உணர்வோசை
“அவருக்கு ஒரு கனவு இருந்தது... இமாலய கனவு” - சச்சின் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு! #HBDSachin
சச்சின் டெண்டுல்கர்… அத்தனை எளிமையான பெயரல்ல இது. உலக அரங்கில் இந்தியாவை கம்பீர மிடுக்குடன் நடைபோட வைத்த பெருமைமிகு பெயர். வெறும் கிரிக்கெட்டர் மட்டுமல்ல அவர். ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் சச்சின் என்கிற உருவத்தின் மீது பல நினைவுகள் இருக்கும்.
சச்சினின் மகன் அர்ஜூனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'உங்களைக் கவர்ந்த கிரிக்கெட் வீரர் யார்?' என்பது தான் அது. அவர், சச்சினின் பெயரைக் கூறவில்லை. சற்றும் யோசிக்காமல் வேறோரு கிரிக்கெட் வீரரைச் சொன்னார். ஒரு மகனை சுயமாகவும் சரியாகவும் சிந்திக்க வைப்பதுதானே தந்தையின் தலையாய கடமை. அதற்கு இந்த ஒரு சம்பவமே சான்று. இதுதான் சச்சின்.
கிரிக்கெட்டின் கதை இந்தியாவில் 1983ல் தான் துவங்குகிறது. ஏனெனில், இந்திய மக்களுக்கு கிரிக்கெட் மீதான ஈர்ப்பானது 1983 ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றதன் பிறகுதான் துவங்கியது. மக்கள் கிரிக்கெட்டை ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவுக்கு உலகக் கோப்பையை ஒவ்வொரு முறையும் பரிசளிக்க ஒருவர் விரும்பினார். அவர்தான் சச்சின். அன்று டி.வியில் உலகக் கோப்பையை ரசித்துக்கொண்டிருந்த சச்சினின் கனவு இந்தியா ஜெயிக்கவேண்டும் என்பதில் இல்லை. இந்தியாவை நாம் ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதில் இருந்தது.
ஆனால், என்ன செய்ய வேண்டும், எப்படி இதை சாத்தியமாக்க வேண்டுமென்பதெல்லாம் அந்தச் சிறுவயதில் சச்சினுக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரு சிறுவனின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தார். அதன்பிறகு, அவரது கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காகவும், அவர் சிந்தித்தவைகளும் எடுத்த முயற்சிகளும் நிகரற்றவை.
சச்சினுக்கு 11 வயது இருக்கும்போது ‘உன் கனவுகளை தேடிப்போ, எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் குறுக்கு வழியில் போகாமல், நேர்மையான வழியில் விடா முயற்சியுடன் போராடு’ என்று சச்சினிடம் அவரது தந்தை சொன்ன அந்த வார்த்தைகள் தான் இன்றைக்கு ஒரு ஜாம்பவானை இந்தியாவுக்கு தந்துள்ளது. அந்த நேர்மையை ரசிகர்களுக்கும் புகட்டியிருக்கிறார் என்பதே இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று.
சச்சினின் அண்ணன் அஜித் டெண்டுல்கர், சச்சினின் ஆட்டத்தை பார்த்து மும்பையில் தலைசிறந்த பயிற்சியாளராக திகழ்ந்த ராம்கந்த் அச்ரேகரிடம் அழைத்துச் சென்றார். அங்குதான் சச்சினின் சகாப்தம் துவங்குகிறது. ராம்கந்த் அச்ரேகரிடம் பயிற்சி பெற்று வந்த சச்சினுக்கு, 1988ஆம் ஆண்டு இந்தியாவின் உள்ளுர் போட்டிகளில் ஒன்றான, ரஞ்சி கோப்பையில் விளையாடும் வாய்ப்பை கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திய சச்சின், குஜராத்திற்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். தொடர்ச்சியாக உள்ளுர் போட்டிகளில் கலக்கிய சச்சினுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் தேடி வந்தது.
அது அத்தனை சுலபமாகக் கிடைக்கவில்லை. அதற்குள் துளியாய்த் துவங்கி, நதியாய் மாறும் பெரும் உழைப்பும் இருந்தது. 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கராச்சியில் நடந்த, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார் லிட்டில் மாஸ்டர் சச்சின். அன்று முதல், 2013ஆம் ஆண்டு மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தனது கடைசி சர்வதேச போட்டி வரை, சுமார் 24 ஆண்டுகளுக்கு கிரிக்கெட்டில் தனது ராஜ்ஜியத்தை நடத்தினார்.
தனது முதல் கனவான உலகக்கோப்பையையும் 2011ஆம் ஆண்டு வென்றார். இடைப்பட்ட காலத்தில் சச்சின், கிரிக்கெட் உலகுக்கு என்னற்ற நினைவுகளையும், காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு எண்ணற்ற சாதனைகளையும் விட்டுச் சென்றுள்ளார்.
சச்சினும் சதமும் :
சச்சினின் சாதனை என்றவுடன் நம் அனைவருக்கும் முதலில் ு வருவது சதத்தில் சதம். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு தொடர்ந்து நல்ல ஃபார்மில் இருக்கவேண்டும், ஒரே ஸ்டைலில் விளையாடினால் எளிதில் அவுட்டாக வாய்ப்பு உண்டு. எனவே, தனது ஸ்டைலை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, தொடர்ச்சியாக கிரிக்கெட்டை காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சதத்தில் சதம் சாத்தியமாகும். இதை நன்கு அறிந்த சச்சின் இவை அனைத்தையும் செய்தார். 2012ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின்போது சதத்தில் சதம் என்னும் இமாலய மைல்கல்லை அடைந்தார்.
நிற்க… சச்சின் இந்த மைல்கல்லை அடைவதற்கு 763 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. இதில் 99-வது சதத்தை 729வது இன்னிங்ஸில் அடித்தார். பிறகு, 100வது சதத்தைப் பூர்த்தி செய்ய இன்னும் 34 இன்னிங்ஸ் காத்திருக்க வேண்டியிருந்தது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குவாலியரில் நடந்த ஒருநாள் போட்டியில் சச்சின் அடித்த முதல் இரட்டை சதம் மறக்க முடியாத ஒன்று. அதுவரை ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் என்பது யாருக்கும் எட்டாக்கனியாகவே இருந்தது. நீண்டகாலமாக பாகிஸ்தானின் சயத் அன்வர் அடித்த 194 ரன்கள் தான் தனிநபர் அதிக பட்ச ஸ்கோராக இருந்தது. 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதியன்று அதை உடைத்து, ஒரு நாள் போட்டியிலும் இரட்டை சதம் என்பது இயலாதது அல்ல என்பதை நிரூபித்தார் சச்சின்.
அதன் பிறகுதான் சேவாக், ரோஹித், கெய்ல், கப்தில் எனப் பலர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தனர். ஆனால், இவர்களுக்கான ஒற்றை நம்பிக்கையாக, முன்னரே இரட்டை சதத்தை நிகழ்த்தியவர் சச்சின். அதே ஆண்டு இறுதியில் தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில், தனது 50வது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தார் சச்சின்.
டெஸ்ட் போட்டிகளில் 51 சதம், ஒருநாள் போட்டிகளில் 49 சதம் என்று தனது கணக்கில் வைத்திருக்கிறார் சச்சின், அதில் மறக்க முடியாத சிலவும் உண்டு. அறிமுகமாகி 9வது போட்டியில், அதாவது 1990ல் மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார். அதன் பிறகு 1994-ஆம் ஆண்டு கொழும்புவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் தனது முதல் ஒருநாள் போட்டிக்கான சத்தை பதிவு செய்து, அந்த போட்டியில் ஆட்ட நாயகனாகவும் ஜொலித்தார் சச்சின்.
சச்சினுக்கு ஷார்ஜா மைதானம் மிகவும் நெருக்கமான ஒன்று, ஏனெனில் இங்கு மட்டும் 7 சதங்களை குவித்துள்ளார். அதில் குறிப்பாக 1995-96ல் நடைபெற்ற ‘Pepsi Sharja Cup’ ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 118 ரன்களை பாகிஸ்தான் அனியினர் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். மேலும் அதே மைதானத்தில் 1997-98ம் ஆண்டு நடைபெற்ற Coca cola cup தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியுல் 143 ரன்கள் குவித்ததோடு மட்டுமல்லாமல் அணியை ஃபைனலுக்கு அழைத்து சென்றார். 2004ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் தனது அதிகபட்ச ஸ்கோராக 248 ரன்களை பதிவு செய்தது, 2009ல் ஹைதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் 19 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சருடன் 175 ரன்களை குவித்தது என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஆனால், சச்சினுக்கு மிகவும் நெருக்கமான ஒரு சதம் என்றால் அது 1999ல் நடந்த உலகக்கோப்பை தொடரில் கென்யாவுக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் அடித்த சதம் தான். ஏனெனில் 1999ஆம் உலககோப்பை தொடரின்போதுதான் சச்சின் தனது தந்தையை இழந்தார். அந்த துக்கத்தின் ஈரம் காய்வதற்குள் சச்சின் இந்திய அணிக்கு திரும்பி, கென்யாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து வானத்தை நோக்கி தனது பேட்டை உயர்த்தினார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யபட்ட சச்சின், ‘இந்த சதத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று கூறியது ரசிகர்களைக் கலங்க வைத்தது. இதைவிட சிறப்பான ஒன்றை, அவருடைய தந்தைக்கு சச்சின் செய்துவிடவே முடியாது.
சச்சினின் தனித்தன்மை :
சச்சின் களத்தில் இருந்தால், அனைவரும் தங்களது வேலைகளை விட்டுவிட்டு, சச்சினின் ஆட்டத்தைப் பார்க்க டி.வி முன் ஒன்றுகூடி விடுவார்கள். அதே நேரம் சச்சின் அவுட் ஆனதும் ஆட்டம் முடிந்தது என்று டி.வியை ஆஃப் செய்து விட்டுச் செல்வதும் உண்டு. இப்போது இருந்த இடத்திலேயே கிரிக்கெட் பார்ப்பது , போட்டி முடிந்த சிறிது நேரத்திலே highlights பார்ப்பது போன்று தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் அப்போது கிடையாது. சச்சினுடன் சேர்ந்துதான் இந்தியாவில் தொழில்நுட்பங்களும் வளர்ந்தது என்றே கூறலாம்.
உதாரணம், முதலில் சச்சின் விளையாடியபோது அவரது ஆட்டத்தை ரேடியோவில் கமென்ட்ரி மூலம் கேட்டிருப்போம். பின்னர் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் பார்த்திருப்போம், பின்னர் கலர் டி.வி, அதன் பிறகு LCD, LED டி.வி-கள் என்று மாறிக்கொண்டே இருந்தன.
நம்பகத்தன்மை குறித்து ஆங்லத்தில் ஒரு வாக்கியம் உண்டு அது ‘keep trust as solid as Sachin's Straight drive’ அதாவது சச்சின் தனது Straight drive மீது வைக்கும் நம்பிக்கை போன்று மற்றவர்களிடத்தில் நம்பிக்கை வையுங்கள் என்று அர்த்தம். அதற்கு காரணம், சச்சின் Straight drive அடித்தால் அந்தப் பந்து நிச்சயம் பவுண்டரிக்கு செல்லும். சச்சின் அந்த ஷாட்டை கிரீஸில் இருந்து நகராமலேயே அடிப்பார். அதுதான் அவரது Trademark shot-டாகவும் ஆனது.
சச்சினிடம் மிகப்பெரிய பிளஸ் ஒன்று உள்ளது. தான் அவுட் என்று தெரிந்துவிட்டால் அம்பயரின் தீர்ப்பு வருவதற்க்கு முன்பே நடையைக்கட்டி விடுவார். அதே நேரம் தவறுதலாக அவுட் கொடுக்கப்பட்டால், சிறிய புன்னகை கலந்த அதிர்ச்சியுடன் களத்தை விட்டு வெளியேறுவார். சச்சின் 90 ரன்களைக் கடந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது 18 முறை ஆட்டமிழந்துருக்கிறார். அப்போதும் கூட அதே சிரித்த முகத்துடன் தான் களத்திலிருந்து வெளியேறுவார்.
சச்சினுக்கு கோவம் வருமா, அப்படி வந்தால் அதை எவ்வாறு வெளிப்படுத்துவார் என்பதற்கு உதாரணமாக 1998ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடத்த 4வது ஒருநாள் போட்டியைச் சொல்லலாம். முதல் மூன்று போட்டிகளில் henry Olonga-விடமே ஆட்டமிழந்த சச்சின், நான்காவது போட்டியில் கடுப்பாகி Olongaவின் பந்தில் தொடர்ந்து 3 சிக்சர்களை விளாசி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல், 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 160 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடியது. ஆஸ்திரேலியா அணியினர் attacking bowling-ஐ கையாண்டனர். சச்சினுக்கு போட்டியின் 5வது ஓவரை வீசிய பிரட்லீயின் முதல் பந்து, ஃபுல் டாஸாக சச்சினின் தோள்பட்டையை லேசாகப் பதம் பார்த்துவிடும். ஆனால் அதை மிக sportiveவாக எடுத்துக் கொள்வார். பின்னர் அதே ஓவரில் 3 கிளாசிக் பவுண்டரிகளை அடித்து கிரிக்கெட்டில் தான் ஒரு மாஸ்டர் என்று நிரூபித்திருப்பார்.
காதலாகி காதலில் கரைந்தவர் :
அந்த நாளை, சச்சினும் அஞ்சலியும் அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். முதன்முறையாக அஞ்சலி, சச்சின் வீட்டுக்குச் செல்வதாக திட்டம். ஆனால், சச்சினிடம் ஒரு சின்ன தயக்கம். இருவருக்கும் ஒரு ஐடியா. “என் வீட்டில் உன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிவிடுகிறேன். யாருக்கும் சந்தேகம் வராது சரியா!” என்று திட்டமிடுகிறார் சச்சின். மறுநாள், பளபளப்பான சல்வார் கமீஸ் அணிந்துகொண்டு, சச்சின் வீட்டுக்குச் செல்கிறார் அஞ்சலி. பேட்டி எடுக்க வந்திருப்பதாகக் கூறுகிறார். இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு அறையிலிருந்த சச்சினின் அக்காவுக்கு ஏதோ ஒரு சின்ன சந்தேகம் எழுகிறது. ”இவரைப் பார்த்தால் பேட்டி எடுக்க வந்தவர்போல தெரியவில்லையே!” என்று அம்மாவிடம் முணுமுணுக்கிறார். சச்சின், தன் காதலி அஞ்சலிக்கு சாக்லேட் துண்டுகளை வெட்டிக்கொடுக்கிறார். அந்த சாக்லேட் போலவே, இனிதாக முடிந்தது அந்தச் சந்திப்பு. பிறகு, இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் 1995-ம் ஆண்டு நடந்தது. இருவருமே காதலை எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.
- சபரி
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!