உணர்வோசை
“அமெரிக்காவை அசைத்துப் பார்த்த முரசொலி மாறனும்... ட்ரம்ப்புக்கு அடிபணிந்த மோடியும்!” #Covid19
உலகளாவிய பேரிடராகக் கருதப்படுகின்ற கொரோனா என்னும் கொடிய நோய் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. இந்தக் கொடிய நோய்க்கு அளிக்கக் கூடிய மருந்துதான் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின்(HCQ). இந்திய அரசு மார்ச் 3ம் தேதி அன்று கொரோனாவின் கோரத் தாண்டவம் காரணமாக ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்துக்கும் இதர 16 வகையான மருந்துகளின் ஏற்றுமதிக்கும் தடை விதித்திருந்தது.
இந்நிலையில்தான் ஏப்ரல் 4ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசி முலம் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்தினை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் திங்கட்கிழமையன்று பத்திரிகையாளர் சந்திப்பில்தான் அந்த உண்மை தெரியவந்தது. அது என்ன உண்மையென்றால், அவர் பணிந்து கேட்கவில்லை துணிந்து மிரட்டியிருக்கிறார் என்று. ஏனென்றால் அதே பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் என்ன பேசினார் தெரியுமா? ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கான தடையை நீக்குங்கள் என்று இந்தியப் பிரதமரிடம் பேசினேன். மாத்திரை ஏற்றுமதிக்கு நீங்கள் அனுமதியளித்தால் அது பாராட்டுக்குரியதாக இருக்கும் என்றேன். நான் கேட்டுக்கொண்டபின்பும் இந்திய அரசு மாத்திரைகள் ஏற்றுமதிக்கு அனுமதியளிக்காவிட்டால், எதிர்காலத்தில் நாங்களும் பதிலடி கொடுப்போம். ஏன் பதிலடி கொடுக்கக்கூடாதா” என்று ஏகாதிபத்தியத்திற்கே உரித்தான தொணியில் பேசியிருந்தார்.
வீர சாவர்க்கரின் வம்சாவழியாக சித்தரிக்கப்படும் நம் பாரதப் பிரதமர் என்ன செய்தார் தெரியுமா? மருந்துகள் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டிருந்தத் தடைகளை உடனடியாக தளர்த்தி; மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவை வைத்து “சர்வதேச சமூகத்தினரிடம் வலிமையான ஒற்றுமையையும், கூட்டுறவையும் இந்தியா எப்போதும் பராமரிக்கிறது. இந்த அணுகுமுறையின் அடிப்படையில் மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களை நாங்கள் பல்வேறு இடங்களில் இருந்து மீட்டு வந்தோம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயின் சூழல் கருதி, பாராசிட்டமால், மற்றும் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்துகளை நம் அண்டை நாடுகளுக்கு, நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும் மனிதநேய அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ளோம். இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகள் இந்த மாத்திரைகளை வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தன” என்று அந்தர்பல்டி அடித்தார்.
இம்மாதிரியான மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வரும் காலங்களில் பிரதமர் மோடிக்கு வரலாற்றின் பக்கங்களிலிருந்து இரண்டு சம்பவங்களை அதிகாரிகள் நினைவூட்ட வேண்டும். அவை, 1960ல் அமெரிக்காவில் நடந்த ஐ.நா மாநாடும்; 2001ல் தோஹா வர்த்தக மாநாட்டில் அன்றைய இந்திய வர்த்தக அமைச்சர் முரசொலி மாறனின் முடிவுகளும்தான். இவை இரண்டுமே உலக அரங்கில் அமெரிக்காவின் கர்வத்தை உடைத்து இந்தியாவின் கௌரவத்தை உயர்த்திப் பிடித்த நிகழ்வுகளாகும்.
2001ல் கத்தார் தலைநகர், தோகாவில், ‘உலக வர்த்தக மாநாடு’ நடைபெற்றது. இதில், 142 நாடுகள் பங்கேற்றன. அந்த மாநாட்டைத்தான், அப்போதைய மத்திய வர்த்தக அமைச்சராக இருந்த முரசொலி மாறன் ஸ்தம்பிக்க வைத்தார். அம்மாநாட்டில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாக பொருட்கள் குவிப்பு தடுப்பு சட்டம், ஐரோப்பிய நாடுகளின் விவசாய மானியங்கள், ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் முக்கிய மருந்துகளை வழங்குதல் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட இருந்தன. இதற்காக வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக வரைவு ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பாதகமான பல அம்சங்கள் இருந்தன. முரசொலி மாறன் சில நாட்கள் தூக்கமின்றி,பயண நேரத்திலேயே, துறை வல்லுநர்களிடம் விவாதித்து இந்தியாவுக்கு பாதகமான அம்சங்களை தனியே ஒரு பட்டியலிட்டார். மாநாட்டில் வாக்கெடுப்பு நடக்கும் சில மணி நேரத்திற்கு முன்னதாக பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாட்டு அமைச்சர்களை அழைத்து மாநாட்டுக்கு உள்ளேயே தனிக்கூட்டம் நடத்தி, அந்த ஒப்பந்தத்தின் பாதகங்களை விளக்கி, அவர்களின் ஆதரவைத் திரட்டினார். அதைத் தொடர்ந்து மாநாட்டில் முன்மொழியப்பட்ட வரைவு தீர்மானத்தில், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு உள்ள பாதகமான அம்சங்களை விவரித்து நீண்ட நெடிய உரையாற்றினார் முரசொலி மாறன்.
‘நாம் ஒரு வலுவான பொது வர்த்தக அரங்கத்தை வேண்டுகிறோம்; அது, விதிமுறைகளைச் சார்ந்து இயங்க வேண்டும், அதிகாரத்தைச் சார்ந்து அல்ல,’ என்று அதிகார வட்டத்தினுள் நின்றபடியே, அந்த வட்டத்தின் விதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார். அவரது உரையை கேட்டு அத்தனை தலைவர்களும் திகைத்தனர். அதோடு, ‘வளரும் நாடுகளுக்கு பாதகமான எந்த ஒப்பந்தத்தையும் உலக வர்த்தக அமைப்பு முன்னெடுக்கக் கூடாது,’ என ஒற்றை வரித் தீர்மானத்தை மாறன் முன்மொழிய, மற்ற மூன்றாம் நாடுகள் வழிமொழிய, அமெரிக்கா செய்வதறியாமல் திகைத்து நின்றது. இதனால், அமெரிக்கா வேறு வழியின்றி பணிந்தது.
இந்தியா கேட்ட திருத்தங்களை எல்லாம் செய்த பிறகே அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதுவரை உலகில் நடந்த சர்வதேச வர்த்தக மாநாடுகளில் முதல் முறையாக வரைவு ஒப்பந்தங்கள் முழுமையாக மாற்றப்பட்ட வரலாற்றைக் கொண்டது தோகா மாநாடுதான். தங்கள் ஒப்புதல் இல்லாவிட்டால், வல்லரசு நாடான அமெரிக்காவே நினைத்தாலும் எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என மூன்றாம் உலக நாடுகள் நம்பத் தொடங்கியது அன்றுதான். முரசொலி மாறனின் அசாத்திய திறமையை உலக ஏடுகள் புகழ்ந்து பாராட்டின. உலக அரங்கில் இந்தியா தன்மானத்துடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது.
கியூபா மீது இந்தியாவுக்கு ஒரு நட்புறவு எப்போதுமே உண்டு. அதற்கு வித்திட்டது 1960 அமெரிக்காவில் நடந்த ஐ.நா மாநாடுதான். அங்கு நடந்த ஃபிடல் காஸ்ட்ரோ- ஜவஹர்லால் நேரு சந்திப்புதான் இந்த உறவுக்கு விதையாக இருந்து பின்நாளில் விருட்சமாக வளர்ந்தது. 1960ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., சபை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஃபிடல் காஸ்ட்ரோவும் நியூயார்க் வந்து சேர்ந்தார்.
உலகின் எதிரி அமெரிக்கா என்று அறைகூவல் விடுத்த நிலையில்தான் , காஸ்ட்ரோ அங்கு வந்திருந்தார். அமெரிக்காவிற்கு எள்ளும் கொள்ளுமாக கோபம் பொத்துக்கொண்டு வந்தது. காஸ்ட்ரோ ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அவருக்கு பல தொல்லைகள் நேரிட அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். வேறு எங்கும் காஸ்ட்ரோவிற்கு தங்க இடம் கொடுக்கவில்லை. நேரே ஐ.நா., அதிகாரிகளைச் சந்தித்தார், நான் இங்கேயே இந்த அலுவலக வளாகத்திலேயே கொட்டகை போட்டு தங்கப் போகிறேன் என்று சொன்னதும் அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். பிறகு தெர்சா என்ற விடுதியில் காஸ்டிரோ தங்க வைக்கப்பட்டார்.
தான் தங்கியிருந்த விடுதியில் காஸ்ட்ரோ ஒரு தேநீர் விருந்து அளித்தார். காஸ்ட்ரோ நடத்திய விருந்து உலகத் தலைவர்களுக்குத் தெரியாமல் இல்லை. தெரிந்தும் கூட அவர்கள் யாரும் அங்கு போகவில்லை. காரணம், அமெரிக்கா மீதுள்ள பயம். அந்த நேரத்தில்தான் உள்ளே நுழைந்தார் அன்றைய இந்தியப் பிரதமர் நேரு. காஸ்ட்ரோ திக்குமுக்காடிப் போனார். அன்றைக்கே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வல்லரசாக இந்தியா இருந்தது.
இத்தகைய வரலாற்றைக் கொண்ட இந்தியா இன்று அதிகாரத்திற்கு அடிபணிந்தது. நாமாக முன்வந்து ஆதரவுக்கரம் நீட்டுவதென்பது மனிதாபிமானம்; ஆனால் மருந்தை தராவிட்டால் பதிலடி கொடுப்போம் என்பது பகிரங்க மிரட்டல். ரூபாய் 100 கோடிக்கும் மேல் செலவு செய்து ட்ரம்ப்பை வரவழைத்து , தடபுடல் விருந்து வைத்து, வழியனுப்பி வைத்ததற்கு நல்ல நட்பிலக்கணம் கற்றுக் கொடுத்துள்ளார்.
இந்தியாவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையில் இருப்பது நட்புத்தானா என்றே கேள்வி எழுகிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா மிரட்டுவதிலும் இந்தியா பணிவதிலும்தான் இந்தியா- அமெரிக்கா உறவு நீடிக்கிறதா என்பது தெரியவில்லை! இந்தியாவின் தற்போதைய நிலை - ஒட்டடைத் தெம்பில் உத்திரம் தொங்குவதைப் போல்தான் இருக்கிறது.
- அஜெய் வேலு
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!