உணர்வோசை

“அனிதா முதல் சுபஸ்ரீ வரை நீட் பலி கொண்ட 8 உயிர்கள்” : அனிதாக்களை மறவோம்..! #ScrapNeet

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.

மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சென்னை சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி மற்றும் கோவை சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதில், தற்கொலை செய்துகொண்ட மாணவிகளில் அரியலூர் அனிதா ஒட்டுமொத்த கிராமத்தின் கனவுகளைச் சுமந்தவர். நீட் என்னும் கொடிய பாசிச நோய்க்கு முதன் ஆளாகப் போராடி உயிர்துறந்தவர். அவரின் நினைவு நாள் இன்று. அனிதா நினைவு நாளான்று அனிதாவைத் தொடர்ந்து நீட் தேர்வால் பலியானோர் பற்றி நினைவுகூர்வதே இந்த தொகுப்பு.

அனிதாக்களை மறவோம்!

நீட் தேர்வு தொடங்கிய ஆண்டே, தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் மாவட்டத்தில் உள்ளடங்கிய குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்களைப் பெற்றவர். சிறுவயதில் இருந்தே மருத்துவக் கனவோடு படித்த அனிதா பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில், 1176 மதிப்பெண்கள் பெற்றார். நீட் இல்லையென்றால் அனிதா எடுத்திருந்த மதிப்பெண்ணுக்கு இந்நேரம் அனிதா மருத்துவம் படித்துக் கொண்டிருப்பார்.

நீட் மூலமாகவே மருத்துவம் படிக்கமுடியும் என்பதால், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதிய அனிதாவால் நீட் தகுதித் தேர்வில் 76 மதிப்பெண்களையே பெற முடிந்தது; ஜிப்மர் தேர்விலும் அவரால் தேர்ச்சி பெற முடியாமல் போனது.

நீட் தேர்வால் தனது மருத்துவக் கல்வி கனவு பறிக்கப்பட்டதாக உணர்ந்த அனிதா, நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து போராட்டத்திலும் முன்னின்று போராடினார்.

பின்னர் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரே நாளில் சென்னை வந்து, சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்று தமிழக மாணவர் தரப்பு வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தார். ஆனால் எல்லா முயற்சிகளும் வீணானது. மனமுடைந்த அனிதா இதே நாளில் தற்கொலை செய்துகொண்டார்.

அனிதா மரணத்தைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தது. அப்போதும் கூட கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வந்தது மோடி அரசு. மோடி அரசின் இந்த பிடிவாதத்தால் அனிதாவிற்கு பிறகு 5க்கும் மேற்பட்ட மாணவிகளை தமிழகம் பறிகொடுத்தது.

அதில், கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். மனமுடைந்த பிரதீபா வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரதீபா தற்கொலை நிகழ்ந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, ஜூன் மாதம் 7ம் தேதி திருச்சியில் சுபஸ்ரீ என்ற மாணவி நீட்டில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, சேலையூரில் மாணவி ஏஞ்சலின் ஸ்ருதி என்பவர் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதே ஆண்டு மே மாதம், 6ம் தேதி நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் கேரளா செல்லும் அன்று இரவு முழுக்க ரயிலில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே சென்றதாக தகவல் வெளியானது.

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் பலருக்கு வெவ்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனால் கேரளா செல்லவேண்டிய நிலைக்கு உள்ளான மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, திருப்பூரில் ரிதுஸ்ரீ என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று, நம்பிக்கையுடன் நீட் தேர்வை எழுதி இருக்கிறார். தேர்வு முடிவுகளில் அவர் வெறும் 68 மதிப்பெண்கள் பெற்றதால், மனமுடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அவருடைய பெற்றோர் செல்வராஜ் - ராஜலட்சுமி இருவரும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர், சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது மருத்துவர் ஆகும் கனவு தகர்ந்துபோனதால், உயிரைப் போக்கிக்கொண்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டையில் நம்பிராஜ் என்பவரது மகள் வைஷ்யா நீட் தேர்வில் 230 மதிப்பெண்கள் பெற்றதை அறிந்து, உடலில் மண்ணென்ணெயை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டார்.

அதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் தனலட்சுமி மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்பதால், நீட் தேர்வுக்காக பயிற்சி மையம் செல்ல வேண்டும் எனப் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் குடும்ப கஷ்டம் காரணமாக அவரை பயிற்சி வகுப்பில் சேர்க்கவில்லை.

அதனால் வீட்டில் இருந்து படித்து தேர்வு எழுதிய அவரால் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்ததால், யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு, “நான் மட்டும் நீட் கோச்சிங் கிளாசுக்குப் போயிருந்தால், இப்போது டாக்டருக்குப் படிச்சுக்கிட்டு இருந்திருப்பேன். நான் ஆசைப்பட்டதை அடையுற ராசி இல்லாதவளாப் போயிட்டேன். வீட்டிலும் வெளியிலும் நான் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்கலை. நான் பிறந்ததே வேஸ்ட். அதனால் போயிட்டு வர்றேன்” என தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தாண்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் மாணவி சுபஸ்ரீ நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் பயின்று வரும் சுபஸ்ரீ, நீட் தேர்வு குறித்த அச்சத்தால் ஆகஸ்ட் 19ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

பா.ஜ.க அரசின் நீட் வெறியால் தமிழகத்தில் மாணவிகள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். ஆனால் இதனை எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டிய அ.தி.மு.க அரசோ மவுனம் சாதித்து வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாக்கள், நிராகரிக்கப்பட்டு 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே தமிழகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதனை மறைத்து பா.ஜ.க.,விற்கு தனது விசுவாத்தைக் காட்டிவிட்டு தமிழக மாணவர்கள் நலன்களை பறித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இன்னும் எத்தனை உயிர்களைப் காவு வாங்கப் போகின்றன?

மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் உள்ள குளறுபடிகள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் வினாத்தாள், மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட, பயிற்சி மையத்தில் சேர்ந்தால்தான் நீட் தேர்வில் வெற்றிபெற இயலும் என்ற நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டு வருகிறது.

எனினும் கொரோனா காலத்திலும் நீட் தேர்வு நடத்தத் துடிக்கும் மத்திய அரசுக்கு அனிதா நினைவு நாள் அன்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் #அனிதாவை_மறவோம், #ScrapNeet #NEETisSocial_Injustice போன்ற ஹேஸ்டாக்குகள் மூலம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மருத்துவக் கல்வி பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பு மாணவ - மாணவிகளுக்கும் கிடைக்க, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதும், மத்திய அரசின் பிடியிலிருந்து கல்வியை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதும்தான் ஒரே வழியாகும். அப்போதுதான் இதுபோன்ற தற்கொலைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டமுடியும்..

Also Read: "நீட் விவகாரத்தில் முரண்பட்ட நிலைப்பாடு : அ.தி.மு.க அரசின் பச்சைத் துரோகம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!