உணர்வோசை
''பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அடிதொட்டு சேவையைத் தொடரும் செவிலித்தாய்கள்" : உலக செவிலியர் தின சிறப்பு கட்டுரை!
இங்கிலாந்தின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் - பிரான்சிஸ். இவர்கள் இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பணியாற்றியபோது அவர்களுக்கு 3-வது குழந்தையாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 1820-ம் ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பிறந்தார். ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் புலமை பெற்று இருந்த இவர் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக செவிலியர் படிப்பு படிக்க ஆசைப்பட்டார்.
ஆனால் பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். திருமணம் செய்ய மறுத்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி 1844-ம் ஆண்டு, நைட்டிங்கேல் ஜெர்மனியின் கைசர்வெர்த்தில் உள்ள பாஸ்டர் பிளைட்னரின் லூத்தரன் மருத்துவமனையில் செவிலியர் மாணவியாகச் சேர்ந்தார். பின்னர் கல்வியை முடித்துக்கொண்டு 1850-ம் ஆண்டு, லண்டனுக்குத் திரும்பினார், அங்கு அவர் ஒரு மிடில்செக்ஸ் மருத்துவமனையில் நர்சிங் வேலையைப் பெற்றார்.
நைட்டிங்கேல் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதால் மருத்துவமனையில் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது. கடின உழைப்பு அவரது உடல்நிலையை பாதித்தது. அவரது நர்சிங் வாழ்க்கையில் மிகப்பெரிய சவால்கள் வந்த போதும் அவற்றில் இருந்து எல்லாம் அவர் மீண்டு வந்தார். குறிப்பாக ஒட்டோமான் பேரரசைக் கட்டுப்படுத்த ரஷியா சாம்ராஜ்யத்திற்கு எதிராக பிரிட்டிஷ் பேரரசு 1853-ம் ஆண்டு கிரிமியன் போரில் ஈடுபட்டது.
ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் வீரர்கள் கருங்கடலுக்கு அனுப்பப்பட்டனர். தொடர்ந்து 1854-ம் ஆண்டு இந்தப் போரில் 18 ஆயிரம் வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பெண்கள் செவிலியர்கள் பணி செய்ய எதிர்ப்புக் கிளம்பியது. இதனை எதிர்த்துப் போராடிய நைட்டிங்கேல், 1854-ம் ஆண்டின் பிற்பகுதியில், போர் செயலாளர் சிட்னி ஹெர்பெர்ட்டின் உத்தரவின்படி 34 செவிலியர்களைக் கொண்ட ஒரு குழுவை கூட்டி, கிரிமியாவிற்கு சென்று படுகாயமடைந்த போர் வீரர்களுக்கு விளக்குகள் ஏந்திச் சென்று சிகிச்சை அளித்தார். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொண்டில் சிறந்து விளங்கியதுடன் ‘கிரிமியா’ போரில் உயிருக்குப் போராடிய பலரின் கண்களுக்கு ‘கைவிளக்கு ஏந்திய காரிகை’யாக காட்சியளித்தார். இவருடைய சேவையை பாராட்டி 1883-ம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்க விருது வழங்கப்பட்டது.
அத்துடன் அவருடைய 84-வது வயதில் இங்கிலாந்து நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் மெரிட்’ வழங்கப்பட்டது. தனது வாழ்க்கை முழுவதையும் செவிலியர் பணியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து அரிய பல சேவைகளைச் செய்து 1910-ம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந்தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் உள்ள விளக்குகளில் ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராக கைமாற்றப்பட்டு மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படுகிறது.
சர்வதேச செவிலியர்கள் கவுன்சில், நடப்பாண்டு சர்வதேச செவிலியர் தினத்திற்கான கருப்பொருளாக ‘உலக ஆரோக்கியத்திற்கு நர்சிங்’ என்று அமைத்துள்ளது, இந்த ஆண்டை செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாக அறிவித்துள்ளது.
செவிலியர்களின் தாயாக விளங்கும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 200 வது பிறந்தநானான இன்று அவரது வடிவத்தில் உலக அளவில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் தங்களது சேவையைத் தொடரும் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை நினைவு கூறவேண்டிய தருணம் இது.
அந்த வகையில் கேரளாவின் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்மை செவிலியராக பணிபுரியும் பாப்பா ஹென்றி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் தனது தன்னலமற்ற சேவைக்காக நைட்டிங்கேலின் வாரிசாக புகழப்படுகிறார்.
இடுக்கி மாவட்டம் பீர்மேடு தாலுகா வண்டிப்பெரியாரில் பிறந்த பாப்பா ஹென்றி ஒரு செவிலியராக தன் வாழ்வைத் தொடங்கியவர். 41 வயதாகும் அவர் கடந்த மார்ச் மாதம் 8ந் தேதியில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக 16 நாட்கள் பணிபுரிந்தார். இரவு பகல் பாராமல் கொரோனா நோயாளிகள் குணம் பெற தனது சேவையை தொடர்ந்தார்.
இதன்பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அப்போது அவர் சொன்ன வார்த்தை கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முடிந்த உடன் கொரோனா அதிகமாக உள்ள காசர்கோடு பகுதிக்குச் சென்று பணியாற்றப்போவதாக அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது இந்த துணிச்சலான முடிவினை, கேரள மாநில முதல்வர் பினராய் விஜயனும், சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவும் வெகுவாகப் பாராட்டினர்.
இதன்பின்னர், பாப்பா ஹென்றி 25 பேர் கொண்ட மருத்துவக் குழுவுடன் சேர்ந்து காசர்கோடு மாவட்டத்திற்கு மருத்துவப் பணியாற்ற புறப்பட்டார். ஏப்ரல் 15ந் தேதி தனது பணியை குழுவினரோடு சேர்ந்து செய்தார். தன்னுடைய கணவர் ஹென்றி, 10 ஆம் வகுப்பு படிக்கும் மகள் அனன்யா, 6 ஆம் வகுப்பு படிக்கும் மகன் அனன் ஆகியோரைப் பிரிந்து தொடர்ச்சியாக அவர் கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டதற்கு கேரளாவின் பல்வேறு பிரிவினர் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பத்திரிகை, ஊடகங்கள் பாப்பாவின் சேவையை அங்கீகரித்து பாராட்டி எழுதி வருகின்றன. கேரள போலிஸ் சங்கம் நடத்தும் காவல் பத்திரிகை இம்மாத இதழின் முகப்புப் பக்கத்தில் பாப்பா ஹென்றி நிழற்படத்தை வெளியிட்டு அவரை கவுரவப்படுத்தியுள்ளது.
தற்போது, கோட்டயத்தில் உள்ள காப்பகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாப்பா ஹென்றி இதுகுறித்து நம்மிடம் கூறும்போது, "செவிலியர் பணி நான் விரும்பி ஏற்றது. கடந்த கால நிஃபா வைரஸ், வெள்ளப்பெருக்கு போன்றவற்றில் பணியாற்றிய அனுபவம் கொரோனாவை எதிர்கொள்வதற்கு மிகவும் உதவியது. கொரோனாவை எதிர்கொள்வதில் கேரளா முன்னணி வகித்தது. இதற்காக நான் முதலமைச்சர் பினராய் விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். மிகுந்த முன்னெச்சரிகையோடு நாங்கள் கொரோனாவை எதிர்கொண்டோம். கேரள மாநில மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்ததும் கொரோனாவை நாங்கள் வெல்வதற்குக் காரணமாக அமைந்தது.
காணொளிக் காட்சி ஒன்றில் நான் காசர்கோட்டில் பணிபுரிவேன் என்று தெரிவித்திருந்தேன். அந்த வாய்ப்பை அளித்த கேரள அரசுக்கு இத்தருணத்தில் நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன். கேரளாவில் மட்டும்தான் 93 வயதான பெரியவரும், 88 வயதான மூதாட்டியும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதை எண்ணி மகிழ்கிறேன். தனிமைப்படுத்தப்பட்ட தினங்கள் முடிந்த உடன் மீண்டும் எனது சேவையை தொடர்வேன்".
இவ்வாறு பாப்பா ஹென்றி பெருமிதத்தோடு கூறினார்.
பாப்பா ஹென்றி போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் வாரிசுகள் தங்கள் சேவையை மக்களுக்காக தொடர்ந்து செய்துவருகின்றனர். உலக செவிலியர் தினத்தில் இந்த மக்கள் ஊழியர்களுக்கு நாமும் நன்றி சொல்வோம்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !