உணர்வோசை

“வாழ்வின் பொன்னான நாள் எது?” - பல்வேறு கேள்விகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அளித்த ‘தாறுமாறு’ பதில்கள்!

முத்தமிழறிஞர் கலைஞரின் 97-வது பிறந்தநாள் இன்று. கலைஞரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களும் இந்நாளில் சிறப்புத் தொகுப்பாக இங்கே...

கேள்வி : உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?

முத்தமிழறிஞர் கலைஞர் : எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம்போல் உயர்ந்து நிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணா தான்.

கேள்வி : சட்டமன்றப் பேச்சுக்கும் - பொதுக் கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?

முத்தமிழறிஞர் கலைஞர் : மனக் கணக்குக்கும் - வீட்டுக் கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.

கேள்வி : மறக்க முடியாத சம்பவம்?

முத்தமிழறிஞர் கலைஞர் : தமிழகச் சட்டப் பேரவையில் “தமிழ்நாடு” பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, பேரறிஞர் அண்ணா அவர்கள், “நான் மூன்று முறை தமிழ்நாடு என்று சொல்வேன், அனைவரும் வாழ்க! என்று சொல்ல வேண்டும்” என்று கூறிவிட்டு அவ்வாறே முழக்கமிட்ட அந்தச் சம்பவம் என்னால் மறக்க முடியாத சம்பவமாகும்.

கேள்வி : மகிழ்ச்சிக்குரிய சம்பவம்?

முத்தமிழறிஞர் கலைஞர் : நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று, சட்டமன்றத்திற்குள் திறக்கப்படவிருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!”என்று எழுதிக் கொடுத்தேன். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும்போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்.

கேள்வி: சட்டமன்றத்துக்கு உள்ளே போகும்போது என்ன நினைப்பீர்கள்?

முத்தமிழறிஞர் கலைஞர் : கற்றுக்கொள்ளும் மாணவனாகவும், கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.

கேள்வி : எதிராளியைத் திணற வைத்த ஏதாவது ஒரு சம்பவம்?

முத்தமிழறிஞர் கலைஞர் : சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர்.எச்.வி.ஹண்டே அவர்கள் தி.மு.கழக அரசைப் பற்றி விமர்சிக்கும்போது, “இது மூன்றாம் தர சர்க்கார்” என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். நான் அனைவரையும் அமர வைத்துவிட்டு, “டாக்டர் ஹண்டே அவர்கள் இந்த அரசை மூன்றாம் தர அரசு என்றார். திருத்திக்கொள்ள வேண்டும். இது நாலாந்தர அரசு, பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!” என்று குறிப்பிட்டேன்.

கேள்வி : சட்டமன்றப் பேச்சில் எது இருக்கக்கூடாது?

முத்தமிழறிஞர் கலைஞர் : மீண்டும் ஒரு நாள் இருவரும் சந்திக்க நேரிடும்போது பரஸ்பரம் பேசிக்கொள்ள முடியாத அளவிற்கு விரோதம் காட்டிக் கொள்ளும் உணர்வு இருக்கக்கூடாது.

கேள்வி : விவாதம் - வாக்குவாதம் - விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்க வேண்டும்?

முத்தமிழறிஞர் கலைஞர் : விவாதம் - உண்மையாக இருக்க வேண்டும். வாக்குவாதம் - சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும். விதண்டாவாதம் - தவிர்க்கப்பட்டாக வேண்டும்.

கேள்வி : நீங்கள் கொண்டு வந்ததில் மகிழத்தக்க சட்டம்?

முத்தமிழறிஞர் கலைஞர் : பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை - குடியிருப்பு மனைச் சட்டம் - நில உச்சவரம்புச் சட்டம் - அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆணை.

கேள்வி : சட்டமன்றப் பதவியை 1984, 1991 இரண்டு முறை ராஜினாமா செய்தது ஏன்?

முத்தமிழறிஞர் கலைஞர் : 1984 ஆம் ஆண்டு நான் இலங்கைத் தமிழர்களுக்காகச் சட்டமன்றப் பதவியை ராஜினாமா செய்தேன். 1991ல் நான் ஒருவன் மட்டுமே வெற்றிபெற்று மற்ற எல்லா இடங்களிலும் கழகம் தோற்றதால், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அந்தப் பதவியை ராஜினாமா செய்தேன்.

கேள்வி : நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன் - ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?

முத்தமிழறிஞர் கலைஞர் : நினைவாற்றலுடன் கூடிய வாதத்திறன் மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் முக்கியம்.

கேள்வி : நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று நினைத்ததே இல்லையா?

முத்தமிழறிஞர் கலைஞர் : தொடக்கம் முதலே தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் என்ற அளவில் என்னை ஐக்கியப் படுத்திக் கொண்டுவிட்டேன்.

கேள்வி : நீங்கள் கொண்டு வந்ததிலேயே விருப்பமான மக்கள் நலத் திட்டம் - முதன்மை இடத்தைப் பிடிப்பது எது?

முத்தமிழறிஞர் கலைஞர் : சாதி மத பேதமின்றி ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம். அதே நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சமத்துவபுரத் திட்டம்.

கேள்வி : சட்டமன்ற மரபு மீறப்பட்ட செயல் என்று எந்த நிகழ்வைச் சொல்வீர்கள்?

முத்தமிழறிஞர் கலைஞர் : முரசொலி பத்திரிகை ஆசிரியரைச் சட்டமன்றத்திற்கு அழைத்துக் கூண்டிலே ஏற்றிக் கண்டனம் தெரிவித்த செயல்.

கேள்வி : கேள்வி கேட்பது எளிதா? பதில் சொல்வது எளிதா?

முத்தமிழறிஞர் கலைஞர் : பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்பது எளிதல்ல.

கேள்வி : பொன்னான நாள் என்று எதைச் சொல்வீர்கள்?

முத்தமிழறிஞர் கலைஞர் : மண்டல் கமிஷன் பரிந்துரையையொட்டி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் தீர்மானத்தை நான் முன்மொழிந்து பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நாளைப் பொன்னான நாள் என்று கூறலாம்.

கேள்வி : தி.மு.க. ஆட்சி இரண்டு முறை (1976 மற்றும் 1991) டிஸ்மிஸ் ஆனபோது என்ன நினைத்தீர்கள்?

முத்தமிழறிஞர் கலைஞர் : பதவியைத் தோளில் போட்டுக்கொள்ளும் துண்டு என்றும், மக்களுக்காக ஓடியாடி உழைப்பதே சிறந்த தொண்டு என்றும் எண்ணியிருப்பவனுக்கு ஆட்சிக் கலைப்பு என்பது ஒன்றும் பெரிதல்ல.

கேள்வி : உங்கள் அமைச்சரவையிலே உள்ளவர்களில் மனதிலே இடம்பெற்ற சிலரை வரிசைப்படுத்துங்களேன்?

முத்தமிழறிஞர் கலைஞர் : மனதிலே இடம்பெற்ற பிறகு தானே, அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள். அதேவேளை, மந்திரி சபையில் இடம்பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.

கேள்வி : சட்டமன்றத்தில் உங்களுக்குக் கிடைத்த முதல் பாராட்டு யாரால்?

முத்தமிழறிஞர் கலைஞர் : எனது முதல் கன்னிப் பேச்சில், எனது முதல் தொகுதியான குளித்தலையில் இருந்த, “கையேருவாரம், மாட்டேருவாரம்” என்ற பிரச்சினை குறித்து நான் வேகமாக பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போது இருந்த மேதகு.கிருஷ்ணாராவ் அவர்கள், ஒன்றை எழுதிச் செயலாளர் மூலமாக என்னிடம் கொடுத்து அனுப்பினார். சட்டமன்றத்தில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அதுதான்.

Also Read: "மூத்த தமிழினத்தின் முழு உருவமே! எங்களின் உயிரின் உயிரே!" - மு.க.ஸ்டாலின் உருக்கம்! #Kalaignar97