறிவிக்கப்பட்டதே தவிர, அப்படி மாறிவிடவில்லை. மாற்றப்பட்டு விடவில்லை.
மினி கிளினிக் என்ற பெயரால் 2,000 மருத்துவமனைகள் தொடங்கிவிட்டதாகச் சொல்வதே மோசடி. அப்படி எந்த புதிய மருத்துவமனைகளும் கட்டப்படவுமில்லை. மருத்துவர்கள் பணிக்கு சேர்க்கப்படவும் இல்லை. இப்படி அவர் எதையெல்லாம் சாதனை என்கிறாரோ அவை அனைத்தும் சாதனைகள் அல்ல. போலியாகச் சொல்லிக் கொள்ளும் பெருமைகள் தான்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு என்பது முதல்வர் கலைஞர் கொண்டு வந்த திட்டம். நெசவாளருக்கு கட்டணமில்லாத மின்சாரம் என்பது கழக அரசால் வழங்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது முதல்வர் கலைஞர் வழங்கியது. கழக ஆட்சியிலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. ஆனால் இதை எல்லாவற்றையும் தங்களது ஆட்சிப் பெருமையாக சொல்லிக் கொண்டு கோடிகளைச் செலவு செய்து விளம்பரம் கொடுக்கிறார்கள்.
எனவே எடப்பாடி அரசு கொடுத்துள்ள முதல் பக்க விளம்பரங்கள் முழுக்க முழுக்க முதல் தர பொய் விளம்பரங்கள்தான்!
இலஞ்சம், ஊழல், கையூட்டு, முறைகேடுகள், கமிஷன், வன்முறைகள், அதிகார துஷ்பிரயோகம், ஆணவம், அகம்பாவம், காவல்துறை அராஜகங்கள், அடிமைத்தனம், கொத்தடிமைத்தனம், தாரை வார்த்தல், துரோகம், சீர்கேடுகள், காட்டிக் கொடுத்தல் - ஆகிய பதினாறு சீரழிவுகளைக் கொண்டது தான் பழனிசாமி ஆட்சி காலம்!
உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதே என்று பழனிசாமியிடம் கேட்கிறார்கள்.
யார் மீது தான் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்று கேட்கிறார் பழனிசாமி!
இப்படி ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக இருந்தது தமிழகத்துக்கு கேவலம் அல்லவா?
நீங்கள் உங்கள் உறவினர்களுக்கு பல்லாயிரம் கோடி டெண்டர் கொடுத்துள்ளீர்களா? என்று பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்கிறார்கள்.
எனக்கு தமிழ்நாடு முழுவதும் உறவினர்கள் இருக்கிறார்கள் என்று பதில் சொல்கிறார் பழனிசாமி!
இப்படி ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக இருந்தது தமிழகத்துக்கு கேவலம் அல்லவா?
உங்கள் உறவினர்கள் பல்லாயிரம் கோடி டெண்டர்கள் எடுத்துள்ளார்களே என்று பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்கிறார்கள்.
என் உறவினர்கள் தொழில் செய்யக் கூடாதா என்று திருப்பிக் கேட்கிறார் பழனிசாமி.
இப்படி ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக இருந்தது தமிழகத்துக்கு கேவலம் அல்லவா?
உங்கள் உறவினர்கள் பல்லாயிரம் கோடிக்கு இ-டெண்டர்கள் போட்டுள்ளார்களே என்று பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்கிறார்கள்.
எனது உறவினர்கள் இ-டெண்டர் போட்டது எனக்குத் தெரியாது என்று பதில் சொல்கிறார் பழனிசாமி.
இப்படி ஒருவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக இருந்தது தமிழகத்துக்கு கேவலம் அல்லவா?
பயமே இல்லாமல் கொள்ளை அடிப்பது-
கூச்சமே இல்லாமல் அதனை பொதுவெளியில் ஒப்புக் கொள்வது தான் பழனிசாமியின் ஊழல் முகம்!
இந்த முகத்தில் வாக்காளப் பெருமக்கள் கரி பூசியாக வேண்டும்!
தரையில் ஊர்ந்து போனதால் தகுதியைப் பெற்று-
அதனைத் தக்க வைப்பதற்காக தன்னையே விற்று-
அந்த விற்பனைக்காக தமிழகத்தையே சூறையாடி-
அந்த சூறையாடலுக்காக நாட்டையே அடமானம் வைத்து-
அடமானம் வைத்த கழிசடைத்தனத்தை மறைக்க விளம்பரங்கள் கொடுத்து-
அந்த விளம்பரங்களின் மூலமாக தனக்குத் தகுதி வந்துவிட்டதாக தானே நினைத்து-
தற்குறித்தனத்துக்கு தமிழ்நாடே சமம் எனக் கருதி-
மீண்டும் சூறையாடக் கிளம்பிய பழனிசாமி - பன்னீர்செல்வம் அண்ட் கோ வின் கொள்ளையாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
இந்தக் கேடுகெட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை, வாக்காளர்களாகிய உங்களிடம் தான் இருக்கிறது.
வாக்குப் பெட்டி அல்ல அது, உங்கள் வாழ்க்கைப் பெட்டி!
வாக்குச்சாவடி அல்ல அது, உங்கள் வாழ்க்கைச் சாவடி!
பத்தாண்டு காலத்தமிழகத்தை சாவடித்து வந்த அ.தி.மு.க கூட்டத்துக்கு பேரடியாக இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும்.
ஏ தலைதாழ்ந்த தமிழகமே என்றார் அண்ணா!
தலைதாழ்ந்து கிடக்கும் தமிழகத்தை தலைநிமிர்ந்த தமிழகமாக மாற்ற திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பீர்!
- தொடரும்
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!