ராகுல் காந்தி உடன் லல்லு மகன் தேஜஸ்வி யாதவ்.
உணர்வோசை

'அரசியல் படுகொலைகள்... கூட்டணி குளறுபடிகள்' - வாரிசுகள் யுத்தத்தில் பீகார் தேர்தல் : ஓர் விரிவான அலசல்!

நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில், பீகார் சட்டசபைக்கு தேர்தல் வரும் 28-ந்தேதி, நவம்பர் மாதம் 3-ந்தேதி, 7-ந்தேதி என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது..

முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 71 தொகுதிகளில், 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. 8-ந்தேதி முடிகிறது. 2-ம் கட்ட தேர்தலை சந்திக்கும் 94 தொகுதிகளில் 9-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

இந்த சட்டசபை தேர்தலை முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் இன்றி, பீகார் சந்திக்கிறது. அவரது மகன் தேஜஸ்வி யாதவ் முதல்-மந்திரி வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

இந்த தேர்தலில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், வி.ஐ.பி., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைந்துள்ளது.

தேஜஸ்வி யாதவ்

இந்தக் கூட்டணியில், லாலு பிரசாத்தின் தூதர் போலா யாதவ், ராஞ்சியில் இருந்து பாட்னா திரும்பியுள்ள நிலையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

பாட்னாவில் நேற்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் நிருபர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், தொகுதி பங்கீட்டை முறைப்படி அறிவித்தார்.

அப்போது அவர், “எங்கள் பழைய கூட்டாளியான விகாஷீல் இன்சான் கட்சிக்கும் (வி.ஐ.பி.), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும் எங்கள் கட்சி தனது 144 தொகுதிகளில் இருந்து இடம் அளிக்கும்” எனத் அறிவித்தார்.

இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்கு எண்ணிக்கையிலான தொகுதிகள் ஆகும்.

நவம்பர் 7-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிற வால்மீகி நகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெகா கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் வருமாறு:

மொத்த இடங்கள் - 243

ராஷ்ட்ரீய ஜனதாதளம்

- 144

காங்கிரஸ் - 70

இந்திய கம்யூ. (எம்.எல்.)- 19

இந்திய கம்யூனிஸ்ட் - 6

மார்க்சிய கம்யூனிஸ்ட் - 4

நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க கூட்டணி அரசை அகற்ற தேஜஸ்வி யாதவ் சபதம் செய்துள்ளதன் காரணமாக மெகா கூட்டணி உருவாகி உள்ளது.

ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான்.

பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியை எதிர்த்து லாலுவின் வாரிசு மெகா கூட்டணி ஏற்படுத்தி யுத்தம் தொடர்ந்துள்ள நிலையில், பா.ஜ. கூட்டணியில் அங்கம் வகித்திருந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி அக்கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவது பீகார் சட்டசபைத் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க., கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க இடையே 50:50 என்ற விகிதத்தில் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 122 தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 121 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

'இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா' கட்சிக்கான தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து வழங்கவேண்டும் என்றும் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கூட்டணியில் இடம்பெற்றால் பா.ஜ.க தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து வழங்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இருதய அறுவை சிகிச்சையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரின் மகன் சிராஜ் பஸ்வான் தேர்தல் பணிகளைத் தலைமையேற்று நடத்திவருகிறார். அதோடு இவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டது.

தாங்கள் கேட்ட இடங்களை ஐக்கிய ஜனதா தளம் ஒதுக்கவில்லை என்பதாலும் வெறும் 27 இடங்களை மட்டும் வழங்கியதாகவும் தெரிகிறது. ஆனால், வரும் தேர்தலில் அவர்கள் கட்சி சார்பில் 143 இடங்களுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டதால், இந்த தேர்தலில், லோக் ஜனசக்தி தனித்துக் களம் காண முடிவு செய்துள்ளது. இருந்தபோதிலும், பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.

மகன் சிராஜ் உடன் ராம்விலாஸ் பஸ்வான்.

ராம்விலாஸ் பஸ்வானின் வாரிசு சிராஜ் பஸ்வானின் இந்த திடீர் முடிவு ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிரானது என்றும், பா.ஜ.க.வும், லோக் ஜனசக்தியும் தங்களது கட்சிக்கு எதிராக நாடகம் ஆடுகிறார்கள் என்றும் ஐக்கிய ஜனதாதள முன்னணி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 115 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் அந்த மாநிலத்தின் போலிஸ் டிஜிபியாக இருந்து, பதவியை ராஜினாமா செய்த குப்தேஸ்வர் பாண்டேவின் பெயர் இடம் பெறவில்லை. இந்தக் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ஜித்தன் ராம் மஞ்ஜியின் இந்துஸ்தானி அவாம் மோட்சா கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து இருக்கும் தேஜ் பிரதாப் யாதவின் (லாலுவின் மூத்த மகன்) மனைவி ஐஸ்வர்யாவின் தந்தை சந்திரிகா ராய் பார்சா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் மகனாவார். தேஜ் பிரசாத் யாதவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தில் தன்னை ராய் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி ஒருபுறம் பா.ஜ.க., கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்திருப்பதும், ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக களத்தில் இறங்கியிருப்பதும் பீகார் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வாக்கு சதவீதத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தேஜஸ்வியுடன் சக்தி மாலிக் ( பழைய படம்)

பீகாரில் தேர்தலை முன்னிட்டு நடந்த அரசியல் கொலைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லாலு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரமுகர் சக்தி மாலிக் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட சக்தி மாலிக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராணிகஞ்ச் தொகுதியில் தன்னைப் போட்டியிட அனுமதிக்க, தன்னிடம் தேஜஷ்வி யாதவ் ரூபாய் 50 லட்சம் கோரியதாகவும், தன்னை அவர் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளைங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சக்தி மாலிக், மூன்று மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், அவர் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்திருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மனைவி குற்றம்சாட்டியுள்ளார். அவர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதைப்போன்று அக்டோபர் 1-ம் தேதி பாட்னாவில் பா.ஜ.க.தலைவர் ராஜேஷ், காலை நடைப்பயிற்சி செல்லும்போது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பீகார் அரசியல் களம் கொலைக்களமாக மாறியிருக்கும் சூழலில், கொரோனா தொற்று காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த இடர்களும் பீகார் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக புலம்பெயர் தொழிலாளர்கள் அணிதிரண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுங்கட்சியின் அதிகார பலத்திற்கு எதிராகவும், பண பலத்திற்கு எதிராகவும் களம் காணும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி வெல்லுமா என்பது போகப்போகத் தெரியும்.

Also Read: “பீகார் தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவிட முடியாது” - மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!