உணர்வோசை

உச்சகட்டத்தில் கொரோனா: இன்னும் PCR டெஸ்ட்டையே நம்பியிருப்பதா? எப்போது டெல்லியிடம் தமிழகம் பாடம் கற்கும்?

தேசியத் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையுடன் கூடுதலாக ஆண்டிஜென் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி பிரதேச அரசின் இந்த நடவடிக்கையால், அங்கு மொத்த சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; சமூகத்தில் கொரோனா தொற்றின் அளவு குறைந்திருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைநோய்த் தாக்கத்தின் தொடக்கம் முதலே உலக சுகாதார அமைப்பும் உள்நாட்டு, அயல்நாட்டு மருத்துவ வல்லுநர்களும் இதனால்தான் சோதனைகள் செய்ய அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர். இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் இது சாத்தியம் இல்லை என்று திரும்பத் திரும்பக் கூறப்பட்டுவருகிறது. ஆனால் இதே காலகட்டத்தில் நம்மைவிட அதிக மக்கள்தொகை கொண்ட சீனத்தில் இரண்டாவது முறையாக, அதன் தலைநகர் பீஜிங்கில் கொரோனா தாக்கியதை அடுத்து, ஒரே மூச்சில் 70 இலட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்பட்டன.

செலவு குறைந்த- விரைவான சோதனை முறையை அவர்கள் கடைப்பிடிப்பதும் முக்கிய காரணம் ஆகும். விளைவாக, தொற்றின் அளவு, வேகம், பரவல் பகுதி, உயிரிழப்பு ஆபத்து ஆகியவற்றை அறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா தொற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாட்டிலேயே தலைநகர் டெல்லியில்தான் அதிகமாக இருந்துவருகின்றன. மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் அளவில் டெல்லி பிரதேசமே இரண்டாவது அதிக பாதிப்புடைய பகுதியாக இருந்துவந்தது.

12 நாள்களுக்கு முன்னர் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. காரணம், அங்கு மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனைகளும் அதற்கேற்ற நடவடிக்கைகளும்தான். குறிப்பாக, தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையைவிட விரைவாக தொற்றைக்கண்டறியும் சோதனைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடந்த மாதத்தின் மத்தியில் ஆலோசனை தெரிவித்தது.

அதையொட்டி டெல்லி ஒன்றியப்பிரதேசத்திலும் ஆந்திரம், ஒதிசா, பீகார், இராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களிலும் ஆன்டிஜென், ஆன்டிபாடி மற்றும் பிற விரைவான முறைச் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டன. தலைநகர் டெல்லியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினரின் விவரம் திரட்டப்பட்டு அவர்களிடம் பிசிஆர் முறையுடன் ஆன்டிஜென் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால், சமூகத்தில் தொற்று எந்த அளவுக்கு பரவியுள்ளது அல்லது பரவவில்லை என்பதை அறிவது எளிதாக ஆனது.

கடந்த மாதம் 28ஆம் தேதி டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட 16,157 சோதனைகளில் 6,538 சோதனைகள் ஆன்டிஜென் முறையிலானவை. மறுநாளான 29-ம் தேதியன்று செய்யப்பட்ட 17,179 சோதனைகளில் 7,594 ஆன்டிஜென் சோதனைகளும் அடக்கம். ஜூன் 30 அன்று பிசிஆர் சோதனைகளைவிட அதிகமான ஆன்டிஜென் (10,043) சோதனைகள் செய்யப்பட்டன. ஜூலை 2 அன்று நிலவரப்படி டெல்லியில் செய்யப்பட்ட மொத்த சோதனைகள் 24,165. அதில் ஆன்டிஜென் சோதனைகளின் எண்ணிக்கை மட்டும் 13,588.

அதாவது, இதுவரை டெல்லியில் செய்யப்பட்ட கொரோனா சோதனைகளில் அதிகபட்சமான ஆன்டிஜென் சோதனைகள் அன்றுதான் மேற்கொள்ளப்பட்டன. ஒரு இலட்சம் பேரில் செய்யப்பட்ட சோதனைகள் என்கிற அளவீடும், ஜூன் 22 அன்று 21, 139 ஆக இருந்தது; அதுவே ஜூலை 2 அன்று 31,405 ஆக அதிகரித்தது.

பாதிக்குப் பாதியாக அதிகரித்துள்ள ஆன்டிஜென் சோதனைகளில் இன்னொரு முக்கிய பலன், பி.சி.ஆர். சோதனையைப் போல 24 மணி நேரம் முதல் 48 மணிநேரம்வரை முடிவுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. அதிகபட்சம் அரை மணி நேரத்துக்குள் சோதனை முடிவு கிடைத்துவிடும். இதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அதிகமானவர்கள் சோதனைகளைச் செய்துகொள்கிறார்கள்.

இரண்டு கோடி ரூபாய் மக்கள்தொகை கொண்ட டெல்லி ஒன்றியப் பிரதேசத்தில் சோதனைகள் அதிகரிக்க அதிகரிக்க கொரோனா பரவலின் உண்மையான தன்மையை அறிந்துகொள்வது எளிதாகி உள்ளது. எடுக்கப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்ட தொற்றின் வீதம் ஜூன் 22 அன்று 23.08% ஆக இருந்தது. படிப்படியாகக் குறைந்து ஜூலை 2 அன்று 10.41% ஆக ஆனது. 12 நாள்களில் நோய்த்தொற்று வீதமானது பாதி அளவாகப் பதிவாகியுள்ளது. சோதனைகளின் அளவு இன்னும் அதிகமானால் தொற்றுப்பதிவின் வீதம் மேலும் குறையக்கூடும்.

Also Read: இறுதி மரியாதைக்கு இழுக்கா? இடமில்லாமல் சடலங்கள் காத்திருப்பு! - டெல்லி அவலம்!!

அதாவது, கொரோனா தொற்று சமூகப்பரவலை விஞ்சிவிட்டபடியான நிலையில் யாருக்கு பாதிப்பு இருக்கிறது, யாருக்கு இல்லை என்றில்லாமல், தொற்றின் பரவலானது உச்சநிலைக்குச் சென்றுவிட்டது. இந்தக் கட்டத்தில் பிசிஆர் சோதனை மட்டுமே என இருந்துவிடாமல் எளிமையான, விரைவான சோதனைகளை தேவைப்படும் அளவுக்கு முடுக்கிவிட்டால் பாதிப்பு இல்லை என்பதைக்கூட உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் காரணம் அறியாமல் நீட்டிக்கப்படும் பொதுமுடக்கத்தைப் பற்றி சரியான முடிவை எடுக்கவும் முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

Also Read: கொரோனா சோதனையை சோதனையாக மேற்கொள்ளாதீர்.. மக்களின் வேதனையை தீர்ப்பதுதான் அரசின் கடமை