உணர்வோசை
சென்னைக்கு மிக அருகில் புலம்பெயர் தொழிலாளர்களின் கொடும்பயணம் - எப்படி இருக்கிறது NH16? கள நிலவரம்
அகண்ட நெடுஞ்சாலை. நிழல் படாத சாலைகள். உடலில் உள்ள நீரை உறிஞ்சியெடுக்கும் கோடை வெயில். உணவில்லை, குடிநீர் இல்லை, வாகன வசதி இல்லை ஆனால எதுவுமே அவர்களை தடுக்கவில்லை. சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில், இப்படி ஒரு கொடுமையான சூழலில் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி நெடும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் சென்னையில் தங்கி பணியாற்றி வந்த வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்த் தொழிலாளர்கள்.
பீகார், ஒரிசா, ஜார்கண்ட, சட்டிஸ்கர், அசாம், மேற்கு வங்கம் என அவர்கள் செல்ல வேண்டிய தூரம் 2000 கிலோ மீட்டர்களுக்கும் மேல். இவ்வளவு தூரத்தையும் நடை பயணம் மூலமும், மிதிவண்டிகள் மூலம் கடக்க இவர்கள் துணிந்து நடந்து வருகின்றனர்.
சென்னையை நம்பி வந்த இப்புலம்பெயர் தொழிலாளர்களின் கொடும்பயணத்தை நாம் பதிவு செய்யச் சென்றிருந்தோம். அங்கு நாங்கள் கண்டதை இங்கே பதிவு செய்கிறோம்.
எப்படி இருக்கிறது NH16:
சென்னை அண்ணாநகர் பேருந்து டிப்போ தொடங்கி, கொல்கத்தா நெடுஞ்சாலை முழுவதும், வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தலையிலும், முதுகிலும் குறைந்தது 10 கிலோ எடை கொண்ட உடமைகளை சுமந்து கொண்டு குழுக்களாக நடந்து செல்வதை நம்மால் பார்க்க முடிந்தது. இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொரு குழுக்களும் வெவ்வேறு வயதினருடையதாக இருந்தது.
சிலர் தாங்கள் பாடுபட்ட மிச்சம் பிடித்த பணத்தில் புதிய மிதிவண்டிகளை வாங்கியும், சில தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வாங்கிக் கொடுத்த மிதிவண்டிகளில் மூட்டை முடுச்சுகளைக் கட்டிக் கொண்டும், நெடுஞ்சாலைப் பாலங்கள மூச்சிரைக்க சிரமம் கொண்டு கடக்கின்றனர்.
பெரும்பாலும் இவர்களது பயணம் பிற்பகலைத் தாண்டி தான் தொடங்குகிறது. வழியில் இத்தொழிலாளர்களுக்கு, உணவு, நீர், திண்பண்டங்கள், மாஸ்க் என தங்களால் முடிந்த உதவிகளை சில தன்னார்வலர்கள் கொடுத்து உதவுகின்றனர். இது போன்ற தன்னார்வலர்கள் உதவினால் மட்டுமே உணவுக்கு வழி. அது வரை அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் என்பது உறுதியில்லை.
போரூர், பள்ளிக்கரணை, ஶ்ரீ பெரும்புதூர், ஓ.எம்.ஆர் என சென்னையைச் சுற்றி பல பகுதிகளில் இருந்து இரண்டு நாட்களாக நடந்து வரும் இவர்கள் அனைவரும், கும்மிடிப்பூண்டி அருகே, புதுவாயல் என்ற இடத்தில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தற்காலிக முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டனர். அந்த முகாமும் கூட, சமூக ஆர்வலர்களின் முயற்சியின் பேரிலேயே உருவாக்கப்பட்டது. கிட்டத்த 3000 வட மாநிலத் தொழிலாளர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பல தன்னார்வ குழுக்கள் மூலம் உணவு வழங்கப்பட்டது. தன்னார்வலர்களாலும் ஒரு அளவுக்கு மேல் உணவு உதவி வழங்க முடியாது சூழல் நிலவியது. தமிழக அரசிடம் இருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை.
அதே நேரம் தொழிலாளர்கள் தொடர்ந்து வந்தபடி இருந்தனர். செவி வாயிலாக கிடைத்த தகவல் மூலம், சாரை சாரையாக தமிழக எல்லை நோக்கி வரத் தொடங்கினர் என்பது அவர்களிடம் பேசியதில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. இன்னும் சிலர் அந்த தனியார் கல்லூரியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் நம்பினர். அதன் காரணமாகவும், ஏராளமானோர் அங்கு குவியத் தொடங்கினர். ஆனால் அவர்கள் நாள் முழுவது மேற்கொண்ட நடைபயணம் வீண் என்பது அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
களைத்து தோய்ந்த அவர்களுக்கு அந்த தனியார் கல்லூரி ஆஸ்வாசப்படுத்திக் கொள்ள உதவியாக இருந்தது. ஆனால், இரண்டாம் நாள் அதுவும் இல்லாமல் போனது. கல்லூரிகள் செப்டம்பர் மாதமே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த குறிப்பிட்ட தனியார் கல்லூரி, "நாங்கள் கல்லூரியை திறக்கப் போகிறோம்" என்று கூறி இடத்தை காலி செய்யச் சொன்னதாக போலிஸார் தெரிவித்தனர். அங்கிருந்து, தொழிலாளர்களை அருகில் உள்ள மற்றொரு பள்ளிக்கு பேருந்து மூலம் போலிஸார் அழைத்துச் சென்றனர். பேருந்தில் ஏற்றியவுடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு தான் செல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு ஆரவாரம் செய்தபடி சென்றனர்.
முகாமில் இடமில்லாமல், ஏதாவது உதவி வரும் என்று எதிர்பார்த்து, சாலையோரமாக காத்திருந்த சிலரிடம் பேசினோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் பணியாற்றும் சிலருக்கு தமிழ் பேசத் தெரிந்திருந்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நந்தி கிஷோர் ராமிடம் பேசினோம். " எனக்கு ஊர்ல அம்மா, அப்பா, மனைவி, ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. இங்க நான் 5 வருசமா வேலை பாத்துட்டு இருக்கேன். இங்க இருக்க கான்டிராக்டர் என்ன வேலைக்கு கூப்டாரு. பில்டிங் வேலை தான். ஒரு நாளுக்கு 580 ரூ சம்பளம் கொடுப்பாங்க. அது என் செலவுக்கே சரியா போகுது. ஊருக்கு பணம் அனுப்புறதே இல்ல. என் சாப்பாட்டுக்கு மட்டும் தான் வேலை பாத்துட்டு இருந்தேன். ஊர்ல விவசாயக் கூலி வேலை செஞ்சு வாழ்க்கைய ஓட்டுறாங்க. இந்த ரெண்டு மாசமா வேலையே இல்லை. 5 நாள் மட்டும் தான் வேலை கொடுத்தாங்க. அந்த காச வச்சு இத்தன நாள் சாப்டேன். இப்போ வேற வழியில்லாம ஊருக்கு கிளம்பிட்டேன். புதுப்பேட்டையில் இருந்து நடந்தே வரேன். இங்க காலை 12 மணிக்கு வந்தேன். மணி இப்போ 5 ஆச்சு இப்போ வரைக்கு சப்பாடு கிடைக்கல. போலிசு, கவர்மென்டும் எதுவும் சொல்லல. வெயில்லயே தான் நிக்குறோம். நாங்க ஊருக்கு போக வழி பண்ணனும். இல்லன்னா சண்ட போடுறது தான் வழி." என்றார் விரக்தியுடன்.
வடமாநிலத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கு நந்திக் கிஷோர் ராம் ஒரு சாட்சி. குறைந்த கூலி கொடுத்தால் போதும் மாடு போல வேலை பார்ப்பார்கள் என்பதே வட மாநிலத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கு சொல்லப்படும் காரணம். அந்த குறைந்த கூலியே அவர்களுக்கு பெரிது என்று, ஏதோ நாம் அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தது போல பெருமிதம் கொள்வோரும் உண்டு. ஆனால், தினமும் கிடைக்கும் 500 ரூபாயை வைத்து இந்த சென்னை மாநகரில் தங்கள் செலவை பார்த்துக் கொள்வதே கடினம் என்ற நிலையில், இவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவே இல்லை என்பதே உண்மை. இவர்களின் குடும்ப பிள்ளைகளுக்கு கல்வி, மூன்று வேளை உணவு, சுகாதாரம் என்பது இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடும் உழைப்பைக் கொட்டியும் வாய்க்கும் வயிற்றுக்கும் என்றே இவர்களின் வாழ்க்கை நிலை நகர்கிறது.
ஜன்தன் யோஜ்னா வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்கில் 500 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டதாக கூறுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்கிறார்கள் பாட்னாவுக்கு நடந்து செல்ல காத்திருந்த இளைஞர்கள் சிலர். " எங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கு. பேங்க் அக்கவுண்ட் இருக்கு. ஆனால், அதுல எந்த பணமும் வரல. ரெட்ஹில்ஸ் பகக்த்துல கவரப்பேட்டையில தங்கி பில்டிங் வேலை பாத்துட்டு இருந்தோம். 2 மாசமா வேலை இல்ல. பில்டிங் ஓனர் எதுவும் உதவல. ஊராட்சி தலைவர் அரிசி , காய்கறி கொடுத்தார். அத வச்ச தினமும் ஒருவேளை சாப்டுட்டு இருந்தோம். இனிமேலும் இங்க இருக்க முடியாது. அதான் ஊருக்கு நடந்தே கிளம்பிட்டோம்." என்கின்றனர்.
சரி ஊருக்கு போனால், அங்கும் அவர்களுக்கு பணி இருக்காதே, அப்படி கஷ்ட்டப்பட்டு ஏன் போக வேண்டும் என்ற கேள்விக்கு " பரவாயில்ல. அங்க போய் இருக்குறத வச்சு சாப்டு பொழச்சுக்குவோம். ஊருக்கு போனா போதும்." என்று பதில் அளித்தனர்.
நினைத்துப் பார்க்க முடியாத தூரம், வெயிலில் உணவில்லாமல் நடந்து இவர்கள் விருந்துக்குச் செல்லவில்லை. இங்கிருந்ததை விட அங்கு மோசமான நிலையே. கையில் பணமும் இல்லை. அப்படி இருந்தும் இவர்கள் ஊர் செல்ல முயற்சிப்பது ஏன்?. "செத்தாலும் எங்க ஊருக்கு போய் சாகுறோம்." என்பதாகவே பதிலாக இருந்தது.
2 மாதங்கள் வேலை இல்லை, உணவில்லை, பணமில்லை, வாடகை கொடுக்காததால் சாலைக்கு வரவேண்டிய சூழல், தங்களை கண்டு கொள்ளாத அரசாங்கம், கேட்ட போதெல்லாம் உழைத்துக் கொட்டிய இவர்களை கைவிட்ட முதலாளிகள், கொரோனா நோய் அச்சம், இதற்கு மேல் நிலைமை எப்படி இருக்குமோ என்ற கவலை, தனித்து ஒதுக்கப்பட்ட வேதனை, அயல் மண்ணில் உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை என இவை எல்லாம் சேர்ந்தே அவர்களை இந்த கொடும்பயணத்துக்கு கட்டாயப்படுத்தியுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கொரோனா ஊரடங்கு அறிவித்தவுடன் சென்னையில் இருந்து அரசு இ-பாஸ் மூலம் பலர் குறிப்பாக சென்னையில் தங்கி பணிபுரியும் இளைஞர்கள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். நோய் பரவும் அபாயத்தை பார்த்த குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை பார்க்கத் துடித்தன. அது போன்ற குடும்பங்கள் இந்த புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கும் உண்டு. அதே பதற்றம் இந்த குடும்பங்களுக்கும் உண்டு. நாம் எதற்கு ஊருக்குச் சென்றோமோ அவர்கள் ஊருக்குச் செல்லவும் அதுவே காரணம்.
ஆனால் தமிழக அரசின் எண்ணமோ வேறாக இருக்கிறது. ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்நேரத்தில் இத்தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் சென்றால், இங்கு யார் வேலை செய்வது என்று சிந்திக்கிறது. அதனால் இந்த தொழிலாளர்களை எல்லையில் தடுத்து நிறுத்துகிறது. இவ்வளவு தூரம் அவர்கள் மேற்கொண்ட நடைபயணம் வீணாக முடிகிறது. அவர்களின் இருப்பிடத்தில் அல்லது இருக்கும் பகுதிகளில் போதிய தங்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் அவர்கள் ஏன் நடக்கப் போகிறார்கள்.
கும்முடிப்பூண்டி கடந்து எழாவூர் அருகே முடியும் தமிழக எல்லையிலும், காவல் துறை இத்தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி முகாம்களுக்கு அனுப்புகிறது. இல்லையேல் அங்கேயே அமரவைக்கின்றனர். போலிஸிடம் இருந்து தப்பிக்க, நெடுஞ்சாலையில் இருந்து விலகி, பொட்டல் காடுகள் வழியாக, ஆற்றைக் கடந்து, மீண்டும் காட்டில் நடந்து ஆந்திர எல்லைக்குள் சென்று மீண்டும் சாலைப் பகுதிக்கு வருகின்றனர்.
கழுத்தளவு தண்ணீரில் மிதிவண்டிகளையும், மூட்டை முடிச்சுகளையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணம் நம்மை பதற வைக்கிறது. தமிழக எல்லையைக் கடந்தால் தொல்லை முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம். ஆந்திர போலிஸ் இவர்கள் மீது தடியடி நடத்தி சைக்கிள்களை பிடுங்கி வைத்துக் கொள்வதாகவும் தகவல் வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, சட்டிஸ்கர், ஒரிசா, பீஹார்,மேற்கு வங்கம் வரை இவர்கள் பாடு திண்டாட்டம் தான்.
மறுபுறம், ஷர்மிக் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏறக்குறைய 55000 தொழிலாளர்கள் சென்னையில் காத்திருக்கின்றனர். ஆனால் இவர்களுக்காக இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. சிறப்பு ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்கிறது தமிழக அரசு. எப்படியோ உதவிகளைப் பெற்று, அதையும் செய்திருக்கின்றனர். படிவம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என அரசிடம் இருந்து வந்த மெசேஜ்ஜை, ரயில் டிக்கெட் என நினைத்துக் கொண்டு பலர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வாசலில் குவிந்து இருப்பதையும் பார்க்க முடிந்தது.
ஆயிரக்கணக்கான புலம்பெயர்த் தொழிலாளர்களை நாங்கள் சந்திக்க நேரிட்டது. அதில் உன்னிப்பாக ஒரு விஷயம் கவனிக்க வேண்டியிருந்தது. அதில் ஒருவர் கூட எங்களுக்கு உணவு வேண்டும் என்றோ, பணம் வேண்டும் என்றோ கேட்டு, தங்கள் தன்மானத்தை இழக்கவில்லை. எங்களுக்கு ஊருக்கு போக வேண்டும். அதற்கு வழி செய்து கொடுங்கள், இல்லையேல் வழியை விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதே அவர்களின் திடமான குரலாக இருந்தது.
அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் திரும்பினோம். வீடு வந்ததும் ஒரு செய்திச் சேனலின், ஸ்கராலில் " சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்த் தொழிலாளி, சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில், பசியால் சுருண்டு விழுந்து மரணம்." என்ற செய்தி சட்டெனக் கடந்தது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!