உணர்வோசை
பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் : மோடி - எடப்பாடியின் நட்பு எப்படிப்பட்டது ? #CoronaLockdown
தமிழக அரசியலில் நேற்று ஒரு அதிசயம் அரங்கேறியிருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் அரங்கேற்றியிருக்கிறார். யார் தெரியுமா? நம் சேலத்து சேக்கிழார் முதல்வர் எடப்பாடி பழநிசாமிதான். அது என்ன அதிசயம்? தமிழகத்தில் ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு முன்னதாக தாமகவே ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று மக்கள் நினைக்கலாம்; ஆம். இருக்கிறது. இந்த அதிசயத்தின் வரலாற்றை தெரிந்துக்கொள்வோம். கொரோனா வைரஸ் சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மாநில எல்லைகள் , மாவட்ட எல்லைகளை மூடியது தமிழக அரசு. அதனைத் தொடர்ந்து , நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி , நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன் பின்னர் , அனைத்து மாநிலங்களும் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களையே பின்பற்றி வந்தனர். தமிழகமும் விதிவிலக்கில்லை. இந்நிலையில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் மே, ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று பெருமளவில் இந்தியாவை பாதிக்ககூடும் என்று எச்சரித்தனர். இதனால் கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இம்மாதிரியான செய்திகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்ததால் பொது மக்களிடமும் பரவலாக ஒரு குழப்பநிலை நீடித்துவந்தது.
மக்களின் குழப்பத்தைத் தீர்ப்பதா? இல்லை தி.மு.கவுடன் மல்லுக்கட்டி மக்களை குழப்பிவிடலாமா என்று தன் கைங்கர்யத்தை பயன்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க. மற்றும் பல்வேறு தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள் நலிந்த மக்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாள்தோறும் செய்து வந்தனர். இதனால் எத்தனையோ மக்கள் பயனடைந்தனர்; அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது; பசி தீர்க்கப்பட்டது. எங்கே இப்படியேப் போனால் நம்மால் ஸ்கோர் செய்ய முடியாது என்று தன் அதிகாரிப்படையுடன் என்ன செய்வதென்று எத்தனித்தார் எடப்பாடி.
அதற்காக எடுத்த ஆயுதம்தான் தன்னார்வலத்தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதற்கு விதிக்கப்பட்டத் தடை. இந்த மனிதாபிமானமற்றத் தடை உத்தரவை எதிர்த்து தி.மு.க தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதேபோலதான் ரேபிட் டெஸ்ட் கிட் தொடர்பான விவகாரத்திலும் மக்களிடம் பொய்களை கட்டவிழ்த்துவிட்டார் முதல்வர். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 19 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றது. கூடுதல் பரிசோதனை மையங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில்தான் தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது என்று முதல்வரே நேரடியாகப் பேசினார்.
அவர் பேசியது ஒன்று நடந்தது ஒன்று. அவர் என்னப் பேசினார் தெரியுமா? துரிதப் பரிசோதனைக் கருவிகள் என்று சொல்லப்படும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஒரு லட்சம் எண்ணிக்கையில் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனையின் வேகம் அதிகரிக்கும். வரும் 9ம் தேதி அந்தக் கருவிகள் கிடைக்கும் . சீனாவிலிருந்து கருவிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. 10ம் தேதி முதல் பரிசோதனைகள் தொடங்கும்.
முப்பது நிமிடங்களில் இந்தப் பரிசோதனை முடிவுகள் தெரிந்துவிடும் என்று வெத்து வாய்ஜால பேட்டி அளித்தார். 9ம் தேதியும் வந்தது. ரேபிட் டெஸ்ட் கருவிகள் வரவில்லை பழனிசாமிதான் வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவிடம் இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது எனப் புதிய தகவலைச் சொன்னார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், ``இன்றிரவு (ஏப்ரல் 9-ம் தேதி) 50,000 ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வர உள்ளது” என்றார் . இந்த நிலையில் அதே 9-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஒரு அறிக்கை பரவியது. ஏப்ரல் 2 என தேதியிடப்பட்ட அந்த அறிக்கையில் மாநில அரசுகள் தனியாக வென்டிலேட்டர்கள், N-95 மாஸ்க்குகள் உள்ளிட்ட எந்த மருத்துவ உபகரணங்களுக்கும் ஆர்டர்கள் கொடுக்க வேண்டாம் எனவும், தேவையானவற்றை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று தேதி 14 கருவிகள் இன்னும் வந்து சேர்ந்தப் பாடில்லை.
மத்திய அரசு ஏன் மாநில அரசுக்கு மருத்துவ உபகரணங்களைப் பிரித்துத்தர வேண்டும்? மத்திய அரசு நேரடியாக தலையிடுவது மாநில சுயாட்சிக்கு வேட்டு வைப்பதாகும். சர்வாதிகாரத்திற்கு கால்கோள் விழா நடத்த முனைகிறதா மத்திய அரசு? கொரோனா கிட் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு தமிழக மக்களின் உயிரோடு விளையாடுவதாகும். இதுபோன்ற உயிர் பிரச்னைகளில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர மாநிலங்களோடு சண்டமாருதம் செய்வது நியாயமில்லை; தர்மமும் இல்லை. இத்தகையப் பிரச்சனைகள் தன்னை சூழ்ந்திருக்க, மக்கள் நலனுக்காக பாடுபடுவதைவிடுத்து எப்படி கொரோனாவை வைத்து அரசியல் செய்வது என்பதிலேயே முனைப்பாக இருந்தார் முதல்வர்.
தமிழக முதல்வர் எடப்பாடி மத்திய அரசுக்கு அறணாகவும் அடிநாதமாகவும் இருந்து வருவது மக்கள் மத்தியில் தன் சாயம் வெளுத்ததுவிடக் கூடுமோ என்ற அச்சத்தை அவருக்குக் கொடுத்தது. ”பிரதமர் எத்தனை நாள் ஊரடங்கை அறிவிக்கப் போகிறார் என்பது தெரியாமல் எப்படி தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடியும்” என்று தமிழக தலைமை செயலாளர் ஏப்ரல் 12 அன்று பேட்டியளித்தார். ஆனால், தலைமை செயலாலர் பேட்டியளித்த அடுத்த நாளே (ஏப்ரல் 13) தமிழக முதல்வர் பிரதமர் உரைக்கு 18 மணி நேரம் முன்னரே தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடகம், பஞ்சாப், மகாராஷ்டிரம், மேற்குவங்கம், ஒடிசா போன்ற மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவிற்குக் காத்திராமல் தானே ஊரடங்கை நீட்டித்திருந்த நிலையில் எடப்பாடியின் இந்த அறிவிப்பு தானும் மத்திய அரசுக்கு அஞ்சியவரில்லைதான் மோடியை மிஞ்சியவர் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காகவேத் தவிர மக்கள் நலனுக்காக அல்ல. கொரோனா மக்களை பீதியில் உறையச் செய்திருக்கிறது. மக்கள் வாழ்வை சிதைத்திருக்கிறது.
இந்த நேரத்தில் மக்களுக்கு பக்கபலமாக இருந்து செயல்படுவதை விடுத்து சில்லறை அரசியல் செய்கிறார் முதல்வர். அவர் செய்யும்; செய்த அனைத்து துரோகங்களுக்கும் மக்களே சத்திய சாட்சி. ஒன்றை எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும். நிலையான நல்லாட்சி தர முடியவில்லை என்றாலும் சொந்த மக்களுக்கே துரோகம் இழைத்தால் அதே மக்கள் தன்னுடைய ஆட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றிவிடுவார்கள். பாவம் அவரும் என்னத்தான் செய்வார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலை – பாலுக்கும் காவலாக நடிக்க வேண்டும்; பூனைக்கும் நண்பனாக இருக்க வேண்டும்!
எழுத்து - அஜய் வேலு
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!