உணர்வோசை
NEET: சமூகத்தின் சமநிலை தவறும் போது, சகலமும் அவலமாகும்; உரிமை காக்கப் போராடுவதே கடமை - உறியடி விஜயகுமார்
NEET நுழைவுத்தேர்வின் அவலத்தை பற்றி 2017ம் ஆண்டு உறியடி பட இயக்குநர் விஜயகுமார் எழுதியது:
'மூன்று வேளை உணவு கொடுக்கப்படாமல் விஷ ஊசியால் குத்தப்பட்டு அடிமை படுத்தப்பட்ட ஒரு கிளாடியேட்டரிடம், பாலும், பாதாம் பருப்பும், ஏழை இரத்தமும் குடித்து உடல் வலிமை பெற்ற மன்னன் ஒருவன் “என்னுடன் சண்டையிட்டு என்னை வெல் பார்ப்போம், இருவருக்கும் ஒரே வாள், ஒரே விதிமுறை, பலசாலிக்கு வெற்றி கிட்டட்டும்” என சமநிலை பேசுகிறான்.
வாழ்க்கையில் இது தான் சாமானியர்களுக்கு நடக்கிறது. சிலர் மட்டுமே என்றாலும் தீயவர்கள் மலை மேல் நின்று போர் புரியும்போது, நில மட்டத்திலிருந்து போர் புரிய வேண்டிய நிலையிலுள்ள நல்லவன், போராடி மேலே சென்று தன் உரிமையையும், நாட்டையும் மீட்டு எடுப்பது சாதாரண காரியமல்ல. பல ரணங்களும், தியாகங்களும் நிறைந்த போராட்டம் அது. கார்கில் போர் போல.
பள்ளியோ, கல்லூரியோ, அலுவலகமோ, தொழிற்சாலையோ, Reality showவோ, சினிமாத் துறையோ, எங்குமே மேல் மட்டத்திலிருப்பவனிடம் அடங்கிப் போகாவிடில் ஒரு சாமானியன் உயர் நிலையை அடைய முடியாத அத்தனை சூழ்நிலைகளும் உருவாக்கப்படும். Survival politics அறியாதவனின் அறிவையும், Ideaக்களையும், உடல் உழைப்பையும் திருடி, நரித்தனம் அறிந்தவன் பெயரும், வசதியும் பெருக்கிக்/பொருக்கிக் கொள்கிறான்.
சாமானியன் கூறியதிலிருந்து பாதி உண்மை வெளியே காட்டி, மீதி உண்மை திரித்து ஊடகங்களில் கெத்து காட்டுகிறான். உலகமும் நன்றாக ஆங்கிலத்தில் பேசுபவனையும், மேல் தட்டு தோரணையும் உடையவனையே அறிவாளியாகவும், திறமை உள்ளவனாகவும் பார்க்கிறது. தன் ஆதிக்க தொடர்புகளால் மேலே உள்ளவன், Under privileged எனும் வாய்ப்பு மறுக்கப்பட்டவனை நசுக்கியே சுகம் காண்கிறான், ஏளனம் செய்கிறான். நடு நிலையில் உள்ள வெகு ஜனமும் போராடும் கஷ்டப்படுபவனுக்குத் தோள் கொடுத்து அவனுடன் பயணிப்பதில்லை.
சமூகத்தின் அநீதிகளை பேசுபவனையும் நிறையப் பேருக்குப் பிடிப்பதில்லை. ஏனெனில் இவர்களிடம் பகிர்ந்துகொள்ள உண்மையும், சோகமும், வலிகளும் மட்டுமே உள்ளது. பொழுதுபோக்கு காட்டி வெட்டி விஷயங்களைப் பேசுபவன் பின்னாலே போகிறது. மேலும் தன் மொழி, சாதி, இன உணர்வுகளைத் தூண்டி, நெருப்பூட்டி, அதை அணையாமல் பாதுகாத்து அதில் குளிர்காய்பவர்களை, இங்கே புரிந்து கொள்ள பெரும்பாலோனோர் முயற்ச்சிப்பதில்லை.
இந்த அத்தனை சமூக அநீதிகளையும் தாண்டி மன வலிமை பெற்று இந்த கேடு கெட்ட உலகை வென்று வாழ்ந்து காட்டுவோம். வெளியிலிருந்து என்றும் உதவி கிடைக்காது. நமக்கான உதவியை நம்முள்ளேயே தேடுவோம். வலிமை பெருக்குவோம். எப்பாடுபட்டாவது. எதை செய்தாவது. ஏனெனில் உலகம் பணமும், பலமும் படைத்தவனுக்கு மட்டுமே.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். கேலி பேசுபவன் பேசித் திரியட்டும். மதியால், ஒற்றுமையால் இனி ஒரு விதி செய்வோம். #சமூகத்தின் சமநிலை தவறும் போதெல்லாம், சகலமும் அவலமாகும். மனிதத் தன்மை கேள்விக் குறியாகும். பொறுமை காத்தால் உடமை பறி போகும். உரிமை காக்கப் போராடுவதே கடமை.'
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!