உணர்வோசை
'இயற்கை ஓர் இன்பவல்லி - ஆனால், ஒரு ஜாலக்காரி' - பேரறிஞர் அண்ணா எழுதிய பொங்கல் தின வாழ்வியல் கட்டுரை!
பொங்கல், உழவர் விழா! தமிழர் திருநாள்! நம்பொணாப் புராணக் கருத்தினை நாட்டினர் மனத்திலே மூட்டிவிடும் மற்றைய விழாக்கள் போலன்றி, உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னதமான விழா. களத்திலே காணப்பட்ட பயன், வீட்டிலே, புதுப்பானையிலே, பொங்கிவழியும் நாள், பொங்கல் விழா. செந்நெல்லும், செங்கரும்பும், பச்சைக் காய்கறியும் பசும்பொன்நிறப் பண்டங்களும், வண்ணக் கோலமும், வாடாமலர்களும், மனைதோறும் குவிந்திடும் மக்கள் நன்னாள்!
கூந்தலிலே மலர்கள் மொய்க்கும் நாள்! ஆடல், பாடல், கொட்டு முழக்கு, குதூகலம் கூத்தாடும் நாள், பொங்கல் விழா. பாடுபட்ட உழவன் தன் வீட்டுப்பானையில், தான் உழைத்ததில் சிறிதளவு பயனாவது, சேர்வதைக் காணும் நாள்.
களத்திலே செந்நெல் குவியலைக் கண்டபொழுதும், அது புதிய கலத்திலே தீம்பாலமுதாக மாறுவதைக் காணும்பொழுதும், அவனுடைய உள்ளத்தில் உவகை பொங்குகிறது! அவன் பாடுபட்ட நாட்கள், திருந்தாத நிலத்தில் அவன் பட்ட கஷ்டங்கள், வாய்க்காலுக்கு வரப்பெடுத்த காலம், வரப்பைச் சூழ்ந்த கள்ளி முள்ளியைக் கல்லி எடுத்துவிட்டுப் பயன்தருமிடமாகச் செய்தகாலம். முதலில் ஏர்பூட்டியது, எருவூட்டியது, பரம்படித்தது, மடைதிறந்தது, விதைதூவியது, களைஎடுத்தது, காற்றிலும் மழையிலும், கடும் வெயிலிலும், பயிரைப் பாதுகாத்தது, கதிர்காய்ந்ததும் களத்திலே குவிந்தது.
இவை எல்லாம் அவன் நினைவிற்கு வருகின்றன. அவனுடன் கூடச் சேர்ந்து உழைத்த உற்றார், உறவினர், ஆருயிர்த் தோழர்களைப் பற்றிய நினைவும் வருகிறது. இவ்வளவு நற்கருத்துகளும், இவ்விழாவின் உட்பொருளாக அமைந்திருக்கிறது.
அறுவடைதரும் ஆனந்தத்தை, பயன்பெறுபவர் கொண்டு மகிழ்கின்றனர்-மகிழ்கையில், அவர்தம் மனத்திலே எப்படிப்பட்ட பாடுபட்டபிறகு, இந்த அறுவடை சாத்தியமாயிற்று என்பதுபற்றிய எண்ணம், எழாமலிருக்க முடியுமா? பொங்கற் புதுநாள், தமிழர் திருநாள், வாழ்வின் உட்பொருளை உணருவதற்கு உதவும் நாள். அதோ பாலிலே குழையும் சீரகச்சம்பாவைப் பெறுவதற்குப் பாட்டாளி சிந்தியது வியர்வை! இரத்தமும் கூடத்தான்! பாற்பொங்கலாகும் போது, சுவையும் பயனும்! இச்சுவையும் பயனும் கிடைத்திடப் பல பாடுபட்டான்; பஞ்சையாகி நொந்தான் பகலெல்லாம் உழைத்துவிட்டு இரவிலே தூக்கம் பிடிக்காமல் புரண்டிருக்கிறான்.
கார்கண்டு களிப்பான்! கடும்காற்றுக் கண்டு கிலி கொண்டிருப்பான்! பூச்சிகண்டு பதைத்தான்! பூமி உலரக்கண்டு பீதி கொண்டான்! முளைகண்டால், முகம் மலரும்! களைகண்டால், கரம் செல்லும் களைய! கதிர்கண்டு ஒருகளிப்பு! அதிலே மணிமுற்றுவதுகண்டு ஒரு பூரிப்பு! அறுவடையின்போது மகிழ்ச்சி! இவ்வளவுமான பிறகுதான், இன்பம் தரும் பொங்கற் புதுநாள் காணமுடிகிறது! களிப்பூட்டும் விழா நாளன்று, இந்தக்கருத்து மனைதோறும் உலவவேண்டும்.
வாழ்க்கையிலே இன்பம் பெறுவதையே குறிக்கோளாக மக்கள் கொண்டுள்ளனர். இந்த இன்பத்தைப் பெறுவதற்காகப் பாடுபடவேண்டும். முறையுடன் திறத்துடன்; களைக்காமல் சளைக்காமல் என்பதைப் பொங்கல் விழாதரும் பாடமாகக் கொள்வோம்.
முதலிலே, நஞ்சையும் புஞ்சையும், வரப்பு வாய்க்காலுடன், வேலி காவலுடன், வாவி அருவியுடன், இருந்ததோ பெருவெளி- மணற் காடு-சதுப்பு நிலம்-சிறுகாடு- இவையன்றோ வயல்களாக மாற்றப்பட்டன- மந்திரக் கோல் கொண்டா? -அல்ல- மதிவழிநடக்கும் மக்கள் பாடுபட்டதனால். எத்தனை இரவுகள் விழித்துக் கொண்டு எண்ணி எண்ணி ஏக்கமுற்றுப் பிறகு கண்டுபிடித்திருப்பான் உழவு முறையை!
பல தோல்விகளுக்குப் பிறகு, துயரத்தால் தாக்கப்பட்ட பிறகு, விடாமுயற்சியின் பயனாகக் கண்டறிந்தான், நிலத்தைத் திருத்தி நற்பயனைக் காணும் முறையினை. இன்று சாதாரணமானதாகக் காணப்படும் முறைகளைக் கண்டறிய, முன்னாளில், மக்கள் அரும்பாடுபட வேண்டியிருந்தது.
இன்பம்பெற, உழைத்தாக வேண்டும், முறையும் திறனும் கொண்டு! இயற்கையை எழிலிடமாகவும், பயன்தருமிடமாகவும் ஆக்குவதற்குப் பாடுபட்டே, வெற்றி காணமுடிந்தது. இயற்கை, வளம் நிரம்பக்கொண்டது. வாழ்வளிக்கும் வல்லமை கொண்டது - ஆனால், இயற்கை, மனிதனின் மதியும் திறனும் கலந்த உழைப்பைப் பெற்றால் மட்டுமே, பரிசளிக்கும் பண்பு கொண்டது!
மனிதனுக்குத் தெளிவு இல்லா நிலையிலே, இயற்கை, அவனை மிரட்டும் - மிரட்டுகிறது - மிரட்டி இருக்கிறது பன்னெடுங்காலமாக! பெருவெள்ளமாக, கடுங்காற்றாக, நெருப்பாக, இயற்கைக் கோலம் காட்டி மிரட்டியிருக்கிறது. சிங்காரச் சிற்றருவியாகிச் சிந்துபாடி இருக்கிறது! சந்தனக் காட்டிலே உலவி நறுமணத்தைச் சேர்த்தெடுத்துக்கொண்டு வந்து சேர்க்கும் தென்றலாகி இன்பம் தந்திருக்கிறது! ஒளியும் ஒலியுமாகி, திருவிளக்காகவும், தீங்குழலிசையாகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறது.
இயற்கை ஓர் இன்பவல்லி - ஆனால், ஒரு ஜாலக்காரி! அவள் மிரட்டுவது கண்டு, அவளை அடியோடு வெறுத்து ஒதுக்கி விட முடியாது- ஒதுக்கிடின், மக்களுக்கு வாழ்வில்லை- அவள் புன்னகை கண்டு பூரித்துச் செயலற்றுமிருந்து விடமுடியாது-வாழ்க்கை செம்மைப்படாது. இயற்கை, மனித முயற்சியினாலும், மதியின் வளர்ச்சியினாலும், கட்டுப்படுத்தப்பட்டுப் பயன்தரும் விதமாகப் பணியாற்றும் பாவையாக்கப் படவேண்டும். நீரின்றி வாழமுடியாது. நீரிலேயே வாழவும் முடியாது! நெருப்பின்றி வாழ முடியாது! நெருப்பிலேயே வாழவும் முடியாது! இயற்கையின் உயிர் இல்லை.
காற்றிலேயே இருந்துகொண்டிருக்க முடியாது! இயற்கையின் சக்திகளின்றி வாழ முடியாது. ஆனால், இயற்கையுடன் மட்டுமே வாழவும் முடியாது! தானாக விளைவதைக் கண்டு, உண்டு, நீருள்ள இடத்திலே சென்று தண்ணீரை உண்டு, காற்றடித்தால் கஷ்டப்பட்டு, நெருப்புப் பரவினால் பயந்தோடி, வெள்ளம் கிளம்பினால் மிரண்டோடி இயற்கையினாலே ஆட்டிவைக்கப்படும் ஆதி மனித நிலையை விட்டு, மனிதன் மிகமிகக் கஷ்டப்பட்டு இன்று அடைந்துள்ள முன்னேற்றம், கொஞ்ச நஞ்சமல்ல - எண்ணிப் பார்த்தால் அவன் பெற்றுள்ள வெற்றிகள், சாமான்யமானவையல்ல என்பது தெரியும்.
ஆனால், அவன் பெற வேண்டிய வெற்றிகளோ, அநேகம்-வளர்ந்தபடி உள்ளன. இன்புற்றிருக்கவே இயற்கையைத் தன்வழிக்குக் கொண்டுவர, மனிதன் பாடுபட்டிருக்கிறான். வளம்கிடைக்க, வாழ்வுக்கு வழிகிடைக்கப் பாடுபட்டு, முறைபல கண்டறிந்தான்-அவற்றிலே அற்புதமானது இந்த உழவு முறை. ஆனால், வளம் நிரம்பியதாய், வசதியாய், உலகு ஆக்கப்பட்டு விட்டதால் மட்டுமே, இன்பம் கிடைத்துவிடுமா? இல்லை! உலகைப் பார்க்கிறோம்-கண்ணீர் நிற்கவில்லை! இரத்தம் சிந்தியபடியே தான் உள்ளனர்.
அதோ அழகுள்ள புள்ளிமான், அருவியோரத்தில், பசும்புல்லை மேய்ந்துகொண்டு இருக்கக் காண்கிறோம்- இன்புற்றிருக்கிறது- உண்மை - ஆனால், அதோ, சற்றுத் தொலைவிலே புதருக்குள்ளே ஒரு சலசலப்பு- இரு தீச்சுடர்கள்-ஓர் உறுமல்-பாய்ந்து வருகிறது சிறுத்தை! புள்ளிமானின், இரத்தம், சிறுத்தைக்கு இனிய பானமாகியது! பாய்ந்தோடித் தாக்கும் சிறுத்தை, பெற்ற இறைச்சியிலே, கீழே சிதறிய சிறுதுண்டுகளைக் கவ்விக்கொண்டோடும் சிறுநரி, இன்புறுகிறது, மற்றொருபுறம். மாடப் புறாவை, வல்லூறு துரத்துகிறது-அதை வீழ்த்த, வேடனின் கணைபறக்கிறது! ஆடும் மயிலைக் கண்டு மகிழ்கிறான் வேடன்; அவன் காலைத் தீண்டிக் கொல்கிறது நாகம்! கீரி பாய்ந்து, நாகத்தைப் பிய்த்து எறிகிறது.
இவ்விதம், காட்டுவாழ்வு இருக்கிறது - இரை கிடைத்தால் இன்பம் - இரை தேடும் போதோ ஆபத்து - வாழ்வு - அறிவு - வம்புக்கு முயற்சி, அழிவுக்கு வழி - என்றவண்ணம், ஒரு சஞ்சலச் சக்கரம் சதா சுழன்று கொண்டிருக்கக் காண்கிறோம்! இதற்கு இடையே, குயிலும் வானம்பாடியும் பாடிக்கொண்டு தான் உள்ளன-மயில் தோகையைவிரித்து ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. மான் விழி மந்தியின் குளறுமொழி, கிளியின் கொஞ்சுமொழி எனும் பலவும் உண்டு! வாழ்வு உண்டு! ஆனால், அதற்கோர் நிலை கிடையாது - ஒன்றையொன்று அழித்துக்கொண்டாக வேண்டும் - வாழ்வு ஒரு பெரும் பேராட்டம் - முறை, நீதி, நேர்மை எனும் எந்தக் கட்டும் இல்லாத ஒரு பயங்கரப் போராட்டம். புள்ளிமான் செய்த குற்றமென்ன - புலியாரின் கோபம் கிளம்பிடக் காரணம் ஏதேனும் உண்டோ? இல்லை! எனினும், மான் பிழைக்கிறதோ புலியின் பார்வைபட்டால்? இல்லை! இதுகாட்டுமுறை-வாழ்வு ஒரு கொலைக்களமாக இருந்துவரும் இடம்.
இந்நிலையின்றி, வளம் நிரம்பியதாக மட்டுமல்லாமல், ஒருவரை ஒருவர் அழித்தால் மட்டுமே வாழ முடியும் என்ற கொடிய நிலைமாறி, எல்லோரும் இன்புற்று இருக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், அதற்கேற்ற நிலையை ஏற்படுத்துவதே, மதிபடைத்த மனிதன் கொள்ளும் குறிக்கோள்.
இன்பமே, வாழ்க்கையின் குறிக்கோள் -இதிலே காட்டுமுறை, இன்பம்பெறப் பிறரை அழித்தாலும் சரி, வதைத்தாலும் சரி, என்று இருப்பது; கண்ணியமான முறை, இன்பம் பெறவேண்டும், இன்னொருவனுக்குத் துன்பம் வராமலிருக்கவும் வேண்டும் - எல்லோருக்கும் வாழ உரிமை உண்டு. வழிவேண்டும்; ஒருவரை ஒருவர் சுரண்டியோ, ஏய்த்தோ பிழைப்பது வாழ்வல்ல - நீதியல்ல - என்ற எண்ணம் ஆட்சி புரியும் முறை. உலகப் பேரறிவாளர் யாவருமே, இந்த 'முறையை' நிலைநாட்டவே, பல்வேறு வழிகளிலே, பாடுபட்டு வருகின்றனர்.
சிறு சிறு வெற்றிகளும் பெற்று வருகின்றனர். இயற்கையை, அறிவுத்திறன் கொண்டு, அடக்கிப் பயன்தரச் செய்து, வாழ்வுக்குத் தேவையான வளம் கிடைத்திடச் செய்தது முதல் முயற்சி, ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது! பிறகோ, வளம் மட்டும் போதாது, வாழ்வு சிறக்க-முறைவேறு தேவை என்ற எண்ணம் தோன்றுகிறது - அன்பு நெறி பிறக்கிறது - நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமா, அதோ பலர் வதைகிறார்களே - நாம் வாழ்கிறோம், நமக்கு வாழ்வளித்த பலர் வதைகிறார்கள்; நாம்வாழப் பலரை வதைத்தோம் என்ற உண்மை மனத்திலே தாக்கத் தொடங்கும்போது, அன்பு நெறி பிறக்கிறது. - இரக்க உணர்ச்சி பிறக்கிறது.
ஏதோ ஒருவகையிலே, நம்மாலான அளவுக்கு, வாழ்விலே இன்பம் பெறாது, வதைக்கப்படும் மக்களுக்கு அன்பு காட்டுவதன் மூலம், உதவி தருவோம் என்று எண்ணுகிறார்கள். இந்த அன்புநெறி-நல்லுபதேசம், ஒழுக்கப் போதனை, ஓங்காரத்தின் துணைதேடுதல், சத்திரம் சாவடி கட்டுதல் எனும் பல முறைகளாகின்றன.
ஆயினும், இந்த அன்புநெறி, தேடிய பயனைத் தரவில்லை - எல்லோரும் இன்புற்றிருக்க வழி ஏற்படவில்லை, என் செய்வது! ஆற்றல், வாழவழி செய்து தந்தது! ஆயினும், பலர் அழிவது தெரியக்கண்டு சிந்தைநொந்தது! அன்புநெறி பிறந்தது எனினும், அதனாலும் இன்பம் அனைவருக்கும் கிடைக்கும் என்ற முறை நிலைக்கவில்லை. எனவே, ஏன் சிலர் வாழ்கிறார்கள், பலர் வதைகிறார்கள் - சிலருடைய வாழ்க்கைச் சுகத்துக்காகப் பலர் பதைபதைத்து வதைய வேண்டுமா? - சிலர் காட்டும் அன்பு, பலருடைய அல்லலை, அவதியை, எங்ஙனம் போக்கும்? பாலைவனத்திலே பன்னீரைத் தெளித்துப் பயன் என்ன? - என்றெல்லாம் எண்ணுகிறார்கள். எல்லோருமா? - இல்லை - எத்தர்கள் எண்ணிடார்; ஏமாளிகள் எண்ணிடத் திறமிலாதார்; - அறிஞர் பெருமக்கள் சிலர் எண்ணுகிறார்கள்.
அந்த எண்ணத்திலே பூத்திடும் கருத்தே, அறநெறி! அறத்தால் வருவதே இன்பம், ஆற்றலால் மட்டுமல்ல - அன்பு தெளிப்பதால் அல்ல - அறத்தால் வருவது இன்பம் என்று கூறுகின்றனர். இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் வணிகரின், பண்ட மாற்று அல்ல அறம் - அந்த அறத்தை அல்ல, எல்லோரும் இன்புற்று இருக்க வழியாகக் கொள்ள வேண்டியது. இயற்கையின் முழுவல்லமையைக் கண்டறிந்து - தெரிந்த அளவையும் திறம்படப் பயன்படுத்திப் பயன்கண்டதை, அவரவர் தத்தமது கடமையைச் சரிவரச் செய்து அறநெறியை மேற்கொள்ளின்.
உலகம் வாழ, ஒரு பகுதி வதைக்கப்படும், இன்னொரு பகுதி இன்புற்றும் உள்ள இழிநிலையில் அல்ல; எல்லோரும் வாழும் நிலையில், உலகம் வாழ முடியும் என்று உறுதி பிறக்கிறது. உழைப்பு முறை, உழைப்பின் பயனாகக் கிடைக்கும் பயன்களைப் பகிர்ந்து கொள்ளும் முறை, எனும் இருதுறைகளில், முன்னதில் ஆற்றலும், பின்னதில் அறநெறியும் காட்டல் வேண்டும்! அறநெறி என்று கூறப்படுவது, மந்திர உச்சாடனச் சொல் அன்று;
ஓமகுண்டத்தருகே உலவுவதன்று! கள்ளமில்லா உள்ளத்திலே பூத்துக் காய்த்துக் பழுத்திடும், பயனும் சுவையும் உள்ளகனி அது. வெறும் பொருள் பகிர்ந்து கொள்ளும் முறை மட்டுமன்று - தொழில் அமைப்புத் திட்டம் மட்டுமன்று - இவற்றுடன் கூட, மக்கள் எவ்வகையிலே இழிவாலும் கொடுமையாலும் தாக்கப்பட்டாலும், அவர்களை மீட்டிடவும், அத்தகைய தாக்குதல் மக்களுக்கு நேரிடாதபடி முறை வகுத்தலும், ஆகிய எல்லாம் சேர்ந்த, பொதுவான, பொறுப்பான, வாழ்க்கை அமைப்புத் திட்டம் அறநெறி! எனவேதான் மனிதகுலம், குரங்கு நிலையிலிருந்து, கோயில் கட்டிக் கும்பிடும் நிலை அளவுக்கு வளர்ந்தும், எந்த இன்பம் இன்னமும் கிடைக்கவில்லையோ, அந்த இன்பத்தைப் பெறுவதற்கு, வள்ளுவர் அறநெறியைக் காட்டியிருக்கிறார்; அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்;
அறத்தால் வருவதே இன்பம்! பாட்டாளியின் கூலியைக் குறைத்துச் சேர்ந்த இலாபச் சொத்திலே, பழனியாண்டவருக்குப் பஞ்சாமிருத அபிஷேகம் செய்வதோ, பத்துப் பண்டாரங்களுக்குச் சோறிடுவதோ, அறமாமோ! ஆகாது! செல்வம் சேர்ந்தவிதமே, அறத்தை அழித்தமுறையால்! அவன் செய்வது, வேடபக்தி- விளம்பரதானம் - அறமன்று! வள்ளுவர் கூறிய அறம், ஆரிய முறைப்படி நம்மவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள தான தருமம் அல்ல - மக்களின் வாழ்விலே, உள்ள பொறுப்புகளுக்கும் கடமைகளுக்கும் ஏற்றபடி, வாழ்க்கைத் திட்டம் அமைய வேண்டும்.
ஒருவர் வாழ்வை மதித்து மற்றவர் நடத்தல் வேண்டும் - அவரவர்களுக்குள்ள கடமையினின்றும் வழுவாதிருக்க வேண்டும் - வாழ உரிமை கொண்டோரே மக்கள் அனைவரும் என்ற பொதுநீதியை அழிக்காதிருக்க வேண்டும். இது அறநெறி; - இதனை அறிந்து நடந்தால்தான் இன்பம் வரும் என்று கூறிய வள்ளுவர் வாக்கை, இன்பம் தரும் நாளாம் இப்பொங்கற் புதுநாளன்று மனத்திற் கொண்டு, அந்த அறநெறி தழைத்திடும் அரும்பணியாற்ற உள்ள உரம் கொள்ளக் கோருகிறோம், வள்ளுவர் வாழ்ந்த தமிழக மக்களை. வாழ்க தமிழ்த் திருநாடு! வளர்க அறநெறி!!
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !